ரங்கநாதன் தெரு எறும்புகள்

"இது நிச்சயம் மோசமான படம் கிடையாது. ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு படத்தில் எதுவுமே இல்லை என்பதே யதார்த்தம்"

- அதிஷா ['அங்காடித்தெரு' திரைப்பட‌ விமர்சனத்தில்]

******

தமிழ்ப் பதிவுலக மக்களால் சிலாகிக்கப்படும் திரைப்படங்கள் யாவும் அதற்கு எதிர்மறையாகவே இருக்கும் என்கிற தங்க விதி மற்றுமொரு முறை நிரூபணமாகி இருக்கிறது. இம்முறை அக‌ப்பட்டிருக்கும் பரிசோதனை எலி வசந்தபாலனின் அங்காடித்தெரு (முந்தைய பெருச்சாளிகள் பசங்க, நாடோடிகள், நான் கடவுள், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா).


அடிப்படையான பிரச்சனை என்னவெனில், படத்தில் வலுவான கதையென்று ஒன்றுமில்லை; அதற்கு அத்தியாவசியத் தேவையான சிக்கல் இல்லை. பின்பு எங்கிருந்து போய் தொடர்ச்சியான காட்சிகள் மூலமாய்த் திரைக்கதையைப் பின்னுவது. அதன் காரணமாக‌ படம் முழுக்க நிறைய நாடகத்தனமான மிகையுணர்ச்சிக் காட்சிகளைப் புகுத்த வேண்டிய நிர்பந்தம். பின்புலம் ஒன்று தான் படத்தின் முதுகெலும்புச்சரமாய் படத்தை நிமிர்த்தி வைக்கிறது. அந்த வகையில் இப்படத்தை அத்தகைய விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றின நல்லதொரு ஆவணப்பதிவாக மட்டும் கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் சொன்னால் Documentary.

சில காட்சிகள் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலையும் Charles Dickensன் Oliver Twist நாவலையும் அழுத்தமாய் ஞாபகப்படுத்துகின்றன. அதே போல் வசனங்கள் பாலகுமாரனை (திரைப்படத்தைப் பொறுத்தமட்டில் அது ந‌ல்லது தான்). ஆனால் திரைப்பட வசன‌ங்களில் இன்னும் அசல் ஜெயமோகன் வெளிப்படவில்லை என்றே தோன்றுகிறது (எஸ்.ரா. போல் மொண்ணை வசனங்கள் எழுதாதிருப்பதே பேராறுதல்).

ஆனால் ஜெயமோகன் எழுதியதிலேயே சிறப்பாய் வசனங்கள் அமைந்த படம் இது தான் என்கிற Local Maxima அடையாளத்தைப் பெறுகிறது அங்காடித்தெரு. "ராகு காலத்துல பொறந்தவனே" "நீ இல்ல நேரம் பார்த்திருக்கனும்", "இந்த ஒரு ஆம்பிளை கிட்டயாவது ரோஷத்தோட இருக்குறனே", "யாரு யாருன்னு துருவித் துருவி கேட்டா" "நீ என்ன சொன்ன" "சிரிச்சேன்", "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்பதெல்லாம் சில சோறு பதம்.

படத்தின் மற்றொரு முக்கியமான பலம் நுண்மையான சில சித்தரிப்புக்காட்சிகள் (உதாரணம்: பர்தா மேல் சேலை வைத்துக் கண்ணாடி பார்க்கும் முஸ்லிம் பெண், பொதுக்கழிப்பிடத்தில் கட்டணம் வசூலித்து உயரும் இளைஞன், குட்டை ஆசாமி - முன்னாள் வேசி ஜோடிக்கு குழ‌ந்தை பிறக்கும் கதை). அவற்றின் மூலம் (மட்டும்) தான் வெயில் மூலம் வசந்தபாலன் அழைத்து வந்திருந்த எந்தவொரு தேர்ந்த சினிமா ரசிகனின் எதிர்பார்ப்பையும் தன் எதிர்காலப் படங்களுக்கும் தக்கவைத்துக் கொள்கிறார்.

