பஞ்ச ஹிந்தியும் ஹிந்தி பஞ்சமும் - 2

இந்திப்படங்கள் பற்றிய இன்னொரு முக்கியமான விஷயத்தைப் போன பதிவில் சொல்ல மறந்தேன். அது அவற்றின் வசன‌ங்கள். இன்றைய தேதியில் வெளியாகும் கணிசமான இந்திப்படங்களில் பாதிக்குப் பாதி ஆங்கில வசன‌ங்கள் இருக்கின்றன (அவ்வகையில் பாலிவுட்டில் எல்லா இயக்குநர்களுமே கௌதம் மேனன் தான்!). இவ்விஷயம் எனது linguistic constipationஐ மேலும் இளக்கி இலகுவாக்குகிறது. தவிர இதற்கெல்லாம் பின்குறிப்பாய் நானும் எட்டாம் பாரம் வரையில் பள்ளியில் இந்தி பயின்றவன். "ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹ்தா தா" என்பது வரை துல்லியமாய்ப் புரியும்.

3. Aarakshan [आरक्षण]


'ஆரக்ஷன்' என்றால் இந்தியில் 'இடஒதுக்கீடு' என்று அர்த்தம். இந்தப் படத்தை நான் பார்க்கக் காரணம் அந்தத் தலைப்புத் தான். இடஒதுக்கீட்டுக்கொள்கை பற்றிய படம் என்று வந்த செய்திகள் தாம் first hook. இடஒதுக்கீடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கொண்டது எனச் சொல்லி உத்திரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தடை செய்யப்பட்ட அவ்விரவில் தான் அடக்க மாட்டாம‌ல் படத்துக்குச் சென்றேன். ஏமாற்றமே. படம் மேலோட்டமாய் 2008ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தித் தீர்ப்பளித்த‌ போது நிகழ்ந்த சம்பவங்களை ஒட்டியது என்றாலும், முழுக்க முழுக்க அதைப் பற்றியதல்ல. இடைவேளை வரை படம் இடஒதுக்கீடு பற்றிப் பேசுகிறது. பின் தடம் மாறி (புரண்டு?) உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடம் அதிக காசு பிடுங்கி நடத்தப்படும் நகர்ப்புற கோச்சிங் க்ளாஸ் கலாச்சாரத்தைப் பற்றியாகி விடுகிறது. இடஒதுக்கீட்டினால் பயன் பெறுபவர்களுக்கும், அதனால் இழக்கிறார்கள் எனச் சொல்லப்படுபவர்களுக்கும் இடையில் நடைபெறும் விவாதங்கள் முதல் பகுதியில் இருக்கின்றதென்றாலும் அவை மிகவும் மேலோட்டமானவை. அமிதாப்புக்கு அல்வா மாதிரி பாத்திரம். வழக்கம் போல் நிறைவாகச் செய்திருக்கிறார். இடஒதுக்கீடு பற்றி படத்தில் அவரது பாத்திரம் கொண்டிருக்கும் தெளிவு முக்கியமானது. படத்தின் ஹீரோ அவர் என்பதால் அதே நிலைப்பாடு தான் இயக்குநர் பிரகாஷ் ஜாவுக்கும் என்று வைத்துக் கொண்டால் இது இடஒதுக்கீட்டுக்கு ஆதாரவான படம் தான். படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான நடிப்பு சைஃப் அலி கானுடையது. மிக மிக அசத்தலாக ஒரு தலித் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். மற்றொரு முக்கிய பெர்ஃபாமன்ஸ் வில்லனாக வரும் மனோஜ் பாஜ்பாயினுடையது. தீபிகா படுகோனுக்கெல்லாம் நடிப்பு வராது என்று இன்னமும் எத்தனை படங்களில் தான் நீரூபித்துக் கொண்டிருப்பார்கள்! கடைசிக்காட்சியில் துறவி என்ற பெயரில் பிச்சைக்காரி மாதிரி வந்து நிற்கிறார் ஹேமமாலினி. இரண்டாம் பாதி ஒரு செண்டிமெண்டல் மசாலா படம் தான். சுமாரான படம் எனக் கொள்ளலாம்.

