கலைஞருடன் COFFEE, வைரமுத்துவுடன் WALK

ஆழம் ‍- செப்டெம்பர் 2012 இதழில் சமூகவலைதளங்களில் பிரபலங்கள் குறித்த எனது கட்டுரை வெளியாகி உள்ளது. ட்விட்டரில் இருக்கும் பிரபலம் என்ற வகையில் பாடலாசிரியர் மதன் கார்க்கியை தொலைபேசி வழியும் ட்விட்டரால் பிரபலம் ஆனவர் என்ற வகையில் 'அரட்டைகேர்ள்' சௌம்யாவை இணையத்தின் மூலமும் மினி பேட்டி எடுத்தது இக்கட்டுரை எழுதியதன் குறிப்பிடத்தகுந்த அனுபவம். சிரமம் பாராது பேட்டியளித்த இருவருக்கும் என் ப்ரியங்கள்.

கலைஞர் முதல் வலைஞர் வரை - http://www.aazham.in/?p=1861

*******

கடந்த ஆகஸ்ட் 13 அன்று தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி ட்விட்டரில் தன் அதிகாரப்பூர்வக் கணக்கைத் துவக்கி இருக்கிறார். அவர் போட்ட முதல் ட்வீட் டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்து ஆங்கிலத்தில் இருந்தது! உடனே கட்சி உடன்பிறப்புக்கள் ட்விட்டரில் இணைந்து வரவேற்பு மற்றும் வாழ்த்து மழை பொழியத் தொடங்கி விட்டனர். கொஞ்ச நேரம் திமுக மாநில மாநாடு நடக்கும் நகரின் சாலைபோல் காட்சியளித்தது டைம்லைன்!

கலைஞர் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் சக்தி. ஒவ்வொரு துறையிலும் அவர் போன்ற பிரபலங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் காட்சிக்கெளியராய் கிட்டும் நிலை சாத்தியமாகி வருகிறது சமீப காலங்களில்.

உலகமே நிர்வாணமாகிறது. ரகசியங்கள் எதுவும் ரகசியங்களாகவே நீடிப்பதில்லை. எல்லோரும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள் (எல்லாவற்றையும் என்றால் நிஜமாகவே எல்லாவற்றையும்!). பரவலாகி வரும் Social Networking Sites எனப்படும் சமூக வலைதளங்கள் நமது தினப்படி வாழ்க்கையில் வகிக்கும் ஸ்தானமும், சமூக உளவியலில் ஏற்படுத்தும் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் ஓர் ஆசாமியை அல்லது ஒரு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள முகவரியும், தொலைபேசியும் தருவார்கள். ஐந்தாண்டுகளுக்கு முன் அது மின்னஞ்சல், வலைதளம் என்றானது. தற்போது அந்த இடங்களை ஆக்ரமித்திருப்பவை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள்.

ட்விட்டர் என்பது ஒரு சுவாரஸ்யமான சமூக வலைதளம். அதில் ட்வீட் என்பது ஒரு படைப்பு. ஒரு ட்வீட்டில் 140 எழுத்துக்களுக்கு மட்டுமே அனுமதி. அந்த வரையரைக்குள் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும். ட்விட்டரில் எழுதுபவர் ட்வீட்டர். அவரைப் பின்தொடர்ந்து வாசிப்பவர் ஃபாலோயர். யாராவது நம்மைப் வாசிப்பது பிடிக்கவில்லையெனில் அவரை ப்ளாக் செய்து விடலாம்.

ட்விட்டர் வலைதளம் 2006ல் ஜேக், எவான் என்ற இருவரால் தொடங்கப்பட்டது. இன்றைய தேதியில் உலகம் முழுக்க சுமார் 50 கோடி பேர் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அதாவது உலகில் 14 பேரில் ஒருவர் ட்விட்டர் பயன்படுத்துகிறார்.

அப்படி என்ன தான் இவர்கள் ட்வீட் செய்கிறார்கள்? சாதாரணர்கள் பொதுவாய்த் தம் கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள். பிரபலங்கள் கருத்துக்களோடு தாம் பல் விளக்குவது, ப்ளைட்டில் போவது என எல்லாவற்றையும் ட்வீட் செய்கிறார்கள்!

