பரத்தை கூற்று : கவிஞர் மதன்

பரத்தை கூற்று புத்தகம் பற்றிய கவிஞர் மதன் அவர்களின் விமர்சனம் இது:

*******

http://azhagiyalkadhaigal.blogspot.com/2011/01/blog-post.html

*******

Posted on January 10, 2011 at 12:38 AM by மதன்

நசுக்கப்பட்ட யோனி மலர்களின் திரவப் பிசுக்கார்ந்த தரை!
(பரத்தை கூற்று ஒரு பார்வை)


உலகின் ஆதித் தொழில் பரத்தைமை என்ற கூற்று ஒரு புனைவோ என்ற ஐயப்பாடு அவ்வப்போது எனக்கெழுவதுண்டு என்றபோதும், அது உண்மையாக இருக்கக் கூடிய சாத்தியப்பாடுகளின் நீட்சி காரணமாக சற்று ஆற்றிக் கொள்வதுண்டு. பரத்தைமை என்ற தளத்தில் பேசத் துவங்கின், அது ஆண், பெண் என்றவிரு பாலருக்குமான உறவின் வலிமை, இருபாலரும் பரஸ்பரம் மற்றும் தத்தம் மீது கொண்டிருக்கும் மதிப்பு, கற்பு, காமம், ஆணாதிக்கம், பெண்ணியம் என்று பல்வேறுபட்ட விளிம்புகளைக் கடந்தும், விரிந்தும், சென்று கொண்டேதானிருக்கும்.

இந்தளவுக்கு வலிமையான தளத்தைக் கையிலெடுத்து, அதன் பொருட்டு எழுதிக் குவித்த ஐந்நூறு குறுங்கவிதைகளுள், நூற்றைம்பதைக் கூர்தீட்டி, தன் முதல் கவிதைத் தொகுப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கும் நண்பர் சரவண கார்த்திகேயனுக்கு முதலில் என் வாழ்த்துகள். 26 வயதில் இரண்டாவது புத்தகம் என்பதெனக்கு அசாதாரணமாகப் படுவதில் ஆச்சரியமென்ன?

என்னை விட ஒரு வயதே மூத்தவர் என்பதும், கணினித் துறையிலேயே உயிர் வளர்த்து வந்தாலும், இலக்கியத்திலும் இடைவிடாது செயல்பட முடியும் என்று என்னை நானே ஊக்குவித்துக் கொள்ளவும் அவரும் ஒரு காரணம். அதற்கு அவருக்கு நன்றிகள்.

நண்பரால் தன் கல்லூரிக் காலத்தில் எழுதப்பெற்ற இத்தொகுப்பின் எல்லாக் கவிதைகளுமே கல்லூரிக் காலத்தைய என் மனப்பாங்கினை, அப்போது என்னெழுத்து கொண்டிருந்த படைப்பூக்கத்தை, சமூக நோக்கைப், பிரதிபலிப்பவையாகவே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

வாசிப்பும், காலமும் சேர்ந்து சற்று உந்தித் தள்ளியிருப்பதால் என்னளவில் அந்த எழுத்து மனோநிலையிலினின்று என் படைப்புகள் சற்று மாறுபட்டிருப்பதாக உணர்கிறேன். மற்றபடி, இன்னுமொரு ஐந்தாண்டு கழிந்த பின், இதே கட்டுரை கூட என்னால் அந்நியமாக உணரப்படலாம் என்ற நியதியை நான் கிஞ்சித்தும் மறுப்பதற்கில்லை.

ஒரு தொகுப்பு முழுக்க ஒரே பாடுபொருளைக் கொண்டிருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வி முதலில் எனக்குள் நிரம்பித் தானிருந்தது. சிறியன் என்னைப் பொறுத்தவரை வெவ்வேறு தளங்களில், வடிவங்களில் படைப்பாளி நிகழ்த்திப் பார்க்கும் பரிசோதனை முயற்சிகளைப் பொதுவில் வைக்கும் களம் தான் புத்தகம் வெளிக்கொணர்வது என்ற எண்ணம் இருந்தது. இது என்னுடைய வாசிப்புப் பற்றாக்குறையின் விளைவாகவும் இருக்கலாம். ஆனால் பாடுபொருள் ஒன்றோ, வேறுவேறோ, பரிசோதனைகள் செய்கிறோமோ இல்லையோ, இவையனைத்தையுமே ஒரு படைப்பாளிதான் முடிவு செய்ய வேண்டுமேயொழிய, வாசக சுதந்திரத்தினுடைய மூக்கை வகை தகையில்லாமல் நீட்டிப்பது அநாகரீகம் என்று என்னை நானே முதிர்ந்து கொண்டேன்.

