மரண தண்டனை - சில சிந்தனைகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாய் தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன் குறித்தானதல்ல இக்கட்டுரை. மரண தண்டனை குறித்த பொதுவான என் புரிதல்களைப் பகிர்வதே இதன் நோக்கம். சமீபமாக இது தொடர்பான விவாதங்கள் பரவலாகியுள்ள நேரத்தில் - குறிப்பாய் மரண தண்டனைக்கு ஆதர‌வாய்ப் பேசுவது ஒரு மோஸ்தராகி விட்ட நிலையில் - இதில் எனது நிலைப்பாட்டினை பதிவு செய்ய விரும்புகிறேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தண்டனை என்பது ஒருவர் செய்த குற்றத்திற்கானது அல்ல; அடுத்து இன்னொருவர் செய்யவிருக்கும் குற்றத்தைத் தடுப்பதற்கானது அது. பொறாமையும், பேராசையும் சூழ மனித குலம் வாழும் இன்றைய தேதியில் த‌ண்டனை ஏற்படுத்தும் பயத்தின் மூல‌மாக மட்டுமே ஒருவன் பெருங்குற்றம் புரிவதைத் தடுக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன். அதுவும் சுலபமாய்க் கடக்கவியலும் சிறை பயமோ, அபராத பயமோ அல்ல; மரண பயம்.

எதன் பொருட்டும் சக மனிதனை இம்சிக்காமல் வாழும் பக்குவ மனநிலை இன்னமும் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கு வரவில்லை என்பதே எனது புரிதல். அந்தப் பக்குவமானது மனிதனைக் க‌ட்டுப்படுத்தி குற்றத்தை மட்டுப்படுத்தும். அது இல்லை என்கிற‌ நிலையில் மரண த‌ண்டனை என்பது அழுத்தமான பயத்தின் மூலம் அதே வேலையைச் செய்கிறது.

நம் வீட்டில் ஒருவர் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் போது தான் அதை எதிர்ப்பதன் தேவையை உணர முடியும் என்பவர்களுக்கு அதே வழியில் பதில் சொல்வதானால், அதே வீட்டில் ஒரு பாலியல் வன்கொடுமைப் பலியோ, தீவீரவாதத்தின் காரணமான உயிரிழப்போ, போதை மருந்தின் காரணமான விபரீதங்களோ, பணம், பெண் அல்லது பகையினால் நிகழ்ந்த அகால மரணமோ இருந்தால் தான் மரண தண்டனையை ஆதரிப்பதன் தேவையை உணர முடியும்.

மரண தண்டனையை சட்டரீதியாகவோ அல்லது குறைந்தபட்சம் நடைமுறையிலோ ஒழித்து விட்ட நாடுகள் மட்டும் மொத்தம் 139. மொத்த உலக நாடுகளின் எண்ணிக்கையில் இது மூன்றில் இரண்டு பங்குக்கு மேல். அவர்கள் எல்லாம் மரண தண்டனையை ஒழிக்கும் போது இந்தியா ஏன் ஒழிக்கக்கூடாது என்பது தான் மரண தண்டையை எதிர்ப்போர் எழுப்பும் முக்கியமான மற்றும் பொருட்படுத்தத் தக்க ஒரே கேள்வி. இதைப் பற்றி கொஞ்சம் விரித்துப் பேசலாம்.

அடிப்படையில் எல்லா நாடுகளும் ஒரே மாதிரியானவை அல்ல. நிலவியல் ரீதியான வேறுபாடுகள் தவிர மக்களின் வாழ்க்கைத்தரம், அதன் நீட்சியான தனிமனிதர்களின் மனோபாவம் எல்லாம் சேர்ந்து தான் ஒரு நாட்டின் ‌ஒட்டுமொத்த சமூக இயல்பைத் தீர்மானிக்கின்றன. அவ்வகையில் ஒரு நாட்டின் மக்கட்தொகை என்பது சமூக இயல்பை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. மக்களின் எண்ணிக்கை நாட்டின் சட்டங்களை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை பாதிக்கிறது.

அதிக மக்கட்தொகையும் உடன் அதிக மக்களடர்த்தியும் கொண்ட நாடுகள் தம் பிரஜைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க கடுமையான சட்டங்களையே கையாளுகின்றன. இத்தனை மக்களுக்கு ஒரு போலீஸ்காரர் / ஒரு நீதிபதி என்ற எண்ணிக்கை அதிகரிக்கும் போது வேறு வழியே இல்லை - இரும்புக்கர ஒடுக்குமுறை தான் செல்லுபடியாகும். இத்தேசங்களில் தண்டனைகள் கடுமையாகவே இருக்கும். மரண தண்டனை தான் இவற்றின் பிரம்மாஸ்திரம்.

