தமிழில் ஒரு ஹாலிவுட் சினிமா

எனது சினிமா விமர்சன முறையின் அடைப்படை குறித்த மூன்று முக்கிய விஷயங்களை முதலில் சொல்லி விடுகிறேன்:

1. நான் படம் பார்க்கும் போதே இயக்கம், திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்றெல்லாம் யோசித்து அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்க்க மாட்டேன். என் வரையில் திரைப்படம் என்பது ஒரு பண்டம். நுகர்வுப்பண்டம். எப்படி சிக்கன் பிரியாணி உண்ணும் போது அதன் அரிசியின் வகை, மசாலாக் கலவை, கறி வெந்திருக்கும் தன்மை, சமையல் காரரின் கஷ்டம், இது மற்றவர்களுக்குப் பிடிக்குமா எல்லாம் யோசிக்காமல் அதன் சுவையை மட்டும் அனுபவிப்பேனோ அதே போல் தான் ஒரு படம் பார்க்கும் போது நான் திறந்த மனதுடன் எந்த முன் தீர்மானமுமின்றி அந்தப் படத்தை மிக‌ முழுமையாக அனுபவிப்பேன். ஆக, ஒரு படம் முடிந்து வெளியே வரும் தருணம் அது குறித்த என் மதிப்பீடு உருவாகி இருக்கும். பிறகு அப்பட‌ம் குறித்து அசை போடும் போது தான் அந்தக் குறிப்பிட்ட‌ மதிப்பீட்டை என் மனம் வந்தடைந்த காரணங்கள் புலப்பட ஆரம்பிக்கும். அதைத் தான் விமர்சனமாகச் சொல்கிறேன் / எழுதுகிறேன். சுருங்க‌ச் சொன்னால் தியேட்டருக்குள் என் தர்க்கம், வியாக்கியானம் எல்லாம் நுழைவதே இல்லை; அங்கே நான் பூரண‌ நிர்வாண ரசிகன்.

2. எனக்கு எரிச்சலூட்டும் ஒரு விஷயம் எனக்குப் படம் பிடித்திருக்கிறது என்பதையும் படம் ஹிட் என்பதையும் குழப்பிக் கொண்டு என்னிடம் கேள்வி கேட்பது ("உங்களுக்குப் படம் பிடிக்கலைங்கறீங்க, ஆனா படம் சூப்பர் ஹிட் ஆயிருச்சே!"). ஏனய்யா, நான் என்ன வியாபாரியா, படம் ஹிட்டா இல்லையா என்பது குறித்துக் கவலைப்பட? நான் ஒரு பார்வையாளன், மிஞ்சிப் போனால் ரசிகன். ஒரு திரைப்படமானது எனக்குப் பிடித்திருக்கிறதா என்பது பற்றி மட்டுமே நான் பேச முடியும். உலகில் கணிசமானோருக்குப் பிடித்த உணவுப் பொருள் உங்களுக்குப் பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லையா? அல்லது பெரும்பான்மையோருக்குப் பிடிக்காமல் இருக்கும் பெண்ணை உங்களுக்குப் பிடித்துப் போகும் சாத்தியம் இல்லையா? அது போலத் தான் இதுவும். யாருக்கும் படம் பிடிக்கிறது, பிடிக்கவில்லை, படம் ஹிட்டா என்பது குறித்தெல்லாம் எனக்கு  கிஞ்சித்தும் கவலை இல்லை. என்வரையில் திரையரங்கின் இருட்டில் படம் எனக்கு அளிக்கும் அனுபவமே என் முடிவு. என் ஒவ்வொரு விமர்சனத்திலும் மனசாட்சிக்கு நேர்மையாகவே இதுவரையிலும் இருந்திருக்கிறேன். ஒரு முறையும் அதிலிருந்து அசைந்து கொடுத்ததில்லை. கமல், மணிரத்னம் என எனக்கு மிகப்பிடித்த திரை ஆளுமைகள் அடாசுப் படம் கொடுத்த போதும் அதைத் தூக்கிக் கடாசி விமர்சித்தே பழக்கம். சமரசமே கிடையாது. ரசனைக்கு மட்டுமே விசுவாசம்.