ஃபேஸ்புக் என்பது மற்றொரு சமூக வலைதளம். இதில் ப்ரொஃபைல் அல்லது பேஜ் உருவாக்கலாம். பொதுவாய் சாதாரணர்களுக்கு ப்ரொஃபைல், அதற்கு நண்பர்கள். பிரபலங்களுக்கு பேஜ், அதற்கு ரசிகர்கள். போஸ்ட், நோட் என பலவழிகளில் கருத்துக்கள் இதில் பகிரலாம் - முக்கியமாய் புகைப்படங்கள் பரவலாய்ப் பகிரப்படுகின்றன. இவற்றிற்கு கமெண்ட்கள் / லைக் போடலாம்.

ஃபேஸ்புக் தளத்தை 2004ல் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் ஐவர் தொடங்கினார்கள். உலகம் முழுக்க 96 கோடி பேர் ஃபேஸ்புக் கணக்கு வைத்திருக்கின்றனர். கொஞ்சம் நாளில் இந்திய ஜனத்தொகையைத் தொட்டுவிடும் ஃபேஸ்புக் பயனர் எண்ணிக்கை.

“இந்த ஊடகத்தை நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. அதனால் இது குறித்த பதட்டமும், சந்தேகமும் இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி உங்களோடு பேச, விஷயங்களைப் பகிர இப்போது இங்கே வந்திருக்கிறேன்." - இரு மாதங்கள் தன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை அறிமுகப்படுத்தி கமல்ஹாசன் பேசியது இது.

இன்று கிட்டதட்ட எல்லாத்துறை பிரபலங்களும் ஏதாவது சமூக வலைதளத்தில் இருக்கிறார்கள். தம்முடைய ரசிகர்களுடன், வாசகர்களுடன், தொண்டர்களுடன் நேரடியாகப் பேசுகிறார்கள். தகவல்களை, கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தீவிரமாக ட்விட்டரில் இயங்குகிறார். அரசியல் கருத்து, கலை விமர்சனம், வாழ்த்து, அஞ்சலி என எல்லாவற்றையும் அங்கே பகிர்கிறார். சம்பாஷணைகளில் சாதரணர்களுடன் சமபந்தி உறவாடுகிறார்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ட்விட்டரில் மிகத் தீவிரமாக இயங்குகிறார். பொதுவாய் தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் புதிய பதிவுகளைப் பகிர்கிறார்.

பங்களாதேஷைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் ட்விட்டரில் பெண்ணிய ஆதரவுக் கருத்துக்களைப் பரவலாகப் பதிகிறார். "முதலில் நான் ஒரு மனுஷி. என் யோனி என்பது ரெண்டாம் பட்சம் தான். அதைக் கொண்டு என்னைத் தீர்மானிக்கலாகாது." என்பது அவரது சமீபத்திய ட்வீட்களில் ஒன்று.

கவிப்பேரரசு வைரமுத்து மாதமொருமுறை தன் ட்விட்டர் பக்கத்தின் மூலம் தன் வாசகர்களுடன் உரையாடுகிறார். அவர்களின் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு, விமர்சனங்களுக்கு பதிலளிக்கிறார். இதை ‘எழுத்தாடுதல்’ என்று குறிப்பிடுகிறார்.

வைரமுத்துவின் மகனான பாடலாசிரியர் மதன் கார்க்கியும் ட்விட்டர் கணக்கின் மூலம் தம் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். பிரபல பின்னணிப் பாடகிகள் ஸ்ரேயா கோஷல், சின்மயி இருவரும் ட்விட்டரை அதிகம் பயன்படுத்துபவர்கள்.

‘இசை ஞானி’ இளையராஜா குடும்பத்தின் இளைய தலைமுறையில் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், வாசுகி பாஸ்கர் எல்லோரும் ட்விட்டரில் இருக்கின்றனர். இவர்களுக்குள் அவ்வப்போது சுவாரஸ்யமான உரையாடல்களும், கருத்துப் பரிமாற்றங்களும் நடக்கின்றன.

இளம் நடிகர்கள் ஜீவா, சிம்பு, தனுஷ், சித்தார்த் மற்றும் நடிகைகள் ஸ்ரேயா, த்ரிஷா, சமந்தா, ஸ்ருதி ஹாசன், திவ்யா, சமீரா ரெட்டி, பாவ்னா, ஜெனிலியா, நமீதா, ஸ்வாதி, சோனியா அகர்வால் ஆகியோரும் ட்விட்டரில் இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், இயக்குநர்கள் கௌதம் மேனன், செல்வராகவன், வெற்றிமாறன், கேவி ஆனந்த், எம் ராஜேஷ், சி.எஸ்.அமுதன், தயாரிப்பாளர்கள் தயாநிதி அழகிரி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் ட்விட்டரில் உள்ளனர்.

