இது ராஜபாட்டை

*******

நிலை

பேருந்து நிலையத்தில்
இதோ வருகிறேனென்று
சொல்லிப்போன அம்மாவுக்காக‌
எவ்வளவோ நேரமாய்க் காத்திருக்கிறது
ஒரு குழந்தை

பார்க்கப் பார்க்கத்
தீராத முகங்களைப்
பார்த்தபடி.

- மனுஷ்ய புத்திரன் ('நீராலானது' தொகுப்பிலிருந்து)

*******

நந்தலாலா - கடந்த தசம ஆண்டுகளில் வெளிவந்தவைகளில் மிகச்சிறந்த படம்.

இது வெறும் திரைப்படம் அல்ல; ஓர் அனுபவம். இன்னும் சரியாய்ச் சொன்னால், ஒரு ஜென் அனுபவம். படத்தலைப்பு மற்றும் டைட்டில் கார்ட் தொடங்கி படம் நெடுகவும் குறியீடுகளே, அவற்றின் நீட்சியான படிமங்களே ஆள்கின்றன. ஒரு நெடுங்கவிதையைப் போல் அல்லது ஒரு பெருங்காவியத்தைப் போல் மிக நிதானமாய், மிகத்துல்லியமாய் படம் பிரயாணிக்கிறது. குட்டையிலிருக்குமொரு நத்தையின் அங்குல‌ நகர்ச்சியோடு மெதுவாகவே பயணிக்கும் இந்த வினோதக் கதையாடலை சீரான இடைவெளியில் பின் தொடர நாமோ மூச்சிரைக்க‌ ஓட வேண்டியிருக்கிறது, ஒரு காட்டுமுயலின் வேகத்துடன்.

நந்தலாலாவில் இரண்டே பேர் தான். ஒருவர் இளையராஜா; மற்ற‌வர் மிஷ்கின்.

ஒரு மந்திரவாதியின் கற்பனையோடும், ஒரு ரசவாதியின் நுட்பத்தோடும் படத்தின் காட்சிகள் எல்லாவற்றிலும் சூட்சம இறை போல் வியாபித்திருக்கிறார் இளையராஜா. படத்தின் மொத்த வசனங்களையும் கொஞ்சம் வலிந்து முயற்சித்தால் ஒரு விசிட்டிங் கார்டின் பின்புறத்தில் எழுதி விட முடியும். மற்றபடி, படம் முழுக்க இளையராஜா தான் பேசிக்கொண்டே இருக்கிறார் - தனது தேர்ந்த இசையினால், சமயங்களில் அதற்கும் மேலான மௌனத்தினால். விசிட்டிங் கார்டின் முன்புறமிருப்பது அந்த இசை தான்!

இளையாராஜாவின் ஆகச்சிறந்த பின்னணி இசையினை கோரிப்பெற்றிருக்கும் அரிதான படங்களுள் ஒன்று நந்தலாலா. காட்சிகளுக்கான நியாயத்தை மிகையேயின்றி தனக்கே உரிய பூடக மொழியில் சொல்லிச் செல்கிறது இசை. காட்சிகளையும், வசன‌ங்களையும் போல் திரைக்கதையின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இசையும் வருகிறது. விலக்காய், படத்தின் இறுதிக்கு சற்று முன்பு இளையராஜாவின் குரலில் வரும் "தாலாட்டு கேட்க நானும்" பாடல் மட்டுமே படத்தின் ஒட்டுமொத்த நல்ல‌‌னுபவத்துக்கும் பொருந்தாத ‌ஆபாசத்துணுக்காய்த் துருத்திக்கொண்டு நிற்கிறது - The exception that proves the rule.

பத்து வருடங்களுக்கு ஒரு முறை தான் ஒரு சிறந்த இயக்குநர் தமிழில் உருவாகிறார். 60களில் பாலச்சந்தர், 70களில் பாரதிராஜா, 80களில் மணிரத்னம், 90களில் பாலா, இப்போது மிஷ்கின். இயக்குநர் மிஷ்கினுக்கும், திரைக்கதையாள‌ர் மிஷ்கினுக்கும் இடையே நிகழும் தீராக்காமத்தின் விழைவாய் முகிழ்த்த புணர்ச்சியின் உச்சமாய் வந்து விழுகின்றன ஒவ்வொரு காட்சியும். ஒருவன் த‌ன் வாழ்வின் ஆகச்சிறந்த உச்சத்தினை ஏதேனுமொரு சுயசம்போகத்தில் தான் அடைய முடியும் என்பது போல யதார்த்தத்தினை விட அற்புதமான கணங்களைத் தருகிறது இந்தக் கற்பனை. ஒரே வாக்கியத்தில் இந்தப் படத்தினை சிலாகிப்பதானால் - "பாலு மகேந்திரா படம் பார்ப்பது போல் இருக்கிறது".

