வாசிப்பை யாசிக்கும் தேவதை


ஆழம் ‍‍-  டிசம்பர் 2012 இதழில் மலாலா யூசஃப்சய் பற்றிய என் கட்டுரை (ஒரு தேவதையின் கதை) வெளியாகியுள்ளது.

*******

அக்டோபர் 9, 2012.

வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பரிட்சை எழுதி விட்டு சில பள்ளி மாணவிகள் பேருந்தில் தம் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். முகம் மூடிய துப்பாக்கி ஏந்திய தாலிபன் ஆசாமி ஒருவன் பேருந்தை மறித்து ஏறி, “உங்களில் யார் மலாலா? சொல்லுங்கள், இல்லாவிட்டால் எல்லோரையும் சுடுவேன்!” என மிரட்டினான். 15 வயதான மலாலா மிரண்ட விழிகளுடன் எழுந்து நின்றாள்.

அவளை நோக்கி சரமாரியாகச் சுட்டான் இதயமற்ற அந்த முகமூடி. அதில் ஒரு தோட்டா அவளது தலையைத் துளைத்து, கழுத்தில் இறங்கி, தோள்பட்டையில் தேங்கியது. பிரதேசத்தையே உலுக்கிய குரலில் அலறிச் சாய்ந்தாள் மலாலா.

*

டெட்டிபேர் கட்டியணைத்தபடி உறங்க வேண்டிய பதின்வயதுப் பெண் மலாலா ஏன் தலையில் துப்பாக்கி ரவை வாங்கிச் சரிய வேண்டி வந்தது? பார்க்கலாம்.மலாலா யூசஃப்சய் ஜூலை 12, 1997ல் மிங்கோரா என்ற பாகிஸ்தானிய கிராமத்தில் பாஸ்துன் என்ற முஸ்லிம் இனப்பிரிவில் பிறந்தாள். அந்த இனத்தில் பிறந்த ஒரு வீரப்பெண் கவிஞர் மலாலாய் - அதற்கு துக்ககரமானவள் என்று பொருள்! - அவர் பெயரைத் தான் மலாலாவுக்கு வைத்தார் கவிஞரான அவள் தந்தை ஜியாவுதீன். கல்விப் போராளியான அவர் அந்தப் பகுதியில் சில பள்ளிகளை நடத்தி வந்தார். 

தாய், தந்தை, தம்பிகள் மற்றும் ப்ரியத்துக்குரிய இரு கோழிக்குஞ்சுகளுடன் தன் வீட்டில் அவர் வயதொத்த பிற பெண்கள் போல் தான் வாழ்ந்து வந்தாள் மலாலா.

சிறுவயதில் டாக்டர், பைலட் என சராசரிக் கனவுகளுடன் வளர்ந்த மலாலாவுக்கு அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையை மனதில் விதைத்தார் ஜியாவுதீன். இரவு நெடுநேரம் விழித்து தன் மகளுக்கு அரசியல் பற்றி சொல்லிக் கொடுத்தார்.

செப்டெம்பர் 2008ல் தான் மலாலா முதலில் வெளி உலகிற்குத் தெரிய வந்தாள். பெஷாவரில் நடந்த ஒரு லோக்கல் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் “என் கல்வி உரிமையைப் பறிக்க தாலிபனுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்?” என்று அவள் பேசியது செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பானது.

2009ல் ஸ்வாட் பள்ளத்தாக்கை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது தாலிபன். இசை கேட்பது, தொலைக்காட்சி பார்ப்பது, பெண்கள் கல்வி கற்பது, ஷாப்பிங் செல்வது போன்றவை தடை செய்யப்பட்டன. இந்நேரத்தில் ஜியாவுதீனை அவர் பள்ளியைச் சேர்ந்த யாராவது பெண்ணை ஸ்வாட் வாழ்வனுபவங்கள் குறித்து பிபிசி உருது வலைதளத்தில் டைரிக் குறிப்பு எழுத வைக்க அணுகினார்கள்.

ஆயிஷா என்ற பெண் முதலில் சம்மதித்து விட்டு, பின் தாலிபன் பயத்தில் எழுத மறுத்து விட்டாள். வேறு வழியின்றி மலாலா அதை எழுத முன் வந்தாள். அந்த முடிவு அவளது வாழ்க்கையையே தலைகீழாய்ப் புரட்டிப் போட்டது எனலாம். 

