எந்திரன் இசை - ஒரு பார்வை

'எந்திரன்' இசை பற்றி எழுதவில்லையெனில் 'பெருசுகள்' லிஸ்டில் சேர்த்து விடுகிறார்கள்‌ என்ற சுரேஷ்கண்ணன் எச்சரிக்கையை முன்னிட்டு இவ்விடுகை!

*******


1. புதிய மனிதா:

ரஹ்மான், எஸ்பிபி, வைரமுத்து சேர்ந்து ராஜ்ஜியம் ஆள்கிறார்கள் இப்பாடலில். வழக்கமான ரஜினி இஸ்ட்ரொடக்ஷன் ப்ளேஸ் ஹோல்டர் என்றாலும் இது கொஞ்சம் வித்தியாசமானது தான். "புதிய மனிதா பூமிக்கு வா" என்று ரஹ்மான் குரலில் வருவதில் 'வா'விற்குப் பின் உடனடியாய் வரும் இசை Lakshya படத்தில் வரும் "Main Aisa Kyun Hoon" பாடலில் (ஹிரித்திக் ரோஷன் வளைந்து நெளிந்து ஆடுவாரே, அதே பாடல் தான். இப்பாட்டிற்கு நடனம் அமைத்ததற்காக பிரபுதேவாவிற்கு தேசிய விருது கிடைத்தது. இசை : ஷங்கர் - ஈஷான் - லாய்) இடையில் வரும் ஓர் இசைத்துணுக்கை நினைவு படுத்துகிறது. கதீஜாவின் (ரஹ்மான் மகள்!) குரலில் வரும் "மாற்றம் கொண்டு வா" ஓர் அழகான கச்சித காலர் ட்யூன். மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். Magical!

ஆல்பத்தின் மிகச்சிறந்த‌ பாடல் இது தான், சந்தேகமேயின்றி.


2. காதல் அணுக்கள்:

இளையராஜாவின் எளிமையுடன் தொடங்கி, ஹாரிஸ் ஜெயராஜின் அலங்காரத்துடன் வ‌ளர்ந்து கடைசியில் டிபிகல் ரஹ்மான் ரொமான்டிக் ம்யூசிக்கலாக முடியும் பாடல். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு போட்ட ட்யூன்களில் ஒன்று மீதமாகி இங்கே சேர்த்தி விட்டாரோ என்று வலுவான‌ சந்தேகத்திற்கு இடங்கொடுக்கிறது இதன் ஆக்கம். இதன் விஷுவலில் ரஜினியை யோசித்துப் பார்க்கவே சிரமமாயிருக்கிறது. முப்பது வருடப் புழக்கத்தில் புளித்து விட்டன‌ வைரமுத்துவின் காதல் சிந்தும் ராஜ வரிகள்.

ரஹ்மானின் வழக்கமான பாடல் - ஓக்கே என மதிப்பிடலாம்.


3. இரும்பிலே ஒரு (ஓர்?) இதயம்:

மதன் கார்க்கியை ஒரு பாடலாசிரியராய்க் கைதட்டி வரவேற்கத் தூண்டுகிற மாதிரியான‌ நிறைய 'அட!' போட வைக்கும் வ‌ரிகளைக் கொண்ட பாடல் (ஐந்து உதாரணங்கள்: "பூஜ்ஜியம் ஒன்றோடு பூவாசம் இன்றோடு கூகுல்கள் காணாத தேடல்கள் உன்னோடு", "என் இஞ்சின் நெஞ்சோடு உன் நெஞ்சை அணைப்பேன் நீ தூங்கும் நேரத்தில் நான் என்னை அணைப்பேன்", "மெமரியில் குமரியை தனிச்சிறை பிடித்தேன் ஷட்டௌனே செய்யாமல் இரவினில் துடித்தேன்", "எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா? ரத்தம் இல்லாக் காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா?", "உயிரியல் மொழிகளில் எந்திரன் தானடி உளவியல் மொழிகளில் இந்திரன் தானடி"). இப்பாட‌லில் ரஹ்மான் யுவன் ஷங்கர் ராஜா போல் பாட முயற்சித்திருக்கிறாற் போல் தெரிகிறது (குறிப்பாய் "ஐரோபோ உன் காதில் ஐ லவ் யூ சொல்லட்டா" போன்ற வரிகளில்). இந்த KASH-n-KRISSY பெண்டிரின் (தமிழ்ச்செம்மொழி மாநாட்டுப்பாடலில் "கவியரசி அவ்வை நல்லாளும்" என்று பாடுவாரே ஓர் ஒல்லிப்பிச்சான் யுவதி) குரல் வசீகரம் வேறு Seducing!

