நீயா நானா - ஒரு பாடம்

முகம் பற்றிய விஜய் டிவி நீயா நானா எபிஸோடில் பங்குபெற‌ அழைத்திருந்தார்கள். நேற்றுப் போயிருந்தேன். நான் பேசுவதற்கென தயார்படுத்திக் கொண்டு சென்றதில் முக்கியமற்ற 10% மட்டும் தான் அங்கே பேச வாய்ப்பு கிடைத்தது.

நானும் அங்கு வந்திருந்த மற்றவர் போல் முகம் டிவியில் வரும் க்யூரியாஸிட்டியில் (மட்டும்) போயிருந்தால் நிகழ்ச்சி எனக்கும் உவப்பாகவே இருந்திருக்கும். ஆனால் அங்கே நான் சில விஷயங்கள் பேச விரும்பினேன். அது தான் எனக்கு முக்கியமாய்ப் பட்டது. அது நிகழவில்லை என்பது எனக்கு வருத்தமே. அங்கே சீஃப் கெஸ்டுக்கு மட்டும் தான் (ஓரளவு) அந்த சுதந்திரம் இருக்கிறது. நான் நிகழ்ச்சி சம்மந்தப்பட்டவர்களைக் குறை சொல்லவில்லை. அவர்கள் தேவையும் என் நோக்கமும் வேறு வேறு என்பதால் பார்டிசிபண்டாக கலந்து கொள்வது சரிப்படாது என்று தோன்றுகிறது. 'முள்' நாவலை (கமல்ஹாசன் பாராட்டிய நாவல்) எழுதிய முத்துமீனாள் கூட வந்திருந்தார். அவருக்கும் என்னுடைய‌ நிலைமை தான்.

*******

நான் பேச எழுதிய‌ குறிப்புகள்:

 ஒருவரின் முகத்தை வைத்து அவரது குணாதியங்களைத் தெரிந்து கொள்ள முடியுமா? முதலில் விஞ்ஞானம் இதைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். Morphopsychology என்று ஒன்று இருக்கிறது. மனித முக அமைப்பைக் கொண்டு ஒருவரது பெர்சனாலிட்டியைத் தீர்மானிக்கும் இயல். ஆனால் இது Pseudoscience. அதாவது கிட்டதட்ட அறிவியல். ஜோதிடம், வாஸ்து போன்று முழுக்க  மூட நம்பிக்கையாகவும் இல்லாமல் பௌதீகம், வேதியியல் போன்று முழுக்க பரிசோதனைகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்டது. சில சர்வேக்கள் மற்றும் ஆராய்ச்சிகள் வழி இந்த இந்த முகம் கொண்ட ஆட்கள் இப்படி இப்படிப் பட்ட ஆட்கள் என்று சொல்லும் முறை.

இது ஏதோ 20ம் நூற்றாண்டில் புதிதாய் முளைத்த‌ விஞ்ஞானம் அல்ல. மேற்கில் அரிஸ்டாட்டில் காலத்திலிருந்தே 2500 வருடங்களாக‌ Physiognomy, Pathognomy போன்ற இயல்கள் உண்டு. Physiognomy என்பது ஒருவரின் முக அமைப்பைக் கொண்டு அவரது நிரந்தரப் பண்புகளைச் சொல்வது. Pathognomy என்பது ஒருவரின் முக பாவனைகளைக் கொண்டு அவரது அப்போதைய எண்ணங்களைச் சொல்வது. இங்கே நம்மூரிலும் சாமுத்ரிகா லட்சணம் என்ற பெயரில் குணங்களைத் தீர்மானிக்க முற்பாட்டிருக்கிறார்கள். ஆனால் இது முகம் மட்டுமின்றி முழு உடலையும் கணக்கில் கொண்டு சொல்வது.

