கோணங்கி எனும் புதிர்

நேற்று BUZZல் கோணங்கி எழுத்துக்களின் புரியாமை குறித்த ஒரு நீண்ட விவாதம் நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்ட பகுதிகள் மட்டும் இங்கே பகிர்கிறேன்.

சுவாரசியமான முழு விவாதத்தையும் படிக்க‌ விரும்புபவர்கள் இங்கே செல்லலாம்:
http://www.google.com/buzz/ayyanar.v/iaL4QjKmHxg/க-ணங-க-ய-ப-பற-ற-ஜ-ம

*******

Ayyanar Viswanathan :
கோணங்கியைப் பற்றி ஜெமோ,சாரு & மாமல்லன் எழுதிய இடுகைகளை ஒரு சேர வாசித்துக் கடுப்பானேன். கோணங்கியும் குமாஸ்தா எழுத்தாளர்களும் எனத் தலைப்பிட்டு பொங்கி எழுந்துவிடலாமா என யோசித்துப் பின் சலூன் நாற்காலியை முடித்துவிட்டு விரிவாய் எழுதலாம் என அந்தக் கடுப்பைத் தள்ளி வைத்தேன்.

கோணங்கியை நண்பனாக, பிரியமானவனாக, பொறாமை கொள்ளும் வாழ்வை வாழ்பவனாக சம கால எழுத்தாளர்களுக்குப் பிடித்திருக்கிறதே தவிர அவரை எழுத்தாளராக யாருக்கும் பிடிக்கவில்லை. ஒரு எழுத்தாளனே இன்னொரு எழுத்தாளன் எழுதுவதை "புரியவில்லை" "தோற்றுவிட்டது" என்றெல்லாம் விமர்சிப்பது எத்தனை மேம்போக்கானது?! கூடவே நாகார்ச்சுனன் மீதும் பழிபோடுவதையும் ஒருமித்த குரலாகப் பார்க்க முடிகிறது. இந்தச் சிக்கல் குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது.

Saravanakarthikeyan C :
கோணங்கிக்கு வக்காலத்து வாங்குறவங்க மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கப்பா.. பாழி, பிதிரா நாவல்களில் ஒரு வரியேனும் புரிந்ததா? ஒருவேளை, மொத்த நாவலுமே ஒரு வரி தானா?

கோணங்கியின் ஒட்டுமொத்த இலக்கிய ஸ்தானத்தை நிராகரிக்கவில்லை. மதினிமார்கள் கதை தொகுப்பு போன்றவை எல்லாம் முக்கியமானவை தான்.. ஆனால் பிற்பாடு எழுதியவை எல்லாம்?

Ayyanar Viswanathan :
CSK, ஒரு நவீன ஓவியத்தை ஓவிய மொழியறியாமல் இது எனக்குப் புரியவில்லை என்பது பார்ப்பவனின் போதாமை தானே தவிர ஓவியனின் தவறில்லை. எல்லா ஓவியங்களும் எல்லாருக்கும் புரிய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்படுவதும் அல்ல.

மதினிமார்கள் கதையைத்தான் எல்லா எழுத்தாளர்களும் ஒரு உதாரணமாய் சொல்கிறார்கள். அதன் வடிவம் ஏற்கனவே தமிழ் சூழலில் நிறுவப்பட்ட ஒன்று. எல்லா எழுத்தாளர்களின் மொழி. யுத்தி. வாழ்வை எழுதுகிறோம். மண்ணை எழுதுகிறோம். வலியை எழுதுகிறோம். ப்ளா ப்ளா..

ஒரு கட்டத்தில் கோணங்கி இந்த சலித்த கதை சொல்லும் தளத்திலிருந்து வார்த்தைகளின் பரப்பிற்கு நகரும்போது அந்த மொழியின் வீச்சு இவர்களை அச்சம் கொள்ள வைக்கிறது. அந்த அச்சம்தான் புரியவில்லை என்ற வெறுப்பாய் வடிவம் கொள்கிறது.