3. எப்போதும் ஒரு படம் குறித்தான என் அபிப்பிராயம் என்பது நேரடியாய் அதன் உள்ளடக்கத்தின் அடிப்படையிலானது மட்டுமல்ல. அந்தப் படம் குறித்த என் எதிர்பார்ப்பு என்ன, அதை எந்த வகையில், எந்த அளவிற்கு அது பூர்த்தி செய்கிறது / ஏமாற்றுகிறது என்பது பொறுத்தே என் கருத்து அமையும். அப்படித் தான் ஒவ்வொரு படத்தையும் நான் அணுகுகிறேன்.


இப்போது விஸ்வரூபம் படத்திற்கு வருவோம். படம் எப்படி எனக்கேட்டால் என் ஒரு வரி பதில் GREAT BUT NOT GREATER.

என் கணக்குப்படி கமல்ஹாசன் இயக்கும் ஆறாவது படம் விஸ்வரூபம். இதற்கு முன் 1. Chachi 420 (பாதியில் கைமாறி இயக்கியது), 2. மருதநாயகம் (பாதியில் கைவிடப்பட்டது), 3. ஹே ராம், 4. விருமாண்டி மற்றும் 5. மர்மயோகி (ஷூட்டிங் போகாமலேயே நிறுத்தப்பட்டது). கமல்ஹாசன் என்ற இயக்குநரிடமிருந்து நான் எதிர்பார்ப்பது greater திரைப்படங்களை.

விஸ்வரூபத்தை மேக்கிங்கில் சுலபமாக தமிழில் மிகச்சிறந்த படமாகச் சொல்லி விடலாம். விஸ்வரூபம் ஹாலிவுட் தரத்திலான படம் என்று சொல்வதை பலரும் கேலி செய்கிறார்கள். ஹாலிவுட் தரம் என்று சொல்வது அதன் மேக்கிங் மட்டுமல்ல. அதன் கட்டுக்கோப்பான திரைக்கதை பாணி, பிசிறில்லாத (அல்லது பிசிறு குறைந்த) காட்சிக்கோர்வை, பெரும்பாலும் உறுத்தாத இயல்பான பெர்ஃபாமன்ஸ்கள் ஆகியவற்றைக் கொண்டு தான் சொல்கிறோம். கிராஃபிக்ஸ் போன்ற டெக்னிகல் விஷயங்களில் ஆங்காங்கே துருத்துவது நிஜமே. ஆனால் இதெல்லாம் ஹாலிவுட் தரத்துடன் ஒப்பிடும் போது தான். மற்றபடி தமிழ்ப்படங்களின் இந்தியப்படங்களின் தரத்திற்கு சர்வ‌ நிச்சயம் அற்புதம் தான்.

கம‌ல்ஹாசன் ஓர் இயக்குநராக சுலபமாகச் ஜெயிக்கிறார். தான் தமிழில் மிக‌ முக்கிய இயக்குநர் என்பதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். அவர் இயக்கி நான் பார்த்த 3 திரைப்படங்களை (Chachi 420, ஹே ராம், விருமாண்டி) விட இதில் கூடுதல் பெர்ஃபெக்ஷன் இருக்கிறது. தமிழில் மிகச்சிறந்த மேக்கிங் என்று சொன்ன பின் மேலே விதந்தோத ஏதுமில்லை.

பொதுவாய் கமல் படங்களில் இயக்குநர்கள் டம்மி என்று சொல்லப்படுவதுண்டு. ஆரம்பம் முதலே அக்கருத்தில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. சிங்கீதம் ஸ்ரீநிவாச ராவ், சுரேஷ் கிருஷ்ணா, சந்தானபாரதி, பரதன்,  பி.சி.ஸ்ரீராம், கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி., மௌலி என யாராக இருந்தாலும் அவரது திரைக்கதையை இயக்கியவர்களை எடுத்துக்கொண்டால் அவர்களை எல்லாம் அந்ததந்தப் படங்களுக்கு பெயரளவில் அல்லாமல் நிஜமாகவே நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே சொல்வேன். அதாவது ஒரு படத்தை இயக்குவது என்பது எவ்வளவு பெரிய சுமை, எத்தனை சிக்கலான விஷயம் என்பதை உணர்ந்ததாலேயே அதைத் தான் ஏற்காமல் நல்ல மேலாண்மைத் தகுதிகளுடன் நேர்த்தியாக எக்ஸிக்யூட் செய்து தரக்கூடிய இயக்குநர்களை வைத்து எடுத்தார் என்பதே என் அபிப்பிராயம். அவர் அந்த அளவு டைரக்ஷனை மதித்ததால் தான் அவரே அதைச் செய்யும் போது பெர்ஃபெக்ஷன் சாத்தியப்படுகிறது.

