எந்திரன் : SPEED 1 THz, MEMORY 1 ZB


என் பத்தாண்டு நெடிய‌ காத்திருப்பு ஒரு வழியாய் இன்றோடு முடிவுக்கு வருகிறது. DOT.

எந்திரன், the ROBOT.

என் நினைவுச்சில்லுகள் சரியென்றால், 2000ம் ஆண்டுவாக்கில் தான் ஷ‌ங்கரின் ரோபோ படம் பற்றி நான் முதலில் கேள்வியுற்றது. படத்தில் நடிப்பவர் கமல் என்பதும், படத்தை எழுதுபவர் சுஜாதா என்பதுமே அப்போதைய எனது எதிர்பார்ப்பின் பிரதானக்காரணங்கள். அப்போது படம் பற்றி உள்ளே ஏற ஆரம்பித்த‌ Tempo - த‌னிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரைக்கும் - இந்த பத்தாண்டுகளில் ஒரு போதும் இறங்கவேயில்லை (அஜீத் நடிக்கிறார் என்றெல்லாம் நடுவில் பூச்சாண்டி காட்டினார்கள் என்ற‌ போதும் கூட!). DOT.

எந்திரன் படத்தில் சிட்டி என்ற‌ ரோபோவை உருவாக்க விஞ்ஞானி வசீகரன் எடுத்துக் கொள்வதாய்ச் சொல்லும் அதே பத்து வருடங்கள் செலவாகியிருக்கின்றன இயக்குநர் ஷங்கருக்கும் தன் கனவுத் திரைப்படத்தை எடுத்து முடிக்க. முதல் வரியில் எனக்குச் சொன்னது பத்தாண்டுக்காத்திருப்பு என்றால், ஷ‌ங்கருக்கு இது பத்தாண்டுத்தவம். DOT.

கமல்ஹாசன், சிரஞ்சீவி, ஷாரூக்கான் என செம்மொழி உட்பட மும்மொழி ஸ்டார்கள் தொடங்கி முயன்று பின் தயங்கி பயந்து வெளியேறி விட, இறுதியில் SUB-CONTINENT SUPER STAR RAJNI (அதை ஏன் அப்படி ஸ்பெல் செய்கிறார்கள் என்பது என் நெடுநாளைய சந்தேகம் - 'RAJINI' என்று தானே வர வேண்டும் - ஒருவேளை நியூமராலஜியா?!) பிரதானக் கதாப்பாத்திர‌மேற்று நடித்திட‌ படம் இன்று - இந்த அக்டோபர் ஒன்று அன்று - ரிலீஸ். DOT.

மேலே sub-continent என்று குறிப்பிடுவது இந்தியன் டெக்டானிக் ப்ளேட் மீது வீற்றிருக்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபால், பூடான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தான், மாலத்தீவுகள் ஆகிய எட்டு தேசங்கள‌டங்கிய இந்தியத் துணைக்கண்டத்தைக் குறிக்கிறது. இவற்றுக்கும் சேர்த்து ரஜினி தானே சூப்பர் ஸ்டார் (இப்படிச்சொல்வது ஒரு சதவிகிதம் கூட மிகையில்லை - நான் ரஜினி ரசிகன் அல்ல என்பது இங்கே குறிப்பிடத்தக்கது). DOT. 

பார்த்தவர்கள் / பாராதவர்கள் எனக் கிட்டதட்ட எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது எந்திரன் படத்தின் கதை. அதனால் இங்கே நான் இப்படத்தின் கதையைச் சொல்லப் போவதில்லை. ஆனால் படம் பார்த்த நண்பனொருவன் இது ராமாயணக்கதை தானே எனக் கேட்டதைச் சொல்லியே தீர வேண்டும். யோசித்துப் பார்த்தால், அட! ஆமாம். DOT.  

படத்தின் இயக்கம் பற்றித் தனியே கதைக்க வேண்டியதில்லை. பிரித்து மேய்ந்திருக்கிறார் ஷ‌ங்கர். படம் நெடுக - பாடல்களில் வரும் montages உட்பட‌ - சின்னச் சின்ன அழகான காட்சிகள் பலவற்றில் இன்னமும் இந்தியன் காலத்து ஷ‌ங்கர் பளீரிடுகிறார். Entertainer இயக்குநர்களில் இந்தியாவில் ஷ‌ங்கருக்கு இணையாய்க் கூட அல்ல, அவருக்கு அடுத்து யார் என்று கூட யோசித்துப் பார்க்கக் தயக்க‌மாக இருக்கிற‌து. ஷ‌ங்கர் - ஷ‌ங்கர் தான். DOT.