சுரேஷ் கண்ணன் :
//ஒரு எழுத்தாளனே இன்னொரு எழுத்தாளன் எழுதுவதை "புரியவில்லை" "தோற்றுவிட்டது" என்றெல்லாம் விமர்சிப்பது எத்தனை மேம்போக்கானது?! //

எப்படி மேம்போக்கானதாக இருக்க முடியும். எழுத்தாளனாக இருந்தாலும் அவனும் வாசகன்தானே? மேலும் இதை எழுத்தாளர் குழுமத்தில் வைத்துப் பார்ப்பதும் சரியற்றதாக தோன்றுகிறது. சில எழுத்தாளர்களை விட வாசகனின் புரிதல் அதிகம்.

'எத்தனை சிக்கலான கருத்தாக இயந்திரமாக இருந்தாலும் அதன் ஆதாரம் எளிமையாகத்தான் இருக்கும்' என்பது பல முறை நிருபீக்கப்பட்டிருக்கிறது. எனில் மொழியை இத்தனைத் திருகு திருகுவது மேதாவித்தனத்தை காட்டுவதற்கே பயன்படுமேயன்றி அதை வைத்து வாசகனிடம் உரையாற்ற முடியாது.

Ayyanar Viswanathan :
சுக, ஒரு படைப்பு புரியவில்லை என்பது விமர்சனமாகாது. அது வாசகரின் போதாமை மட்டுமே. எழுத்தாள வாசகருக்கும் எழுதாத வாசகருக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. எழுதாத வாசகர் படைப்பை விட்டு ஒதுங்குவதும் எழுத்தாள வாசகர்கள் படைப்பை ஒதுக்குவதும் வெவ்வேறானது.

முதலில் ஒரு படைப்பு ஏன் புரிய வேண்டும்? இந்தக் கேள்வியை நான் வெகுகாலமாகவே கேட்டுக் கொண்டிருக்கிறேன். பதில் தான் கிடைக்கவில்லை. கதை என்கிற ஒரு வஸ்து அவசியமாய் படைப்பில் இருக்க வேண்டுமா? இப்படி ஆரம்பித்து இப்படி முடிய வேண்டுமா? வாசகருக்கு ஏதாவது ஒரு செய்தி இருந்தேயாக வேண்டுமா?

எலிமை பூனைமை என்ற கருத்தாக்கமெல்லாம் படைப்பில் கிடையவே கிடையாது. அதெல்லாம் இலக்கிய ஜாம்பவான்கள் என ஸ்தாபித்துக் கொண்டவர்கள் இலக்கிய மோஸ்தராய் தங்கள் வசதிக்காக கட்டமைத்துக் கொண்டவைதாம். ஒரு படைப்போ ஆசிரியனோ எதற்காக வாசகருடன் உரையாட வேண்டும்? தன்னை முன் நிறுத்தும் அரிப்பு மனநிலைகள் மட்டுமே இம்மாதிரி வேலைகளை மெனக்கெட்டுச் செய்து கொண்டிருக்கும். அத்தோடு நில்லாமல் இப்படி இருப்பதுதான் இலக்கியம், சூழல், ப்ளா ப்ளா.. என ஏகப்பட்ட கருத்தாக்கங்களை நிறுவிக் கொள்வதும் இவர்களின் அற்பத்தனங்கள்தாம். தங்களால் நகர முடியாத இடத்தை தோற்றுவிட்டது எனக் கட்டமைப்பதின் மூலமாய் இவர்களாய் உருவகித்துக்கொண்ட இடத்தை கெட்டியாய் பிடித்துக் கொள்கிறார்கள் என்பது தவிர்த்து கோணங்கி மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

Saravanakarthikeyan C :
தச்ச்ட்க் ப்ச்ப் ச்ட்லச்ட் ச்ட்லச்ட் ஹ்ஷாஸ்ச்ட் ஜச்ட்சட் அச்ஜ்டட் ச்க்ட்சட் ச்டச்ன்ம்ச்டம்ச்ட்,ச்ட்ச்ட்ழ்ண்ஸ்ட்க‌ அச்ட்பச்ன்ட்ன்க்ஷ்க்ஷ் ச்ட்ப்ஜ்ன்ஹச்ன்ன்மப்க்ச்க்ல்ந்ன்ட்ச் ச்ஜ்ஹ்ட்க்லன்ச்ட், ச்க்ஜட்பச்ட் ஜ்ஹ்க்ச்க்த்சல்ன்ட்ல்க்

