பரத்தை கூற்று : கீதாஞ்சலி பிரியதர்ஷினி

திருச்சியைச் சேர்ந்த கவிஞர் கீதாஞ்சலி பிரியதர்ஷினி திருமதியாகிய நான், அவனைப் போல் ஒரு கவிதை ஆகிய கவிதைத் தொகுப்புக்களையும், மறந்து போன குரல் என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியிருக்கிறார். திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றவர்.

அவர் சில வாரங்கள் முன்பு பரத்தை கூற்று கவிதைத் தொகுதி பற்றி அகநாழிகை பதிப்பகத்துக்கு ஒரு விமர்சனக்கடிதம் எழுதியிருந்தார். அதை இங்கே பதிகிறேன்:

*******

பரத்தை கூற்று - சி.சரவணகார்த்திகேயன்

தமிழ்ச் சமூகத்தின் முகமூடிகளை கிழிக்கிறேன் என்பதும் இவற்றை கடந்து செல்கிறேன் என இளைஞர்களின் மனம் சங்கல்பம் எடுப்பதும் எவ்வளவு பழமை எனில் பரத்தமை எனும் சொல்லாக்கமும் அவ்வளவு பழமையானது என்பது மீண்டும் ஒரு கவிஞனின் அகச்சீற்றத்தை நாம் தரிசிக்கும் போது உணர முடிகிறது.

தமிழில் சூடு, சொரணை, பொய், பித்தலாட்டம் இப்படிப்பட்ட பேச்சுச் சொற்கள் வழக்கொழிந்த நிலை போல பரத்தை எனும் சொல்லெல்லாம் மாறி இன்று பாலியல் தொழிலாளி என்று உருமாறியிருப்பதால் கவிஞர் கவலைப்பட தேவையில்லை எதற்கும். ஆனால் இன்னமும் வீடுகளில் ஒப்பாரி வைக்கும் தொலைக்காட்சி சீரியல் கதாநாயகிகளின் கிளிசரின் கண்ணீருக்கு மட்டும் விபசாரி, கேடு கெட்டவள், தெருவோடு போகிறவள் என்பதான வசன‌ங்கள் காரணமாய் இருக்கின்றன. அதை எழுதி பணம் பண்ணுவதும் ஆண் தான் என்பதாலோ என்னவோ. இந்த கவிதைகளையும் ஒரு ஆண் எழுதியிருப்பது சிந்திக்க வைக்கிறது. முதலைக்கண்ணீரோ எனவும் ஆண் விபசாரகர்களுக்கு தமிழில் என்ன பெயர் எனவும் தான்.

எது எப்படி இருப்பினும் பெண் உடலும் கவிஞருக்கு நட்பின்றி இயல்பான சில கவிதைகளாக தொகுப்பில் காண்பதற்கு உள்ளது. இந்நூலை பட்டினத்தார் முத்து வைக்கிறது எல்லாம் எதற்கு என தெரியவில்லை. எங்களுக்கு கடைசியில் விரக்தி?

தொகுப்பின் முன்னுரை கவிஞரின் எழுத்தின் தொலைநோக்கு பார்வையை, எள்ளலை, யாதார்த்த உலகின் தீவிர ஒதுக்குதலை சொல்கிறதால், மிகவும் வசீகரிக்கிறது. நாவலின் கதைச்சுருக்கம் எழுதி விமர்சம் செய்வது எல்லாம் இங்கு பல்கலைக்கழக பட்டங்களுக்கு சிறப்பானது. கவிதைகளையும் ஆங்காங்கே எடுத்து எழுதி கற்போடு வாழ்வதால் கிடைக்குமா கால் காசு என்று கவிஞர் இவ்வாறாக இயற்கையை பெண்மையை போற்றுகிறார் என்றும் அழுத்தும் சமூக நிர்பந்தங்களை அதிகார ஆணாதிக்க பல இடங்களில் வேரறுக்கிறார் என்றும் நான் எழுதி விடுகிறேன்.

புத்தக உருவாக்கம் அருமையாக இருப்பினும் ஒரு வாசிப்பிலேயே மனதை பூக்க வைக்கிற பல கவிதைகள் தொகுப்பில் உள்ளதையும் சொல்கிறேன்.

வலக்கையில் எனை அணைத்து
சிணுங்கும் செல்போடுத்து
மனைவி (அ) காதலிக்கு சொல்வர்
I love you da chellam.

என்கிற கவிதை மற்றும்

சத்திய சோதனை எழுதப்பட்டால்
காதல்முறிவுகள் விவாகரத்துகள்
தற்கொலைகள் கணிசம் பெருகும்.

மேலும்

அழுக்கு மெத்தை ஆடும் கட்டில்
பிசுக்கு போர்வை சூறைத் தலையணை
மூட்டைப் பூச்சிகள் ராட்சசக் கொசுக்கள்
கழிப்பறை வாடை – வெளியூர் லாட்ஜ்களில்
இவற்றோடு வேண்டும் – புணரவொரு வேசி.

இந்தக் கவிதைகள் நம்மையும் மீறி நம்மை மாற்றுகின்றன புன்னகைக்கு. வேசி, தாசி, பரத்தை, கணிகை யாவும் ஒரே தெய்வத்தின் பற்பல நாமகரணங்கள் என்றும் எழுதுகிறார் கவிஞர். அதனால் தான் அனைவருமே தவறாமல் பயன்படுத்துகிறார்களோ என்னவோ. அறிவுஜீவித்தனம் ஏதுமற்ற எளிமையான ஒரு பார்வையின் சமூகக் குரல் ஒலிக்கும் கவிதைகள் இவை என்பதே என்னை எழுத வைத்த காரணம்.

தொடரட்டும் கவிதைகள் வெவ்வேறு சமூக அலவங்களின் மீதுமாக.

அன்புடன்
கீதாஞ்சலி பிரியதர்ஷினி

*******

கடிதத்தை தட்டச்சு செய்தனுப்பிய‌ பதிப்பாளர் பொன்.வாசுதேவனுக்கு நன்றி.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்