வயிறு எரிகிறது!

இந்த வேலைக்காரர்கள் பற்றி தனியாய் ஒரு நாவலே எழுதலாம். அவ்வளவு இருக்கிறது.

வேலைக்கார்கள் என்றால் வீடுகளில் வேலைக்கு இருக்கும் பெண்கள். இவர்களெல்லாம் ஒரு பொழுதுபோக்கு போல்தான் வீட்டு வேலைக்கு வருகிறார்கள். அன்றைக்கு இஷ்டம் இருந்தால், மூட் இருந்தால் வருவார்கள். இல்லையென்றால் லீவ். மாதத்துக்கு 15 நாட்கள் வந்தாலே அதிகம். கேட்டால் ஊருக்குப் போனேன், விசேஷத்துக்குப் போனேன், துஷ்டிக்குப் போனேன், கோயிலுக்குப் போனேன், சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள், உடம்பு சரியில்லை, பேருந்து கூட்டம் / லேட், ரேஷன் கார்ட் ரென்யூவல் என கலர்கலரான‌ காரணங்கள். நம்பித்தானே ஆக வேண்டும். சில‌ நாள் நியாயமான காரணம் இருக்கும் தான். ஏற்கத் தான் வேண்டும். ஆனால் அதற்காக‌ மாதத்தில் பாதி நாட்களா? என் அலுவலகத்தில் இப்படிச் செய்தால் அடுத்த மாதம் சம்ப‌ளம் செட்டில் செய்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். நிஜமாகவே அப்படி நடந்திருக்கிறது.

ஆனால் இவர்களுக்கோ முதலாளி ஒரு கேனக்கூ.. தானே. எச்சரித்து விட்டு மீண்டும் சேர்த்தும் கொள்வோம். சகித்துக் கொள்வோம். மாதம் பாதி நாள் வேலைக்கு வர முடியாதவர்களுக்கு எதற்கு வேலை? கிடைத்தவரை லாபம். சம்பளம் வந்து தான் வண்டி ஓட வேண்டிய நிலைமை இல்லாது இருக்கலாம். ஆனால் அதற்கு நாங்கள் தான் இளிச்சவாயர்களா? நாங்கள் இவர்களின் சேவையை சார்ந்து வாழும் ரத்தம் சதை கொண்ட மனிதர்கள் என கொஞ்சமும் உறைப்பதில்லை.

லீவ் எடுக்கும் அந்த நாளில் வராததை குறைந்தபட்சம் அன்று காலையிலேனும் ஃபோன் செய்தோ நேரில் வந்தோ (மிக அருகில் தான் வீடு) சொல்ல வேண்டும் என்ற அக்கறை கூட இல்லை. நண்பகல்12 மணி வரை காத்திருந்து நாமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை என் வீட்டுப் பெண்கள் செய்ய வேண்டும். அல்லது நாமாக ஃபோன் செய்து தெரிந்து கொள்ள வேண்டும். அதுவும் பாதி நேரம் ஃபோன் எடுக்க மாட்டார்கள். இது போல் ஒரு வாரம் கூட தொடர்ந்து நிகழும். பிறகு திடீரென திரும்ப ஒருநாள் வந்து நிற்பார்கள். என் மனைவியும் கண்டித்து விட்டு அனுமதிப்பாள். வேறென்ன செய்வது? அதட்டிக் கேட்டால் தடாலென்று வேலையிலிருந்து நின்று விடுவார்கள். பிறகு புதிதாக வேலைக்கு ஆள் தேடி அலைய வேண்டும். எப்போது கிடைப்பார்கள் என சொல்ல முடியாது.

வேலைக்கு வர வேண்டும் என ஆரம்பத்தில் பேசிய நேரம் காலை 8 மணி. பல சமயம் 11 மணிக்குத் தான் வருவார்கள். அப்படி லேட்டாக வந்த பின்னும் ப்ரேக்ஃபாஸ்ட் எடுக்க மீண்டும் ஒரு மணி நேரம் வீட்டுக்குப் போய் விடுவது. கூலி வேலைக்குச் செல்லும் எத்தனையோ தொழிலாளர்கள் காலை 8 மணிக்கெல்லாம் வீட்டில் காலை உணவு முடித்து வேலைக்குக் கிளம்புவதில்லையா? இவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு அந்த சொகுசு தேவைப்படுகிறது.