இதெல்லாம் விஞ்ஞானம். நம்மைப் போன்ற சாதரணர்கள் இதையெல்லாம் அறிந்து வைத்துக் கொண்டு ஒருவரை எடை போடக் கிளம்புவதில்லை. ஜோதிடம் தெரியாத ஒருவர் கை ஜோதிடம் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் Morphopsychology நுட்பங்கள் தெரியாமல் ஒருவரைப் பார்த்தவுடன் நான் அவரைப் பற்றிச் சொல்லி விடுவேன் என்பதும்.

சரி, உண்மையில் முகத்தைப் பார்த்து நாம் எப்படி குணத்தை முடிவு செய்கிறோம்? ஒருவரைப் பார்க்கும் போது நம் உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அது தான் கணக்கு. இந்த உள்ளுணர்வு எந்தவொரு தர்க்கமும் இல்லாது இயங்குவது. Involuntary Action. ஓர் எல்லை வரை Reflex. இது ஒரு கனவு போன்றது தான். எப்படி கனவை நாம் தீர்மானிக்க முடியாதோ, கட்டுப்படுத்த முடியாதோ உள்ளுணர்வும் அப்படியே. இப்படி எந்த தர்க்கரீதியான விஞ்ஞானச் சட்டகத்துள்ளும் அடங்காத உள்ளுணர்வை நம்பி எப்படி ஒருவரைப் பற்றிய முழு முடிவுக்கு வருகிறோம்? முட்டாள்தனமாக இருக்கிறதல்லவா?

இன்னொன்று பொதுப்புத்தி நம் ஆழ்மனதில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிம்பங்களின் அடிப்படையில் ஒருவரைப் பற்றிய முடிவுக்கு வருவது. நம் ஊரில் இது போல் சில நம்பிக்கைகள் இருக்கின்றன. சிவ‌ப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான், குண்டாக இருபவன் சூது வாது தெரியாதவன், கண்ணாடி போட்டவன் ஜீனியஸ் - இப்படி. இவை எல்லாமும் கூட‌ எந்த நிரூபணமுமற்ற சிலரின் அனுபவக் கதைகளே. கொஞ்சம் சரியாக இருக்கலாம். அதை generalise செய்யலாமா?

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்று சொல்லப்ப‌டும் இங்கே தான் "இந்தப் பூனையும் பால் குடிக்குமா!" என்றும் சொல்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். முகம் வைத்து ஒருவரைத் தீர்மானிக்க முடியாது என்பது தான் இது.

என்ன தான் தர்க்கம் பேசினாலும் நாம் ஒருவரைப் பார்த்தவுடன் வரும் முதல் இம்ப்ரெஷன் தவிர்க்கவியலாத‌து. ஆனால் பிற்பாடு அதைச் சார்ந்து அவருடன் பழகலாமா, வேலை தரலாமா என்பது போன்ற முடிவுகள் நாம் சிந்தித்து எடுப்பவை. இடைப்பட்ட நேரத்தில் சுதாரித்துக் கொண்டு அந்த போலி இம்ப்ரெஷனை உதாசீனப்படுத்தி விட வேண்டும் என்கிறேன்.

இதெல்லாம் நான் சிந்தித்ததன் அடிப்படையில் பேசியவை. இப்போது இவ்விஷயத்தில் என் சொந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதையும் சொல்கிறேன். என் பக்கத்து வீட்டுக்காரர்கள், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள், பொது வாழ்க்கையில் சந்திப்பவர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களைப் பற்றி அதாவது அவர்களின் முகம் பார்த்து நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த எண்ணம் - குறிப்பாய் எதிர்மறை அபிப்பிராயம் - தவறாய்த் தான் இருந்திருக்கிறது.

