புத்தகம் / பத்திரிக்கை / சுற்றறிக்கை

பரிசல் கிருஷ்ணாவின் "டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்" புத்த‌கத்துக்கு செல்வேந்திரன் எழுதிய விமர்சனப்பதிவும், அது தொடர்பாய் எனக்கும் அவருக்கும் இடையே பின்னூட்டங்களிலும், தனிப்பதிவாகவும் நடந்த விவாதத்தின் தொகுப்பு இது:

###############

செல்வேந்திரனின் விமர்சனம்:

எந்தவொரு புத்தகத்தையும் முன் தீர்மானங்கள் இன்றி வாசக பரிவோடு அணுகுவது என் வழக்கம். அப்படித்தான் ஆசை ஆசையாகக் காத்திருந்து ‘டைரிக்குறிப்பும், காதல் மறுப்பும்’ தொகுதியையும் வாசித்தேன்.

தொகுப்பிலுள்ள 17 கதைகளுள் பெரும்பாலானவை கதாசிரியனே கதையினை விவரிக்கும் பாணியிலானவை. அதிலும் அனுபவக் குறிப்புகளே அதிகம். உரையாடல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உரைநடையே நூலாசிரியரின் பலமாகவும் பலவீனமாகவும் இருக்கிறது.

பரிசல்காரன் பெரும்பாலும் வெகுஜன தன்மையோடு இயங்குகிற எழுத்துக்காரர் என்பதால் உத்தி, நடை, கலையம்சம் போன்ற கறாரான அளவுகோல்களை விடுத்து வெகுஜனக் கதைகளுக்குறிய வரையறைகளுக்குள்ளாவது மட்டுப்படுகிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ‘தனிமை - கொலை தற்கொலை’, நான் அவன் இல்லை, ஜெனிஃபர், டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும், நட்சத்திரம் ஆகிய ஐந்து கதைகளைத் தவிர்த்து ஏனைய பன்னிரெண்டு கதைகளும் ‘நாட் ஸோ பிரிண்ட் ஓர்த்தி’ வகையரா. ‘காதல் அழிவதில்லை’ கதையை அதன் தேர்ந்த நகைச்சுவைக்காக மன்னிக்கலாம். ஜெனிஃபர் கதையில் வரும் ‘திருமணவாதி’ என்கிற பதப்பிரயோகம் ருசிகரமானது.

பின்னட்டையில் நூலாசிரியரைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்று இடம் பெற்றிருக்கிறது. அதனை எழுதிய கரங்களுக்குத் தங்க காப்பு. மூன்றே வாக்கியங்களில் எழுத்தாளரின் பெயர் உட்பட ஆறு பிழைகள்.

நூலாசிரியர் பதினெட்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார் என்பது என்னுரையில் தெரிகிறது. கதைகளில் தெரியவில்லை.

***

பல காலமாக இசை கேட்கிறோம். நல்ல இசை வடிவங்களை நம்மால் பகுத்தறிய முடிகிறது. அதற்காக யாராவது ஒரு இயக்குனர் தன் படத்திற்கு இசை அமைக்கச் சொன்னால் ஒத்துக்கொள்வோமா?!

இணையத்தில் அதிகம் இயங்குகிறோம். பல மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம். மைக்ரோசாஃப்டிலிருந்து அழைத்து அடுத்த புரொஜெக்டுக்கு நீங்கதான் ஹெட் என்றால் ஒப்புக்கொள்வோமா?!

சமூக மாற்றம் பற்றி பேசுகிறோம், விவாதிக்கிறோம். பிரதமரே அழைத்து திட்டக்குழுத் தலைவராக நீங்களே இருந்து விடுங்கள் என்றால் உடனே டில்லி கிளம்பி விடுவோமா?!

நிச்சயம் மாட்டோம். மேற்கண்ட பணிகளுக்கு நாம் தகுதியானவர் இல்லை என்கிற உறுதியான சுயமதிப்பீடு. ஆனால், ஒரு பதிப்பகம் புத்தகம் போட அணுகினால் சுயமதிப்பீட்டைக் காற்றில் கரைத்து விட்டு உழைப்பின்மை மிளிரும் வரிகளை எழுதிக் குவித்து விடுகிறோம். பல வருடங்களாக எழுத்தியக்கத்தில் இயங்குகிறவர்களுக்கு தொடர்ச்சியான வாசிப்பின் மூலமும் எழுத்துப்பயிற்சியின் மூலமும் எது நல்ல எழுத்து என்கிற அளவுகோல் உருவாகவில்லை என்றால் அதன் துர்பலன் பதிப்பாளருக்கும் வாசகனுக்குமே போய்ச் சேரும்.