ஜனவரி 3, 2009ல் 12 வயது மலாலாவின் முதல் வலைப்பதிவு வெளியானது - பாதுகாப்பு கருதி ‘குல் மகய்’ (மக்காச்சோள மலர்) என்ற புனைபெயரில். 2007ல் நடந்த முதலாம் ஸ்வாட் யுத்தத்தின் போது ஒரு பள்ளி மாணவியாக தான் அனுபவித்த மன அழுத்தங்கள் மற்றும் பயங்களைக் குறித்துப் பேசியது அது. 

ஜனவரி மத்தியில் எந்தப்பெண்ணும் பள்ளி செல்லக்கூடாதென உத்தரவிட்டார்கள் தாலிபன்கள். பல பள்ளிகளை நாசம் செய்தார்கள். மீதிப் பள்ளிகளை மூடினார்கள். ஜனவரி மற்றும் ஃபிப்ரவரி மாதங்களில் தொடர்ந்து தன் வலைப்பதிவுகள் மூலம் அங்கு நடந்த அடக்குமுறைகளை உணர்வுப்பூர்வமாய் எழுதி வந்தாள் மலாலா.

இது குறித்து கேப்பிடல் டாக் என்ற பிரபல நியூஸ் சேனலில் பேட்டி கொடுத்தாள். இது போன்ற தொடர் கோரிக்கைகளினால் பள்ளி முழு ஆண்டுத் தேர்வு முடியும் வரை பள்ளிகளைத் திறக்க ஃபிப்ரவரி இறுதியில் உத்தரவிட்டது தாலிபன். ஆனால் பெண்கள் பர்தா அணிந்து பள்ளி செல்ல வேண்டும் எனக் கண்டிஷன் போட்டது.

மீண்டும் பள்ளி செல்லத் தொடங்கிய பின்பும் மார்ச் மாதம் வரை மலாலா தன் ஊரின் நிகழ்வுகளை தொடர்ந்து பிபிசி உருது வலைப்பதிவில் சொல்லி வந்தாள்.

இதற்குப் பின் 2009ம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் நாளேடு ஒரு டாகுமெண்டரி படம் எடுக்க மலாலாவை அணுகியது. இதே காலகட்டத்தில் இரண்டாம் ஸ்வாட் யுத்தம் வெடித்தது. பாதுகாப்பு கருதி மலாலா குடும்பத்தினர் இரண்டாய்ப் பிரிந்து தற்காலிகமாக இடம் பெயர்ந்தனர். போர் மேகம் சூழந்த இக்காலத்தில் படிக்கப் புத்தகங்கள் ஏதும் இல்லாமல் மிகவும் போர் அடித்ததாக அந்த டாகுமெண்டரியில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறாள் மலாலா. அந்த 2009ம் ஆண்டின் கோடையில் தான் ஓர் அரசியல்வாதியாக வேண்டும் என்ற முக்கிய முடிவை எடுத்தாள் மலாலா!

யுத்தம் முடிந்து ஜூலையில் ஊர் திரும்பி ஒன்று சேர்ந்தது மலாலா குடும்பம். தொடர்ந்து ஏவிடி கைபர், ஆஜ் டெய்லி, டொரோன்டோ ஸ்டார் போன்ற டிவி சேனல்களில் மலாலா தோன்றி பேட்டியளித்தாள். பின் ஆகஸ்ட் 2009ல் கேப்பிடல் டாக் டிவியில் வந்த போது தான் ஒரு அரசியல்வாதி ஆக விரும்புவதாகவும், பெனாசீர் பூட்டோ தான் தன் ரோல் மாடல் எனவும் குறிப்பிட்டாள் மலாலா.

டிசம்பர் 2009ல் பிபிசி வலைதளத்தில் டைரி எழுதி வந்தது மலாலா தான் என ஊடகங்களில் செய்தி அடிபட்டது. அக்காலத்தே டிவிக்களில் வெளிப்படையாக பெண் கல்வியுரிமை குறித்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தாள் மலாலா.

அதற்குப் பிறகு போர் மற்றும் அமைதி செய்தி அமைப்பின் ஓப்பன் மைண்ட்ஸ் ப்ராஜெட்க்டில் தன்னை இணைத்துக் கொண்டாள் மலாலா. மாணவர்களிடையே இதழியலை அறிமுகப்படுத்தி எழுதவைப்பதே இம்முயற்சி. மலாலாவின் பிபிசி வெற்றி மற்ற மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக ஊக்குவிப்பாக அமைந்தது.

2009ன் இறுதியில் ஸ்வாட் மாவட்ட குழந்தைகள் சபை என்ற புதுஅமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றாள் மலாலா. குழந்தைகளின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதும் அதற்கான தீர்வுகளைக் கண்டடைவதும் அதன் நோக்கம். கிட்டதட்ட ஓராண்டு காலம் அப்பொறுப்பை மலாலா வகித்ததாகத் தெரிகிறது.