நடிப்பு என்று பார்த்தால் அஞ்சலி மட்டும் Outstanding - ஆங்காங்கே "நெஜமாத்தான் சொல்றியா"த்தனம் முகபாவங்களிலும் வசன உச்சரிப்பிலும் வருவதை மட்டும் தவிர்த்திருக்கலாம். இயக்குநர் வெங்கடேஷ், பழ.கருப்பையா, பாண்டி, சோஃபியாயாக வரும் பெண் ஆகியோரும் நிறைவாகச் செய்திருக்கின்றனர் - விக்ரமாதித்யன் ஒரே காட்சியில். மகேஷ் (அவர் தாங்க ஹீரோ) பரவாயில்லை.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இரண்டு விஷயங்கள் ஒளிப்பதிவு மற்றும் இசை. இது போன்ற மாற்று சினிமாக்களில் இது வரை வந்ததிலேயே ஆக‌ மோசமான ஒளிப்பதிவு இதில் தான் சாத்தியப்பட்டிருக்கிறது (மேற்கண்ட பெருச்சாளிகள் கூட இந்த ஒரு விஷயத்தில் மட்டும் விதிவிலக்கு). அதே போல் இசை. முக்கியமாய் பின்னணி இசை படம் நெடுக இம்சைப் படுத்துகிறது. பாடல்களும் மகா மொக்கை. "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" கூட அப்படி ஒன்றும் அழகில்லை.

டைட்டில் கார்டில் 'உரையாடல் - ஜெயமோகன்' என்று வந்த போது பி.வி.ஆர். அரங்கின் உள்ளிருந்து படம் பார்த்திருந்த‌ இருபத்து சொச்சம் நபர்கள் காத்த மயான அமைதிக்கு பயந்து எனது கைதட்டும் அல்லது விசிலடிக்கும் இச்சையை அடக்கிக் கொண்டதையும், அழகான, சிவப்பான, மாடர்னான, நுனி முதல் அடி வரை நாக்கில் ஆங்கிலம் நடனமிடும் நகர்ப்புறப்பெண்கள் கூட சப்தமாய், ஷ்பஸ்டமாய் வாயு பிரிக்கக் கூடும் என்கிற கலாசார, விஞ்ஞான உண்மையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு உணர்த்திய இயக்குந‌ரை பாரட்டும் ஆசையையும் இங்கு பதிவு செய்யாமல் கவனமாகத் தவிர்க்கிறேன். ‌

******

உடன் படம் பார்த்த நண்பர், "படம் பார்த்தவர்கள் யாரும் இனி மேல் ரங்கநாதன் தெருவில் Window Shopping பண்ண மாட்டார்கள்" என்றார். நிஜமென்றே தோன்றுகிறது. அது தான் இத்திரைப்படம் மறைமுகமாய்ச் சொல்ல விரும்பும் ஆதாரச் செய்தியும் கூட. அதற்காகவேனும் படத்தை எல்லோரும் - குறிப்பாய் சென்னைவாசிகள் - நிச்சயம் ஒருமுறை பார்த்து சகிக்க வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.

மற்றபடி, அங்காடித்தெரு ரொம்ப சுமாரான படம் தான்.

******

சினிமாவைப் பொறுத்தவரை, "விற்கத் தெரிஞ்சவன் தான் வாழத் தெரிஞ்சவன்" என்பது உண்மையே. ஆனால் "யானை இருக்குற அதே காட்டுல தான் எறும்பும் இருக்கு" - அந்த நம்பிக்கையை மட்டும் கை விட்டு விடாதீர்கள், வசந்தபாலன்.

Comments

Anonymous said…
ghd sale If you'd prefer that one, you may also like Sherri Hill 2212. sac louis vuitton

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்