மஞ்சள் துண்டு கிடைத்ததும் மளிகைக்கடை வைக்க நினைத்த சுண்டெலி போல பின்னூட்டங்களின் அளவையும், வியந்தோதலையும் மனதிற்கொண்டு புத்தகம் போட துணிவது அபாயகரமானது. பிரதியின் பயணம் நீண்ட தூரம் கொண்டது. பலரால் பலகாலத்திற்கும் வாசிக்கப்பட்டு பத்திரப்படுத்தப்படுவதுதான் புத்தகத்தின் கவுரவம். பிரபல பதிவர் ஒருவரின் சமீபத்திய நூல் ஒன்றினை பழைய புத்தகக் கடையில் பார்க்க நேர்ந்தது. உள்ளீடற்ற எழுத்துக்களின் கதி இதுதான். தவிர குழுவினருக்காக எழுதப்பட்டு குழுவினர்களால் மட்டுமே வாங்கப்படுகிற சமாச்சாரத்திற்குப் பெயர் புத்தகமல்ல. சுற்றறிக்கை!

###############

எனது பின்னூட்டம்:

நான் இன்னும் பரிசலின் புத்தக‌த்தைப் படிக்கவில்லை. அதனால் அது பற்றி சொல்ல என்னிடம் கருத்து ஏதுமில்லை. நீங்கள் சொல்வது சரியாகவே இருக்கக்கூடும். ஆனால் பதிவுலகில் தொடர்ச்சியாக நான் விரும்பி வாசிக்கும் மிகச்சிலருள் நீங்களும் ஒருவர் என்கிற வகையில் நீங்கள் மேற்கூறிய விஷயங்களில் சில கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன.

//ஒரு பதிப்பகம் புத்தகம் போட அணுகினால் சுயமதிப்பீட்டைக் காற்றில் கரைத்து விட்டு உழைப்பின்மை மிளிரும் வரிகளை எழுதிக் குவித்து விடுகிறோம்//

நீங்கள் சொல்வது மிகச்சரியே. ஆனால் அதனால் தவறென்ன? முழுக்க முழுக்க தரமான படைப்பை மட்டும் தான் பிரசுரிப்பேன்; அது வரைக்கும் வலைப்பூவில் மட்டுமே எழுது எழுதி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பேன் என்று காத்திருந்தால், ஒரு சிலருக்கு எண்பது வயதிலும் புத்தகம் போடுதலோ, பத்திரிக்கையில் எழுதுதலோ சாத்தியமேயில்லை. இன்றைக்கு தமிழில் இருக்கும் ஆகச்சிறந்த எழுத்தாளரான ஜெயமோகனே அதைச் செய்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் குமுதம் விகடன் கல்கி இதழ்களில் வேறு பெயர்களில் ஜனரஞ்சகக் கதைகள் எழுதியதாக அவரே ஒப்புக் கொள்கிறார். அவை நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இருந்திருக்கும் என்று சொல்வதற்கில்லை.

அவ்வளவு ஏன்? நீங்களே அதைத் தானே செய்திருக்கிறீர்கள்? விகடனில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான உங்களுடைய "கற்றதனால் ஆன பயன்..." என்கிற கவிதைக்கும் இலக்கியத்துக்கும் எள்முனையளவேனும் ஸ்நான ப்ராப்தி இருக்குமா? நீங்கள் எழுதிய வேறு நல்ல படைப்புகளுடனே அது ஒப்பிட லாயக்கற்றது. ஆனால் தமிழர்களின் வழக்கமான சிந்தனை ஊனத்தின் காரணமாக அதன் தகுதிக்கு மீறிய புகழை சம்பாதித்தது அக்கவிதை. (கவனியுங்கள்! நான் உங்கள் எழுத்தை எப்போதுமே குறைவாக மதிப்பிடவில்லை. பதிவுலகிலிருந்து தரமான எழுத்தாளனாய்ப் பரிமளித்து உயரும் வாசனையுடைய விரல் விட்டு எண்ணக்கூடிய‌ ஆசாமிகளுள் நீங்களும் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. மேலே நான் பேசியது குறிப்பிட்ட ஒரு படைப்பைப் பற்றி மட்டுமே).

