அலெக்ஸா என்றொரு மாயை

அலெக்ஸா ரேட்டிங்கில் பதிவர் கேபிள் சங்கரின் வலைப்பூ, சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவரின் வலைதளங்களைக் காட்டிலும் முன்னணியில் இருக்கிறது என சில‌ தினம் முன்பு, ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் தன் பதிவில் ஓர் இடுகை எழுதியிருந்தார். அதில் பின்னூட்டமாகவும், மருத்துவர் ப்ரூனோவுக்கு பதிலாகவும் சில கருத்துக்களைப் பதிவு செய்திருந்தேன். அவை முக்கியமான அவதானிப்புகள் என நான் கருதுவதால், அதன் சாரம் இங்கே:

*******

அலெக்ஸா என்பது அமேஸான் இணையதளத்தின் ஒரு துணை நிறுவனம். Web Traffic எனப்படும் இணையதளப் பயன்பாட்டைக் கணக்கிடுவது தான் இதன் பிரதான வேலை. இங்கிருந்து தான் நம் பிரச்சனை துவங்குகிறது. முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம், Google Analytics போல் இதன் கணக்கீடுகள் absolute தன்மையை கொண்டதல்ல.

அலெக்ஸா ரேங்க் எப்படிக் கணக்கிடப்படுகிறது என அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் கிடைக்கும் செய்தி இது:

"The traffic rank is based on three months of aggregated historical traffic data from millions of Alexa Toolbar users and data obtained from other, diverse traffic data sources, and is a combined measure of page views and users (reach)."

இதில் இந்த "other diverse traffic data sources" என்கிற பூடகமான சங்கதியை ஒதுக்கி விட்டுப் பார்த்தால், Mozilla Firefox, Netscape Navigator ஆகிய ப்ரௌசர்களைப் பயன்படுத்துபவர்களில் Alexa Toolbar என்றழைக்கப்படும் மென்பொருளை இன்ஸ்டால் செய்திருப்பவர்களிடையேயான ரேட்டிங் தான் இந்த அலெக்ஸா ரேங்க் என்பது (உலகெங்கும் உள்ள மொத்த இணைய உபயோகிப்பாளர்களில் அதிகபட்சம் 10 சதவிகிதம் பேர் இதை வைத்திருக்கக்கூடும் என்பது என் அனுமானம்). Internet Explorer, Google Chrome, Apple Safari, Opera, Konqueror, SeaMonkey, Camino, Maxthon, Amaya, Flock போன்ற பிற ப்ரௌசர்களைப் பயன்படுத்துபவர்கள் இதில் கணக்கில் வரமாட்டார்கள்.

உதாரணத்திற்கு, மொத்தம் 100 பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதில் 10 பேர் அலெக்ஸா கருவியை தங்க‌ளின் ப்ரௌஸரில் இன்ஸ்டால் செய்திருக்கிறார்கள் எனக் கொள்வோம். நூறில் மொத்தம் 80 பேர் சேத்தன் பகத்தின் தளத்தைப் பார்க்கிறார்கள்; அவற்றில் 5 பேர் மட்டுமே அலெக்ஸா கருவியை தன் ப்ரௌஸரில் இன்ஸ்டால் செய்திருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். என்னுடைய தளத்தையோ 20 பேர் தான் பார்க்கிறார்கள்; ஆனால் அதில் 10 பேர் அலெக்ஸா கருவியை தங்க‌ளின் ப்ரௌஸரில் இன்ஸ்டால் செய்திருக்கிறார்கள் எனக் கொள்வோம். இந்தக் கணக்கின் அடிப்படையில், வெறும் 20 பேர் பார்க்கும் எனது தளத்தின் அலெக்ஸா ரேங்க், 80 பேர் பார்க்கும் சேத்தன் பகத்தின் தளத்தினுடையதை விட அதிகமாக (அதாவது முன்ன‌ணியில்) இருக்கும்.

அதாவது, ஒரு தளத்தின் அலெக்ஸா ரேங்க் என்பது சர்வே எடுப்பது மாதிரியான ஒரு குறிப்பிட்ட சிறுபான்மைக் கூட்டத்தினரிடையேயான செல்வாக்கே ஒழிய‌, உலக முழுக்க இருக்கும் ஒட்டு மொத்த இணையதள‌ பயன்பாட்டாளர்கள் இடையேயான பயன்பாட்டைக் குறிப்பதல்ல என்பது தான் இங்கே நான் பிரதானமாய்ப் பிரஸ்தாபிக்க விரும்புவது.

இந்த வாதத்திற்கு எதிராய் ப்ரூனோ குறிப்பிடும் முக்கிய விஷயம் வாசகர்களின் டெமோகிராஃபி. மேற்குறிப்பிட்ட சேத்தன் பகத் உதாரணத்தில் இரண்டு தளங்களையும் படிப்பவர்கள் முற்றிலும் வேறு வேறானவர்கள் - அதாவது வெற்வேறு டெமொகிராஃபியைச் சேர்ந்தவர்கள் - என்பதைக் கவனியுங்கள்.

ஆனால், பொதுவாய் சாரு, ஜெமோ ஆகியோரைப் படிப்பவர்களும், கேபிள் சங்கரைப் படிப்பவர்களும் (தமிழில் எழுதுபவர்கள், தொடர்ச்சியாய் எழுதுபவர்கள், நிறைய எழுதுபவர்கள், கொஞ்சம் பிரபலமானவர்கள் போன்ற அடிப்படைகளில்) கிட்டதட்ட ஒன்றாக இருபார்கள் என்பது ஓர் அனுமானம். தர்க்கப்படி பார்த்தால் அது ஓர‌ளவுக்கு சரியானதே.