திரைக்கதை - இதில் தான் இந்தப் படத்தின் முதல் அல்லது கடைசி அல்லது ஒரே சிக்கல் ஒளிந்திருக்கிறது. எந்திரனுக்கு உணர்ச்சிகள் வரும் நிலை வரை (கிட்டதட்ட முதல் பாதி) சீராய்ப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை பின் தொய்வடைந்து ப்ளாட்டை விடுத்து கிராஃபிஸிடம் தஞ்சமடைந்து விடுகிற‌து. அதிலும் கடைசி 30 நிமிடங்களின் மொத்தத் திரைக்கதையையே ஒற்‌றை வார்த்தையாகத் தான் ஷங்கர் எழுதிருக்கக்கூடும் - "ஆக்ஷன் ப்ளாக்". கடைசி டைட்டில்ஸ் போடும் போது தான் க்ளைமேக்ஸ் வந்து விட்டதே உறைத்தது - படம் முடிகையில் வரும் அந்த நிறைவே சுத்தமாய் இல்லை. DOT.‌

ஸ்பீல்பெர்க்கின் A.I. Artificial Intelligence பார்த்து விட்டு "இதை விட நம்முடைய ஸ்கிரிப்ட் நன்றாயிருக்கிற‌து" என ரோபோ படம் பற்றி கமல் சொன்னதாக சுஜாதா இடையில் ஒரு முறை எழுதியிருந்ததாக நினைவு. கமல்/ சுஜாதா/ நான் மிகைப்படுத்தவில்லையெனில் அப்போது எழுதப்பட்ட திரைக்கதையில் 50% கூட இதில் இருக்க வாய்ப்பு இல்லை. DOT.

திரைக்கதையில் கோட்டை விடும் உச்ச இயக்குநர்கள் மேக்கிங்கில் ஜெயிக்கும் காலம் இது - நேற்று மணிரத்னம்; இன்று ஷ‌ங்கர். இராவணன் படம் பார்த்த போது இன்றைய தேதிக்கு இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவு என உணர்ந்தது போல் எந்திரன் படம் பார்த்த போது இந்திய சினிமாவின் மிகச்சிறந்த கிராஃபிக்ஸ் என உணர்ந்தேன். DOT.

படத்தின் பட்ஜெட் விஷுவல்களில் பல்லிளிக்காமல் புன்னகைக்கிறது. உதாரணம் : இரும்பாயுதங்களை ஈர்த்துக் கொண்டு ஓர் அவதாரம் போல் ரோபோ ரஜினி  நிற்கும் காட்சி (அதற்கே தான் கொடுத்த ரூ.200 சரியாய்ப் போய்விட்டது என்றான் நண்பன்). DOT.

கிராபிக்ஸ் தான் படத்தின் மூன்றாம் கதாநாயகன் (முதலாவது ஷ‌ங்கர் என்பதும் இரண்டாவது ரஜினி என்பதும் நான் சொல்லித் தெரிய‌ வேண்டியது இல்லை). எலெக்ட்ரிக் ட்ரெய்ன் காட்சிகள் மற்றும் தீ விபத்து காட்சிகள் தவிர மற்ற கிராஃபிக்ஸ் எல்லாமே மிகச்சிறப்பாகவே வந்திருக்கின்றன. காதல் அணுக்கள், கிளிமாஞ்சாரோ, அரிமா அரிமா ஆகிய‌ பாடல்களில் ரஜினியின் நடன அசைவுகளைக் கவனித்தால் ஐஸ்வர்யாவின் பிறந்த நாள் பார்ட்டியில் ரோபோ ரஜினி ஆடும் நடனம் க்ராபிக்ஸ் வேலையே என்பது துல்லியம். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் Brilliant Execution - அது பற்றி "ஹாலிவுட் படங்களுக்கு இணையாக" என உண்மையிலேயே கூச்சமேயின்றி எழுதலாம். DOT.

Animatronics செய்த‌ Legacy Effects - Stan Winston Studios, USAக்கும் (ஸ்பீல்பெர்க், கேமரூன் இருவரின் ஆஸ்தான நிறுவனம் இது), VFX செய்த‌ ஸ்ரீநிவாஸ் எம். மோகன் குழுவுக்கும் இப்போது உங்களுக்கு சூழ்நிலை சாதகமெனில் தாரளமாய் standing ovation தரலாம். DOT.