அக்டோபர் 2011ல் தென்னாப்பிரிக்க சமூக உரிமைப் போராளி டெஸ்மண்ட் டுட்டு சர்வதேச குழந்தைகள் அமைதிப் பரிசுக்கு மலாலாவை சிபாரிசு செய்தார். அதில் இரண்டாம் இடம் கிடைத்தது. தனக்காகவும், தன் போன்ற பிற பெண்களுக்காகவும் தேசிய, சர்வதேசிய ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களுக்கு பள்ளிக்குச் செல்ல உரிமையுண்டு என உலகிற்கு உரக்கச் சொன்னவள் மலாலா என அறிவித்தார்கள்.

அதுவரை வடமேற்கு பாகிஸ்தான் மாகணங்கள் மட்டும் உச்சரித்து வந்த மலாலா என்ற பெயரை கிட்டதட்ட மொத்த தேசமும் பேசத் தொடங்கியது. டிசம்பர் 2011ல் முதல் தேசிய இளைஞர் அமைதிப்பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. விருது ஏற்பு விழாவில் பேசுகையில் தான் ஒரு கட்சி தொடங்க விரும்புவதாகவும் அது பாகிஸ்தானின் அனைத்து மாகாணங்களிலும் கல்விக்காக செயல்படும் என்றும் அறிவித்தாள். பாகிஸ்தான் பிரதமர் யூசஃப் ராஸா கிலானி ஸ்வாட் பெண்கள் கல்லூரியில் இதற்கான தகவல் தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுத்தார். பிற்பாடு தேசிய மலாலா அமைதி விருது எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஜனவரி 2012ல் கராச்சியில் உள்ள பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு மலாலாவின் பெயர் சூட்டினர். ஒரு தேசிய அடையாளமாக மாறிக் கொண்டிருந்தாள் மலாலா!

புகழ் சேரச் சேர உடன் ஆபத்தும் சூழ ஆரம்பித்தது மலாலாவை. ஃபேஸ்புக்கில் தீவிரமாய் இயங்கிக் கொண்டிருந்த மலாலாவுக்கு அங்கே மிரட்டல்கள் வந்தன. அவளது பெயரில் போலிக் கணக்குகள் துவங்கப்பட்டு அவப்பெயர் உண்டாக்க முனைந்தார்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற ரீதியில் பெண்களின் கல்வி உரிமைக்குப் போராடுவதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தாள் மலாலா.

2012 கோடையில் தாலிபன் தலைவர்கள் மலாலா உயிர்பிழைத்திருக்கக் கூடாது என ஒருமனதாக முடிவெடுத்தறிவித்தார்கள். அதன் விளைவுதான் கட்டுரையின் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்ட கொடூரக் கொலைவெறித் தாக்குதல் எபிஸோட்.

*

சுடப்பட்ட மலாலா மிங்கோராவில் முதலுதவி பெற்று ஆபத்தான நிலைமையில் பெஷாவரிலிருந்த ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். மூன்று மணிநேர அறுவை சிகிசைக்குப்பின் தண்டுவடத்தினருகே ஒளிந்திருந்த தோட்டா வெளியெடுக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்கு ராவில்பிண்டி கொண்டு செல்லப்பட்டாள்.

சர்வதேச அளவில்  குறிப்பாய் அமெரிக்காவிலிருந்து மருத்துவ உதவி தருவதாக அழைத்தார்கள். பிர்மிங்ஹாமிலிருக்கும் குயின் எலிஸபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவெடுத்து அக்டோபர் 15ல் இங்கிலாந்து கிளம்பினாள் மலாலா.அக்டோபர் 17ம் தேதி கோமாவிலிருந்து கண் விழித்தாள் மலாலா. இன்னமும் மருத்துவமனையில் வைத்து தொடர்சிகிச்சை அளித்து வருகிறார்கள். வாழ்த்து அட்டைகளும் பரிசுப் பொருட்களும் உலகம் முழுவதிலுமிருந்து முகமே அறியா பல அன்பர்களிடமிருந்தும் ஆதரவாளர்களிடமிருந்தும் குவிந்த வண்ணம் உள்ளன.

மலாலா மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக தாலிபன் அறிவித்தது. மதத்திற்கெதிரான போக்கிற்காகவும், ஆபாசத்தின் அடையாளமாகவும் மலாலா இருந்ததற்காக இத்தண்டனை எனக்காரணம் சொன்னார்கள். ஒருவேளை மலாலா உயிருடன் திரும்பினால் மறுபடி கொல்வோம் என்றும் தாலிபன் எச்சரித்துள்ளது.