இந்த‌ எந்திரன் ஆல்பத்தின் இரண்டாவது மிகச்சிறந்த பாடல்.


4. ச்சிட்டி டேன்ஸ் ஷோகேஸ்:

"பூம் பூம் ரோபோடா" என்று தொட‌ங்கி கலவையாய் நிறைய பழைய பாடல்களின் இசையை நினைவுபடுக்கிறது. அவற்றில் சில நன்றாகவும் அமைந்திருக்கின்றன.

மேலே சொல்லிக் கொள்ளும் படி ஒன்றும் இல்லை என்கிறேன்.


5. அரிமா அரிமா:

சுமார் (எல்லோரும் இதைத் தான் ஆல்பத்தின் சிறந்த பாடல் என்கிறார்கள்!).


6. கிளிமாஞ்சரோ:

நன்று. பா.விஜ‌யின் பல்லவி மற்றும் அனுபல்லவியில் நல்ல சந்தநயம். சின்மயி வழக்கம் போல் Sexy. இம்முறை கொஞ்சம் Tribal ஸ்டைலில் - பற்றிக் கொள்கிறது.


7. பூம் பூம் ரோபோடா:

சிவாஜியின் "ஒரு கூடை சன்லைட்" பாடலின் தொடக்கம் போலவே அதே இசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடல், பின் யோகிபி குரலில் வரும் "பூம் பூம் ரோபோடா ஸூம் ஸூம் ரோபோடா" என்று வரும் இடங்களில் ஈர்க்கிறது. தொடர்ந்து வரும் இசையும் டெல்லி-6, காதலன் என்று ரஹ்மானின் சில முந்தைய வஸ்துக்களை நினைவுபடுத்தி மறைகிறது. பின் வரும் இசையும் "பூம் பூம்" பாடலை (இது வேறு "பூம் பூம்" - பாய்ஸ்-ல் வருவது) ஞாபகப்படுத்தி விரைகிறது. ஸ்வேதா மோகனின் குரல் அளவுக்கு மீறி குழைந்தாலும் ரசிக்க முடிகிறது (காட்டாக "சிட்டி சிட்டி ரோபோ நீ சுட்டி சுட்டி ரோபோ பட்டி தொட்டி எல்லாம் நீ பட்டுக் குட்டியோ"). வரிகள் மட்டும் பார்த்துப் பார்த்துச் சேர்த்துக் குழைத்த‌ ஹைடெக் குப்பை ("ஐசக் அஸிமோவின் வேலையோ ரோபோ ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ". இதில் முதலில் வரும் அஸிமோவ் ரோபோவை வைத்து எழுதியிருக்கிறார் - புரிகிறது; கடைசியில் வரும் ஐன்ஸ்டீன் அளவுக்கு புத்திசாலித்தனத்துடன் ரோபோ இருக்கலாம் - புரிகிறது; இடையில் வரும் நியூட்டனின் லீலை - புரியவில்லை. ரோபோவுக்கும் நியூட்டனும் என்ன தொடர்பு?)

சுமாருக்கு மேல், நன்று என்பதற்கு கீழ் வைக்கலாம்.

*******

மற்றபடிக்கு ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல், சாதனா சர்கம் ஆகியோர் எடுபடவில்லை. ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கும் போது இரண்டு மிக நல்ல பாடல்கள் கொண்ட ஒரு Above Average OKish ஆல்பம் என்று இதைச் சொல்லலாம். ஒரே ஆறுதல் இராவணன் படத்தின் பாடல்களை விட நன்றாயிருக்கிறது என்பது தான். ஆனால் தமிழின் முதல் proper sci-fi படம், 200 கோடி ரூபாய் பிரம்மாண்ட‌ பட்ஜெட், ஷங்கர் - ரஜினி - ஐஸ்வர்யா ராய் ‌என்ற மெகா கூட்டணி போன்ற பில்டப்புகளையெல்லாம் சேர்த்து யோசித்துப் பார்த்தால்...