ஆனால் ஓர் இயக்குநர் என்பதை விட திரைக்கதை மற்றும் வசனங்கள் காரணமாகவே கமலை நான் ஒரு கலைஞனாக மிக மதிக்கிறேன். உதாரணம்: தேவர் மகன், குருதிப்புனல், ஹே ராம், விருமாண்டி, தசாவதாரம். அவற்றில் எல்லாம் இருந்த நேர்த்தி இப்படத்தில் முழுக்கக் கைகூட வில்லை. ஆனால் ஆளவந்தான், அன்பே சிவம், மும்பை எக்ஸ்ப்ரெஸ், மன்மதன் அம்பு, பம்மல் கே சம்மந்தம் போன்று அல்லாமல் ஒப்பீட்டளவில் நல்ல திரைக்கதை தான். ஆனால் சர்வ‌தேசப் படம் செய்யப்போகிறேன் எனும் போது அதற்குரிய திரைக்கதைத் தரம் இருந்தாக வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

தசாவதாரம் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தில் முக்கால்வாசியை மட்டுமே விஸ்வரூபம் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் இரு படங்களின் திரைக்கதைகளுக்கும் இடையிலான தர வித்தியாசம் என்றே தோன்றுகிறது.

விஸ்வரூபம் படத்தின் திரைக்கதையை இரண்டு தர்க்கத்துண்டுகளாக உடைக்கலாம். ஒரு துண்டு சமகால நியூயார்க்கில் ஓர் அணுகுண்டு வெடிப்பைத் திட்டமிடும் அல் க்வைதா ஜிகாதிகள் மற்றும் அதைத் தடுக்க முயற்சிக்கும் இந்திய மற்றும் ப்ரிட்டிஷ் உளவு ஏஜெண்ட்கள் பற்றியது. மற்ற‌ துண்டு செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு 2002ல் ஆஃப்கானிஸ்தானில் அல் க்வைதா தீவிரவாதிகளுக்குப் பயிற்சி தரும் போர்வையில் அவர்களுக்குள் ஊடுருவும் இந்திய உளவு ஏஜெண்ட்டின் அனுபவங்கள். முதல் துண்டு ஹாலிவுட் படங்களின் பாணியில் ஆக்ஷன் காட்சிகளின் தொகுப்பாய்ப் பரபரவென நகர்கிறது. அடுத்த துண்டு தீவிரவாதிகளின் குடும்பப் பின்னணியில் உணர்வுகளின் வலைப்பின்னலில் தத்துவார்த்த கேள்விகளை எழுப்புகிறது. இந்த அபூர்வமான blende தான் படத்தை great என்று நான் சொல்வதன் மூலக்காரணம்.

படத்தில் பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன. சில காட்சிகளில் பல அடுக்குகள் (layers) கூட இருக்கின்றன. பல‌ இடங்களில் அபாரமான detailing காணக் கிடைக்கிறது. கடுமையான உழைப்பில் படம் உருவாகி இருப்பது அவற்றிலிருந்து தெரிகிறது. போலவே பல கவித்துவத் தருணங்கள் இருக்கின்றன (கம‌ல் சிறுவர்களுக்கு ஊஞ்சல் ஆட்டி விடும் காட்சி). இவை அத்தனையையும் துளியும் இழக்காமல் உள்வாங்க குறைந்தபட்டம் இரு முறையேனும் படம் பார்க்க‌ வேண்டும்.

