கண்டேன் பரத்தையை

இன்றைய வைகறையில் தான் கைக்குக் கிடைத்தது - என் 'பரத்தை கூற்று' புத்தகம்.

மனிதனுக்கு "ஆள் பாதி, ஆடை பாதி" என்பதைப் போல், புத்த‌கத்துக்கும் "உள்ளடக்கம் பாதி, உருவாக்கம் பாதி" என்று சொல்லலாம். தூரத்திலிருந்து பார்ப்பவனை அருகே வர வைப்பதும், பக்கத்திலிருந்து பார்ப்பவனை கையிலெடுக்கச் செய்வதும், எடுத்துப் பார்ப்பவனை வாங்கத் தூண்டுவதுவும் ஒரு புத்தகத்தின் ‌உருவாக்க நேர்த்தியேயன்றி வேறில்லை. அந்த அளவுக்கு புத்தகத்தின் தயாரிப்பு அழகியலை மிக நம்புபவன் நான்.

என் முதல் புத்தகத்துக்கு அது மிகச்சிறப்பாக அமைந்தது (கிழக்கு பதிப்பகம் - கேட்கவும் வேண்டுமா?). இப்போது இரண்டாவதும் அப்படியே என்பதில் மிக மகிழ்ச்சி. புத்தகத்தைக் கண்டவுடன் வாசுதேவனுக்கு தட்டிய எஸ்எம்எஸ் : "The making of the book really rocks!".

புத்த‌க ஆக்கத்தின் போது, "வாசு, இதுவரை உங்கள் பதிப்பகத்திலிருந்து வெளி வந்த புத்தகங்களிலேயே மிக அதிக நேர்த்தியுடன் இருப்பது நர்சிம்மின் 'அய்யனார் கம்மா' தான். எனது புத்தகமும் அதே தரத்தில் உருவாக வேண்டும்" என அவ‌ரே சலித்துப் போகுமளவு திரும்ப‌த் திரும்பப் பல முறை கூறியிருக்கிறேன். இப்போது நானே அதை மாற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறது - "வாசு, இது வரை உங்கள் பதிப்பகத்திலிருந்து வந்த புத்தகங்களிலேயே மிக அதிக நேர்த்தியுடன் இருப்பது அடியேனின் 'பரத்தை கூற்று' தான்".

சற்றே கவனக்குறைவுடன் எனது 'பரத்தை கூற்று' புத்தகத்தைப் கண்பார்த்தாலோ, கையெடுத்தாலோ காலச்சுவடு அல்ல‌து உயிர்மை பதிப்பத்திலிருந்து வெளிவந்திருக்கும் ஏதோவொரு புத்த‌கம் என்றே நினைக்கத்தோன்றும். அட்டைப்படம் முதல் பக்கத்தரம் வரை அவ்வளவு தயாரிப்பு நேர்த்தியுடன் புத்தகத்தை என்வரையில் மிகத்திருப்திகரமாக உருவாக்கியிருக்கிறார்கள் அகநாழிகை பதிப்பகம் மற்றும் லோகா ஆப்செட் குழுவினர்.

*******

நேற்றைய சனிக்கிழமையில் மதுரைக்குச் செல்லலாம் என்ற திட்டத்தை சில சொந்த வேலைகளால் கைவிட்டேன். அடுத்த வார இறுதியிலும் போகச் சாத்தியமா எனத் தெரியவில்லை. பார்க்கலாம். நான் இல்லாவிட்டால் என்ன? எனது‌ 'பரத்தை கூற்று' மதுரை த‌முக்கம் மைதானப் புத்தக்காட்சியின் உயிர்மை அரங்கில் கிடைக்கிறது. நண்பர்களான வாசகர்கள், வாசகர்களான நண்பர்கள் எல்லோரும் படித்துக் கதைக்கவும்.

புத்தக வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தத் திட்டம். அறிவிப்பு விரைவில்!

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்