காமம் காமம் காமம்

ஒன்றுக்கும் / இன்னொன்றுக்கும் / என்ன வித்தியாசம்
இல்லறத்தில் / நிகழும் காலம் / நிகழும் இடம்
பரத்தைமையில் / நிகழ்த்தும் மனம் / நிகழ்த்தும் உடல்‌


வெளியாகியிருக்கும் என் 'பரத்தை கூற்று' தொகுப்பின் முளைவிடாத ஆதிவிதை ஒரு வேளை மகுடேசுவரனின் இந்தக்கவிதைக்குள் ஒளிந்திருக்கலாம் என‌ பிற்காலத்தில் என் எழுத்துக்களை ஆராய நேரும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் யாரேனும் கண்டுபிடிக்கக் கூடும். ஆம் - எனது தொகுப்பை ஒன்பதே வரிகளில் சொல்லும் நுட்பமான கவிதை இது.

வருடங்கள் முன்பு எழுத்தாளர் சுஜாதாவிடம் மகுடேசுவரன் தனது 'காமக்கடும்புனல்' தொகுப்பைப் பற்றிப் பேசிய‌ போது அவர் சொன்னது : "உனக்கு இருக்கிறது மகா எதிர்ப்பு". சுவாரசிய முரண் என்னவென்றால், மாதங்கள் முன்பு மகுடேசுவரன் அவர்களிடம் என் தொகுப்பை பற்றிப் பேசிய போது அவர் எனக்குச் சொன்னதன் சாரமும் அதே தான்.

தொகுப்பின் உருவாக்கத்தில் அது மிக முக்கியமானதொரு திருப்புமுனை.

பின் இரு மாத காலம் உழைத்து மீண்டும் திருத்திச் செப்பனிட்டேன். இவ்வருடம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை '_final.doc' என்ற பெயருடன் குறைந்தபட்சம் பத்து முறையாவது கவிதைகளடங்கிய கோப்பை அனுப்பியிருப்பேன் - இந்த எல்லா நிகழ்வுகளிலும் என் பதிப்பாளர் பொன்.வாசுதேவன் மிகுந்த பொறுமையுடன் எனக்கு ஆதரவாக‌ இருந்தார்.

கோடை வெயில் காய்ச்சிய ஒரு சனிக்கிழமையில் இந்தோனேஷிய‌ சுனாமிக்கு எஞ்சியிருந்த சரித்திரம் தோய்ந்த மகாபலிபுரம் சிற்பங்களின் நிழலில் சாய்ந்தமர்ந்து கடற்கரையின் தூரத்து இரைச்சலலைகளின் டாப்ளர் எஃபெக்டில் மிதந்தபடிக்கு தொகுப்பு தொடர்பாய் நானும் வாசுவும் மிக விரிவாய் விவாதித்தோம் (பதிவர் ச‌.முத்துவேலும் உடன் இருந்தார்). இருவருக்குமே புத்தகம் பற்றிய தெளிவை நல்கியது அச்சந்திப்பு.

பொதுவாய்க் காமத்தை, குறிப்பாய் பரத்தைமை பற்றி தமிழில் எழுதப்படுவது இது முதல் முறை அன்று. சங்க காலம் முதல் எங்க காலம் முடிய‌ நிறைய இல்லையென்றாலும் சொல்லிக் கொள்ளும் அளவில் காமத்தை பலர் எழுதியிருக்கிறார்கள் (சாணிக்காகித சரோஜா தேவி, அதன் மின்வடிவ மஜா மல்லிகா போன்றவை இதில் சேர்த்தியில்லை).

சங்க இலக்கியங்களின் அகத்திணைப் பாடல்களில் - முக்கியமாய் எட்டுதொகையுள் அகநானூறு, குறுந்தொகை - வேசியாகிய‌ பரத்தை சொல்வதாய் அமைந்த பாடல்களே பரத்தை கூற்று என அழைக்கப்படுகின்றன‌ (ஔவையார் கூட குறுந்தொகையில் பரத்தை கூற்றாய் "கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி" என்றொரு பாடல் எழுதியிருக்கிறார்).

சிலப்பதிகாரத்திலும் பரத்தையான மாதவியை பிரதானப் பாத்திரங்களுள் ஒன்றாகவே சித்தரித்திருப்பார் இளங்கோஅடிகள் ("பரத்தை மாதவியின் நல்லியல்புகள் தானே மணிமேகலையிடம் குடிகொண்டன" - ஜி.நாகராஜன்). பின் 20ம் நூற்றாண்டின் நவீனத்தமிழ் இலக்கியத்தில் தான் பரத்தை பற்றிய பதிவுகள் மீண்டும் முகிழ்க்கின்றன.