சில வசனங்கள் (உதா: என்ன, அமேரிக்கால மழை பெய்யாது) தவிர மற்றவை ஈர்க்கவில்லை. பொதுவாய் கமல்ஹாசன் எழுதும் படங்களில் பல இடங்களில் மிக நேர்த்தியான வசனங்கள் அமைந்திருக்கும். நல்ல‌ நகைச்சுவை இழையோடிய வலுவான sarcasm காணக்கிடைக்கும். இப்படத்தில் அது மிஸ்ஸிங். ஆனால் க்ரௌட் "ஃபோன்ல கேட்கத் தானே முடியும், பார்க்க முடியாதே" போன்ற மொக்கை வசனங்களுக்கெல்லாம் பெரிதாய் சிரித்துவைத்து கமலை அவமானப்படுத்துகிறது.

எஃப்பிஐ விசாரணை சீன்களில் ஒரிஜினல் வசனங்களே எரிச்சல் என்றால் அந்த‌ ஆங்கில வசனங்களை மொழிபெயர்த்து தமிழில் போட்ட விதம் இன்னமும் கடுப்பு. விஜய் / சன் டிவிகாரர்கள் செய்யும் மொழிபெயர்ப்புக் கொலைக்கு ஒப்பு அது.

பொதுவாக பெரிய‌ ஒளிப்பதிவாளர்களை கமல் தான் இயக்கும் படங்களில் பயன்படுத்துவதில்லை. ஹே ராமில் திரு பணியாற்றிய போது அவர் அத்தனை  estalished ஆள் கிடையாது. விருமாண்டி எடுத்த போது (இப்போதும் கூட) கேசவ் பிரகாஷ் அப்படித்தான். இப்போது விஸ்வரூம் படத்தின் கேமெராமேன் சானு ஜான் வர்கீஸ் கூட அதே வகை தான். Karthik Calling Karthik, Elektra என்ற இரு படங்கள் தாம் அவர் இதுவரை எடுத்திருப்பது. ஆனால் விஸ்வரூபம் பட‌ விஷுவல்கள் கச்சிதமாக‌ வந்திருக்கின்றன. ந‌ல்ல‌ ஒளிப்பதிவாய்க் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை ஆஃப்கானிஸ்தான் காட்சிகள்.

படத்தில் கம‌ல் விஸ்வரூபம் எடுக்கும் காட்சி தான் படத்தின் ஆகச்சிறந்த காட்சி என்பேன். காதநாயகியின் சுதாரிப்பில் நடந்ததை மனதில் ஓட்டிப் பார்க்கையில் அது ஸ்லோ மோஷனில் மறுபடி காட்டப்ப‌டும் போதும் கூட புத்தம் புதிது போல் ரசிக்க முடிகிறது. தமிழின் மிகச்சிறந்து சண்டைக்காட்சிகளுள் ஒன்றாக நெடுநாள் நம் நினைவில் இருக்கும் அக்காட்சி. அந்த ஒரு காட்சியிலேயே விஸ்வரூபம் என்ற டைட்டிலை சுலபமாக ஜஸ்டிஃபை செய்து விடுகிறார்கள். அதேபோல் ஹாலிவுட் ஸ்டண்ட் கொரியோகிராஃபரான Lee Whittaker வடிவமைத்த ஆஃப்கானிஸ்தான் யுத்தக்காட்சிகளும் அருமை.

கமல்  ஆஃப்கனில் ஜிஹாதி போராளியாகவும், பெண்மைச் சாயலுடன் கதக் நடனப்பள்ளி ஆசிரியராகவும், அதிரடி ரா ஏஜெண்டாகவும் ஆக மொத்தம் படத்தில் மூன்று ரூபங்கள் எடுக்கிறார். முதல் ரோலில் கமலின் பெர்ஃபாமன்ஸில் எனக்கு அவ்வளவு திருப்தி இல்லை. கடைசி ரோல் அவர் வழக்கமாகச் செய்வது தான். ஆனால் கதக் டான்ஸர் பாத்திரம் எனக்குப் பிடித்திருந்தது. அதில் தான் கமல் எனும் மகாநடிகனது கலையின் தாத்பர்யம் வெளிப்படுகிறது. அந்தப் பாத்திரத்தின் உடல் மொழி, வசன உச்சரிப்பு, ஆடல் நேர்த்தி (ந‌டன அமைப்பு: பிர்ஜு மஹாராஜ்) எல்லாம் அசத்துகின்றன. வரலாறு அஜீத்தைப் புகழ்ந்தவர்கள் இந்த நடிப்பை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டுகிறேன். இதுவும் சர்வதேசத் தரம் தான்!

