பரத்தை கூற்று : லதாமகன்

பரத்தை கூற்று புத்தகம் பற்றிய கவிஞர் லதாமகன் அவர்களின் விமர்சனம் இது:

*******

http://silarojakkal.wordpress.com/2011/01/17/paraththaikootru-csk/

*******

Posted on ஜனவரி 17, 2011 by லதாமகன்

பரத்தை கூற்று – சரவணகார்த்திகேயன்

"களைத்துறங்குபவன் குறட்டையொலியொக்கும் ஓயாது மனதிசைக்கும் சிருங்கார ஒலிக்கும் இடையே இழைக்கப்பட்டவை இக்கவிதையனைத்தும். அழுக்காய் அசிங்கமாய் நாசி பெயர்த்தெறியும் துர்வீச்சத்துடன் இருக்கலாம் பிசிபிசுத்த ஈரச்சீழ் வடிந்த இந்த யோனியெழுத்து- அது படிப்பவர் மனசு பொறுத்தது."

- சரவணகார்த்திகேயன் முன்னுரையிலிருந்து

மகுடேஸ்வரனின் காமக்கடும்புனல் படித்திருக்கிறேன். அதைப்பற்றி சில மாதங்களுக்கு முன் நண்பரிடம் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தபோது சரவண கார்த்திகேயனின் பரத்தைகூற்று வெளியீடு பற்றிய அறிவிப்பைச் சொன்னார். சில அலுவல் காரணங்களால் வெளியீட்டுக்குச் செல்லமுடியவில்லை. சாரு பேச்சு குறித்த கதைகள் கட்டுகள் எல்லாம் மறந்து ஒரு வழியாய் புத்தகக் கண்காட்சியில்தான் தொகுப்பை வாங்க முடிந்தது.

ஒரு 15லிருந்து 30 நிமிடங்கள் போதும் இந்த தொகுப்பை வாசித்துமுடிக்க. அத்தனை வீரிய மொழியோ புரட்டு வார்த்தைகளோ புதிர் வரிகளோ இல்லை. நேரிடையான சொல்லாடல்கள். நேரிடியான சொல்லாடல்கள். பறத்தை ஆணை நோக்கிப்பேசும் வார்த்தைகளே இந்தக் கவிதைகள். சில கவிதைகள் மொத்த முன்முடிவுகளையும் காமம் குறித்த பரத்தை குறித்த பெண் குறித்த எண்ணங்களையும் கலைக்கின்றன.

‘சுதந்திரமென்பது
புணர்தலல்ல
புணர மறுத்தல்’

பகுத்தறிவு
யாதெனில்
கலவிக்குக்
காசு கேட்பது

களைத்துறங்குமென்னை
எழுப்பிப் புணர விழையும்
நீயென்ன ஆண்பிள்ளை

அங்கங்கே சில நெத்தியடிகள் காணக்கிடைக்கின்றன.

‘சந்தோஷமாயிருந்ததா என
எங்களைக்கேட்கும் திராணி
எவனுக்குமில்லை தரணியில்’

”காசின்றிப்
புணரத் தேவை
காதல்”

’இன்ஷியல் பிரச்சினைகள்
தீர்க்கும் கருணையுடன்
சிற்சில கருக்கொலைக்கள்’

காமமென்பது பெரிய வலியோ பெரிய இன்பமோ பெரிய பரிசோ பெரிய திறமையோ இல்லை. மிருகங்கள் தன் சந்திதி பெருக்குவதற்குப்போல்தான் மனிதனுக்கும் தன் காமம். தொகுப்பில் ஒரு கவிதையைப்போல காமத்தை காசுக்கு விற்கும் ஒரு அரசியலாக்கிய பகுத்தறிவின் மீதான் எதிர்கேள்விகள் என்று இந்தத் தொகுப்பைச் சொல்லலாம்.

கவிதைகளைவிட புத்தகத்தில் குறிப்பிடப்படவேண்டிய முக்கியவிஷயம் தொகுப்பிற்கு சரவணகார்த்திகேயன் எழுதியிருக்கும் பத்துபக்க முன்னுரை. முன்னுரையில்தான் இருக்கிறது உண்மையான் பரத்தை கூற்று. முன்னுரை தந்த தீவிரத்தில் கவிதைக்குள் நுழைந்தால் தொகுப்பினளவு வீரியத்துடன் கவிதைகளில் ஒன்றுமே இல்லை.