மக்கட்தொகை அதிகமுள்ள முதல் பத்து நாடுகளில் பிரேசில், ரஷ்யா தவிர மற்ற எல்லா நாடுகளும் மரண தண்டனையை இன்னமும் அமலில் வைத்திருக்கின்றன என்பதே இதற்கு நிரூபணம் (இந்தியா மக்கட்தொகையில் இரண்டாம் இடம்).‌

குருட்டாம் போக்கில் மரண தண்டனையை எதிர்ப்பதில் (அல்லது ஆதரிப்பதிலும் கூட) எனக்கு உடன்பாடில்லை. Case-by-case basisல் தான் பேச முடியும். உதராணமாய் ஆத்திரத்தில் செய்யப்படும் குற்றங்கள், தற்காப்புக்காக நிகழ்த்தப்படும் கொலைகள், சரியாக நிரூபிக்கப்படாத தவறுகள் போன்ற சில‌வற்றுக்கு சட்டப்பூர்வமாக‌ விலக்குகள் எடுத்துக் கொள்ளலாம். அதாவது மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதை விட மரண தண்டனை தருவதில் சரியான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஜனாதிபதிக்கான கருணை மனு போன்ற ஜிம்மிக்ஸ் வேலைகள் அல்லாமல் நீதிமன்றங்களே மரண தண்டனைகள் வழங்குவதில் தெளிவாக செயல்படும் வகையில் சட்டங்கள் நுண்மையாக்கப்பட வேண்டும். ஜன் லோக்பாலே இங்கு முடியுமெனில் இந்த சட்ட திருத்தங்கள் சுலப சாத்தியங்கள்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் விஷ‌யத்தில் குற்றத்தில் இவர்கள் பங்கு எத்தகையது என்பது (எனக்குத் தெரிந்த வரை) சரியாக‌ நீரூபிக்கப்படவில்லை. அதனால் இதில் மரண தண்டனை என்பது விவாதத்திற்குரியது தான். 20 வருடங்கள் ஏற்கனவே சிறையனுபவித்து விட்டார்கள் என்பது மட்டுமே தற்போதைக்கு அவர்கள் பக்கமிருக்கும் ஒரே துருப்புச்சீட்டு.

மரணதண்டனையற்றிருத்தல் என்பது ஒரு சொகுசு. கலாசார பலமும் ஒழுக்கவியல் கோட்பாடும் மிக்க ஓர் உயர்குடி என்பதற்கான‌ அங்கீகாரம். நம் மனநிலையையும் சூழ்நிலையையும் வைத்துப் பார்க்கையில் அதை அடைவது அத்தனை சுலபமல்ல என்றே தோன்றுகிற‌து. அத்த‌குதியை எய்தும் வரை மரண தண்டனை எனும் சிலுவையை இந்தியச்சமூகம் சும‌ந்தலைந்தே தீர வேண்டும். அது வரை நடைமுறைச்சாத்தியமான சட்டத்திருத்தங்களையே நம்பவேண்டியிருக்கிறது.

மற்றபடி, மரண தண்டனையை முற்றிலுமாக ஒழித்து விடத்தான் எனக்கும் ஆசை. ஆனால் நானோ, நீங்களோ, நம் மக்களோ இன்னமும் அவ்வளவு துல்லியமாய் நல்லவர்களாகி விட‌வில்லையே, என்ன செய்வது? ததாஸ்து!

Comments

முகப்புத்தகத்திலும்/வலைப்பூவிலும் இந்த எதிர்வினையை பதிவு செய்கிறேன். நீங்கள் மரண தண்டனை இருக்கலாம் என்று சொல்வதற்குக் காரணம் பரவலாக பலரும் சொல்வதுதான். நான் உங்களுடன் உடன்படவில்லை. அதற்கான காரணங்களை கீழே தருகிறேன்.