இது தவிர பிரபலங்களின் மனைவிகளான கீதாஞ்சலி செல்வராகவன், கிருத்திகா உதயநிதி, நந்தினி கார்க்கி போன்றோரும் ட்விட்டரில் வலம் வருகிறார்கள்.

இதே போல் சில திரையுலக பிரபலங்கள் ஃபேஸ்புக்கிலும் உள்ளனர். இயக்குநர்கள் விக்கிரமன், வசந்தபாலன், லிங்குசாமி, சுப்ரமணியம் சிவா, தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நடிகர் சித்ரா லக்ஷ்மணன், நடிகை ‘அண்ணி’ மாளவிகா ஆகியோர் ஃபேஸ்புக்கில் இயங்கி வருகின்றனர்.

நடிகர் ரா.பார்த்திபன் தனக்கே உரிய வித்தியாசமான சுவாரஸ்யமான வெளிப்பாட்டு உத்திகளுடன் ஃபேஸ்புக்கில் வலம் வலம் வருகிறார்.

திரையுலகப் பிரமுகர்களுக்கு இணையாக வெகுஜன எழுத்தாளர்களும், நவீன இலக்கியவாதிகளும் சமூக இணையதளங்களில் தீவிரமாக செயல்படுகின்றனர்.

மனுஷ்ய புத்திரன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் சமகால நிகழ்வுகள் குறித்த பகடியான கருத்துக்களை தினசரி பகிர்கிறார். சாரு நிவேதிதா நேரடியாக பங்களிக்கும் ‘சாரு வாசகர் வட்டம்’ என்ற குழுமம் ஃபேஸ்புக்கில் இயங்கி வருகிறது. தான் எந்தவொரு சமூக வலைதளத்திலும் இல்லை, தன் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் எந்தக் கணக்கும் தன்னுடையதல்ல என சமீபத்தில் அறிக்கை விட்டார் ஜெயமோகன். எஸ்.ராமகிருஷ்ணனும் இதுவரை எந்த சமூக வலைதளத்திலும் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. ஃபேஸ்புக்கில் இருக்கும் ஞாநி அவ்வப்போது அங்கே சில தீவிரமான விவாதங்களை நிகழ்த்துகிறார்.

பெண் படைப்பாளிகளான  எழுத்தாளர் சந்திரா, கவிஞர் மற்றும் இயக்குநர் லீனா மணிமேகலை, ஆங்கிலக் கவிஞர் மீனா கந்தசாமி ஆகியோர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் தம்முடைய காத்திரமான கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள்.

எழுத்தாளர்கள் விமலாதித்த மாமல்லன், இரா.முருகன், பாஸ்கர் சக்தி, ஷோபா சக்தி, ‘சுபா’ சுரேஷ், தமிழ்நதி, உமா ஷக்தி, லக்ஷ்மி சரவணகுமார், கவிஞர்கள் மகுடேசுவரன், பழனிபாரதி, ராஜா சந்திரசேகர், தபூ சங்கர், பத்திரிக்கையாளர்கள் குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன், புதிர தலைமுறை ஆசிரியர் மாலன், பதிப்பாளர் காந்தி கண்ணதாசன், ‘காலச்சுவடு’ கண்ணன், ‘கிழக்கு’ பத்ரி சேஷாத்ரி ஆகியோர் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள்.

எழுத்தாளர் பா.ராகவன் ட்விட்டரில் இயங்கி வருகிறார். அவரது ட்வீட்கள் ‘குற்றியலுலகம்’ என்ற தொகுப்பாகவும் வந்திருக்கிறது. என்.சொக்கன் சங்க இலக்கியம், சினிமா பாடல்கள் குறித்து சுவாரஸ்யமாய் ட்வீட் செய்கிறார். பாடலாசிரியர் விவேகாவும் அவ்வப்போது கவித்துவ வரிகள் பகிர்கிறார்.

முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம், மற்றும் எம்எல்ஏக்கள், மேயர்கள் உள்ளிட்ட பல கட்சி அரசியல் பிரமுகர்களும் ஃபேஸ்புக் தளத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
கலைஞருக்கும் ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வப் பக்கம் உருவாக்கி இருக்கிறார்கள்.

பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இருப்பதால் பல நன்மைகள் இருந்தாலும் சில வினோதமான பிரச்சனைகளையும் சந்திக்க அங்கே வேண்டி இருக்கிறது.

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சஷி தரூர் 2009ம் ஆண்டில் மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது அரசாங்கத்தின் விசா கொள்கைகள் குறித்து ட்விட்டரில் அவர் பகிரங்கக் கேள்விகள் எழுப்பியது கடும் சர்ச்சைக்குள்ளானது.

சில ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதும் பிரபல இந்திய எழுத்தாளரான சேத்தன் பகத் தன் புத்தகங்கள் கள்ளப்பிரதிகள் விற்கப்படுவது குறித்து ட்விட்டரில் குமுறி, இம்மாதிரியான ஒரு தேசம் எப்படி முன்னேறும் எனக் கேட்கப் போக, அதை ஒருவர் கிண்டல் செய்ய, கடுங்கோபத்துக்குள்ளான சேத்தன் அவரை ப்ளாக் செய்ய, சேத்தனின் மற்ற ஃபாலோயர்கள் சேத்தனின் இச்செய்கையை கண்டித்து எதிர் ட்வீட்கள் போடத் துவங்கினர். ஒரு கட்டத்தில் சேத்தனால் அவர்களுக்கு பதில் சொல்லி மாள முடியாத இக்கட்டு ஏற்பட்டது.

பின்னணி பாடகி சின்மயி சில மாதங்களுக்கு முன் தமிழ் ட்வீட்டர்களுடன் தமிழக மீனவர் பிரச்சனை, பிராமணியம், பெண்ணியம் போன்ற விஷயங்களில் விவாதத்தில் இறங்கி, இறுதியில் அது கருத்து மோதலாகி சங்கடத்தில் முடிந்தது. அவர் அப்போது கணிசமான தமிழ் ட்வீட்டர்களை ப்ளாக் செய்தார். கடைசியில் அவரது அம்மா தலையிட்டு பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்க வேண்டி இருந்தது.

சமீபத்திய ஐபிஎல் போட்டிகளின் போது நடிகை தன்யா பாலகிருஷ்ணா (‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘7-ஆம் அறிவு’ படங்களில் துணை நடிகையாக நடித்தவர்) தமிழர்களைப் மின்சாரத்திற்காகவும், தண்ணீருக்காகவும் பிச்சை எடுப்பவர்கள் என்று திட்டியது அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தான். அது பெருத்த பிரச்சனையாகி அவர் அந்தப் பக்கத்தையே முடக்கி விட்டு இனிமேல் தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு பெங்களூரு போய் ஒளிந்து கொள்ள நேர்ந்தது.

சில தினங்கள் முன்பு பாடலாசிரியர் விவேகாவின் ட்விட்டர் கவிதைகளை சிலர் விமர்சிக்க, "ட்விட்டரில் கவிதை விமர்சனம் செய்பவர்களை எண்ணும்போது ஹன்சிகா மோத்வானி சுதந்திர தின உரையாற்றும் சித்திரம் வந்து போகிறது!" என்று பதிலடி தந்தார். அதற்கு கடுமையான எதிர்கருத்துக்கள் கிளம்பின.

டெசோ மாநாடு பற்றிய கடுமையான தாக்குதல்களை கலைஞர் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் எதிர்கொள்ள வேண்டி வந்தது. சில ஆதரவுக் குரல்களும் பறந்தன.

இப்படி பிரபலங்கள் பொதுவெளியில் அசடு வழிய நேர்ந்திடும், செய்வதறியாது திகைத்து நிற்கும் தருணங்களும் சமூக வலைதளங்கள் வழங்கவே செய்கின்றன.

பிரபலங்கள் சமூகவலைதளங்களுக்கு வருவது மட்டுமின்றி, சமூக வலைதளங்கள் மூலம் பிரபலங்கள் உருவாகவும் செய்கிறார்கள். வெகுஜன இதழ்களில் ஆனந்த விகடனில் ‘வலைபாயுதே’, குங்குமத்தில் ‘வலைப்பேச்சு’, குமுதம் ரிப்போர்ட்டரில் ‘ஆன்லைன் ஆப்பு’, அவள் விகடனில் ‘நெட் டாக்ஸ்‘ என சமூக வலைதளங்களில் வந்ததில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து அச்சு ஊடகங்கள் வெளியிடுகின்றன.