ராகுல் போஸ் தான் கமலை விட உயர்ந்து நிர்கிறார். அவருக்கும் இரு ரூபங்கள் உண்டு. Tahaanல் வந்த ராகுல் போஸா என ஆச்சரியப்பட வைக்கிறார். ச‌லீமாக வரும் ஜெய்தீப்பும் பின்னுகிறார். அடுத்து குறிப்பிடப்பட வேண்டியவர் சேகர் கபூர் (தன் நெடுநாள் நண்பன் இறந்து போகும் காட்சியில் நைட்ரோக்ளிஸிரின் மாத்திரை போட்டுக் கொண்டு தன்னைத் தானே ஆசுவாசபப்டுத்திக் கொள்ளும் காட்சி ஓர் உதாரணம்). நாசர் நடிப்பைப் பற்றிச் சிலாகித்துப் பேசி போரடிக்கிறது. பூஜா குமார், ஆன்ட்ரியா ஜெராமையா இருவருக்கும் பாஸ் மார்க். கள்ளக்காதலன் சாம்ராட் சக்ரபர்த்தியும் பரவாயில்லை.

உன்னைக் காணாவிடில், விஸ்வரூம், அணு விதைத்த பூமியிலே,  துப்பாக்கி எங்கள் தோளிலே  நான்கு பாடல்களுமே எந்த மிகையுமின்றி படத்தில் தமக்கான இடங்களில் உட்கார்ந்திருக்கின்றன. நான்குமே மிக‌ நன்றாக உருவாக்கப்பட்ட பாடல்கள். ஷ‌ங்கர் - ஈஸான் - லாய் தம் வேலையை சரியாகவே செய்திருக்கின்றனர். படத்தின் பின்னணி இசை டப்பி - பாரிக் என்ற இரட்டையர்கள். பரவாயில்லை எனலாம். ஆனால் இன்னும் கொஞ்சம் கூட‌ மெனக்கெட்டிருக்கலாம்.
 
படத்தை நான் Auro 3Dயுடன் பார்க்கவில்லை. ஆனால் நான் பார்த்தவரை ஒலியமைப்பு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக யுத்தக்காட்சிகளில், சண்டைக்காட்சிகளில் அதன் பங்கு மிக முக்கியமாக இருந்தது என்பேன்.

என்.இளையராஜாவின் கலையமைப்பும் (ஆஃப்கானிஸ்தான் வீடுகள்),  கௌதமியின் உடைத்தெரிவுகளும் (அல் க்வைதா உடைகள்), என்.ஜி.ரோஷனின் ஒப்பனையும் (ராகுல் போஸின் மேக்கப்) முதுகெலும்பு போல் படத்தை நிமிர்த்துகின்றன. மகேஷ் நாராயணனின் படத்தொகுப்பும் ஹாலிவுட் சரக்குக்கு ஏற்றாற் போல் இருக்கிறது. மதுசூதனனின்  VFXம் ஓக்கே.

படத்தில் இஸ்லாம் மதத்தைத் தவறாகச் சித்தரிப்பது போல் ஏதும் இருந்ததாக எனக்கு உறைக்கவில்லை. கோவையில், மதுரையில் ஒமர் இருந்ததாக சொல்வது எல்லம் ஒரு விஷயமா? குர்ஆன் படித்து விட்டுக் கொலை செய்யும் காட்சிகளை அல் க்வைதாகாரர்களே வீடியோவாய் வெளியிட்டு இருக்கிறார்களே, உண்மையான அக்கறையும் உடையாத‌ திராணியும் இருந்தால் அவர்களைக் கேளுங்களேன். அதே போல்பதின்வயதுச் சிறுவர்களை  ஜிகாத்  புனிதப் போர் என்ற பெய‌ரில் தீவிரவாதத்துக்குப் ப‌ழக்குதலும்  ஆஃப்கானிஸ்தானில் நடக்கத் தானே செய்கிறது, அதைக் காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? வேறு ஏதேனும் இஸ்லாமிய ஆட்சேபத்துக்குரிய காட்சி இருந்தால் சொல்லுங்கள், மேற்கொண்டு பேசலாம்.