இத்தனைக்கும் அந்தப் பெண் எங்கள் வீடு தவிர வேறு எங்கும் வேலை பார்க்கவில்லை. ஒரே ஒரு வீட்டுக்கு வேலைக்கு சென்று வர அவ்வளவு சோம்பேறித்தனம். குழந்தையைப் பார்த்துக் கொள்ள வரும் பெண் குளித்து ஹைஜீனாக வர‌ வேண்டும் என அக்கறை இல்லை. ஏதேனும் பூஜை செய்யும் நாட்களில் முன்பே அறிவித்தாலும் இதே கதை தான்.

ஞாயிற்றுக்கிழமை சம்பளத்துடன் கூடிய விடுமுறை. நாங்களாக ஊருக்குப் போனாலோ வேறு காரணங்களுக்காக வர வேண்டாம் என்று சொன்னாலோ அந்த தினங்களிலும் சம்பளம் உண்டு. அவர்களாக விடுமுறை எடுக்கும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் கட். இத்தனையும் தாண்டி இடையிடையே பலமுறை மாதச் சம்பளத்தை விட அதிகத் தொகையைக் கூட‌ முன்பணமாகக் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். அதை ஆயிரம் ஆயிரமாக மாதச் சம்பளத்தில் பிடித்துக் கொள்ள வேண்டும். அதற்கு தக்கது போல் மனதில் நம்பிக்கையை வளர்க்க ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட மாட்டார்கள்.

வேறு வழியில்லை. இதை எல்லாம் சகித்துத் தான் ஆக வேண்டும். பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வீட்டு வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. அதனால் எல்லாவற்றுக்கும் வாய் பொத்தி இருக்க வேண்டும். சிலர் தம் சொந்த ஊர்களில் இருந்தே ஆட்களைக் கொண்டு வந்து வீட்டோடு வைத்துக் கொள்கின்றனர். எங்களுக்கு அந்த இழவும் சரியாய் வாய்க்க மாட்டேன் என்கிறது. செக்யூரிட்டிகள் போல் இதையும் ஒரு கார்பரேட் தொழிலாக யாராவது எடுத்து நடத்தலாம். காசு போனாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் ஒழுக்கமாவது மிஞ்சும்.

பூர்ஷ்வா என்ற வார்த்தையை இன்னொருமுறை சொல்லாதீர்கள் ஐயா, வயிறு எரிகிறது!

Comments

உண்மை தான் ஆனால் twitterilo,bloggerilo வேலை காரர்கள் இல்லையே பின் எப்படி உங்கள் messagi அறிந்து கொள்வார்கள்
Anonymous said…
உங்கள் தனிப்பட்ட அனுபவத்தை வைத்து அனைத்து வீட்டுபணிப்பெண்களையும் குற்றம் சாட்டும் தொனி இருக்கிறது . அல்லது இதற்கு முன் வேறு பணியாளர்களும் இதே மாதிரி உங்களிடம் நடந்துக்கொண்டார்களோ ??

எங்கள் அபார்ட்மென்ட்க்கு ( 5 வீடுகள் ) ஒரே பணிபெண் தான். 2 குழந்தைகள். இருந்தாலும் சமாளிக்கிறார் நன்றாகவே.அதனால் சிறு தவறுகள் பெரிதாகத் தெரிவதில்லை

Kalees
Anonymous said…
This is an absolute non-sense. Just because your maid is not good and regular you cant blame the entire maid community. Also now you are a responsible writer and there are lot of people following your posts and twitter. So kinldy request you to dont post such article in future based on your personal experience.
ராஜா said…
அசோகமித்திரனை வாசிக்க துவக்கம் தருமாறு அவரின் சில நூல்களை பரிந்துரைக்குமாறு கேட்டுகொள்கிறேன்.நன்றி
சாரு எக்சைல் ல சொன்ன கார் டிரைவர் பஞ்சாயத்து ஏறத்தாழ இதே ரகம்தான் :-))
Anonymous said…
வினவு போன்ற குமாஸ்தா புரட்சியாளர்கள் வேண்டுமானால் உளறலாம்...உண்மை நீ சொன்னதுதான் ஆனால் நீ ரொம்ப லேட்டு அதிகாலை விடிகாலை என முற்போக்கு புடலங்காய்களுக்கு ஒத்து ஊதியவந்தானே நீ?உண்மை இப்போதாவது விளங்கியதே சந்தோசம் ...
Anonymous said…
First world problem.