ரஹ்மான் இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

*******

பின்குறிப்புகள்:
  1. இ(ம்)சை, இ(ச்)சை என்று இரு வேறு கருத்துக்கள் இப்பாடல்கள் பற்றி வந்து விட்டிருந்தாலும் இரண்டுமே பாதி சரி தான். இ(ச்)சை என்பதே இ(ம்)சை தானே!
  2. எந்த mp3 player அல்லது mp3 enabled mobile phone வாங்கினாலும் இளைய‌ராஜாவின் பாடல்களைத் தாம் முதலில் கேட்பது என்று வைத்திருந்த‌ செண்டிமெண்ட்டை உடைத்து என் தோழி ஜெர்மனியிலிருந்து எனக்காக வாங்கி வந்திருந்த iPod Nanoவில் முதன் முதலில் கேட்டது எந்திரன் இசை தான். குறையொன்றுமில்லை.
  3. "ரஹ்மானுக்கு நிறைய ரஹ்மான் ரசிகர்கள்; ஆனால் பாவம் ராஜாவுக்கு இசை ரசிகர்கள் மட்டும் தான்" என்று ஏழரை என்பவர் சமீபத்தில் ட்வீட் செய்திருந்தார். பாடல்கள் 100% பரிபூரண வெற்றி தான் என்று சொல்ல வருகிறேன்.‌ Rahman Rules!

Comments

எனக்கும் புதிய மனிதாதான் ஃபேவரிட்

பூம் பூம் ரோபாடாவுக்கு பின் வரும் இசை எனக்கும் தில்லி6ல் வரும் khanda ke phoolஐ நினைவுப்படுத்தியது. ஆனால் மீண்டும் கேட்ட பின் அது வேறு என்பதால் என் பதிவில் அதை எழுதவில்லை.


2 பாடல் தேறுகிறது என்பதை விட ஆல்பமே நமக்கு சற்று புதிதாக இல்லையா. பாடலின் வடிவத்தில், வார்த்தைகளில்.. அந்த வகையில் எனக்கு முழு திருப்தி
viki said…
கதீஜாவின் (ரஹ்மான் மகள்!) குரலில் வரும் "மாற்றம் கொண்டு வா" ஓர் அழகான கச்சித காலர் ட்யூன். மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். Magical!////
.
.
.
Nepotism ஐ மிகவும் பிரபலமாக்கிய விடாப்பிடியாக அதிகமாக பின்பற்றி கொண்டிருக்கும் நாடு எதுவென கேட்டால் சந்தேகமிலாமல் இந்தியா என கூறலாம்(குறிப்பாக தமிழ் நாடு!).வாரிசுகளை மக்கள் தலையில் வலுகட்டாயமாக "கட்டும்" இந்த போக்கை ரகுமானும் பின்பற்றியிருப்பது வெறுப்பையும் வேதனையையும் அளிக்கிறது.(இவருக்கு முன்னோடிகள் பலர்!!!கமல்,இளையராஜா,தேவா,டி ஆர்.etc etc ,அப்புறம் அரசியலில் ஒரு பெயர்..சொன்னால் சவுக்கு சங்கருக்கு நேர்ந்த கதி எனக்கும் நேரலாம்!!!.ஆதலால் அதை வியூகத்திற்கு விடுகிறேன்!!) ;)
.
அப்புறம் நேற்று முளைத்த காளான் பெயரையெல்லாம் கூறிவிட்டு இந்த வயதிலும் இளமை துடிப்போடு இந்த பாடலை பாடியிருக்கும் The ultimate voice எஸ் பி பி பற்றி கூறாமல் விட்ட உம்மை கும்பீபாகம்தான் செய்ய வேண்டும்..argghhh

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்