அநியாய‌ கிராஃபிக்ஸ், அக்கிரம மேக்கப் போன்ற அத்தனை எதிர்மறைகளையும் தாண்டி தசாவதாரம் எனக்குப் பிடித்திருந்ததற்குக் காரணம் அதன் அற்புத திரைக்கதை. மாறாய், அசத்தல் கிராபிக்ஸ், அமர்க்கள மேக்கிங் போன்ற அத்தனை நேர்நிலைகளையும் மீறி எந்திரன் என்னை ஈர்க்காததற்குக் காரணமும் அதே அடாசு திரைக்கதை தான்.‌ ஜேம்ஸ் கேமரூனின் AVATAR படமே எனக்கு இப்படியான உணர்வையே தோற்றுவித்தது. DOT.

படத்தில் நிறைய நல்ல வசன‌ங்கள் இருக்கின்றன. ஆனாலும் விமர்சகன் மனம் எப்போதும் ஒப்பீட்டிலக்கியம் எழுதவே விரும்புகிறது. அவ்வகையில் சுஜாதா பங்காற்றிய ஷ‌ங்கரின் முந்தைய படங்களான இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன் போன்றவற்றோடு ஒப்பிடும் போது இது சறுக்கல் தான். ஆனால் அதே கூட்டணியின் சிவாஜியின் வசன‌ங்களோடு ஒப்பிடும் போது எந்திரன் நிச்சயம் பெட்டர். DOT.

நா.முத்துக்குமாரின் மிலிட்டரி கவிதையும், Robotic Conference வசன‌ங்களும் (குறிப்பாய்க் கடவுள் பற்றிய வசனம்), "நான் துரோகம் செய்வதை விட‌ நீயே தியாகம் செய்து விடு" என்கிற தொனியிலான சிட்டியின் வசனமும் deserve mentioning. அதே போல் சிட்டியின் Natural Language Processing சார்ந்த‌ Comedy of Errors எல்லாம் rib-tickling வகையறா. DOT.

"பாய் ஃப்ரெண்ட், டாய் ஃப்ரெண்ட்" வசனம் ஷ‌ங்கருடையது, சலூன் கடை வசன‌ங்கள், கிராஃபிக்ஸ் கொசு வசனங்கள், ARID டெஸ்ட் வசன‌ங்கள் சுஜாதாவால் எழுதப்பட்டவை,  சிட்டி வெர்ஷன் 2.0 வருவ‌திலிருந்து க்ளைமேக்ஸ் வரையிலான வசன‌ங்கள், ஹனீஃபா ரஜினியிடையேயான வசன‌ங்கள் மதன் கார்க்கியால் எழுதப்பட்டவை என அவரது ட்வீட்கள் மூலம் தெரிகிறது - இந்த DOT வசனம் கூட மதன் கார்க்கியுடையதே. DOT.

பொதுவாய் எல்லா வசன‌ங்களுமே படத்துக்கு ஒரு சுஜாதாத்தனத்தை வழங்க முயற்சிக்கின்றன‌. அவ்வகையில் படத்திலிருக்கும் நல்ல வசனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சுஜாதா நேரடியாக‌ எழுதியவை; மற்றது சுஜாதாவின் மறைமுக‌ பாதிப்பில் (சூட்சம ரூபம்?) மற்ற இருவரும் எழுதிச் சேர்த்தவை. DOT.

இந்த வயர், உயிர் வசனங்கள் மட்டும் படத்தில் மூன்று இடங்களில் வருகிறது - ஐஸ்வர்யா ராய் கருணாஸ் சந்தானம் சந்திப்பில், புதிய மனிதா பாடலில், அப்புறம் அரிமா அரிமா பாடலில். ஷங்கர் போன்ற ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்டின் படத்தில் எப்படி இம்மாதிரி repetition போன்ற silly-mistakeஐ அனுமதிக்கிறார்கள் எனப்புரியவில்லை. DOT.