படத்தில் வரும் 'தாய்வாசல்', 'அன்னைவயல்' ஆகிய‌ ஊர்ப்பெயர்கள் வெளிப்படையான குறியீடுகள் என்றால், "இவனை கூட்டிட்டுப் பத்திரமா போயிருவியா?" எனக்கேட்கும் பதின்வயதுப் பள்ளிச்சிறுமியின் கையில் மிஷ்கின் கூழாங்கற்களை அள்ளித்திணிப்பது போன்ற காட்சிகள் தத்துவக் குறியீடு - baffling cipher. மிஷ்கினுக்கெனெ ஒரு பேட்டர்ன் இருக்கிறது. அது தான் அவரது அடையாளம். சர்வதேசம் தெரியாதெனக்கு, தமிழக அளவிலேனும் மிகத்தனித்துவமான ஓர் அடையாளம் அது. புத்தம் சரணம் கச்சாமி!

பின்னணியிசையையும், திரைக்கதையையும் ஈடு செய்ய ஒளிப்பதிவு இயக்குநரான மகேஷ் முத்துசுவாமி, அழகியல் இயக்குநரான ட்ராட்ஸ்கி மருது இருவரும் அசுர உழைப்பு நிகழ்த்தியிருக்க வேண்டும் - நிகழ்த்தியிருக்கிறார்கள். அஸ்வத் ராம், மிஷ்கின் இருவரது நடிப்பும் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மிக‌ முக்கியமான‌ நிகழ்வு. மற்றபடி, ஸ்னிக்தா (அவர் பேசும் நெடுவசனம்), ரோகிணி (அவரென்றே தெரியவில்லை), நாசர் (பன்னிரண்டு நொடிகளுக்கு) உட்பட எனக்குப் பெயர் தெரியாது படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே மிக நேர்த்தியாய்ப் பங்களித்துள்ளனர் - ஒரு கூட்டுப்பிரார்த்தனை போல்.

தமிழ்நாட்டில் 80 திரையங்குகளில் மட்டுமே வெளியாகியிருப்பதாக அறிகிறேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில், "என்னடா, டிவி சீரியல் மாதிரி எடுத்து வெச்சிருக்கான்" எனப் பின்னிருக்கையின் இருட்டிலிருந்து வந்த எதிர்வினையைக் கேட்கையில் அந்தத் தகவல் பற்றிய எனது ஆச்சரியத்தினைத் துறந்தேன். நீர் நடுவே தன்னை அழித்துக் கொண்டு சுட்டும் விரல்போல் நிற்குமொரு பட்ட மரத்தில் புரிந்துணர்வின் பொன் முத்தமாய் வந்தமர்ந்திருக்கும் ஒரு புள்* போலத்தான் திரையரங்கில் அமர்ந்திருந்தேன்.

பள்ளிச் சிறுவன் ஒருவனும், மனம் முதிராத‌ இளைஞனும் வெவ்வேறு நோக்கங்களுடன் தத்தம் தாயைத்தேடி மேற்கொள்ளும் பயணத்தில் சந்திக்கும் மனிதர்களும், ஸ்பசிரிக்கும் அனுபவங்களுமே நந்தலாலா திரைப்படம். படத்தில் ஒருவர் கூட கெட்டவரில்லை - இதை விக்கிரமன் கூட சொல்லி விட முடியும். அவர்களில் யாரும் நல்லவருமில்லை என்பது தான் இந்தப்படத்தைனை தனித்து நிற்கச்செய்கிறது. கெட்டவரும் இல்லாத, நல்லவரும் இல்லாத நம் எல்லோருக்குள்ளிருந்தும் தாய்மையின் வைரக்கீற்று அவ்வப்போது வெளிப்படவே செய்யும், இதுவே படத்தின் அடிநாதம் என்பதாக இருக்கிறது என் புரிதல் - இது தவறாகவும் இருக்கலாம். ஆனால் அது தானே ஜென்!

உன் அனுபவம் உன் புரிதல்; என் அனுபவம் என் புரிதல்.

பின்குறிப்புகள்:

1. * - தேவதேவனின் 'கவிதை' என்ற‌ கவிதையிலிருந்து எடுத்தாண்டது.

2. இந்தப்பதிவின் தலைப்பு கிட்டதட்ட புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.

3. படம் பெங்களூரில் வெளியாகவில்லை. ஓசூர் சென்று பார்த்து வந்தேன்.

4. நந்தலாலாவுக்குப் பின் பார்க்கலாம் என‌ உத்தேசித்து மூலமான ஜப்பானிய Kikujiroவை மடிக்கணிணியில் சேமித்திருந்தேன். ஆனால் இப்போது Kikujiro பார்க்காமலே எழுதிக் கொண்டிருக்கிறேன். இனியும் பார்ப்பதாயில்லை. இந்த‌ அனுபவமே போதுமானதாய்த் தோன்றுகிறது. அதைச் சிதைத்துக் கொள்ள விரும்பவில்லை. Kikujiro படத்தை தரவிறக்கம் செய்து தந்த நண்பன் செந்தில் குமாருக்கு நன்றிகளும், மன்னிப்பும்.