-- ts
Anonymous said…
அன்புள்ள சி.எஸ்.கே,

முதல நீங்கள் அவங்கள எந்த எந்த வீட்டு வேலைக்காக சேர்த்தி இருக்கீங்கனே தெரியல. பொதுவா வீட்டு வேலைன்னா என்னன்னு புரிஞ்சுக்கிறது? அத சொல்லுங்க. சமையல் வேலையுமா? சமையல் எப்படியும் நாம தான் செஞ்சாகனும். மறைக்காம சொல்லுங்க, அவங்க வேலை பளுவ குறைக்க நீங்க என்ன உதவிகள் செஞ்சு இருக்கீங்கன்னு?

ஒயிட் காலர் ஜாப்ல இருக்கோம், பெருசா துணி அழுக்காகாது, எங்க வீட்டுல பேன்ட் தவிர அனைத்தையும் வாஷிங் மெஷின்ல போட்டுடுவோம்.அது வீட்டு வேலைக்கு உதவி செய்ய வரவங்களுக்கு மத்த வேலைகளை எளிதாக்குது. வீடு துடைக்கிற நாளன்று நாங்க வீட்ட கூட்டி, பொருட்களை ஒதுக்கி வைத்து துடைக்க ரெடியா வச்சிருப்போம். வாரத்துல ஒரு நாளோ / இரண்டு நாளோ தான் வீடு துடைப்போம், சோ இப்படி செஞ்சா அதுலையும் பிரச்னை வராது. நாம எதையும் ப்ளான் பண்ணி கொடுத்தா, வேலைக்கு வரவங்க வேலைய முடிச்சுட்டு மத்தியானம் ரிலாக்ஸா மெகா சீரியல் பார்த்துட்டே போவாங்க.

ஆன் சைட்ல அமெரிக்கா அனுப்புவான், லட்ச ரூபா சம்பளம் தரான், குறைந்த வட்டில கடன் தரான், PF பணம் வரும்னு நாம நம்ம முதலாளிக்கு பயப்படலாம், ஆனா நம்ம வீட்டுக்கு ஒத்தாசைக்கு வரவங்களுக்கு சம்பளம் தவிர வாழ்க்கைக்கான ஒரு உத்திரவாதம் கூட தர முடியாத நாம, அவங்க நமக்கு அடக்கமா இருக்கணும்னு நினைக்கிறது என்ன வகை நியாயம்?

அவங்க வேலைக்கு வரதே அவங்க குடும்பத்துக்காக தான், நம்மள போலத்தான், அத அவங்க கவனிச்சிட்டு வரது தப்பில்லையே. இப்போ இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலா சொல்லுங்க. . .
1) உங்க வீட்டுக்கு வேலைக்கு வர பெண்ணோட கணவர் எங்க வேலை பார்கிறார், குழந்தைங்க எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க?
2) உங்க வீட்டுக்கு வேலைக்கு ஒத்தாசைக்கு வரவங்க வீட்டு விசேஷம் எத்தனை அட்டண்ட் பண்ணி இருக்கீங்க?
3) எத்தன தடவ கேட்கிறப்ப எல்லாம் லீவு கொடுத்து இருக்கீங்க?
4) ரெண்டு மூணு நாள் உடல் நலம் சரியில்லைன்னு லீவு போட்டிருந்தா, நீங்களோ உங்க மனைவியோ சென்று பார்த்து இருக்கீங்களா?
5) சின்க் தொட்டில வெறும் ரெண்டு தட்டு கிடந்தா, நீங்களே கழுவி வச்சு இருக்கீங்களா? இல்ல வேலை செய்யறவங்க வரும் வரை வெயிட் பண்ணுவீங்களா?
6) இது ரொம்ப முக்கியமான கேள்வி, அவங்க வேலைக்கு சேர வந்தப்ப கேட்ட சம்பளத்த கொடுத்தீங்களா?

அன்புடன் தோட்டா
@தோட்டா

பதிலை தனிப்பதிவாகப் போட்டிருக்கிறேன். http://www.writercsk.com/2012/12/blog-post_9485.html

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்