கற்பதுவே கேட்பதுவே கருதுவதே

இது ஒரு தொடர் பத்தியின் முதல் அத்தியாயம். கடந்த ஜன‌வரி 2011ல் ஓர் இலக்கிய ச‌ஞ்சிகைக்காக எழுதப்பட்டது. சில காரணங்களால் அதில் வெளியாகவில்லை. அதனால் இங்கே (இதில் 'தேகம்' நாவல் விமர்சனத்தை மட்டும் ஏற்கனவே தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்). இப்போது படித்துப் பார்க்கும் போது இதன் கலவை முக்கியமானதாகப் படுகிறது.

*

MAD, adj. Affected with a high degree of intellectual independence – Ambrose Bierce

*

பத்தி எழுத்து விஷேசமானது. இங்கு ‘பத்தி’ எனக் குறிப்பிடுவது சூடம், சாம்பிராணி வரிசையில் வரும் சைக்கிள் பிராண்ட் சங்கதியை அல்ல; எந்தவொரு விஷயத்தைக் குறித்தும் பத்தி பத்தியாக நீளுவதாக அல்லாமல் சுருக்கமாக – yet – சுவாரஸ்யமாக எழுதப்படும் Column Writing எனப்படும் பத்தி எழுத்தை. இன்றைய தேதியில் தமிழில் மிகப்பரவலாக எழுதப்படும் / வாசிக்கப்படும் வலைப்பதிவுகளுக்கு ஒரு மாதிரியான முன்னார்கள் என இவ்வகைப் பத்தி எழுத்துக்களைச் சொல்லலாம் – பித்ருக்கள் alive.

பத்தி எழுத்து உலகம் முழுக்க எல்லா பத்திரிக்கைகளிலுமே பிரபலமான சமாச்சாரம். குறிப்பிட்ட பத்தியை படிப்பதற்கென்றே ஒரு தினசரியையோ, வார இதழையோ வாங்குபவர்கள் அனேகம் பேர். ஒரு பத்திரிக்கையில் பத்தியாகத் தொடங்கப்பட்ட பகுதி பிற்பாடு தனிப்பத்திரிக்கையாக மாறிய கதை கூட நடந்துள்ளது. அமெரிக்காவில் சைர‌ஸ் கர்டிஸ் என்பவர் 1879ல் தொடங்கிய Tribune and Farmer என்ற மாத சஞ்சிகையில் தன் மனைவி லூயி நேப்பை Women at Home என்ற தலைப்பில் பெண்களுக்கான ஒரு பத்தி எழுதச் செய்தார். போகப்போக, அந்த பத்திக்கான‌ மவுசு அதிகமாக, 1883ல் அதைத் தனி இணைப்பாக வழங்கிப் பின் ஒரு வருட‌த்தில் தனிப் பத்திரிக்கையாகவே ஆக்கினார். தற்போது அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் பெண்கள் பத்திரிக்கையான Ladies' Home Journal தான் அது. பின்னர் சைர‌ஸ் கர்டிஸ் தான் முதலில் ஆரம்பித்த‌ பத்திரிக்கையை மூடி விட்டு, இப்பத்திரிக்கையையே முழுமையாக கவனிக்கக் தொடங்கியது தனிக்கதை.

தமிழில் மிகப்பிரபலமான இரண்டு பத்திகள் – கணையாழி இதழில் சுஜாதா எழுதிய‌ ‘கடைசிப்பக்கங்கள்’ மற்றும் விகடன் வலைதளத்தில் சாரு நிவேதிதா எழுதிய ‘கோணல் பக்கங்கள்’. இது தவிர, எனக்குப் பிரத்தியேகமாய் காலச்சுவடு இதழில் சுந்தர ராமசாமி எழுதிய 'வானகமே இளவெயிலே மரச்செறிவே' பத்தியை மிகப்பிடிக்கும் (title inspired). முன்னோடிகளை நினைத்துக் கொண்டு இந்தப் பத்தியைத் தொடங்குகிறேன் – All’s well.