மொத்த தொகுப்பிலும் சரவணகார்த்திகேயன் தவறவிட்டதென்ற ஒரு விஷயம் இருக்கிறது. அது கவித்துவம். எல்லாம் பாக்கள் என்ற பெயரில் மூன்று நான்கு வார்த்தைகளில் முடியும் போது சினிமாக்களில் பஞ்ச் வசனம் போன்ற ஒரு நினைப்பு வருவதைத் தடுக்க முடியவில்லை. அதிலும் சில கவிதைகள் பிரபலமான வரிகளைக் கொஞ்சம் மாற்றி பரத்தை கூற்றென இணைத்திருப்பது தொகுப்பிற்கு எதிர்வினை செய்கிறது.

‘உறவிற்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம் – வீணில்
உண்டு கழித்திருப்போரை
நிந்தனை செய்வோம்’

இதில் உறவு என்ற வார்த்தை வந்திருப்பதைத்தவிர பரத்தைகூற்றிற்கு இது எந்தவகையில் நியாயம் அல்லது கோபம் செய்கிறது எனப்புரியவில்லை., இதைப்போலவே அங்கங்கு சொரிதல்கள். மொத்த தொகுப்பையும் வாசித்து முடிக்கும்போது எதோ ஆரம்பகால குடும்பமலர் புதுக்கவிதைத் தொகுப்பைப் படித்த உணர்வே மிஞ்சுகிறது. ஒரே பாடுபொருளைக்கொண்டு குறைந்த நேரத்தில் நிறைய கவிதைகளை எழுத முற்படும் ஒரு ஆரம்ப நிலை விடலைக் கவிஞனின் விளையாட்டு மட்டுமே இத்தொகுப்பு. இந்தக் கவிதைகள் சரவண கார்த்திகேயன் இருப்பதோரு வயதில் எழுதிக்குவித்த ஐநூறு கவிதைகளிலிருந்து தேர்ந்த 150 பாக்களின் தொகுப்பு என முன்னுரையில் சொல்லியிருக்கிறார். விடலைக் கவிதைகளின் தரம் என்பதை சரவணகார்த்திகேயனுக்கு சுட்டிக்காட்ட நான் தகுதியில்லாதவன். இருந்தாலும் எனக்குத்தோன்றியது ஐநூறிலிருந்து நூற்றைம்பதாய்க் குறைத்துவிடலாம் என எண்ணியதைப்போலவே நேரத்தைப்பற்றி கவலைப்படாமல் தேர்ந்த 150ஐயும் மறுஆக்கம் செய்திருக்கலாம் புதியவார்த்தைகளை வைத்துக்கொண்டு. நூற்றைம்பது பாக்களில் ஒரு இருபது மனதைப் பிசைகிறது. மற்றவை குறி தவறிய அம்பைப்போலே எங்கேயோ குப்பையில் விழுகிறது.

எழுதிக் குவித்தவை போலல்லாமல் குவித்து எழுதும் நியாயங்களுடன் அடுத்த தொகுப்பைக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையில்தான் பரத்தை கூற்று தொகுப்பை பரணில் எறியாமல் அலமாரியில் வைக்கிறேன்.

பரத்தை கூற்று – அகநாழிகை பதிப்பகம் – ரூ. 50

Comments

லதாமகன்னுக்கு முன்னால் இருக்கும் கவிஞர் என்ற பதம் மட்டும் உறுத்துகிறது. :(
@லதாமகன்
கவிஞர் என்பதை அடித்தாயிற்று!
@லதாமகன்

இந்த விமர்சனத்தில் ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும் பதிலிறுக்க விரும்புகிறேன்.

"உறவிற்கும் தொழிலுக்கும் / வந்தனை செய்வோம் – வீணில் / உண்டு கழித்திருப்போரை / நிந்தனை செய்வோம்" என்பதை பாரதி வரிகளில் ஒரு வார்த்தையை மட்டும் மாற்றிப் போடும் வெறும் சொல் விளையாட்டாக மட்டும் எண்ணி எழுதவில்லை. "உடலுறவையும், அதை வைத்து நடக்கும் தொழிலையும் வணங்குவோம், அல்லாமல் (அதாவது உடலுறவை ஒரு தொழிலாகக் கொள்ளாமல்) சும்மா சுதந்திரமாகக் சாப்பிட்டுக் கிடப்பவர்களை (குடும்பப் பெண்கள்) திட்டுவோம்" - இது தான் அக்கவிதையின் பொருளாக நான் எண்ணி எழுதியது.

இந்த முழு அர்த்தத்தை ஏற்கனவே எடுத்துக் கொண்டு தான் இக்கவிதையை வார்த்தை மாற்ற விளையாட்டு என்று சொல்கிறீர்கள் எனில் சரி - உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்.
அடித்ததற்கு நன்றி! :)

கவிதை புரிந்தது. பாரதியின் கூற்றை பரத்தைகூற்றாக மாற்றுவதே தொகுப்பில் உள்ள பிறா கவிதைகள்தனே? அந்த விளையாட்டுதான் உறுத்தலாக இருந்தது.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்