ஜெர்ஸிப்பசுவும் பால்காரனும்

ஒரு புதிய‌ மாத இதழுக்காக எழுதப்பட்டு சில காரணங்களால் வெளியாகாமல் போன எனது திரை விமர்சனக் குறிப்பு இது:

*******

7ஆம் அறிவு படத்துக்கு அதன் தயாரிப்பார் பெருஞ்செலவு செய்து ஊடகங்களில் விளம்பரம் செய்து கொண்டிருந்தார் என்றால், அதற்கு நேர்மாறாக செலவேயின்றி டிவிட்டர், ஃபேஸ்புக் முதலான சமூக வலைதளங்களில் வேலாயுதம் படத்துக்கு பொதுமக்களே விளம்பரம் செய்து கொண்டிருந்தார்கள் - ஆனால் எதிர்மறையாக, கிண்டலாக, நக்கலாக (உதாரணம் : "ஒருவரை மட்டும் கொன்றால் அது ஆயுதம்; தியேட்டருக்கு வரும் அத்தனை பேரையும் கொன்றால் அது தான் வேலாயுதம்!").


இந்தியப் புயலான ரா.ஒன், தமிழ்ச் சூறாவளியான 7ஆம் அறிவு ரிலீஸ் ஆவதன் காரணமாக(வும்) தமிழகத்தின் எந்த ஊரிலுமே பெரிய தியேட்டர்கள் கிடைக்காது ரெண்டாந்தர திரையரங்குகளில் மட்டும் தீபாவளிக்கு வெளியாகிய வேலாயுதம் அத்தனை அனுமானங்களையும் அவமானங்களையும் உடைத்தெறிந்திருக்கிறது.

குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என்று தொடர் தோல்விகளில் உழன்ற விஜய்க்கு காவலன் ஆறுதல் பரிசு என்றால் வேலாயுதம் பம்பர் லாட்டரி. கில்லி, சிவகாசி, போக்கிரி வரிசையில் விஜய்க்கு இன்னொரு ஜெயம் இந்த வேலாயுதம். தம் தம்பி ‘ஜெயம்’ ரவி தவிர மற்ற ஹீரோக்களையும் பொருத்தமாகக் கையாண்டு தன்னால் வெற்றிப்படம் தரமுடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குநர் எம்.ராஜா.

எம்.ராஜாவின் முந்தைய படங்கள் போல் இதுவும் தெலுங்கு ரீமேக் தான். 2000ம் ஆண்டில் நாகார்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஆசாத் தான் வேலாயுதம் ஆயிருக்கிறது. ஒரே வித்தியாசம் இம்முறை காட்சிக்குக் காட்சி டிட்டோ என்ற‌ ஃபார்முலாவைக் கைவிட்டு ஒன்லைனை மட்டும் எடுத்துக்கொண்டு திரைக்கதை எழுதியிருக்கிறார். அவ்வகையில் இப்படத்தை எம்.ராஜாவின் நிஜமான முதல் திரைக்கதை எனலாம்.

முதல்பாதி பரபரவென நகர்கிறது. இத்தனைக்கும் வழமையான விஜய் படங்களின் பஞ்ச் டயலாக், ஆக்ஷன் சீக்வென்ஸ் ஏதுமின்றி மிகையான நகைச்சுவையிலும், மிதமான உணர்ச்சிகரங்களிலுமே சுவாரஸ்யத்தைக் கொடுத்திருக்கிறார்கள். விஜய் பால்காரன் என்று சொல்கிறார்களே ஒழிய ஒரு சொம்பு பாலைக் கூட கண்ணில் காட்டுவதில்லை.

'துப்பறியும் சாம்பு' கணக்காய் விஜய் வெடிகுண்டுகளை அப்புறப்படுத்தும் காட்சிகள் எல்லாமே பட்டாசு. எம்.எஸ்.பாஸ்கரும் சந்தானமும் ரிலே ரேஸ் மாதிரி மாறி மாறி சிரிக்க வைக்கிறார்கள். இடையிடையே தொட்டுக் கொள்ள ஊறுகாயாய் ஹன்சிகா மோட்வானி பிரம்மாண்ட வெண்ணிற ஜெர்ஸிப்பசுவாய் அள்ளுகிறார்.

இரண்டாம் பாதி இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறது. பிரம்மாண்டமான ரயில்சண்டைக்காட்சி மட்டும் ரசிக்க வைக்கிறது. க்ளைமேக்ஸ் அந்நியன் படத்தை நினைவுபடுத்துகிறது. கெட்டப் உருவியது தவிர Assassin's Creed கேமிற்கும் இந்தப் படத்திற்கும் வேறு தொடர்பில்லை. ஜெனிலியா பரிதாபமாய்க் காட்சியளிக்கிறார்.

வழக்கமான துறுதுறு ஆனால் தங்கை செண்டிமெண்ட் பூசிய சரண்யா மோகன். வில்லனாக வரும் அபிமன்யு சிங்கும், வினீத் குமாரும் கவனிக்க வைக்கிறார்கள். ஷாயாஜி ஷிண்டே, பாண்டியராஜன், மணிவண்ணன், இளவரசு, ஓ.ஏ.கே. சுந்தர், வின்செண்ட் அசோகன், ராகவ், சூரி, பாண்டி ஆகியோரும் படத்திலிருக்கிறார்கள்.

மற்றபடி, விஜய் தான் படம் நெடுகிலும் பட்டையைக்கிளப்புகிறார். மங்காத்தாவில் அஜீத்தைப் பிடித்த மாதிரி இதில் விஜய்யை நமக்கு ரொம்பப் பிடித்துப் போகிறது. இரண்டாம் பாதியில் மட்டும் இன்னும் கொஞ்சம் தச்சு வேலை செய்திருந்தால் விஜய்க்கு இன்னொரு கில்லியாக இப்படம் அமைந்திருக்கும். விட்டு விட்டார்கள்.

திரைக்கதைக்கு அடுத்து படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது சுபாவின் வசனங்கள். காட்சியமைப்புகளை விட வசனங்கள் தாம் பிரதானமாய் படத்தின் முதல் பாதியை கலகலப்பாக்குக்கின்றன சமகால அரசியலைக் கிள்ளிப்பார்க்கும் வசனங்களும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன (“நல்லவேளை நான் ஆளுங்கட்சி”).

ஒரு மாஸ் படத்துக்குத்தர வேண்டிய இசையைத் தந்திருக்கிறார் விஜய் ஆண்டனி என்பதைத் தாண்டி குறிப்பிட வேறொன்றுமில்லை. ப்ரியன் கேமெரா அசத்துகிறது. மசாலா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய கே.வி.ஆனந்துக்கடுத்து நிற்கிறார் ப்ரியன். ஓட்டுமொத்தமாய்ப் பார்த்தால் எம்.ராஜாவின் மேக்கிங் அண்ட் பேக்கிங் அபாரம்.

தற்போது 7ஆம் அறிவு படத்திற்கு வந்து கொண்டிருக்கும் மிதமான எதிர்மறை விமர்சனங்களின் சாதக பலன்களையும் வேலாயுதம் படமே அறுவடை செய்யும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று தெரிகிறது.

முருகனின் வேலாயுதம் யாரைக் காப்பாற்றுகிறதோ இல்லையோ, எம்.ராஜாவின் வேலாயுதம் விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.

Comments

RRR said…
விளக்கமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் கட்டின மாதிரி உள்ளது இந்த விமர்சனம் ...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்