எதைப் பத்தி எழுதுவது எனக் குழப்பம் வருகையில், பத்தி எழுதுவது தானே பாரம்பரியம்.

*

சென்னைப் புத்தகச்சந்தையையொட்டி உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சாரு நிவேதிதாவின் புதிய நாவல் 'தேகம்'. நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் இந்த நாவலை 'சரோஜாதேவி புத்தகம்' என்று ஒப்பிட்டதன் காரணமாக(வும்) தமிழ் கூறும் நல்லுலகில் தற்போது சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் உள்ளாகி வருகிறது.

கிரவுன் 1x8 அளவில் 175 பக்கங்கள் கொண்ட சிறுநாவல் இது. சிறுநாவல் என்றழைப்பது, சமகால‌ இலக்கியத்தில் வெளி வரும் நாவல்களுடனான‌ ஒப்பீட்டளவில் மட்டுமல்ல, சாரு நிவேதிதா இதுவரை எழுதிய நாவல்களிலேயே 'தேகம்' தான் அளவில் சிறியது.‌ எல்லோராலும் – அதாவது சாரு, உயிர்மை மற்றும் விழாவில் நாவல் பற்றி அற்புதமாய்ப் பேசின எஸ்.ராமகிருஷ்ணன் – கவனமாய் முன்னிறுத்த‌ப்படுவது போல் முழுமையாய் இது வதை பற்றியது அல்ல. வதை என்பது இந்நாவலின் subtext அல்ல; subset மட்டுமே.

மொத்தம் 26 அத்தியாய‌ங்கள் கொண்ட 'தேகம்' நாவலின் மூன்றே அத்தியாயங்களில் மட்டுமே வதை பற்றிய நிகழ்வுகள் காட்சிரூபமாய் வருகின்றன. அவையும் ரொம்பவும் அதிர்ச்சியூட்டக் கூடியவையாக இல்லை. நம்மில் நிறையப் பேர் (குறைந்தபட்சம் நான்) ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் Third Degree Torture Methods தான். குறிப்பாய் இதில் பெண்கள் வதை செய்யப்படுவதாய் சித்தரிக்கப்படவில்லை. அதாவது வதையின் வாதை பற்றியது எனும் போது ஒரு தேர்ந்த வாசகன் எதிர்பார்க்கும் உக்கிரம் (அல்லது வக்கிரம் என்றும் வைத்துக் கொள்ளலாம்) இந்த நாவலில் நிச்சயம் இல்லை. அது பெரும் குறை (Richard Straussன் Operaவை பின்னணியில் போட்டு வதை செய்தல் மட்டும் ஸ்பெஷல்).

எனது 'பரத்தை கூற்று' புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய‌ சாரு தான் அப்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ('தேகம்' தான்) ஒரு காலத்தில் தான் ஓர் ஆண் விபச்சாரியாக‌ (Gigolo) இருக்க நேர்ந்ததன் அனுபவ‌ங்களை ஒட்டியது என்றார். ஆனால் அதைப் பற்றிக்கூட அதிகபட்சம் இரண்டு மூன்று பக்கங்களில் மட்டுமே வருகிறது. அதே போல் Transgender சங்கதிகளையும் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்.