நேற்று நடந்த ஒரு சம்பவத்தை உதாரணம் சொல்கிறேன். நேற்றிரவு 10:40க்கு பெங்களூரிலிருந்து கிளம்ப வேண்டிய சென்னை மெயில் காலை 5:30க்குத் தான் கிளம்பும் என ரயில்வே ஸ்டேஷன் போன பிறகு தான் தெரிகிறது. நான் அதில் தான் ரிசர்வ் செய்திருந்தேன். காலை 9 மணிக்கு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இருக்க வேண்டும் என்று நீயா நானா டீமிலிருந்து இன்ஸ்ட்ரக்ஷன் தரப்பட்டிருக்கிறது. மணி அப்போது 10:20. மாற்று ஏற்பாடுகள் அதற்கு மேல் செய்வது சிரமம். என்ன செய்வது என யோசித்தபடியே பதட்டத்தில் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தேன். அப்போது ஓர் ஆட்டோ ட்ரைவர் பஸ் டிக்கெட் ஏற்பாடு செய்து த‌ருகிறேன் என்று கிட்டதட்ட என்னைக் கடத்திக் கொண்டு போனார் என்று தான் சொல்ல வேண்டும். அவரது முரட்டுத் தோற்றம் பார்த்து எனக்கு அவருடன் செல்ல நம்பிக்கை வரவில்லை. முதலில் தீர்மானமாக மறுத்து விட்டேன். பிறகு அவர் மீண்டும் மீண்டும் அழைக்க ஏதோ தைரியத்தில் அவருடன் கிளம்பி விட்டேன். பக்கத்திலிருந்த ஆனந்தராவ் சர்க்கிளில் எனக்கு என் பட்ஜெட்டில் பஸ் டிக்கெட் ஏற்பாடு செய்து தந்த பிறகு தன் நியாயமான கூலியை வாங்கிக் கொண்டு சென்றார். உண்மையில் அந்த‌ ட்ரெய்ன் கிளம்ப வேண்டிய நேரத்துக்கு முன்னதாகவே இந்தப் பேருந்து கிளம்பி விட்டது! காலத்தாற் செய்த உதவி. இங்கே என் உள்ளுணர்வும் முகத்தைப் பார்த்து ஆளை, அவரது குணாதிசயத்தை எடை போடும் திறமையும் தோற்று விட்டது என்றே சொல்ல முடியும்.

அதனால் தான் சொல்கிறேன். முகத்தைப் பார்த்து ஒருவரைப் பற்றிக் கண்டிப்பாய்ச் சொல்லவே முடியாது என.

ஒருவேளை பிற்காலத்தில் Morphopsychology என்ற Pseudoscience முழுக்க‌ முழுக்க Science என்றே ஒப்புக் கொள்ளப்பட்டு விடுகிறது என வைத்துக் கொள்வோம். அப்போதும் அது ஏற்படுத்தப்போகும் சமூக பாதிப்பை நான் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.. ஏற்கனவே சாதி, மதம், பணம், நிறம், இனம், பால் என பல்வேறு அடிப்படைகளில் Discrimination இருக்கிறது. இப்போது முக அமைப்பும் அவற்றோடு சேர்ந்து கொள்ளும். புது விதமான தீண்டாமை உருவாகும். உதாரணமாய் குழந்தை முகம் கொண்டவர்கள் கெட்டவர்கள் என்று Morphopsychology சொல்கிறது என்றால் பின் குழந்தை முகம் கொண்டவர்களுக்கு வேலை தர மாட்டோம், வீடு தர மாட்டோம், பெண் தர மாட்டோம்.