4. Not A Love Story


படம் பார்த்தது ராம் கோபால் வர்மாவுக்காக. இப்படம் 2008ம் ஆண்டு நடந்த பிரபலமான‌ நீரஜ் க்ரோவர் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாய்ச் சொன்னால் அக்கொலையில் தொடர்புடைய கன்னட நடிகை மரியா சூசைராஜ் மற்றும் அவரது காதலர் ஜெரோம் மேத்யூ பற்றியது. மிக நன்றாகப் பதிவு செய்திருக்கிறார் வர்மா என்றே தோன்றுகிறது. ஒரு கொலை நடக்கும் சூழ்நிலை, கொலையாளிகளின் அதற்குப் பிந்தைய உணர்வுகள் ஆகியவற்றை மிகையேயின்றி மிகத் துல்லியமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார். கொலை செய்யப்பட்ட பிணத்தை ரத்த சகதியாக‌ப் பக்கத்து அறையில் போட்டு வைத்துக் கொண்டு நிதானமாக சம்போகம் செய்கிறார்கள். ராம்கோபால் வர்மா தொடுகை (அதாங்க, 'டச்'!). ரசிக்க முடிகிறது. ஒரு வகையில் இதனை ஓர் உளவியல் படமாகவும் கொள்ள வேண்டியிருக்கிறது. (போலீஸ் விசாரணை செய்யும் பகுதி மட்டும் சட்டென முடிந்து விடுவதைத் தவிர்த்துப் பார்த்தால்) இதன் திரைக்கதை உண்மைச் சம்பவங்களை சுவாரசியமாகப் படமாக்க நினைப்பவர்களுக்கு ஒரு முக்கியமான பாடம். கதாநாயகி மாஹி கில் ஓர் அற்புதம். கம்பீரமான அழகுடன் நடிப்பில் பின்னியிருக்கிறார் (குறிப்பாய் பக்கத்து அறையில் அவரது காதலன் கொலை செய்த‌ ஆசாமியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டும் சத்தத்தைச் சகிக்க முடியாமல் அவர் காட்டும் முகபாவங்கள், அடடா!). அவர‌து காதலனாக வரும் தீபக் தோப்ரியலும் நன்றாக செய்திருக்கிறார். இன்னொரு முக்கியமான‌ நடிப்பு போலீஸ் விசாரணை அதிகாரியாக வரும் ஜாகீர் ஹுசைனுடையது. இப்படம் வழக்கமான சினிமா கேமெராவால் எடுக்கப்பட்டதல்ல. Canon EOS 5D Mark II என்ற டிஜிட்டல் SLR கேமெரா கொண்டு எடுத்திருக்கிறார்கள். அடிப்படையில் அது ஒரு ஸ்டில் கேமெரா. அதன் High Definition வீடியோ ரெக்கார்டிங் வசதியைக் கொண்டு படத்தை எடுத்திருக்கிறார்கள். ஒரு பத்து செகண்ட் காட்சியை ஐஃபோன் 4 கொண்டு கூட எடுத்திருக்கிறார்கள்  (மும்பையின் ஹைபர் சிட்டி மாலில் மாஹி கில் ஷாப்பிங் செய்யும் காட்சி). CCTV கேமெராவில் பதிவான காட்சி போல் (பொருத்தமாகவும்) இருக்கிறது. அவ்வகையில் இப்படம் ஒளிப்பதிவில் ஒரு முக்கியமான சோதனை முயற்சி. நிறைவான உணர்வைத் தந்த‌ படம். நான் பார்த்த ஐந்தில் சிறந்ததும் இது தான்.