உபனிஷத்துகளும், ஜென்னும், பைபிளும் ஈர்க்கவில்லை – கவிதைகள் மட்டும் ஓக்கே. அதே சமயம், நாவலில் சில புதிய / சுவராசிய விஷய‌ங்களும் இருக்கவே செய்கின்றன‌‌. குறிப்பாய் Catamite குப்பியடித்தல், பஸ்ஸில் இடித்தல், பன்றிகளுக்கு காயடித்தல், மலம் அள்ளுதல், வளையம் மாட்டுதல் போன்ற இடங்களை முக்கிய‌மான மற்றும் உயிர்ப்புள்ள பதிவுகளாகக் கருதுகிறேன். அப்புறம், நேஹா வரும் அந்த 20ம் அத்தியாயம் ஒரு riot.
மற்றபடி, நாவலில் வரும் பிற‌ பகுதிகள் சாருவின் பழைய நாவல்களையே நினைவு 'படுத்துகின்றன‌' - வழக்கமான ingredients. இது ஒருவகை 'சாரு Syndrome'. இன்னமும் சாருவின் புனைவுகளுள் 'ராஸலீலா' தான் masterpiece. தமிழின் சிறந்த 10 நாவல்களைப் பட்டியலிட்டால் அது நிச்சயம் இடம் பெறும். அதில் நிறைய‌ இடங்களில் வெளிப்பட்ட வாழ்வின் நுட்பமான‌ தரிசனம் பின் சாருவின் புனைவெழுத்தில் தென்படவே இல்லை.

அது போன்ற மிகச்சில தீற்றல்கள் மட்டும் 'தேகம்' நாவலில் புலனாகின்றன – It’s mediocre.

*

உலகமே நிர்வாண‌மாகிறது. ரகசியங்கள் ரகசியங்களாகவே நீடிப்பதில்லை. எல்லோரும் எல்லாவற்றையும் (எல்லாவற்றையும் என்றால் நிஜமாகவே எல்லாவற்றையும்) பகிர்ந்து கொள்கிறார்கள். பரவலாகி வரும் Social Networking தளங்கள் ந‌ம் தினப்படி வாழ்க்கையில் வகிக்கும் ஸ்தானமும், சமூக உளவியலில் ஏற்படுத்தும் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் ஓர் ஆசாமியை அல்லது ஒரு நிறுவனத்தைத் தொடர்பு கொள்வதற்கு முகவரியும், தொலைபேசி எண்ணும் தருவார்கள். பின்ன‌‌ர் அது மின்னஞ்ச‌ல், வலைதளம் என்றானது. தற்போது அவ்விடத்தை ஆக்ரமித்திருப்பவை Facebook மற்றும் Twitter.

சமீபத்தில் கூகுள் நிறுவனம்‌ தனது கைபேசி இயங்கு தளமான ஆன்ட்ராய்டின் புதிய வெர்ஷனான Gingerbreadஐ வெளியிட்டது. இது மாதிரி புதிய வெர்ஷன் வெளியாகும் போது பொதுவாய் அதற்கு முந்தைய வெர்ஷனைப் பயன்படுத்தும் குறிப்பிட்ட‌ சில மாடல் கைபேசிகளுக்கு மட்டும் அந்தந்த நிறுவங்களில் software upgrade தருவார்கள். இம்முறை அப்படி எதிர்பார்க்கப்பட்ட மாடல்கள் Samsung Galaxy S மற்றும் LG Optimus One.

Upgrade தருவதாக Samsung முதல் நாளே அறிவித்து விட, LG நிறுவனமோ தனது Facebook தளத்தில் Gingerbread இயங்க‌ 1 GHz பிராசசர் தேவை, அதனால் upgrade தரவியலாது என அறிவித்தது (Optimus One மாடலில் பயன்படுத்தப்படுவது 600 MHz பிராசசர்). பின் ஓரிரு மணி நேரத்தில் உலகம்முழுக்க ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவோர் மத்தியில் இது பரவ, ஆன்ட்ராய்டில் லீடாகப் பணிபுரியும் Dan Morrill, தனது Twitter தளத்தில் Gingerbread இயங்குதளத்துக்கு அப்படி ஒரு கட்டுப்பாடும் கிடையாது எனப் பொதுவாக‌ அறிவித்தார். அடுத்த நாளே LG தவறான தகவலுக்கு வருத்தம் தெரிவித்து, அனைத்து Optimus One கைபேசிகளுக்கும் upgrade தரப் போவதாக தனது வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால் எப்போது என்பது தெரியவில்லை; இந்தியாவுக்கு இந்த upgrade வருமா என்பதும் இதுகாறும் தெளிவில்லை.

