தமிழ் கௌபாய்

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்.

எனக்குத் தெரிந்தவரை, கடந்த 25 ஆண்டுகளில் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் கௌபாய் படம் இது தான் (கடைசிப் படம் என்ன? - ரஜினி நடித்த தேவரின் தாய் மீது சத்தியம்?). இது போன்ற மாற்றுக்களங்களில் தான் ராஜாதி ராஜா என்பதை இரண்டாவது முறையாக நிரூபித்திருக்கிறார் சிம்புத்தேவன். டைட்டில் கார்ட் தொடங்கி படம் முழுக்க முழுக்க இஞ்ச் பை இஞ்ச்சாக அவரது அதிரடி அடாவடி அட்டகாச ராஜ்யம் தான்.


நடிப்பில் ஜொலிப்பவர்கள் நாசரும், எம்.எஸ்.பாஸ்கரும். அப்புறம் அந்த மூன்று அழகான நாயகிகள் (பத்மப்ரியா, லக்ஷ்மி ராய், சந்தியா). அதற்கு அடுத்துத் தான் லாரன்ஸைச் சொல்ல வேண்டும். தவிர‌ மனோரமா, ராகவன் தொடங்கி மௌலி, இளவரசு வரையிலான‌ நட்சத்திரங்கள் எல்லோரைப் பற்றியும் தனித்தனியே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன்.

ஒளிப்பதிவும் (அழகப்பன்), கலை இயக்கமும் (முத்துராஜ்) தான் இந்த பீரியட் படத்தின் தொழில்நுட்ப முதுகெலும்பு. திரைக்கதையும் ஓக்கே. பொதுவாய்ப் பின்னணி இசையில் மிளிரும் சபேஷ்-முரளி (இரும்புக்) கோட்டை விட்டிருக்கிறார்கள்.‌ பாடல்கள் பற்றியும் ஒன்றும் சொல்வதற்கில்லை. தேசிய விருது பெற்ற பருத்தி வீரன் எடிட்டர் (ராஜா முகமது) என்கிறார்கள். எனக்கொன்றும் பெரிதாய் வித்தியாசம் தெரியவில்லை.

சிறுசிறு அழகான காட்சிகள், ரசனைக்குரிய வசனங்கள் என க்ளைமேக்ஸ் தவிர படம் முழுக்க சுவாரசியமாகவே போகிறது. மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது சமகால அரசியல், சினிமா ஆளுமைகளை சம்பவங்களை ஸ்ஃபூஃப் செய்து வாரியிருப்பதில் வெளிப்படும் அங்கதச்சுவை. இதை தன் முந்தைய இரண்டு படங்களில் கூட மிகத் திறமையாகக் கையாண்டிருந்தார் சிம்புத்தேவன்.

மனைவி, மச்சினி, மக்கள் கொண்ட உங்கள் சிறுகுடும்பப் பல்கலைக்கழகத்துட‌ன் ஒரு பொன்மாலைப்பொழுதில் நல்ல திரையரங்கொன்றில் பாப்கார்ன் கொறித்துக் கொண்டே தாராளமாய் இப்படத்தைப் பார்க்கலாம். தொப்பி, துப்பாக்கி, குதிரை என்று வாழும் இந்த தமிழ் கௌபாயை உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

Comments

வலைஞன் said…
>நான் வழிமொழிகிறேன்.
>ஆபாசம் சிறிதும் இல்லாத சினிமா
(கதையில் இதற்கு SCOPE நிறைய இருந்தும் கூட)
>HATS OFF TO SIMBU THEVAN.
>SETTINGS மற்றும் COSTUMES EXCELLENT.
>ச்சாம் மின் அபார நடிப்பை பற்றியும் சொல்லியிருக்கலாம்.(msbaskar assistant ஆக வருபவர்)
>>இதையும் குறை சொன்னால் நமக்கு TR மற்றும் விஜய் இடம் இருந்து விமோசனம் கிடையாது.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்