Saravanakarthikeyan C :
முதலில் ஒரு கமெண்ட் ஏன் புரிய வேண்டும்? இந்தக் கேள்வியை நான் வெகுகாலமாகவே கேட்டுக் கொண்டிருக்கிறேன். பதில் தான் கிடைக்கவில்லை. அர்த்தம் என்கிற ஒரு வஸ்து அவசியமாய் கமெண்ட்டில் இருக்க வேண்டுமா? இப்படி ஆரம்பித்து இப்படி முடிய வேண்டுமா? படிப்பவருக்கு ஏதாவது ஒரு செய்தி இருந்தேயாக வேண்டுமா? ஒரு கமெண்ட் புரியவில்லை என்பது விமர்சனமாகாது. அது படிப்பவ‌ரின் போதாமை மட்டுமே.

உதாரணம் எனது மேற்கண்ட கமெண்ட்.

Saravanakarthikeyan C :
அய்யனார், மன்னிக்கவும். மேற்கண்ட கிண்டல் உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். என் நோக்கம் அதுவல்ல. அதிலிருக்கும் தர்க்கத்தை உங்கள் ஸ்டேட்மெண்ட்டுக்கும் பொருத்திப் பாருங்கள். எந்த அளவுக்குப் பொறுப்பில்லாத நிலைப்பாடு என்பது புரிய வரும். இப்படித்தான் ஆரம்பித்து இப்படித்தான் முடியும் என்கிற வரையரையையெல்லாம் தமிழ்ப்படைப்புகள் தாண்டி கால் நூற்றாண்டாவது இருக்கும். ஜே.ஜே. போன்ற பல ஆதி உதாரணங்கள் இருக்கின்றன. பிரச்சனை அதுவல்ல. அதே போல் சிக்கலான பழந்தமிழ் மொழி கொண்ட படைப்புகளும் கூடப் பிரச்சனையல்ல - கொற்றவை போல். ஆனால் படைப்பில் ஒரு வாக்கியம் கூடப் புரியவில்லை என்பது தான் சிக்கல்.

ஒரு தேர்ந்த வாசகன். அவனுக்கு தமிழில் வெளிவரும் எல்லா படைப்புகளும் சரியாய்ப் புரிகின்றன. இந்த ஓர் ஆசாமியிடம் மட்டும் பாயைப் பிராண்ட வேண்டியிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்?

Saravanakarthikeyan C :
//இது எனக்குப் புரியவில்லை என்பது பார்ப்பவனின் போதாமை தானே தவிர //
//மொழியின் வீச்சு இவர்களை அச்சம் கொள்ள வைக்கிறது//

பாழியைப் பத்து வருடமாய் மூன்று முறை முயற்சித்துப் பார்த்தாயிற்று. ம்ஹூம். என் போதாமை தான் போலும். யாராவது கோணார் வந்து நோட்ஸ் போட்டால் தேவலை.

சரி, அய்யனார், ஒரே கேள்வி நேரடியாகவே கேட்கிறேன். பாழி, பிதிரா உங்களுக்குப் புரிந்ததா? பிடித்ததா எனக் கேட்கவில்லை; புரிந்ததா என்று மட்டுமே கேட்கிறேன். புரிந்தது என்றால் என்ன கதையெனச் சொல்லுங்கள் எனக் கேட்குமளவு நான் இலக்கியப் பாமரன் அல்ல. அதனால் தைரியமாக உண்மையைச் சொல்லுங்கள்.

உங்கள் பதிலோடு நான் இந்த விவாதத்திலிருந்து வெளியேறுகிறேன். நன்றி.

சுரேஷ் கண்ணன் :
//ஒரு படைப்போ ஆசிரியனோ எதற்காக வாசகருடன் உரையாட வேண்டும்? //

ஒருவர் ஹீப்ரூ மொழியில் உங்களிடம் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்? :) அவர் தனியறையில் பேசிக் கொண்டிருந்தால் பிரச்சினையில்லை. புத்தகவடிவில் வாசகரை நோக்கி வரும் போதுதான் பிரச்சினை. புரியவில்லை என்பதை வாசகன் காரணமாய் சொல்ல முடியாது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். இப்போது எளிதி்ல் வாசிக்க முடிகிற சு.ராவின் கட்டுரைகளை ஆரம்பத்தில் எரிச்சலோடு வாசித்தேன். அது என் வாசிப்பின் போதாமைதான். ஆனால் மேற்கத்திய பாணியில் சூடு போட முயன்று அரிசி மாவில் பிட்ஸா சுட முயன்றால் சாப்பிட விளங்காது. :)