என்னுடையது LG Optimus One தான். வழி மேல் விழி வைத்து awaiting for the upgrade.

*

இந்த டிசம்பரோடு ஒரு தசம ஆண்டு நிறைவடைகிறது. இந்த‌ பத்தாண்டுகளில் மாற்று சினிமா என்பது தமிழில் தனது உச்சத்தைத்தொட்டிருக்கிறது. இந்த மண்ணின் மானிடர்கள் ரத்தமும் சதையுமாய், இந்த தேசத்தின் பிரத்யேக பிரச்சனைகளுடன் சற்றும் மிகையின்றி இவற்றில் வெளிப்பட்டிருக்கிறார்கள். அவ்வகையில் குறிப்பிடத்தகுந்த 10 படங்கள் இவை: 1. அழகி (தங்கர்பச்சான்) 2. விருமாண்டி (கமல்ஹாசன்) 3. ஆட்டோகிராஃப் (சேரன்) 4. காதல் (பாலாஜி சக்திவேல்) 5. வெயில் (வ‌சந்தபாலன்) 6. பருத்தி வீரன் (அமீர்) 7. கற்றது தமிழ் (ராம்) 8. சுப்ரமணியபுரம் (சசிகுமார்) 9.பூ (சசி) 10.வெண்ணிலா கபடி குழு (சுசீந்திரன்).

நட்சத்திரங்களை, ஜிகினாக்களை நம்பாத ஒளிமயத்துடன் காத்திருக்கிறது வருங்காலம். ந‌ம்பிக்கையூட்டும் இயக்குநர்கள் கனவுத்தொழிற்சாலைக்குள் வந்திருக்கிறார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் – அடுத்த தசம ஆண்டுக்கான தமிழ் சினிமா trump card : மிஷ்கின்.

*

உலகில் இரண்டு விதமான செயல்களே இருக்கின்றன : ஒன்று நம்மால் செய்ய முடிவது; இன்னொன்று நாம் செய்ய விரும்பாதது – Anon (எங்கோ எதிலோ எப்போதோ படித்தது).

*

Comments

Anonymous said…
sujaathavoda 'paththi'yum , chaaruvoda 'paththi'yum onnaa???????
@Anonymous
இருவரது பத்திகளையும் பிரபலமானவை என்று தான் சொல்லியிருக்கிறேனே ஒழிய மற்றபடி ஒப்பிடவில்லை.
Annamalai Swamy said…
சுஜாதாவின் கற்றதும் பெற்றது'மை மறந்துவிட்டீர்களே நண்பரே!
நன்றாக இருக்கிறது. இதில் கூறியவைகளில் பலரது புத்தகங்களை நுனிப்புல் மேய்ந்தமையால், புரிந்து கொள்ள இயலவில்லை. தமிழ் படிக்க. இயலா பொறியாளானானபடியால் கூட.
சற்று படித்துக் கொண்டிருக்கிறேன், ட்விட்டரில் உங்களைப்போல் சிலரது எழுத்துக்களால்.. நன்றி
-ட்விட்டர் தாத்தா
இதில் கூறிய பலரது எழுத்துக்களை நுனிப்புல் மேய்ந்தவன் என்பதால் சற்று புரிந்து கொள்ள முடியவில்லை.அதற்கு நான் பொறியாளன் ஆனதும்ஒரு காரணமாக கூறிக்கொள்வேன்.
சற்றே வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன் தங்களைப்போல் சிலரின் எழுத்துக்களை ட்விட்டரின் உதவியால் அறிந்தமையால்.
நன்றி அதற்கும்.
-ட்விட்டர் தாத்தா

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்