புதுமைப்பித்தனின் 'பொன்னகரம்' சிறுகதையை இதன் தொடக்கப்புள்ளியாகக் கொள்ளலாம். சிறிய விபத்தின் நீட்சியாய் வீட்டில் படுத்திருக்கும் புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கவென‌ முக்கால் ரூபாய் சம்பாதிக்க தன் உடலை விற்கும் அம்மாளுவின் பாத்திரம் மற்றும் இறுதி வரிகளான‌ "என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே! இதுதான் ஐயா, பொன்னகரம்!" மறக்க முடியாதவை. சிறுகதைநுட்பம் அதில் சரியாய்க் கைகூடியிருக்கவில்லை என்றாலும் அது சுண்டியெழுப்பும் உணர்ச்சி முக்கியமானது.

அடுத்து ஜி.நாகராஜனின் ஆக்கங்கள் மிக முக்கியமானவை - அதிலும் விஷேசம் 'குறத்தி முடுக்கு' நாவல். பின் தஞ்சை பிரகாஷும், சாரு நிவாதிதாவும் குறிப்பிடத்தகுந்த சிலவற்றை எழுதியிருக்கிறார்கள். ஜனரஞ்சக எழுத்து என்றாலும் புஷ்பா தங்கதுரையின் 'சிவப்பு ரோஜா கதைகள்' மற்றும் 'சிவப்பு விளக்கு எரிகிறது' இரண்டும் நல்ல பதிவுகள். 'நளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை' நூலும் முக்கிய ஆவணம்.

கவிதைகள் என்று பார்த்தால், எனக்குத் தெரிந்து 70களில் தமிழ்நாடன் எழுதிய 'காமரூபம்' தான் இத்தளத்தில் நிகழ்த்தப்பட்ட முதல் முயற்சி. தொடர்ந்து 80களில் கலாப்ரியா அங்கொன்றும் இங்கொன்றுமாய் மேலோட்டமாய் காமம் தொட்டு சில கவிதைகள் எழுதியிருக்கிறார்.  அதற்கு பின் 2004ல் வெளிவந்த‌ மகுடேசுவரன் எழுதிய நானூறு கவிதைகள் அடங்கிய 'காமக்கடும்புனல்' தொகுப்பு தான் இதுகாறும் வெளிவந்திருக்கும் இவ்வகை படைப்புக்களுள் - என்னுடையது உட்பட - நிகழ்ந்த இலக்கிய உச்சம் என்பேன். தொடர்ந்து 2005ல் விக்ரமாதித்யன் எழுதிய 'தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப் பிசாசுகள்', 2006ல் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய 'மன்மத எந்திரம்', 2008ல் வா.மு. கோமு எழுதிய 'சொல்லக்கூசும் கவிதைகள்' எனத் தொடர்ந்து நிறைய எழுதப்பட்டன.

தற்போது இந்த 2010ல் எனது 'பரத்தை கூற்று'.

*******

"அழகாய்  இல்லாததால் / அவள் எனக்கு / தங்கையாகி விட்டாள்" என்ற கலாப்ரியாவின் வரிகளில் தெறிக்கும் காமத்தை விடவா எழுதிவிடப்போகிறேன்? சாத்தியமேயில்லை!

Comments

வாசித்துக் கொண்டிருக்கிறேன் நண்பா.. வித்தியாசமான, நல்லதொரு முயற்சி.. விரைவில் எனது வலைப்பக்கத்தில் புத்தகம் பற்றி எழுத முயலுகிறேன்..:-))
@கார்த்திகைப்பாண்டியன்
நன்றி, நண்ப‌..
//அழகாய் இல்லாததால் / அவள் எனக்கு / தங்கையாகி விட்டாள்" //
காதலிக்காக பாடுவது காதல் கீதம்
தங்கைக்காக பாடுவது பாச கீதம்
காதலியே தங்கையாகும் போது எந்த கீதம்?
என்று எனது பத்தாம் வகுப்பில் நண்பன் பரிமளக்கண்ணன் எழுதிய கவிதையை ஞாபகப் படுத்திய வரிகள்.
madhan said…
//அழகாய் இல்லாததால் / அவள் எனக்கு / தங்கையாகி விட்டாள்" //

எப்பொழுதோ கேட்ட (எதிர்) கவிதை " அழகாய் இருந்தால் உன் தங்கை உனக்கு என்ன ஆவல்?

----
சு.மதன்குமார்

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்