ஆனால் முகத்தைக் கொண்டு ஜாதியைக் க‌ண்டுபிடிக்க சாத்தியம் உண்டு. முக அமைப்பின் அடிப்படியில் Mongoloid, Caucosoid, Negroid என்று மனிதர்களை மூன்று களாகப் பிரித்திருப்பதைப் போல ஜாதிவாரியாகப் பிரிப்பது இன்னுமொரு லெவல் அதிக granularity. புற அடையாளங்களின் அடிப்படையில் ஒருவரது பிறப்பு அடையாளத்தைக் கண்டுபிடிப்பது தான் இது. சிலவகை புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் ஸ்டெம் செல் தானத்துக்குக் கையெழுத்துப் போடும் போது உங்கள் ஜாதியையும் கேட்டுக் கொள்வார்கள். ஒரே ஜாதி அல்லது நெருங்கிய ஜாதிப்பிரிவுகளுக்குள் இருப்பவர்களுக்கு ஸ்டெம் செல்கள் பொருந்தும் என்பதே இதற்குக் காரணம். பிறப்பின் அடிப்படையில் இந்த ஒற்றுமை இருப்பது போல் தான் சில முக அடையாளங்கள் ஒரே ஜாதியில் இருப்பவர்களுக்குப் பொருந்தும். ஆனால் இதிலும் விதிவிலக்குகள் உண்டு. உதாரணமாய் பிராமணர்கள் சிவப்பாய் இருப்பார்கள் என்பது ஒரு கருதுகோள். ஆனால் கருப்பான பிராமணர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அதனால் முகத்தை வைத்து ஜாதியைக் கூட‌ ஓரளவு மட்டுமே ஊகிக்க முடியும்.

இதை எல்லாம் தாண்டி முகமறியாது பழகுபவர்கள் கூட நம் மனதில் ஓர் அபிப்பிராயம் உண்டாக்கவே செய்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஒரு முகம் கொடுத்து வைத்திருப்போம். பிற்பாடு அவர்களை நேரில் சந்திக்கையில் அந்த முகம் பெரும்பாலும் தவறாகவே இருக்கிறது. Reverse Engineering-கிலும் முகம் - குணம் மேப்பிங் தவறி  விடுகிறது!

*

லட்சக்கணக்கில் மக்களைக் கொன்று குவித்த‌ சில சர்வாதிகாரிகள் கொடுங்கோலர்கள், தீவிரவாதிகளின் இளவயதுப் புகைப்படங்களைக் காட்டி (ந‌ண்பனிடம் ஐபேட் கடன் பெற்றிருந்தேன்) இந்த முகங்களைக் கண்டால் அப்படிச் செய்யக் கூடியவர்களாகத் தெரிகிறதா எனக் கேட்க நினைத்திருந்தேன். அப்படங்கள் இவை (யாரெனக் கீழேயே தந்திருக்கிறேன்).


*******

உண்மையில் அங்கே பேசியவை:
 

1. நீங்கள் அடிக்கடி செய்யும் ஒரு முக பாவனை என்ன? செய்து காட்டுங்கள்.
(நான் புருவத்தைச் சுருக்கி, கண்களை முறைத்து) எதிரில் இருப்பவர் ஒரு விஷயத்தைச் சொல்கிறார். அது  நம்பத்தகுந்ததாக இருக்கவில்லை. அப்போது இப்படிச் செய்வேன்.

2. உங்கள் முகத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
டிபிகல் திராவிட முகம். அப்படின்னா என்னன்னு சொல்லிடறேன். ஆண்மை ததும்பும் அப்பாவித்தனமான முகம்.

3. முகம் என்பது முகம் மட்டும் தானா அல்லது அது வேறும் ஏதும் சொல்கிறதா?
 "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்று சொல்லப்ப‌டும் இங்கே தான் "இந்தப் பூனையும் பால் குடிக்குமா!" என்றும் சொல்கிறோம். முகத்தை வைத்து எடை போடுவதெல்லாம் பெரும்பாலும் தவறாகவே இருக்கின்றன. என் சொந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன். என் பக்கத்து வீட்டுக்காரர்கள், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள், பொது வாழ்க்கையில் சந்திப்பவர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களைப் பற்றி அதாவது அவர்களின் முகம் பார்த்து நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த எண்ணம் பெரும்பாலும் தவறாய்த் தான் இருந்திருக்கிறது. (பிற‌கு ஆட்டோ அனுபவத்தைச் சொல்கிறேன். Discrimination பற்றிப் பேச ஆரம்பிக்கையில் கோபிநாத் இடைமறித்து விடுகிறார்) 

