ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமேனும் அறிவீரோ?

தலைப்பிலிருப்பது (புதிய) ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் "தாய் தின்ற மண்ணே" பாடலில் சோழராஜனிடம் (பார்த்திபன்), பாண்டிய வாரிசு (ரீமா சென்) அவனது தமிழறிவைக் கேலி செய்யும் பொருட்டு கேட்பதாய் வரும். ஈறு கெட்ட எதிர்ம‌றைப் பெயரெச்சம் பற்றி அப்பொழுதே எழுத நினைத்து டிராஃப்ட் செய்து வைத்தது, கூறு கெட்ட ஞாபக மறதியால் இவ்வளவு கால(ம்) தாமதமாகி விட்டது:

*******

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்பது அடிப்படையில் ஓர் எதிர்மறை வினைச்சொல் அதாவது negative verb. உதாரணத்துக்கு 'செல்லாக் காசு' என்பதில் 'செல்லா' என்பது ஈ.கெ.எ.பெ. இதைப் புரிந்து கொள்வதற்கு முன் எச்சவினை, பெயரெச்சம் போன்ற வஸ்துக்கள் என்னவென்று புரிந்து கொள்ள முயல்வோம்.

ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் ('செல்லுதல்' என்பது வினைச்சொல்). எச்சவினை என்பது ஒரு வினைச்சொல் முடியாது எச்சமாய் நிற்பது ('செல்லும்' என்பது 'செல்லுதல்' என்ற‌ வினைச்சொல்லின் எச்சவினை. அதுவே 'செல்லாத' என்பது இதன் எதிர்மறை எச்சவினை). அந்த‌ எச்சவினை பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் ('செல்லும்‌ காசு' என்பதில் 'செல்லும்' என்பது 'காசு' என்ற பெயரைக் கொண்டு முடிவதால் பெயரெச்சம்). இது எதிர்மறையாகவும் இருக்கக் கூடும் - அது எதிர்மறைப் பெயரெச்சம் ('செல்லாத காசு' என்பதில் 'செல்லாத' என்பது எதிர்மறை பெயரெச்சம்). இச்சொற்கள் சேரும் போது ஈற்றிலிருக்கும் எழுத்தை இழந்தால் அது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ('செல்லாத காசு' என்பதில் ஈற்றிலிருக்கும் 'த' கெட்டு 'செல்லாக்காசு' என்று மாறுவது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம். இதில் புதிதாய் முளைத்திருக்கும் 'க்' ஐப் புரிந்து கொள்ள‌‌ வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய அறிதல் வேண்டும். அதைப் பிறிதொரு சமயம் பார்க்கலாம்).

செல்லுதல் - வினைச்சொல்
செல்லும்‌‌ - எச்சவினை
செல்லாத‌ - எதிர்மறை எச்சவினை
செல்லும்‌ காசு - இதில் 'செல்லும்' என்பது பெயரெச்சம்
செல்லாத காசு - இதில் 'செல்லாத' என்பது எதிர்மறை பெயரெச்சம்
செல்லாக் காசு - இதில் 'செல்லா' என்பது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

Comments

புவனேஷ் said…
எச்சவினை என்பது புதிதாய் இருக்கிறது. வினையெச்சம் என்றே அழைக்கக் கேட்டு பழக்கம்.
@புவனேஷ்

வினையெச்சம், எச்சவினை இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

வினையெச்சம் என்பது எச்சவினையின் ஒரு வகை (பெயரெச்சம் அதன் இன்னொரு வகை). அதாவது எல்லா வினையெச்சங்களும் அடிப்படையில் எச்சவினைகள் தான் (அதே போல் எல்லாப் பெயரெச்ச‌ங்களும் கூட அடிப்படையில் எச்சவினைகளே).

உதாரணம்:
கடித்தல் - வினைச்சொல்
கடிக்கும், கடித்து - எச்சவினை
கடிக்கும் பாம்பு - இதில் 'கடிக்கும்' என்பது பெயரெச்சம்
கடித்துத் தின்றான் - இதில் 'கடித்து' என்பது வினையெச்சம்


புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
mokkarasu said…
எத்தனை அழகானது தமிழ் இலக்கணம்!!!! மிகவும் அருமையான பதிப்பு. ஆயிரம் நன்றிகள்.

தமிழில் நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கிட, அதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் ஒரு அடிமட்ட வாசகன் நான்.

பள்ளி நாட்களில் படித்த தமிழ் இலக்கணத்தை எனது ஞாபக அறைகளில் இருந்து தூசு தட்டி வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். ஒற்றெழுத்து மிகும், மிகா இடங்களைப் பற்றியும் நிறைய சந்தேகங்கள் இருகின்றன.

இவற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளும் முன் எதையும் எழுதுவது இல்லை என்ற தீர்மானத்தில் இருக்கிறேன்.

தங்களின் இந்த பதிப்பு எனது சில சந்தேகங்களை தெளிவாக்கியது. மறுபடியும் எனது நன்றிகள்.
Unknown said…
எனது சந்தேகத்தை எழிமையாக புரிந்து கொள்ள உதவியது உங்கள் பதில்
Unknown said…
தங்களின் இந்த பதிப்பு எனது சில சந்தேகங்களை தெளிவாக்கியது

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்