ஆரம்பத்தில் எழுதப்பட்ட போது சுஜாதாவின் பங்கு திரைக்கதையிலும், வசன‌ங்களிலும் (அவரே முன்பு எழுதிய சிறுகதைகள், நாவல்கள் சார்ந்து கூட) கணிசமான அளவில் இருந்திருக்க வேண்டும். 2008ல் ரஜினி ஹீரோவெனெ முடிவானதும் (பின் கொஞ்ச நாட்களிலேயே சுஜாதா மரணித்து விடுகிறார்) படத்தின் உள்ளடக்கம் சார்ந்து நிகழ்ந்த‌ வளர்சிதை மாற்றங்களினால் (வளர்ச்சியா? சிதைவா? மாற்றமா?) அவர் எழுதிய பகுதிகளில் நிறைய வெட்டப்பட்டிருக்க வேண்டும். இதுவே எந்திரன் படத்தில் சுஜாதாவின் பங்க‌ளிப்பு பற்றி உணர்ச்சிவசப்படாத தர்க்கரீதியான என் அவதானிப்பு. DOT.

அதன் காரணமாகவே தற்போதைய படத்தில் அவரது பெயரை வசனகர்த்தாக்களில் ஒருவராகப் போடுவதோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி, நினைவாஞ்சலிக் குறிப்பாக‌ படத்தின் ஆரம்பத்தில் அவர் பெயரைப் போட்டிருக்க வேண்டும் போன்ற ஆதங்கங்க‌ள் எல்லாம் தேவையற்றவை என்பதே என் நிலைப்பாடு. சுஜாதாவை கிட்டதட்ட தன் தந்தை என்பது போலவே ஷங்கர் பேசி வந்திருக்கிறார். அதனால் அவரது பெயரை இருட்டடிப்பு செய்ய வேண்டிய நிலையோ, நிர்ப்பந்தமோ ஷங்கருக்கு இல்லை. அதற்கு மேல் இந்த under-quality எழுத்தில் அவர் பெயரை அதிகப்படி associate செய்வது பாவம் என்று கூட விட்டிருக்கலாம். தப்பில்லை என்று தான் தோன்றுகிறது. DOT.

இது போன்ற அறிவியல் பின்னணி கொண்ட படத்துக்கு ஒளிப்பதிவும், கலையமைப்பும் மிக முக்கியம். பொதுவாய்ப் பார்த்தால் இரண்டுமே நன்றெனினும் படத்தின் தேவை மற்றும் எதிர்ப்பார்ப்பைக் கொண்டு நோக்குங்கால் இரண்டுமே முழுத்திருப்தியில்லை என்று தான் சொல்வேன் (ரஜினி, டேனி இருவரின் லேப் ஆர்க்கிடெக்ச்சரில் கூட வித்தியாசம் காட்ட முனையவில்லை என்பது பேராச்சிரியம்). ஆண்டனியின் எடிட்டிங்கிலும், பூக்குட்டியின் ஒலிப்பதிவிலும் புதிதாய்ச் சிலாகிக்க ஏதுமில்லை. போலவே படத்தின் இசையும். பாடல்கள் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை (வழக்கம் போல்) பரவாயில்லை ரகம். DOT.

ரோபோவின் வெளித்தோற்றத்தை டிசைன் செய்திருக்கும் Mary E Vogtன் (Men In Black Series மற்றும் Batman Returns படங்களின் Scientific Outfit காஸ்ட்யூமர்) பணி மிக முக்கியமானது. மனீஷ் மல்ஹோத்ராவின் ஆடை வடிவமைப்பும் notable - குறிப்பாய்ப் பாடல்களில்.  பீட்டர் ஹெயின், Frankie Chan, Eddy Wong அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகள் நன்று. ரஜினி படங்களுக்கு நடனம் அமைப்பதற்கு இன்னமும் எதற்கு பிரபுதேவாவும், ராஜுசுந்தரமும்? ஒரு ஃபிஸியோதெரபிஸ்ட் அல்லது யோகா மாஸ்டர் போதுமே. DOT.

ஷங்கர் பட நாயகிகளின் சராசரி வயது குறைந்தது முப்பத்தைந்தாவது இருக்கக்கூடும் - அப்படி ஓர் Aunty-பண்டாரம் அவர். ஸ்டாடிஸ்டிக்ஸ் குலையாதிருக்க இந்த‌ப்படத்தில் ஐஸ்வர்யா ராய் (அவரும் இன்னமும் குலையாதேயிருக்கிறார் என்பது வேறு விஷயம்). ரொம்ப நாட்களுக்குப் பிறகு ரஜினி படத்தில் கதாநாயகி படம் முழுக்க வருகிறார் - அதுவும் சயின்டிஸ்ட் ரஜினியின் எழுச்சியும் ("112 Missed Calls"), ரோபோ ரஜினியின் வீழ்ச்சியும் அவரைச் சுற்றியே அமைகிறது ("காதல் வந்தா நட்டு கழண்டுடும்"). த‌விர, இது வரை நான் பார்த்தவற்றில் இதில் தான் அவர் மிகச்சிறப்பாக‌ நடித்திருக்கிறார். DOT.