பரத்தையின் கூற்றானது அவளின் வாடிக்கையாளனை, அவனுடைய தர்ம பத்தினியை, இந்தச் சமூகத்தை, என்று பலதரப்பட்ட நேயர்களுக்கானதாக இருப்பதையும், அவற்றைக் கவிதைகளாக உருக்கொளச் செய்வதற்கான கற்பனை மெனக்கெடலையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

சிலவிடங்களில் சுய கழிவிரக்கமாக வடிவது, சிலவிடங்களில் ஏனையோரின் மீதான கோபமாகப் பெருவெடிப்பு கொள்கிறது. சிலவிடங்களில் காமத்தின் நுண்மையைப் பேசுவது, பின் சிலவிடங்களில் கற்பென்ற வார்த்தையில் போர்த்தி, பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் இல்லத்தரசிகளின் கற்பைக் கேலி செய்து, இங்கே யாவரும் பரத்தைகளே என்று உரக்கச் சொல்லிப், பழிவாங்கி ஆற்றிக் கொள்கிறது.

ஒரே பாடுபொருளின் மீதானவொரு வாசகனின் சந்தேகத்திற்கு மேற்கண்ட வகையிலான வெவ்வேறு பட்ட கவிதைகள் மூலமாக, புத்தகம் முடியும் முன்னரே படைப்பாளி அளித்த பதில் நல்லதொரு வாசிப்பனுபவம்.

கவிதையெழுதுதல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. கவிதை நிகழல் என்பதை ஒப்புக் கொள்வேன். ஆம். நல்லதொரு கவிதை அதற்குரிய அக, புற ஊக்கிகள் மற்றும் காரணிகள் அனைத்தும் கைகூடும் அந்தவொரு அதிசய கணத்தில் நம் கண் முன்பாகவோ, கற்பனையிலோ நிகழும். It’s an execution. ஆனால் அதை வலுக்கட்டாயமாக நிகழ வைக்க ஒரு நல்ல படைப்பாளியால்/கவிஞனால் இயலும். இந்த ‘நிகழ்தல்’ பல கவிதைகளில் சியெஸ்கேவுக்குச் சாத்தியமாகியிருக்கிறது.

நிர்வாணத்திலென்
ஒற்றைச்சிரிப்பு போதும்
ஆண்மைத்திமிரடங்கி
நீ அவமானப்பட

சந்தோஷமாயிருந்ததா என
எங்களைக் கேட்கும் திராணி
எவனுக்குமில்லை தரணியில்

கவிதையைப் படைத்தல் என்பது உன்னதமானதொரு அனுபவம். சாரு சொல்வது போல் உன்மத்த நிலையில் கவிதை படைத்தல் எனக்கு மிகப் பிடிக்கும். ஆகையால்தான், அலுவலுக்கிடையே நேரம் கிடைத்தாலும் கவிதை படைக்க மனம் ஒன்ற மாட்டேனென்கிறது. அதற்கு நான் எதிர்பார்க்கும் உன்மத்தத்தைப் பரத்தை கூற்று கொடுத்தது. ஒரே பாடுபொருள், இதன் பொருட்டு இத்தனை கவிதைகளா என்ற என் புருவங்களின் உயர்தல், இவையனைத்தையும் எழுதுகையில் இருந்திருக்கக் கூடிய/தேவைப்படக் கூடிய உன்மத்த நிலையை அறியச் செய்கிறது.

இக்கவிதைகளின் வடிவம் எளிமையோடும், முடிந்தளவுக்கு சந்த நயத்தோடும் அமைந்திருப்பது, பொட்டில் அடித்தாற்போல் சொல்ல வருவதை வாசகனுக்குக் கடத்த உதவியாயிருக்கும். மாறாக, நான் முழுவதையும் சொல்ல மாட்டேன்.. வாசகன்தான் மீதியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அடம் பிடிக்காத தன்மை, இவைகளை வெறும் கவிதைகளாக இலக்கியத்தின் பொருட்டு மட்டுமன்றி, பாலியல் தொழிலாளிகளைப் பற்றிய நம்மனைவரின் பார்வையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதை, அவர்களையும் சராசரி மானுடப் பிறவிகளாகக் கண்ணுறும் பக்குவத்தைப் புரிய வைக்கும் முயற்சியைக் காட்சிப்படுத்துகிறது.

தொகுப்பில் எனைக் கவர்ந்த இன்னும் சில கவி-சாரிகள்! J

எந்நிறுவனமாவது
எம் யோனிக்குத்
தருமா காப்பீடு?

ஆயுத பூஜையன்றும்
ஓய்வறியாதது
எம் யோனி

நன்கு புணர்ந்து களைத்த
நள்ளென் யாமமொன்றில்
பூப்பெய்திக் கனிந்தேன்

காமமடக்கியதால்
ஞானமடைந்தனர்
யோகி சிலர் – யாம்
அது அலுத்ததனால்

சியெஸ்கேவுக்கும், அகநாழிகை வாசு அண்ணாவுக்கும் கை குலுக்கி, அன்பைத் தெரிவிக்கிறேன்.

Comments

Anonymous said…
ஆமாம் இந்த புத்தகம் நடந்து முடிந்த புத்தக சந்தையில், நல்ல யோனி ..ச் சீ சீ...போணி ஆச்சா CSK?

யோனியை இப்படி அகழ்வாராய்ச்சி செய்திருக்கும் நீர் இன்று முதல் Cunt கார்த்திகேயன் என்று அழைக்கப்படுவீர்களாக!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்