4. எந்த மாவட்டப் பெண்க‌ளின் முகம் அழகு?
(முதலில் கோவை என சொல்ல நினைக்கிறேன். ஆனால் நிறையப்பேர் அதைச் சொல்லி விட்டதால் இக்கேள்விக்கு பதிலளிக்க வேண்டாம் என்றிருக்கையில் மைக் என்னிடம் வருகிறது) சென்னை. ஏன்னா நான் அங்கே தான் காலேஜ் படிச்சேன். அங்கே தான் தமிழகத்தின் அத்தனை பெஸ்ட் அழகுகளும் இம்போர்ட் ஆகிறது. தவிர, அங்கே போகும் பெண்கள் அந்த நகரத்துக்கேற்றவாறு தம்மை இன்னும் அழகுபடுத்திக் கொள்கின்றனர். அந்தக் கதம்பம் பிடிக்கும். 

5. உங்களால் மறக்க முடியாத முகம் எது?
(கேள்வி கேட்டவுடன் மைக் என்னிடம் நீட்டப்பட்டு விடுகிறது. யோசிக்க க்ஷணம் கூட இல்லாத நிலையில் பதில் சொல்கிறேன்) கமல்ஹாசன். திடீர்னு கேட்டதால அது தான் தோனுது.
5a. ஏன்?
எல்லா கேரக்டர்களையும் உள்வாங்கிக் கொள்ளும் முகம். பெண்மை கலந்த முகம்.

6. முகத்தை வைத்து நீங்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் என்ன?
அழகான பெண்கள் புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள். 
6a. ஏன்?
என் அனுபவங்கள் அப்படி இருக்கின்றன.

7. முகம் பற்றி இது போல் முன் அபிப்பிராயம் கொள்ளாதிருக்க‌ என்ன செய்யலாம்?
நாம் ஒருவரைப் பார்த்தவுடன் வரும் முதல் இம்ப்ரெஷன் தவிர்க்கவியலாத‌து. ஆனால் அதற்குப் பிறகு அதைச் சார்ந்து அவருடன் பழகலாமா, வேலை தரலாமா என்பது போன்ற முடிவுகள் நாம் சிந்தித்து எடுப்பவை. இடைப்பட்ட நேரத்தில் சுதாரித்துக் கொண்டு அந்த போலி இம்ப்ரெஷனை உதாசீனப்படுத்தி விட வேண்டும்.

8. தன் சொந்தக் கணவனால் முகத்தில் திராவகம் வீசப்பட்ட‌ சாந்தி என்ற பெண்ணைக் குறித்து கருத்துக் கேட்கிறார்கள் ("நீங்க எழுத்தாளர் தானே!" என்ற முன்னொட்டுடன்).
 மிகவும் வருந்ததக்க சம்பவம். காலம் தான் இவரைத் தன் கணவரை மன்னிக்க வைத்திருக்கிறது.

*******

Comments

Anonymous said…
1. முகத்தை வைத்து கல்லூரி முடித்து ஒரு வருடம் வரை அப்பாவி என நான் நம்பி வந்த ஒருவன் கல்நெஞ்சம் படைத்தவன் என்பது லேட்டாகத் தான் தெரிய வந்தது.


2. உங்கள் முகத்தை பார்த்தால் நீங்கள் நல்லவர் மாதிரித் தான் தெரிகின்றீர்கள். ஆனால் ஜெயமோகனை கூட சார் என அழைக்காமல் 'டியர்' என அழைக்கும் உங்கள் வார்த்தைகளில் நீங்கள் அகங்காரம் பிடித்தவர் என்பது தெரிகின்றது.

நல்லவன் கெட்டவன் என்பதெல்லாம் சர்வைவலுக்கு நாம் பிரித்துக் கொள்ள வேண்டிய விஷயம். அதற்கு முகத்தை பார்க்கலாம் தான். ஆனால் உண்மை என்பது குறுகலானது. நம்ப முடியாதது. அது நல்லவன் கெட்டவன் இரண்டு பேருக்கும் பொறுந்தும். அதை அறிய முகம் காண வேண்டியதில்லை........d

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்