மற்றபடி, சந்தானம், கருணாஸ், வி.எம்.சி.ஹனீஃபா, கலாபவன் மணி, தேவதர்ஷினி, ரஜினியின் அப்பா, அம்மாவாய் வருபவர்கள், ஷ்ரியா ஷர்மா (க்ளைமேக்ஸில், A.I. மியூசியத்தில் வாய் பிளக்கும் அந்தக்[ச்] கு[சு]ட்டிப்பெண்)  எல்லோரும் இருக்கிறார்கள் என்பதற்கு மேல் வேறென்ன? (படத்தின் கலை இயக்குநர் சாபு சிரில் கூட ஒரு காட்சியில் வந்து போகிறார்). வில்லன் டேனி டென்ஸாங்பா மட்டும் நிற்கிறார் - அதுவும் AIRDல் ரோபோவான‌ சிட்டிக்கு டெஸ்ட் வைக்கும் காட்சியில் worth applause நடிப்பு. DOT.

இப்போது படத்தின் மைய அச்சுக்கு வருவோம் - ரஜினி. அதுவும் மூன்று ரோல்களில் - சயின்டிஸ்ட் வசீகரன், சிட்டி வெர்ஷன் 1.0 மற்றும் சிட்டி வெர்ஷன் 2.0. சயின்டிஸ்ட் ரஜினி under-perform செய்திருக்கிறார் (கவனிக்கவும், under-play அல்ல!). விஞ்ஞானி பாத்திரம் என்பதால் தசாவதாரம் கமல்ஹாசனின் நடிப்போடு ஒப்பிட்டு உள்ளெழும் நமுட்டுச்சிரிப்பு பற்றி எழுதாமல் இருக்கமுடியவில்லை. சிட்டி வெர்ஷன் 1.0 ஒக்கே ரகம். மூன்றாவது தான் ரகளை - ரஜினியை இப்படத்தில் தேர்ந்ததை நியாயப்படுத்துவது இதுவே. ஆனால் அதிலும் கொஞ்சமாய் அந்தக் காலத்து அலெக்ஸ் பாண்டியன் வாசனை. மற்றபடி எங்குமே சூப்பர் ஸ்டார் இல்லை. பாட்ஷா, படையப்பா போன்ற படங்களில் நாம் பார்த்து ரசித்த ரஜினி இல்லை. அக்குறையை நிவர்த்திக்க‌ மாறுபட்ட நடிப்பையோ, வேறுபட்ட அம்சத்தையோ அவர் காட்ட முனையவில்லை என்பதே பிரச்சனை. இப்படத்தின் கதையில் ரஜினி(யும்) ஒரு கதாபாத்திரம் அவ்வளவே. DOT.

சிவாஜியில் எல்லோருக்கும் பிடித்திருந்த மொட்டை ரஜினியின் மொட்டை கெட்டப் துரதிர்ஷடவசமாய் என்னைக் கவரவில்லை - மாறாக மகா / மெகா காமெடியாகவும் தோன்றியது. அதே போல் எந்திரன் படத்தின் ப்ரோமோ ஸ்டில்களிலும் சிட்டி வெர்ஷன் 2.0 ரஜினியைப் பார்த்து இந்திரலோகத்தில் அழகப்பன் opening song வடிவேலு ஞாபகம் வந்து பீதியடைந்திருந்தேன். ஆனால் ஆறுதலாய் படத்தில் அது ரசிக்கும் படியாகவே அமைந்திருக்கிறது. ஸ்டில்களில் மட்டும் யாரோ சூனியம் வைத்து விட்டர்கள். DOT.

உண்மையில் எந்திரன் படத்தின் டைட்டில் கார்டிலேயே எனக்குப் பிரச்சனை துவங்கி விட்டது. "Smoking and drinking is injurious to health" என ஸ்லைடு போடுகிறார்கள். அதில் வர வேண்டியது 'is' அல்ல; 'are' என‌த் தோன்றுகிறது என் ஆங்கிலச்சிற்றறிவுக்கு. எந்திரன் தொழில்நுட்பக்குழுப்பட்டியலிலும் சிறு குழப்பம் - ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட Yuen Woo Ping (Matrix Series மற்றும் Crouching Tiger Hidden Dragon படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்தவர்) பெயர் டைட்டிலில் வந்த மாதிரி தெரியவில்லை - இது போல் சிற்சில‌. DOT.