5. That Girl in Yellow Boots


இப்படம் பார்த்தது சாருவுக்காக. இயக்குநர் அனுராக் கஷ்யப்பின் முந்தைய படங்களான Dev.D, Gulaal போன்றவற்றை அவர் தன் விமர்சனங்களில் மிகவும் புகழ்ந்திருந்தது தான் காரணம். NFDC உதவியுடன் அனுராக் கஷ்யப்பே சொந்தமாக குறைந்த முதலீட்டில் தயாரித்திருக்கும் படம். "Mature Content - Viewer Discretion Advised" என்று விளம்பரங்களிலேயே போடுறார்கள். அப்படிப்பட்ட ஒரு கதை தான். ஆனால் ஆங்காங்கே தினமும் நடந்து கொன்டிருக்கும் கதை. 1980ல் கல்கி வார இதழில் அந்நாளில் நடிகையாயிருந்த‌ ஜெயலலிதா எழுதிய 'உறவின் கைதிகள்' என்ற‌ தொடர்கதையின் அதே க்ளைமாக்ஸ் அதிர்ச்சி தான் இப்படத்தின் க்ளைமேக்ஸிலும். ஆச்சரியகரமாய் இப்படத்தின் (உப)திரைக்கதையை எழுதியதும் ஒரு நடிகை தான். அது படத்தின் நாயகி கல்கி கொச்சலின் - இவர் அனுராக் கஷ்யப்பின் மனைவியும் கூட. தன் தந்தையைத் தேடி மும்பை வரும் ஒரு லண்டன் பெண்ணைப் பற்றியது படம். இங்கு ஒர்க் பெர்மிட் இல்லாமல் தினசரி வயிற்றுப்பாட்டுக்கு ஒரு மசாஜ் பார்லரில் வேலைக்குச் சேரும் அவள் வரும் வாடிக்கையாளர்களுக்கு மசாஜோடு ஒரு Happy Endingம் தர வேண்டியிருக்கிறது. அங்கு பார்வையாளருக்கு ஆரம்பிக்கும் அதிர்ச்சி, படத்தின் க்ளைமேக்ஸ் வரை தொடர்கிறது. ஊடகங்களில் இபப்டத்தை ஒரு த்ரில்லராகவே அடையாளப்படுத்துகிறார்கள். அவ்வளவுக்கு த்ரில் இல்லை என்ற போதிலும், சில வலிமையான காட்சிகளால், அதற்கு இணையான வசன‌ங்களால் இது ஒரு முக்கியாமான படமாகிப் போகிறது. கதாநாயகி கல்கி கொச்சலின் அழகாக இருக்கிறார்; அதை விட அழகாக நடிக்கிறார் (படத்திலேயே வரும் ஒரு வசனத்தைப் போல் கொஞ்சம் ஜூலியா ராபர்ட்ஸ்; கொஞ்சம் Bugs Bunny). அவரே அடிப்படையில் ஒரு ப்ரெஞ்சுப் பெண் என்பதால் இந்தியாவில் ஒரு வெளிநாட்டுப் பெண் எதிர்கொள்ள நேரிடும் சிக்கல்களை துல்லியமாக எழுதவும், நடிக்கவும் முடிந்திருக்கிறது எனத் தோன்றுகிறது. நஸ்ருதீன் ஷாவும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பைப் பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? கன்னட ரௌடியாக குல்ஷன் தேவய்யா வரும் காட்சிகளின் நகைச்சுவை அபிரிமிதமானது (ஆனால் படத்தின் ஒட்டுமொத்த உணர்வுக்கு இக்காட்சிகள் தேவையற்ற செருகலாகவே துருத்தி நிற்கின்றன). க்ளைமேக்ஸையும் கொஞ்சம் அளவுக்கதிகமாக இழுத்திருக்கிறார்கள். திரைக்கதையை மட்டும் இன்னும் கொஞ்சம் பட்டி பார்த்திருந்தால் சிறந்த படமாகி இருக்கும். இப்போதைக்கு நல்ல படம்.

*******

இறுதித்தரவரிசை : Not A Love Story > That Girl in Yellow Boots > Bbuddah Hoga Terra Baap > Singham > Aarakshan

Comments

viki said…
சைத்தான் மற்றும் சாத் கூன் மாப பாக்கலியா?பாருங்கோ!
BalHanuman said…
'Stanley ka dabba' - படத்தை அவசியம் பாருங்கள்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்