1) மரண தண்டனை ஒரு நூற்றாண்டுக்காலமாக ஊடகங்கள் பரவலாகிய பின் நவீன இந்தியாவில் நீதிமன்றங்களால் வழங்கப்பட்டு வந்துள்ளன என்று வைத்துக்கொள்ளுங்கள். அது குறித்த பிரக்ஞை, உங்கள் வார்த்தையில் மரண பயம், குற்றங்களை நடக்காமல் தடுத்திருக்க வேண்டுமே? ஏன் மேலும் மேலும் கொடூரமான கொலைகள், சதிகள் போன்றவை நடக்கின்றன? ஏனெனில் ஒன்று அவை உணர்ச்சிவசப்பட்ட நிலையில், மனம் பேதலித்த நிலையில் நடக்கின்றன அல்லது நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கையில் நடக்கின்றன. மரண தண்டனையால் மோசமான குற்றச்செயல்களை தடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. நீங்கள் தினமும் செய்தித்தாள்களைப் படித்தால் குற்றங்களின் கொடூரம் உங்களை பெரிதும் வியப்படை வைக்கும்.

2) மரண தண்டனை என்பது ஒருவரின் உயிரை குடிமக்கள் அனைவர் சார்பாகவும் அரசு பரிப்பதாகும். இது மக்களையெல்லாம் கொலையில் பங்குதாரர்களாக மாற்றும் செயல். ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் கொடுந்தண்டனையைவிட மரணம் பெரியதா? ஆனால் ஒருவரின் உயிரை எடுக்கும் அதிகாரம் நமக்கு இருப்பதாக நினைப்பது நாகரீக சமூகத்தின் அடிப்படைகளை கேள்வி கேட்பது. உண்மையில் மரண தண்டனைதான் பலரையும் கொலை செய்யத் தூண்டும். அரசு எல்லார் சார்பாகவும் கொலை செய்யலாமென்றால் அதை நானே செய்துவிட்டுப் போகிறேனே என்று அவரவர் நீதி வழங்க நேர்கிறது. என்கவுண்டர் என்ற பொய்ப்பெயரில் போலீஸே குற்றவாளிகளை கொன்று தீர்க்கிறது. இதெல்லாம் குற்றங்களை அதிகரிக்கின்றனவே தவிர குறைப்பதில்லை. ஏனென்றால் சாவிற்கு அஞ்சாதவர்கள்தான் ரெளடிகளும், கிரிமினல்களும். அவர்கள் அதை ஒரு வாழ்க்கை முறையாகத்தான் விரும்பியோ விரும்பாமலோ ஏற்கிறார்கள்.

3) மக்கள் தொகைக்கும் குற்றத்திற்கும் எப்படி தொடர்பு ஏற்படுத்துகிறீர்கள் என்பது வியப்பாக இருக்கிறது. மக்கள் தொகையும், அடர்த்தியும் குறைவாக இருக்கும் ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளைப் பற்றி படித்துப் பாருங்கள். குற்றம் என்பது மனித இயல்பு. அது நிகழாத எந்த சமூகத்தையும், ஆதிவாசி குழுக்கள் உட்பட மானுடம் அறிந்ததில்லை. அதனால் ஒரு நவீன அரசு உன்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி மக்களை நல்லவர்களாக வைத்திருக்க முடியும் என்பது முதிர்ச்சியற்ற கற்பனை என்றே நினைக்கிறேன்.
@Rajan Kurai Krishnan
தங்கள் எதிர்வினைக்கான பதில்களை தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்:
http://www.writercsk.com/2011/09/blog-post_06.html
ananthu said…
உங்கள் பதிவு நிகழ்கால உண்மையை உரைக்கிறது...இந்தியா போன்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு
உள்ளாகும் நாடுகளுக்கு மரணதண்டனை நிச்சயம் தேவை...மரணதண்டனை கொடுத்துவிட்டால் மட்டும் குற்றங்களே நடக்காதா என்றெல்லாம் விவாதித்துக் கொண்டிருந்தால் தண்டனையே தேவையில்லையே... திருட்டு,
கொள்ளை,கற்பழிப்பு செய்தவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்..எதற்கு தேவையில்லாமல் சிறைகள்?
கடுமையான தண்டனைகளே குற்றங்களை ஓரளவாவது குறைப்பதற்கான வடிகால் என்பதே நிதர்சன உண்மை...

அன்புடன் அனந்து...
http://peslamblogalam.blogspot.com
தொடர்புடைய சுட்டிகள்:
http://www.facebook.com/saravanakarthikeyanc/posts/211286512265777
https://www.facebook.com/note.php?&note_id=276747989004372
இன்னுமொரு தொடர்புடைய பதிவு:
http://savasuvinpathivugal.blogspot.com/2011/09/blog-post.html

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்