ஆங்கில I, Robot, கன்னட Hollywood, இந்தி Love Story 2050 என பல படங்களின் கதையும் இதே தான் என்ற வாதங்களையெல்லாம் எந்திரன் பத்து வருடங்களுக்கு முன்பே ஷங்கர் / சுஜாதா மனதில் கருக்கொண்ட கதை என்பதை நினைவுபடுத்துவதன் மூலம் கடாசி விடலாம் (வெற்றி விழா / Bourne Identity கேஸில் நடந்தது போன்ற அனர்த்தம் இல்லையென்று நம்புவோமாக‌). ஆனால் ரோபோ பிரசவம் பார்க்கும் காட்சி 3 Idiotsஐ (தேவையில்லாமல்) ஞாயாபகப்படுத்தித் தொலைக்கிறது. அதே போல் க்ளைமேக்ஸ் கிராபிக்ஸின் ஆதார கான்செப்டை Transformersல் இருந்து உருவியிருக்கிறார்கள். மூன்றாம் உலக சினிமாவில் இது போன்ற சிறுகுற்றங்களை மன்னிக்கலாம். DOT.

எந்திரன் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படமா என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. என் வாசிப்பு மற்றும் புரிதலின் படி இது நிச்சயம் சயின்ஸ் ஃபிக்ஷன் தான் - இருக்கிற விஞ்ஞானத்தை தொலை நோக்கி நீட்டித்து இன்றைய தேதியில் நடந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்வது கண்டிப்பாய் அறிவியல் புனைகதையே. அதன் புதுமைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் இருக்கலாம் - அவை விவாதத்திற்குரியவை. அதே போல் எந்திரன் கதை ரோபோட்டிக் இயலின் அரிச்சுவடி நிலைக்கற்பனையாக இருக்கலாம் - அது வேறு விஷயம். ஆனால் அந்நிலை கூட இன்னும் வாய்க்கப்பெறாத தமிழ் கூறும் நல்லுலகிற்கு நிச்சயம் இது ஒரு நல்லாரம்பமே. தமிழ் சினிமாவை விஞ்ஞானப் புனைகதைக் களத்தில் இங்கிருந்து மேலே அடுத்தடுத்த படிநிலைகளுக்கு அழைத்துச் செல்வது இளம் தலைமுறை இயக்குநர்களின் கடமை - நம் போன்ற தேர்ந்த பார்வையாளர்களின் வேலையும் கூட‌. மற்றபடி, இப்படத்தை சயின்ஸ் பிக்ஷனா என்று குழப்படி செய்வது Isaac Asimovவையே சந்தேகிப்பது போன்றது தான். DOT.

எந்திரன் நல்ல படம் தான்.. அந்த 'தான்' என்று இழுக்க வைப்பது தான் அதன் குறை. DOT.

*******

PS 1:

இரண்டாம் முறை படம் பார்க்கும் போது இந்த அவதானிப்புகள் உறுதிபடக்கூடும். DOT.

PS 2:

எந்திரன் படைத்ததில் இரண்டே இரண்டு தாம் உருப்படியானவை. ஒன்று நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்தப்பதிவு; இன்னொன்று நீங்கள் போடவிருக்கும் பின்னூட்டம். DOT.

PS 3:

அமெரிக்காவில் சாதாரணமாய் பன்னிரெண்டு டாலர்களுக்கு விற்கப்படும் சினிமா டிக்கெட்டின் விலை எந்திரனுக்கு முப்பது டாலர்கள் என்கிறான் என் நண்பன். இங்கே பெங்களூர் பிவிஆரில் FDFS (அதாங்க First Day, First Show) சாதாரண டிக்கெட்டின் விலை ரூ.750; கோல்ட் க்ளாஸ் ரூ.1500. AVATAR படத்துக்குக் கூட இவ்வளவு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் முதல் வாரம் எல்லா ஷோக்களுமே கௌண்டர் டிக்கெட் விலையே ரூ.150. அப்படியென்றால், பிளாக் ரூ.400 வரை கூடப் போகும். DOT.