பேயோன் என்ற ட்வீட்டர் தன் ட்வீட்களை தொகுத்து 'பேயோன் ஆயிரம்' என்ற புத்தகமாக வெளியிட்டார். அது பெரும் வரவேற்பினைப் பெற்றது. இப்போது ஆனந்த விகடனில் பத்தியும் எழுதுகிறார். தோட்டா என்ற பெயரில் ட்விட்டரில் எழுதும் ஜெகன் குங்குமம் இதழில் தொடர் எழுதுபவராகப் பரிணமித்திருக்கிறார்.

ஒருவரைக் கூட ஃபாலோ செய்யாமல் தன் அபாரமான ட்வீட்கள் மூலமே கிட்டதட்ட நாலாயிரம் ஃபாலோயர்களை ஈர்த்து வைத்திருக்கிறார் அராத்து.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழ் சமூக வலைதளங்களில் சிறந்த பொழுதுபோக்கு எழுத்தாளர்கள் எனக் குறிப்பிட்ட ஐவரில் ட்விட்டரில் ராஜன்லீக்ஸ் என்ற பெயரில் எழுதும் ராஜனும் ஒருவர். பின்ஸ்டார்ம் தேந்தெடுத்த இந்தியா இன்ஃப்ளூயன்சர்ஸ் என்ற 100 பேர் பட்டியலில் தமிழில் இருந்து இடம்பெற்ற ஒரே ஆளும் இவர் தான்.

ஹெட்லைன்ஸ் இந்தியா தளம் அறிவித்த ஹைஃப்ளையர்ஸ் 2011 விருதுகளில் இந்திய அளவில் சிறந்த ட்வீட்டராக கார்க்கி தேந்தெடுக்கப்பட்டார். 6,300 பேருடன் தமிழில் அதிகம் ஃபாலோவர்கள் கொண்ட ட்வீட்டர் இவர். டான் அஷோக் இந்திய அளவில் ஃபேஸ்புக்கில் சிறந்தவராக ஹைஃப்ளையர்ஸில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரட்டைகேர்ள் என்ற பெயரில் எழுதி வரும் கோவையைச் சேர்ந்த சௌம்யா ஒரே ஆண்டில் 16,700 ட்வீட் போட்டு 4,700 ஃபாலோயர்களைப் பெற்றிருக்கிறார். தமிழ் ட்வீட்டர்களில் மிக அதிக ஃபாலோயர்கள் கொண்ட பெண் இவர் தான். 

சமூக வலைதளங்களில் பரவலான மக்கள் 24 மணி நேரமும் பங்களித்துக் கொண்டிருப்பதற்கு செல்ஃபோன்களின் - குறிப்பாய் ஸ்மார்ட்ஃபோன்களின் - வருகை ஒரு முக்கியக் காரணம். கணிப்பொறி, லேண்ட்லைன் போன்றவை இருந்தால் தான் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை மாறி சட்டைப்பையிலிருக்கும் செல்ஃபோனிலேயே இன்று எல்லாவற்றையும் செய்து விட முடிகிறது. ஒரு நண்பருக்கு எஸ்எம்எஸ் தட்டுவது போல் உலகத்திற்கே ட்விட்டரில் ஒரு ட்வீட்டோ, ஃபேஸ்புக் போஸ்ட்டோ போட்டு விட முடிகிறது.

சமூக இணையதளங்கள் பல்துறைப் பிரபலங்களின் நவீன ஜன்னல். எந்தவொரு தொழில்நுட்பத்தையும் போல், இதற்கும் மேற்சொன்ன சில பாதக அம்சங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவையனைத்தையும் மீறி, சமூக இணைய தளங்கள் சாதாரணர்களை அவர்கள் விரும்பும் பிரபலங்களுக்கு வெகு அருகே கொண்டு சேர்த்திருக்கிறது. இன்றைய தேதியில் ஒருவருக்கு கலைஞருடன் காஃபியோ, வைரமுத்துவுடன் வாக்கோ இம்மெய்நிகருலகில் சுலப சாத்தியம்!

அட! எங்கே அவசரமாய் கிளம்புகிறீர்கள், ட்விட்டரில் கணக்கு தொடங்கவா?

*******

ட்விட்டரில் இருக்கும் பிரபலம் - மதன் கார்க்கி, திரைப் பாடலாசிரியர்

சமூக வலைதளங்களின் ப்ளஸ்கள் என்னென்ன?