நீங்கள் எந்த அளவுகோலைப் பயன்படுத்தி அதைக் கவிதை எனத் தீர்மானித்து தமிழகத்தின் முதன்மையானதொரு ஜனரஞ்சகப் பத்திரிக்கைக்கு அளித்தீர்களோ, அதே அடிப்படையில் தான் பரிசலும் தன் சிறுகதைகதைகளைப் புத்தகமாக்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது.

நான் சொல்ல வருவது மிக எளிமையானது. பத்தக‌ம் போடுவதெல்லாம் விஷயமே இல்லை. ஆனால் அது நிகழும் போது கிடைக்கும் அங்கீகாரமும், பரவலான கவன ஈர்ப்பும் ஓர் ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு மிக மிக அத்தியாவசியாமான கிரியா ஊக்கி என்றே நினைக்கிறேன். அதே போல் அது நிகழ்வதற்காக அவன் ஏற்றுக்கொள்ளும் வலிகளும், மேற்கொள்ளும் சமரசங்களும் எளிய தர்க்கத்தின் வாயிலாக புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று தான். "அதன் துர்பலன் பதிப்பாளருக்கும் வாசகனுக்குமே போய்ச் சேரும்" என்கிறீர்கள். ஓரளவிற்கு அதற்குக் காரணமே பாதிப்பளரும் வாசகர்களும் தான் என்கிறேன்.

நீங்களே சொல்வது போல் பதினேழில் ஐந்து தேறுகிறது என்றாலே (கிட்டதட்ட முப்பது சதவிகிதம்) அது ஒரு எழுத்தாளனின் கன்னி முயற்சி என்கிற வகையில் வெற்றி தான். சுற்றறிக்கையாகவே இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் இங்கே முக்கியத்துவம் பெற வேண்டியது அது எழுத்தாளனுக்கு அளிக்கும் நம்பிக்கையும், அடுத்த படைப்பை நோக்கி நகர்த்தும் மனோபலமும். இதற்கு நான் பதிவுலகின் புராதன நோயான பின்னூட்ட கும்மிகளை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. தவிர, குறிப்பிட வேண்டிய இன்னொரு ஆதார சங்கதி, பத்தகம் போட விரும்பும் எழுத்தாளனை இங்கே எல்லா பதிப்பாளர்களும் (கிழக்கு தவிர) கேட்கும் முதல் கேள்வி இதற்கு முன்பு என்ன புத்தக‌ம் போட்டிருக்கிறீர்கள் என்பது.

சில நேரங்க‌ளில் நாம் விரும்பாத சிறிய விஷயங்களைச் செய்தால் தான் நாம் விரும்பும் பெரிய விஷயம் சாத்தியமாகும்!

###############

செல்வேந்திரனின் தனிப்பதிவு:

பொதுவாக வலையுலகில் விமர்சன நோக்கிலோ அல்லது விவாதங்களை முன்னெடுத்துச் சொல்லும் வகையிலோ பின்னூட்டங்கள் அதிகம் வருவதில்லை. அரிதாக வரும் மாற்று அபிப்ராயங்களும் நாகரீக மொழியில் பேசுவதுமில்லை. நண்பர் சரவணகார்த்திக்கேயனின் நீண்ட பின்னூட்டத்தினை வரவேற்கிறேன்.

எழுத்தின் தரத்தை அவனவன் தரத்தின்படி வாசகனே தீர்மானிக்கிறான். எழுத்தாளனைக் கொண்டாட அல்லது முற்றிலும் நிராகரிக்கிற உரிமை வாசகனுக்கு எப்போதும் உண்டு. ஆனால் இச்சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் அதன் தரத்திற்காக எந்தமாதிரியான உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்பது கதைகளை வாசித்தாலன்றி உணர முடியாது.