5. Kikujiro படத்தின் இயக்குநர் Takeshi Kitanoவுடன் அமர்ந்து நந்தலாலா படத்தைப் பார்க்க விரும்புகிறேன் என மிஷ்கின் சொன்னதாக ஏதோ ஒரு தமிழ்ப்பேரிதழ் பேட்டியின் வழி கேள்வியுற்றேன். எனக்கு மிஷ்கினுடன் அமர்ந்து படத்தைப் பார்க்கத் தோன்றுகிறது.

Comments

Unknown said…
ஒரு அருமையான கா(ஒ)வியம்.இந்த காலகட்டத்தில் உச்சபட்ச திறமை-மொத்த குழுவுமே பாராட்டுக்கு உரியது.கலங்க வைக்கிறது.
Kaarthik said…
நேற்றிலிருந்து நந்தலாலா பற்றி எந்த விமர்சனமும் படிக்கவில்லை. உங்கள் விமர்சனம்தான் முதலில் படிக்கிறேன். அருமையாக உள்ளது.
// படம் முழுக்க இளையராஜா தான் பேசிக்கொண்டே இருக்கிறார் - தனது தேர்ந்த இசையினால், சமயங்களில் அதற்கும் மேலான மௌனத்தினால்// இதுவே போதும் இப்படத்தை சிலாகிப்பதற்கு.
இன்று மாலைதான் நான் நந்தலாலா அனுபவத்தை உணரப் போகிறேன்
Anonymous said…
// 5. Kikujiro படத்தின் இயக்குநர் Takeshi Kitanoவுடன் அமர்ந்து நந்தலாலா படத்தைப் பார்க்க விரும்புகிறேன் என மிஷ்கின் சொன்னதாக ஏதோ ஒரு தமிழ்ப்பேரிதழ் பேட்டியின் வழி கேள்வியுற்றேன். //
உண்மையில் மிஷ்கினுக்கு நெஞ்சுரம் அதிகம் தான் போலும்.

என் தாழ்மையான வேண்டுகோள்:
முதலில் "kikujiro" பாருங்கள்...
அந்தப்படம் வெளியாகி பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

நட்புடன்...
நண்டு
Anonymous said…
இளையராஜாவின் இசை இந்தப்படத்தில் உலகதரமானது என்று சாரு அவருடைய blog ல் எழுதினார். இப்போது அது குப்பை என்கிறார். ஒரு உலக தரமான படத்தை copy அடித்து எடுத்தால் அது உலகதரமாம். மிஷ்க்கின் மட்டும் அடுத்த படத்தில் சாருவை நடிக்க வைக்காமல் இருக்கட்டும் அப்புறம் பாருங்கள் கதையை.
Unknown said…
The person chosen for Bhaskar Mani's mother character is a total mismatch. When he lifts his mother, the leg muscles ( stiffness ) of his mother resembles not of a aged person, no wrinkles on face, generally the complexion portrays a relatively very young person.

Csk, could u provide the relevance of the 3rd note of yours ?

Csk said: எனக்கு மிஷ்கினுடன் அமர்ந்து படத்தைப் பார்க்கத் தோன்றுகிறது.

" When a businessman speaks about sheep, his goal is wool."

Csk, as of now,you are certainly eligible to sit with, sorry, sit between Pushkar and Gayathri.
@Kumar
unable to publish ur comment as it is totally irrelevant to this post and pours disrespect on somebody els
Anonymous said…
//The person chosen for Bhaskar Mani's mother character is a total mismatch. When he lifts his mother, the leg muscles ( stiffness ) of his mother resembles not of a aged person, no wrinkles on face, generally the complexion portrays a relatively very young person. //
Totally disagree.Even today it is very common for a girl to get married at the teen age. We cannot completely ignore the chance that she may look like that ( If you argue for that sake..).
//கடந்த தசம ஆண்டுகளில் வெளிவந்தவைகளில் மிகச்சிறந்த படம்.//

தவறு. கடந்த பல தசம ஆண்டுகளில் வந்த படங்களிலேயே மிகச்சிறந்த திருட்டு.

மிஸ்டர். சி எஸ் கே. நீங்கள் இருக்கும் மனநிலையை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. இந்த மன நிலையில் நீங்கள் இருந்தால் எந்த குப்பை படமாக இருந்தாலும் உங்களுக்கு அது சிறந்த படமாகவே தோன்றும்.
Anonymous said…
Can you please explain me this ? I didn't understand when I saw the movie. Thanks

<<"இவனை கூட்டிட்டுப் பத்திரமா போயிருவியா?" எனக்கேட்கும் பதின்வயதுப் பள்ளிச்சிறுமியின் கையில் மிஷ்கின் கூழாங்கற்களை அள்ளித்திணிப்பது போன்ற காட்சிகள் தத்துவக் குறியீடு - baffling cipher. >>
@Anonymous
Planning to write a separate post on the ciphers used in nandhalala..
Will address this also in the same..
Stay tuned..
Thanks..
Arun said…
Thanks CSK. Can't wait though :)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்