ரீச் தான் பெரிய ப்ளஸ். எனது பாடல் வகை (genre) பிரிப்பு ப்ராஜெக்ட்டின் போது ட்விட்டரில் 800 பேர் பங்களித்து உதவினார்கள். இன்று ஒரு பாடல் வெளியானால் உடனடியாக 2500 - 3000 பேர் அது குறித்து கருத்துக்கள் பகிர்கிறார்கள். அடுத்தடுத்த வேலைகளில் நம்மைச் சரி செய்து கொள்ள அந்த எதிர்வினைகள் உதவுகின்றன.

சமூக வலைதளங்களின் மைனஸ்கள் என்னென்ன?

சமூக வலைதளங்களின் வெளிப்படைத்தன்மையினால் எதிர்மறைக் கருத்துக்கள் வருவது சகஜம். அவற்றை சரியாய் எடுத்துக் கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும்
இருப்பதில்லை. இதை சமூக வலைதளங்களின் சிறிய மைனஸாகச் சொல்லலாம்.

ட்விட்டரில் நடந்த மறக்க முடியாத சம்பவம் என்ன?

அப்பாவை ட்விட்டருக்கு அழைத்து வந்தது தான். ஆர்வம் இல்லாது இருந்தவரை அவ்வப்போது ஓரிரு விஷயம் சொன்னால் போதும் என்று சம்மதிக்க வைத்தோம். இப்போது அப்பாவுக்கே பிடித்துப் போய் விட்டது. ரெகுலராகப் பயன்படுத்துகிறார்.

*******

ட்விட்டரால் பிரபலம் ஆனவர் - 'அரட்டைகேர்ள்' சௌம்யா, கோவை

ட்விட்டரில் இருக்கும் அனுபவம் குறித்து சொல்லுங்கள்?

ட்விட்டருக்கு வந்த பின்பு தான் எனக்கும் சுமாராக எழுத வரும் என்பதைப் புரிந்து கொண்டேன். எழுத்து தான் முக்கியமான அக அனுபவம். புற அனுபவம் என்றால் ஸ்மார்ட்ஃபோன் அல்லாத சாதாரண நோக்கியா 2730 மொபைல் ஃபோனை மட்டும் பயன்படுத்தி இதுவரையிலும் ட்வீட்கள் போட்டு வந்திருப்பதைச் சொல்லலாம்.

இதனால் கிடைத்திருக்கும் புகழை எப்படி உணர்கிறீர்கள்?

நிறைய சந்தோஷமும், அதை விட நிறைய பயமாகவும். பயம் என்று சொல்வது புகழ் தந்திருக்கும் எதிர்பார்ப்பையும் அதனால் வந்திருக்கும் பொறுப்புணர்வையும்.

சமூகவலைதளங்களினால் சமூக நன்மை ஏதும் உண்டா?

நன்மை, தீமை இரண்டும் உண்டு. நன்மை என்றால் நம் கருத்துகள் துரிதமாக மற்றவரைச் சென்றடைந்து விடுகின்றன; அதற்கான எதிர்வினைகளும் நம்மை அதே வேகத்தில் வந்தடைகின்றன. தீமை என்றால் சமூக வலைதளம் நம்மை அடிமைப்படுத்தி விடுகிறது. காலவிரயம் கண்கூடு எனினும் மீளமுடிவதில்லை.

******

சில பிரபலங்களின் சமூக வலைதளங்கள்
:   

கலைஞர் - https://twitter.com/kalaignar89
அப்துல் கலாம் - http://www.facebook.com/OfficialKalam
நரேந்திர மோடி - https://twitter.com/narendramodi
கமல்ஹாசன் - http://www.facebook.com/kamalhaasan.theofficialpage
ஏ.ஆர்.ரஹ்மான் - https://twitter.com/#!/arrahman
தஸ்லிமா நஸ்ரின் - https://twitter.com/taslimanasreen
வைரமுத்து - https://twitter.com/#!/vairamuthu
மனுஷ்ய புத்திரன் - http://www.facebook.com/manushya.puthiran
ரா.பார்த்திபன் - http://www.facebook.com/rparthiepan
த்ரிஷா - https://twitter.com/trishtrashers

*******

Comments

Unknown said…
Enjoyed reading this post ; I am already following all the celeb twitters .thanks a lot
இவ்வளவு பெயரையும் நியாபகப்படுத்தி அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்!
தெளிவான பார்வை கார்த்திக்!
Informative at the same time a noteworthy post
Informative post... I like the interview with arattai

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்