ஜனரஞ்சகக் கதைகளை எழுதுவது ஒன்றும் குற்றமல்ல. ஆனால் அக்கதைகள் அதன் தர்மங்களுக்குள்ளாவது கட்டுப்பட்டு இருக்க வேண்டும். வெற்று உரையாடல்கள் அதன் இறுதியில் ஒரு திடுக் திருப்பம் என போகிற போக்கில் எழுதிச் செல்வது சிறுகதை ஆகா. சிறுகதையில் வாசக பங்கேற்பு ஒரு நியதி. ‘உங்கள் கதைகளை வாசகனுக்குச் சொல்லாதீர்கள். காணப்பண்ணுங்கள்’ என்பார் நீங்கள் குறிப்பிடுகிற ஜெயமோகன். கதைகள் வேறு. அனுபவப் பத்திகள் வேறு. கோணல் பக்கங்களும், கற்றதும் பெற்றதும் ஒருபோதும் கதைகள் என்கிற வகைமைக்குள் வராது.

ஒரு பத்திரிகையில் இடம் பெறுவதனாலேயே ஒரு படைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒருபோதும் ஆகிவிடாது. ஆனால் அப்படி இடம்பெறுகிற படைப்பில் வாசகச் சுவை இல்லையென்றால் அதற்கு அப்பத்திரிகையின் படைப்புகளைத் தேர்வு செய்யும் பொறுப்பாளரும் முக்கிய காரணம். ஆனால், அக்கதைகளைப் பற்றிய சுயமதிப்பீடு அதை எழுதியவனுக்கு எப்போதும் இருந்தாக வேண்டும். பிற்காலத்தில் தொகுதி கொண்டுவரும் முயற்சியின் போது அந்தக் குப்பைகளைக் கவனத்தோடும் கறாரோடும் ஒதுக்கியே தீரவேண்டும். ஆனந்தவிகடனில் வருவதை ஒரு அளவுகோலாகக் கொள்ள முடியாது. கூடாது.

கணிணிமொழி கவிதை மட்டுமல்ல இதுவரை பத்திரிகைகளில் வெளியான என்னுடைய நூத்திச்சொச்ச கவிதைகளிலும், சிற்சில சிறுகதைகளிலும் இலக்கியத்தரம் சிறிதும் இல்லை என்பதை நான் உறுதியாக உணர்கிறேன். வணிகப்பத்திரிகைகளின் டிமாண்டிற்கும், அதன் வாசகத்திரளுக்கும் ஏற்ப எழுதப்பட்டவை அவை. ஒரு பத்திரிகையில் ஊனமுள்ள படைப்பு இருக்குமாயின் அதை இட்டு நிரப்ப வாசகனுக்கு பத்திரிகையின் வேறு பக்கங்கள் உதவலாம். ஆனால், புத்தகம் அப்படி அல்ல. அதன் பயணம் நீடித்தது. அதன் ஆயுள் கெட்டியானது. ஆரோக்கியமான புத்தகம் பலரால் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கும் சிபாரிசு செய்யப்படும். குறைந்த பட்சம் பரணிலாவது வாழ வேண்டும். பழைய புத்தகக் கடைகளில் அல்ல. (சிலர் பெரும் ஆளுமைகளின் படைப்புகள் கூட பழைய புத்தகக்கடைகளில் கிடைக்கின்றன என்கின்றனர். வெளியாகி ஒரிரு மாதங்களே ஆன புத்தகம் பழைய கடையில் கிடைப்பதும் 70களில் வெளிவந்த புத்தகம் கிடைப்பதும் ஒன்றா?!)

பரிசல் ஒரு ஆரம்பநிலை எழுத்தாளர் இல்லை. பதினெட்டு வருடங்களாக பத்திரிகைகளிலும், இணைய பக்கங்களிலும் எழுதி வருகிறார். நர்சிம்மின் ‘அய்யனார் கம்மா’விற்கு அளிக்கின்ற சலுகையை பரிசலுக்கு அளிக்க வேண்டியதில்லை. அவரது முதல் புத்தகம் என்றளவில் நண்பனாக அவருக்கு உற்சாகமளிக்க வேண்டியது மட்டும் நம் கடமை அல்ல. தொடர்ந்து உழைப்பின்மை மிளிரும் சாரமற்ற படைப்புகளோடு மட்டுமே அவர் மகிழ்ந்து விடக்கூடாது என்பதில் அக்கறையுள்ளவனாகவும் இருக்க வேண்டும். என் விமர்சனங்களெல்லாம் படைப்பின் மீதுதானே அன்றி. படைப்பாளன் மீது அல்ல.