160 கோடி ரூபாய் செலவில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். ஒரே நாளில் உலக அளவில் 3000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள். முதல் நாள் வசூல் மட்டும் 200 கோடி ரூபாயைத் தொடுகிறது. படத்தையொட்டிய மொத்தப் பணப்புழக்கம் மட்டும் ரூ. 1600 கோடி இருக்கும் என மதிப்பிட்டிருக்கிறார்கள். இதெல்லாம் சாதித்திருப்பது அல்லது சாதிக்கவிருப்பது ஒரு தமிழ்ப்படம் என்பது இங்கு முக்கியமாகிறது. அப்படி என்ன தான் எடுத்து வைத்திருக்கிறார்கள் என ஒரு நடை போய்ப் பார்த்து விட்டு வாருங்கள். DOT.

PS 4:

எந்திரன் படத்தைப் பொறுத்தவரையில் இந்தப் பதிவின் தலைப்பு தான் ரஜினியின் பஞ்ச் டயலாக்காகக் கொள்ளவியலும். அதில் ஒரு குழப்பமும் நிலவுகிறது. சரியானது - "ஸ்பீட் ஒன் டெராஹெர்ட்ஸ், மெமெரி ஒன் ஸிடாபைட்" (அது ஜிகாபைட் அல்ல - ரஜினியின் வசன உச்சரிப்பு அப்படி!). அதாவது இத்தகைய திறன் கொண்ட பிராசசரைத் தயாரிக்க இன்னமும் சில பத்தாண்டுகள் ஆகலாம் (Moore's Law); அதை அட்வான்ஸாக இப்போதே சயின்டிஸ்ட் வசீகரன் தயாரிக்கிறார் என்பது தான் அவர்கள் உணர்த்த நினைப்பது. DOT.

இதைச் சுலபமாகப் புரிந்து கொள்ள என் லேப்டாப்பின் Intel Pentium M பிராசசரை சிட்டியின் Pentium Ultra Core Millennia பிராசசரோடு ஒப்பீடு செய்யலாம். ஸ்பீட் என படத்தில் குறிப்பிடப்படும் Clock Rate என் லேப்டாப்பில் 1.73 GHz; சிட்டியினுடையது 1THz - அதாவது என்னுடையதை விட கிட்டதட்ட‌ 600 மடங்கு அதிகம். அதே போல் மெமரி எனக்குறிப்பிடுவது CPU RAMன் அளவை என நினைக்கிறேன். அது என்னுடையது 2 GB; சிட்டியினுடையது 1 ZB - அதாவது என்னுடையதை விட 50 கோடி மடங்கு அதிகம். DOT.

PS 5:

சிவாஜியில் அமெரிக்க ரிட்டர்ன் ரஜினி அடிக்கடி COOL  என்று சொல்வது போல் எந்திரன் சயின்டிஸ்ட் ரஜினி சில சமயம் வாக்கியங்களின் முடிவில் DOT என்கிறார். சிவாஜியின் போது ரஜினியைப் பின்பற்றி பல ஆர்வக்கோளாறுகள் அடிக்கடி தேவையின்றி COOL என்று பயன்படுத்த ஆரம்பித்தனர் (குறிப்பாய் மென்பொருள் நிறுவனங்களில்). இப்போது DOT என்பதைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் - அதை நினைத்தாலே குமட்டுகிறது. DOT.

இது போன்ற சங்கதிகளை அழகாகக் கையாள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்க‌ள். என் மேனேஜர் - அவர் ஒரு தமிழ்ப்பெண் - மீட்டிங்களில் ஆங்கிலத்தில் பேசும் போது சில சமயம் வாக்கியங்களின் முடிவில் இதே போல் PERIOD என்று பயன்படுத்துவார் (அதற்கும் DOT என்று தான் அர்த்தம்). அது மிகவும் கேஷுவலாக மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும். அந்த‌ PERIODல் இருக்கும் வசீகரம் கூட வசீகரனின் DOTல் நிச்சயம் இல்லை. PERIOD.