விஸ்வரூபம் II வரும் எனச்சொல்லி வைக்கிறார்கள் இறுதியில். அது எதிர்பார்க்கும் நேர்த்தியோடிருக்க வாழ்த்துகிறேன்.

கமல் இப்படத்தை ஹாலிவுட்டில் நுழைவதற்கான‌ துருப்புச் சீட்டாகவே திட்டமிட்டார் எனத் தோன்றுகிறது. அதே போல் Lord of the Rings சீரிஸ் போன்ற பெருவெற்றிப் படங்களின் தயாப்பாளர் Barrie Osborne இப்படத்தைப் பார்த்து கமலை ஒரு படம் இயக்கி நடிக்க‌ ஹாலிவுட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். சந்தேகமே இன்றி விஸ்வரூபத்துக்கு சில தேசிய விருதுகள் வந்து விழும். என்வரையில் கமல் என்ற கலைஞனுக்கு படத்தின் நோக்கம் நிறைவேறி விட்டது. இனி படம் தமிழக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதா? டிடிஹெச்சில் வெளியிடும் திட்டம் என்ன ஆயிற்று? ஒட்டுமொத்தமாய் 385 கோடி ரூபாய் வசூல் செய்யுமா? என்பதெல்லாம் வியாபாரி கமலின் கவலை. அது குறித்து எனக்கு அக்கறையில்லை.

எல்லாவற்றையும் தாண்டி என் தனிப்பட்ட அட்வைஸ் ஒன்றே: இங்கிருந்து ஓடி விடுங்கள், கமல். WE DON'T DESERVE YOU.

Comments

Unknown said…
விஸ்வரூபம் ட்ரைலர் பார்த்தேன் ரைட்டர், அருமையா இருந்தது, குறிப்பாக, தசாவதாரம் பற்றி நீங்கள் சொன்னது உண்மை, எனக்கு அந்தப் படம் பிடித்த என்றவுடன், அந்தப் படமா, ஐயோ படமா அது என்று சொன்ன பலர் இருக்கிறார்கள்
என்ன டேஸ்ட்டோ, புரியல, அதே போல் தான் கமல் என்று இல்லாமல்- இன்னும் சில படத்திற்கும், முதல் இரண்டு பாராவில் ,அதை சரியாக ஜஸ்டிபை செய்து இருக்கீங்க
படம் இன்னும் ரிலீஸ் ஆகாததினால் பார்க்கவில்லை,ஆனால் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுவதாக (இன்னும் கொஞ்சம்) அமைந்தது
படிக்க படிக்க படம் எப்படா பார்ப்போம் என்ற ஆவலை தூண்டுகிறது.
Anonymous said…
உங்க விமர்சனம் படித்தபின் படம் பார்க்கும் ஆவல் அதிகரித்தது என்பது உண்மை.
Kapalee said…
CSK

Nice review. Few observations:

1. Is it "Great but not greater" or "Great but not the Greatest" or "Great could have been greater"

2. Sep 11 - Is it 2002 or 2001?

3. "..புனிதப் போர் என்ற பெய‌ரில் தீவிரவாதத்துக்குப் ப‌ழக்குதலும் ஆஃப்கானிஸ்தானில் நடக்கத் தானே செய்கிறது, அதைக் காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? .." - I wonder why this question has not come from anyone so far

4. Kamal is Kamal only because he has been braving all these obstacles . So , let him not be driven out of here, though we may not deserve him.

Thanks for a good review
imayabharathi said…
yes sir. we dont deserve him. we dont know to respect him. felt so bad after seeing few garbages critisizing about him in youtube.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்