புத்தகம் வெளியிடும்போது அங்கீகாரமும் கவன ஈர்ப்பும் கிடைக்க முதலில் அப்புத்தகம் ஓர் எழுத்தாளனால் வெளியிடப்பட்டு - இன்னொரு எழுத்தாளனால் பெற்றுக்கொள்ளப்பட்டு - மற்றொரு எழுத்தாளனால் அறிமுகப்படுத்தப்பட்டு - பிறிதொரு எழுத்தாளனால் விமர்சிக்கப்பட்டு – சக எழுத்தாளர்களால் வாசிக்கப்படுவதனால் கிடைக்குமேயன்றி சினிமாக்காரர்களின் திருக்கரங்களால் வெளியிடப்படுவதால் அல்ல.

அப்புறம் புத்தகம் போட விரும்பும் எழுத்தாளன் என்கிற பதம் வியப்பளிக்கிறது. எழுத்தாளன் ஏன் பதிப்பகத்தைத் தேடிப் போக வேண்டும்? மாணவன் தயாராகிவிட்டால் ஆசிரியர் தானே கிடைப்பார் என்பதைத்தான் உதாரணமாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. உங்கள் எழுத்தில் சரக்கு இருந்தால் நீங்கள் பதிப்பகங்களைத் தேட வேண்டிய அவசியமே இருக்காது. வம்சி, தமிழினி, உயிர்மை, காலச்சுவடு போன்ற இலக்கியத்தரமான புத்தகங்களைப் பதிப்பிக்கிற எத்தனையோ பதிப்பகங்கள் இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு புத்தகங்கள் கொண்டு வரத்தான் செய்கிறார்கள். இந்த புத்தகக்கண்காட்சியில் ஒவ்வொரு பதிப்பகங்களும் எத்தனை புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களை கொண்டு வந்திருக்கிறது என்று பார்த்தால் மலைப்பு ஏற்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக தொகுதியை வாசித்த பின் உங்கள் அபிப்ராயம் கொஞ்சம் மாறலாம் என்பது என் எண்ணம்.

###############

எனது பின்னூட்டம்:

செல்வா, நீங்கள் சொல்வது சரியென்றே படுகிறது.

பத்திரிக்கைகளின் வீச்சு அதிகம் என்ற போதிலும் ஆயுள் கம்மி. புத்தகங்கள் அதற்கு vice-versa. அதனால் புத்தகம் போடுகையில் ஒரு எழுத்தாளன் - அதுவும் அனுபவமிக்க எழுத்தாளன் - தர வேண்டிய மரியாதையும், முக்கியத்துவமும், க‌வனமும் நிச்சயம் அதிகமாய்த் தானிருக்க வேண்டும். தவிர, இவ்வளவு எழுதியும் நீங்கள் இன்னமும் புத்த‌கம் போடவில்லை எனும் போது மற்றவர்க்கு நீங்கள் வைக்கும் அளவுகோலையே உங்களுக்கும் வைத்திருக்கிறீர்கள் என்கிற நேர்மையும் புலப்படுகிறது. அதுவே divine ஆன விஷயம்.

மற்றொரு விஷயம், நீங்கள் குறிப்பிடும் பதிப்பகங்கள் இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு புத்தகங்கள் கொண்டு வருகிறார்கள் என்பது உண்மையே. ஆனால் அவர்களால் இருக்கும் தரமான எழுத்தாளர் எல்லோரையும் தேடிப் பிடித்து பதிப்பிக்க முடியும் எனத் தோன்றவில்லை. தமிழில் குறைந்தது ஐயாயிரம் பேர் வலைப்பூக்களில்‌ எழுதுகிறார்கள் (இது தவிர கணிபொறி வசதியின்றி இன்னமும் தாளில் எழுதுபவர்கள் தனி) என்பதனால் தேடுதலில் வரும் சிக்கல் மற்றும் ஒவ்வொரு பதிப்பகமும் பதிப்பிக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை வரையறை போன்றவை பிரதான காரணங்கள். உங்கள் உதாரணப்படி தயாராகும் எல்லா நல்ல மாணவர்களுக்கும் உடனடியாய் ஆசிரியர்கள் அமைவார்கள் என சொல்ல முடியாது (அங்கும் எண்ணிக்கை விகிதாச்சாரம் தான் பிரச்சனை). அத‌னால் எழுத்தாளனும் தம் பக்க முயற்சிகளை மேற்கொள்வதில் தவறில்லை என்றே நினைக்கிறேன் (இதில் குறிக்கிடும் ஈகோ புடலங்காயெல்லாம் தயக்கமின்றித் தூக்கிக் கடாசலாம்).