Comments

pradeep said…
சரோ...நல்லவே பட்டையை தீட்டீயிருக்கீங்க.The Boss!!
//சிவாஜியின் போது ரஜினியைப் பின்பற்றி பல ஆர்வக்கோளாறுகள் அடிக்கடி தேவையில்லாமல் என்று பயன்படுத்த ஆரம்பித்தனர் (குறிப்பாய் மென்பொருள் நிறுவனங்களில்). இப்போது DOT என்பதைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் //

பதிவுகளிலேயே பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்
Praveen Singapore said…
Why did not mention anything about editing and music?
viki said…
ஸ்பீல்பெர்க்கின் A.I. Artificial Intelligence பார்த்து விட்டு "இதை விட நம்முடைய ஸ்கிரிப்ட் நன்றாயிருக்கிற‌து" என ரோபோ படம் பற்றி கமல் சொன்னதாக சுஜாதா இடையில் ஒரு முறை எழுதியிருந்ததாக நினைவு. கமல்/ சுஜாதா/ நான் மிகைப்படுத்தவில்லையெனில் அந்தத்திரைக்கதையில் ஐம்ப‌து சதவிகிதம் கூட இதில் இருக்க வாய்ப்பு இல்லை. DOT.////
.
.
.
.
கண்ணா அது ஸ்பீல்பெர்க் படமல்ல."The ultimate PERFECTIONIST" Stanley Kubrick திரைக்கதை மற்றும் Story board(அதாவது ஓவியங்கள் மூலம் காட்சிகளை விளக்குவது) 70-களிலேயே எழுத தொடங்கினார்.பிறகு பல தடங்கல்களால் (குறிப்பாக அப்போது இந்தளவு CG வசதியில்லை என அவர் உணர்ந்தது .மேலும் ஒரு ரோபோ சிறுவனை திரையில் காட்ட இன்னும் விக்ஞானம் வேண்டும் என கருதினார்.பின்னர் அவர் நெப்போலியன் பற்றி படமெடுக்க பல ஆயிரம் (ஆம் ஆயிரங்கள்தான் !!! . Perfectionist என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் தமிழ் இயக்குனர்கள் கவனிக்க!)புத்தகங்கள் ஆவணங்கள் இன்ன பிற ஆராய்சிகளில் ஈடுபட்டுவிட்டதால் இந்த AI படம் நின்றுபோனது.பின்னர் அவரே ஸ்பீல்பர்க்கை கூப்பிட்டு "நீங்கள் இதை எடுங்கள் நான் தயாரிக்கிறேன்" என கூறினார்.பலருக்கும் இது தெரிவதில்லை.ஏதோ ச்பீல்பர்க்தான் அத்தகைய காலத்தால் முன்னோக்கிய கதை எடுத்ததாக நமபினர் மக்கள்(உபயம் "அறியாமை".பல பேருக்கு Stanley Kubrick என்ற அதிமேதையை தெரியாது என்பது மிக சோகம்)
அவரை போன்ற ஒரு இயக்குனர் இந்த உலகில் இல்லை என நான் அறுதியிட்டு கூறுவேன்.(பார்க்க Stanley Kubrick:A life in pictures குறும்படம்.)
Anonymous said…
நச் விமரிசனம் DOT

நானும் ரஜினி ரசிகன் இல்லை. ஆனால் அவரை மிகவும் ரசித்தேன். தளபதிக்குப் பின் தன்னை முழுமையாக ஒரு இயக்குனரிடம் ஒப்படைத்து அவரது வேலையை மிகச் சிறப்பாக செய்துள்ளார். DOT
Mohan said…
உங்கள் விமர்சனம் சூப்பர்ப். ரஜினி நடித்ததில் படையப்பா படத்திற்குப் பிறகு இந்தப்படம்தான் எனக்கு பிடித்திருந்தது!
Bas said…
ps 2 மற்றும் ps 5'கள் அருமை!!
Anonymous said…
எந்திரன் – தமிழ் சினிமாவின் சாபம். http://post.ly/11QwC
Anonymous said…
An usual venom on rahman. Nothing much is expected from a jeyamohan deciple!!!
really a good critics...enjoyed a lot reading every line.
Unknown said…
தல நான் படிச்சதிலேய அருமையான விமர்சனம்
பட்டய கெளப்பிட்டிங்க போங்க...
Anonymous said…
I have asked a question here in this forum of the blog of Ravi.

http://ravidreams.net/forum/topic.php?id=104

Nobody replied me yet. you are a software engineer. so, u might help me. Please read my question in the above link and reply me here if you know the solution.
Anonymous said…
I have asked a question here in this forum of the blog of Ravi.

http://ravidreams.net/forum/topic.php?id=104

Nobody replied me yet. you are a software engineer. so, u might help me. Please read my question in the above link and reply me here if you know the solution.
Anonymous said…
http://twitter.com/luckykrishna/status/26448020313

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்