தாண்டவராயனைத் தேடிய கதை

நேற்றைய மழையற்ற மதிய வெயிலில் (ஆச்சரியக்குறி) பெங்களூர் புத்தகக்காட்சியை நிழலுக்கு நாடினேன். இம்முறையும் அரண்மனைத்திடலில் (அதாங்க, Palace Grounds) வாசல் குழப்பம் வந்து ஆட்டோக்காரனுக்கு தண்டம் அழ நேர்ந்தது. எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது (அடச்சே!). Sex Ratio கூடுதலாயிருந்தது மட்டும் ஆறுதல் (அப்பாடா!). அது எதற்கு எனக்கு? நான் புத்தகம் பார்க்கச் சென்றவன்!

இம்முறை விளம்பரங்களும் நிறைய‌ இல்லை. ஸ்டால்களும் சென்னையை விடக் குறைவு தான். பார்வையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக கம்மி என்பதாகவே தோன்றியது. இதை எப்படி இந்தியாவின் 2வது பெரிய கண்காட்சி என்றழைக்கிறார்கள் என்பது ஆச்சரியம் (ஒருவேளை, ஆங்கிலத்துக்கு மட்டுமென்றால் ஒப்புக்கொள்ளலாம்).

உள்ளே நுழைந்தவுடன் இலவசமாய் குர்ஆன் தருவதாகச் சொல்லி நோட்டீஸைத் திணித்த முஸல்மான் ஸ்டாலில் நிதானமாய் நாசூக்காய் மறுத்து விட்டு நக‌ர்ந்தேன். அதே போல், தலையணை சைஸ் கீதையை நூறு ரூபாய்க்கு தருவதாய்ச் சொன்ன மற்றொரு ஸ்டாலையும் உதாசீனப்படுத்தி நகர்ந்தேன். காரணம் மதம் தொடர்பான எத்தேடலும் எனக்கு தற்போது இல்லை.ஆன்மீகமும் மதமும் வேறுவேறு அல்லவா?

ஏதோவொரு கன்னடக்கடையில் கலைஞரின் வண்ண‌ அட்டைப்படத்தோடு ஒரு புத்தகம் வைத்திருந்தார்கள். பின்பக்கம் தமிழ்க்குடிமகனின் ஸ்டாம்ப் அளவு புகைப்படம் போட்டு ஆங்கிலத்திலும் கன்னடத்திலுமாக சிறுகுறிப்பு எழுதியிருந்தது. கலைஞரின் வாழ்க்கை வரலாறு எனத்தெரிந்தது - இரு மாநில ஒருமைப்பாட்டுக்கு உதவக்கூடும்‌. த‌மிழில் கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு, விகடன், கண்ணதாசன், விசா, அல்லயன்ஸ், வானதி, குமரன், நியூ செஞ்சுரி போன்ற Creamy Layer பதிப்பகங்கள் மட்டும் பரப்பியிருந்தன‌.

கிட்டதட்ட எல்லாத் தமிழ்க்கடைகளிலும் கிழக்கு புத்தகங்கள் கிடைக்கின்றன (குறிப்பாய் புதிதாய் வெளியிடப்பட்டிருக்கும் சுஜாதா நூல்கள்‌)‌. விகடன் ஸ்டாலில் பிற பதிப்பக நூல்கள் வைத்திருப்பதை இப்போது தான் பார்க்கிறேன். இது போன்ற குறைவான த‌மிழ்ப்பதிப்பகங்கள் பங்கேற்கும் கண்காட்சியில் ஆதாயம் என்னவென்றால், non-obvious ஸ்டால்களில் வேறு வழியேயின்றி நிறைய நேரம் செலவழிக்க வேண்டியதாகிறது. உதாரணத்திற்கு சிக்ஸ்த் சென்ஸில் (நீயா நானா கோபிநாத் புத்த‌கத்தை விற்பவர்கள்) எல்லாம் நான் ஐந்து நிமிடங்கள் சேர்ந்தாற் போல் நின்றதே இது தான் முதல் முறை.