மற்றப‌டி, பின்னுட்டங்களில் விவாதம் தொடர்பின்றி வேறு திசைகள் நோக்கிப் போய்க் கொண்டிருப்பதால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் - தொகுதியை வாசிக்க வாய்ப்பு கிடைக்கும் போது மேற்கொண்டு பேசுகிறேன்.

நன்றி!

Comments

Peer Mohamed said…
"இன்றைக்கு தமிழில் இருக்கும் ஆகச்சிறந்த எழுத்தாளரான ஜெயமோகனே "

writercsk,
may i know what is the metrics behind the title "best possible" for jeyamohan?
@Peer Mohamed

அது தொடர்ச்சியான அதே சமயம் பரவலான வாசிப்பனுபவத்தின் வாயிலாகக் கண்டடைந்த‌ விஷயம். அந்த statementல் என‌க்கு மாற்றுககருத்தே கிடையாது. ஆம். தமிழின் தற்போதைய மிகச் சிறந்த எழுத்தாளன் என்கிற தலைமைபீடத்தில் அமர்ந்திருப்பவர் சந்தேகமேயின்றி ஜெயமோகன் தான்.

இதற்கு அர்த்தம் அவரது எல்லாக் கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளோடும் நான் உடன்படுகிறேன் என்பதல்ல. அவர் எழுத்தை சிலாகிக்கிறேன் என்பதே விஷய‌ம்.

இங்கு விவாதப் பொருள் அவரது எழுத்துத் திறமை மட்டுமே.
Peer Mohamed said…
பிரதர் csk,

சமீபத்தில் nigeria பற்றிய அவரது பதிவு ஒரு recent example. தொடர்ந்து இஸ்லாத்தை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தரக்குறைவாக எழுதும் ஒரு எழுத்தாளர் அவர். உலகில் 1.3 billion க்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். ஜெயமோகனின் திருவாய் சொன்னபடி சமரசமில்லாத மத வெறி கொண்டதுதான் இஸ்லாம் என்றால் உலகில் எல்லா இடத்திலும் பூஹம்பம் அல்லவா வெடிக்கவேண்டும்.
Nigeria வுக்கு இஸ்லாம் எப்படி சென்றது என்பதற்கும் அரேபியா முழுவதும் அது எப்படி சென்றது என்பதற்கும் அவர் history of arabs by Dr.philip hitty படித்திருந்தால் இப்படி சொல்லிருக்க மாட்டார்.
He is also touching islam in india in the way through though the title doesn't deserve it and he spills venom there. Doesn't he know that Islam is here in India 14 centuries ago and centuries before moghuls. கேரளா வழியாக நுழைந்த இஸ்லாம் சமரசமில்லாமல் எத்தனை nigeria க்களை நடத்தியது என்பதையும் சொல்லாமவிட்டு விட்டார்.
மேலே சொன்னவை அவரின் எழுத்து சுமந்து வரும் விஷத்தை பற்றி மட்டுமே. இப்படி ஒரு சமூஹத்தின் மீது சேற்றை வாரி இறைப்பது தான் ஆகச்சிறந்த எழுத்தாளரின் பணியா?.
விவாதப்பொருள் எழுது திறமை மட்டும் என்றால் எழுத்தாளருக்கு சமூக கடமைகள் இல்லையா ? போகிற போக்கில் தன எழுது திறமையை பயன்படுத்தி யாரை கேவலபடுதினாலும் அவரை ஆகச்சிறந்த எழுத்தாளர் என்பீர்களா? இன்றைய எழுத்துக்கள் நாளைய வரலாற்றின் பகுதிகள் என்றபோதும் ஆதாரமில்லாமல் எழுதும் ஒருவரை நீங்கள் கொண்டாடுவது நெருடுகிறது.
மொகமது said…
ஆதாரங்கள் நிறைய இருக்கு நண்பரே , அத சொன்னால்தான் தலையை வெட்டுவதாக பத்வா போடுகிறீர்களே , என்ன செய்ய ?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்