(விரிவாக பிறகு எழுத முயல்கிறேன்)

Ayyanar Viswanathan :
நமக்குப் பரிச்சயமில்லாத ஒன்றின் மீது பயம் வருவது இயல்பானதுதான். புரியாதவரை "எவனுக்குமே புரியாம ஏன் எழுதனும்?" "ஏன் இத எடுத்தா மட்டும் தூக்கம் வருது?" என்கிற கேள்விகள் வருவது சாதாரணமானதுதான். இதை எல்லாவற்றையும் கூட வாசகரால் தாண்டிவிட முடியும். ஆனால் நாம் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்கள் ஒரு குறிப்பிட்ட எழுத்தை மட்டும் தொடர்ச்சியாய் ஒதுக்கும்போது அந்த தாக்கங்கள் மறைமுகமாக படிப்பவரின் மனதில் ஏற்படலாம். இங்கு பெரும்பான்மையோருக்கு கோணங்கியை அனுகுவதில் இருக்கும் சிக்கல் பிறரால் கட்டமைக்கப்பட்டதுதானே தவிர பிரதி மட்டுமே முழுக்க காரணமாகி விடாது.

Ayyanar Viswanathan :
CSK, மிக நிதானமாகவே உரையாடலாம். பதட்டமோ, முன்முடிவுகளோ,தீர்ப்புகளோ, அவசரமோ தேவையில்லை. இது கோணங்கி படைப்புலகம் பற்றியதான உரையாடல் மட்டுமே.

தனிப்பட்ட அனுபவம் என்கிற முறையில் எனக்கு கோணங்கியின் படைப்புகள் தரும் போதை பிடித்திருக்கிறது. சொற்கள் பித்து நிலையை அடைய உதவுகின்றன. தலைமேல் குவியல் குவியலாக சொற்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கும் அனுபவம் பிடித்திருக்கிறது. காட்டில் வழிதவறிய திகைப்பு மனநிலைதான் ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போது கிடைக்கிறது. அவர் வார்த்தைகளில் உருவாக்கும் சித்திரங்கள் எளிதில் பிடிபடாதவையாக இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் பிடிபடும் சித்திரங்கள் தரும் வியப்பு உச்சமானதுதான்.

Saravanakarthikeyan C :
அய்யனார்.. பதிலுக்கு நன்றி.. பாழியை நான்காவது முறையாக‌ நிச்சயம் முயற்சி செய்கிறேன்..

வெளியேறுகிறேன் என்று சொன்னதன் காரணம் பதட்டமல்ல.. புரியவில்லை என்கிறேன், அதற்கு மேல் அதைப்பற்றிப் பேச என்ன இருக்கிறது என்பதால் தான்.

உங்கள் நிதானம் பிடித்திருக்கிறது. இந்தச்சூழலில் அது அபூர்வமானது. மறுபடியும் நன்றி.. மற்றுமொரு விவாதத்தில் சந்திப்போம்.

Comments

நீலி said…
கோணங்கியின் எழுத்துகள் தொடர்ச்சியில்லாத ஒரு கனவுலகம் அல்லது வார்த்தைகள் உருவாக்கும் வண்ண் நிழல்கள்... கோணங்கியின் எழுத்துகள் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை இல்லை,மாறாக அது அனுபவிக்கப்படவேண்டியது, கோணங்கியாக மாறி மொழியின் மாயா லோகத்துக்குள் பயணம் செய்து மனதில் தோண்றும் காட்சிகளை உருவாக்கி தரிசிக்கும் உன்மத்தநிலை... அப்படியான ஒரு நிலையை அடைய தயக்கமுள்ளவர்கள்,பயப்படுபவர்கள்,அல்லது பாதுகாப்பான வசதியான ப்ளாட்பார்மில் இருப்பவர்கள் கோணங்கியை புரியவில்லை ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று சொல்லிச் செல்கிறார்கள்...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்