மறுபுறம் பொதுமக்கள் மத்தியில் மலாலாவுக்கு ஆதரவு வலுத்து வருகிறது. மலாலாவின் மீது நடந்த கொலைமுயற்சித் தாக்குதலில் தொடர்புடையவர்கள் பற்றித் துப்புக் கொடுத்தால் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசு என்று அறிவிப்பு செய்திருக்கிறது பாகிஸ்தான் அரசு. அக்டோபர் 12ம் தேதி மலாலாவைக் கொலை செய்ய முயன்றவர்களுக்கு எதிராகப் பாகிஸ்தானில் ஃபத்வா அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் உள்துறைஅமைச்சர் ரெஹ்மான் மாலிக் மாலாலாவை சுட்ட தாலிபன் ஆசாமியைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்திருக்கிறார். பாகிஸ்தான் போலீஸ் இது தொடர்பாய் சந்தேகத்தின் பேரில் நிறையப் பேரைக் கைது செய்திருக்கிறது.

பாப் பாடகி மடோன்னா தன் லாஸ் ஏஞ்சல்ஸ் இசை நிகழ்ச்சியின் போது ‘Human Nature’  என்ற பாடலை மலாலாவுக்கு சமர்ப்பணம் செய்தார். ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, முன்னார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா புஷ் இந்நிகழ்வைக் கண்டித்து கட்டுரைகள் எழுதினர். அமெரிக்க அதிபர் ஒபாமா, செக்கரட்டரி ஹிலாரி கிளிண்டன் ஆகியோரும் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

அக்டோபர் 15, 2012ல் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரும், உலகக் கல்விக்கான ஐநா சிறப்புத் தூதருமான கோர்டான் ப்ரௌன் “நான் மலாலா” என்ற மனுஇயக்கத்தைத் தொடங்கினார். 2015 ம் ஆண்டில் உலகின் எந்தக் குழந்தையும் கல்வி கற்காமல் இருக்கக் கூடாது என்பது தான் இதன் நோக்கம். மலாலா போல் உலகமெங்கிலும் உள்ள கல்வி மறுக்கப்பட்ட பெண்கள் பள்ளி செல்ல இது வழிவகை செய்யும்.

பாகிஸ்தானின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான சித்தாரா ஈ சுஜாத் மலாலாவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 10ஐ மலாலா தினமாக ஐநாசபை அறிவித்திருக்கிறது. உலகெங்கிலுமுள்ள பெண்குழந்தைகளின் கல்விஉரிமைக்கான குறியீடாக மலாலா திகழ்வதாக ஐநா பொதுச் செயலாலர் பாம் கி மூன் புகழாரம் சூட்டி இருக்கிறார். மலாலாவுக்கு அமைதிக்கான நொபேல் பரிசு தரப்பட வேண்டும் என்று கனடா குடியுரிமைத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கோரி வருகின்றனர்.

*

அக்டோபர் 25, 2012.

சுடப்பட்ட 16ம் நாள் மருத்துவமனையில் இருந்து தந்தையுடன் தொலைபேசியில் பேசிய மலாலா, தனக்கு வாசிக்க புத்தகங்கள் எடுத்து வருமாறு கேட்டிருக்கிறாள். சிகிச்சை முடிந்தவுடன் சொந்த ஊர் திரும்பவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறாள்.

சுதந்திரத்தின் குரல்வளையைத் தோட்டாக்கள் துளைத்து ஊமையாக்க முடியுமா!

*******

Comments

Prabu Krishna said…
கட்டுப்பாடு மிக்க ஒரு நாட்டில் இது போல பெண்கள் வருவது பாராட்டப்பட வேண்டியது.

கோடி மலாலாக்கள் உருவாகட்டும் இந்த உலகில்.
தளவடிமைப்புக்கு முதல் நன்றி. வாசிக்க எளிமையான வரிகளின் கோர்வை மூலம் கற்றுத்தந்தமைக்கு மீண்டும் நன்றி. ஆழம் பத்திரிக்கையிலேயே படித்தேன்.
Anonymous said…
http://duraithelegaleagle.blogspot.in/

மலை அருவிகளில் சுற்றித்திரிபவன் ஒருவனின் blog...தமிழ்நாட்டிலேயே நீங்கள் பார்த்திடாத அழகிய மலை அருவிகள் எல்லாம் எத்தனை பாருங்கள்...

for dynamic views

http://duraithelegaleagle.blogspot.in/view/sidebar

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்