பாடி மசாஜர் கடையொன்றினைக் கடக்கையில் அறிவிப்பின்றி முதுகில் குறுகுறுவென சில நொடிகள் மசாஜ் செய்து டெமோ கொடுக்கிறார்கள். இது புத்தகக்காட்சி தானே, பாடி மசாஜர் விற்பனையை எல்லாம் எப்படி அனுமதித்தார்கள்? ஒரு வேளை கேட்லாக்கை புத்தகக் கணக்கில் சேர்த்து விட்டார்களோ! பெண்களுக்குமுண்டா எனத்தெரியவில்லை.

நான் சொன்னது போல் உயிர்மை ஸ்டாலில் பரத்தை கூற்று கிடைக்கவில்லை. எல்லாப் புத்த‌கங்களும் சென்னை புத்தகக்காட்சிக்கு அனுப்பியாகி விட்டது என்றார் அங்கிருந்த‌ மனுஷ்யபுத்திரனின் சகோதரர் நிஜாமுதீன். கிழக்கிலும் சந்திரயான் தென்பட‌வில்லை (இருக்கிறதா எனக் கேட்கவில்லை). பாராவின் உணவின் வரலாறும் கிடைக்கவில்லை.

தீராநதியில் உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை விமர்சனம் படித்து சொஸ்தமாகி காலச்சுவடில் வாங்கிக்கொண்டேன். போல் எல்லாக்கடைகளிலும் பா.வெங்கடேசனின் தாண்டவராயன் கதை (ஆழி பதிப்பகம்) தேடி ஏமாந்தேன் (hence justified the post title). வழக்கம் போல் வாத்தியார் புத்தகம் ஒன்று (இன்னும் ஒரு பெண் - அட்டைப்படம் மட்டும் அமெச்சூர் நாடகத்தனம்) எடுத்துக்கொண்டு கண்காட்சி ‌விஜ‌யத்தை நிறைவு செய்தேன்.

அடுத்த குறி (organ அல்ல; target தான்) சென்னை புத்தகக்காட்சி (ஜனவரி 4 - 17, 2011).

*******

இப்போது பெங்களூர் புத்தகக் கண்காட்சியில் அடியேனின் ஷாப்பிங் கார்ட்:
 1. இன்னும் ஒரு பெண் - சுஜாதா [கிழக்கு பதிப்பகம்]
 2. கடல் கொண்ட நிலம் - யுவன் சந்திரசேகர் [கிழக்கு பதிப்பகம்]
 3. சினிமா வியாபாரம் - சங்கர் நாராயண் [கிழக்கு பதிப்பகம்]
 4. ஹிந்துத்துவம் எளிதாக‌ - அரவிந்தன் நீலகணடன் [மினிமேக்ஸ்]
 5. மூன்றாம் சிலுவை - உமா வரதராஜன் [காலச்சுவடு பதிப்பகம்]
 6. ஆதிமங்கலத்து விசேஷ‌ங்கள் - க.சீ.சிவகுமார் [விகடன் பிரசுரம்]
 7. கி.வா.ஜ. பதில்கள் 1, 2, 3 [அல்லயன்ஸ்]
 8. ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் - தாமரை [குமரன் பதிப்பகம்]
 9. இசைத்தட்டின் மேலொரு முள் விழுந்தது - வஸந்த் செந்தில் [குமரன் பதிப்பகம்]
 10. எனக்குப் பிடித்த புத்த‌கங்கள் - ஓஷோ [கண்ணதாசன் பதிப்பகம்]
 11. உங்கள் பாக்யராஜ் பதில்கள் 1, 2, 3 [கண்ணதாசன் பதிப்பகம்]
 12. வெண்ணிற ஆடை மூர்த்தியின் ஜோக்ஸ் டயரி 1, 2 -  [கண்ணதாசன் பதிப்பகம்]
 13. Hindu Speaks on Scientific Facts - 1, 2 [Kasturi & Sons Ltd]
 14. Issac Asimov The Complete Stories - 1 [HarperCollins Publishers]
 15. நான்கு குழந்தைகள் புத்தகங்கள் - என் மகன் ஞானிக்கு
மிளகாய் பஜ்ஜியும், பிரம்மாண்ட அப்பளமும், ஸ்வீட்லைம் சோடாவும் தனிக்கணக்கு.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்