ஆனால் முழுக்க அதையே உண்மையாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி இல்லாமல் இருக்கவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. சாரு, ஜெமோவின் வாசகர்களில் கணிசமானோர் பதிவர் வட்டமல்லாத பொது வாசகராக இருக்கும் சாத்தியமுண்டு. அதே போல் சங்கரின் வாசகர்கள் பெரும்பான்மையானோர் ப‌திவர்களாகவும், அவருக்குத் தெரிந்தவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு.

இந்த அடிப்படையில் பார்த்தால், கேபிள் மற்றும் சாரு, ஜெமோவின் பொது வாசகர்களில் அலெக்ஸா வைத்திருப்பவர்கள் இந்த ரேங்கை தீர்மானிப்பதில்லை. இதைத் தவிர்த்த அந்த வேறுபடும் கூட்டத்தில் அலெக்ஸா வைத்திருப்பவர்கள் தான் ரேங்க்கைத் தீர்மானிக்கிறார்கள். அத்தகையவர்கள் சாரு, ஜெமோவை விட சங்கருக்கு அதிகம் இருக்கிறார்கள் என்பது மட்டுமே இதிலிருந்து அறிந்து கொள்ள முடிந்த தகவல்.

தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டால் சங்கரின் ரேங்க் சாரு, ஜெமோ இருவரையும் விட அதிகம் என்பது இரண்டாவது ஆச்சரியம் தான்.

ஆம்.

சாருவை விட ஜெமோ முன்னணி அலெக்ஸா ரேங்க் வைத்திருக்கிறார் என்பதே முதல் ஆச்சரியம் (சாருவை விட ஜெமோ தான் எனக்குப் பிடிக்கும் என்ற போதிலும் / என்பதினாலும்). அதாவது சாருவின் வாசகர் எண்ணிகையை விட ஜெமோவினுடையது அதிகம் என்பது ஒரு பேச்சுக்குக் கூட ஒத்து வரவில்லை.

இரண்டாவது ஆச்சரியம், இந்த முதல் ஆச்சரியத்தில் அடங்கிப் போகிறது!

பின்குறிப்புக‌ள்:
  1. இங்கே நான் சங்கர் மற்றும் சாரு, ஜெமோவின் பதிவுகளின் உள்ளடக்கத்தை, அவற்றின் தரத்தை எவ்விததிலும் ஒப்பிடவில்லை. வாசகர் எண்ணிக்கை மட்டும் தான் இங்கு விவாதப் பொருள்.
  2. இத்தனை பேசும் நான், எனது தளத்தின் பக்கவாட்டில், அலெக்ஸா ரேங்க் பட்டையை வைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். இரண்டு காரணங்கள். வீச்சு குறைவு என்ற போதிலும் இந்த ரேங்க் அமேஸான் என்ற‌ ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் மென்பொருளாளர்களால் வடிவக்கப்பட்டது என்பதன் நட்சத்திர அந்தஸ்து காரணாமான முக்கியத்துவம் ஒன்று. எதிர்காலத்தில், கிட்ட‌தட்ட எல்லா முக்கிய ப்ரௌசர்களிலும் ஒரு பகுதியாகவே Alexa Toolbar வந்து விடும் சாத்தியக்கூறு இருக்கிறது (அதாவது default ஆக‌ ஒரு plug-in வடிவில் பயன்படுத்துபவரின் அனுமதியுடன் அல்லது அனுமதியில்லாமலேயே இன்ஸ்டால் ஆகி விடும்). அப்போது கிடைக்கப்போகும் இதன் துல்லியம் மற்றொன்று.
  3. சேத்தன் பகத்துடன் உன்னை ஒப்பிட்டுக் கொள்ள உனக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும் என்று குதிக்க / கொதிக்கப் போகும் அறிவுஜீவிகளுக்கு: சேத்தன் பகத்துக்கும் எனக்கும் யாதொரு ஒற்றுமையும் இல்லை - நல்ல கல்லூரியில் எஞ்சினியரிங் படித்தவர்கள், காதலித்து திருமணம் செய்தவர்கள், ரிம்லெஸ் மூக்குக்கண்ணாடி அணிபவர்கள், ட்விட்டரை நிறையப் பயன்படுத்துபவர்கள், சற்றே சுவாரசியமாய் எழுதுபவர்கள் என்கிற ஐந்து உபயோக‌மில்லாத விஷயங்கள் தவிர. மற்றப‌டி, தோற்றம் முதல் ஏற்றம் வரை நிறைய வித்தியாசங்கள் தான் இருக்கின்றன. முக்கியமாய் வேறுபடும் மற்றொரு விஷயம் - எழுத்தின் நோக்கம்.

Comments

என்னா கொடுமை சார் இது? :-(
Alexa தரப்படுத்தலில் சாதாரண உலகவிபரங்களை எழுதும் பதிவுகள் பின்னால் இருப்பதையும் நுட்பப்பதிவுகள் இடுவோரின் தளங்கள் முன்னணியில் வேகமாக முன்னேறுவதையும் காணலாம். காரணம், நுட்ப பதிவுகளை படிக்கும் வாசக வட்டங்கள் பெரும்பாலும் அலெக்ஸா பட்டையை தங்கள் உலாவியில் நிறுவியிருப்பர்.

வெப்மாஸ்டர்கள் கட்டாயம் அலெக்ஸா பட்டியை தமது உலாவியில் வைத்திருப்பார்கள் காரணம் அதன் மூலம் சில இன்சு தூரமாவது முன்னேறத்தான். ஆகவே நுட்ப பதிவுகள் மற்றும் வெப்மாஸ்டர்ஸ்க்கான பதிவுகள் இடுவோரின் அலெக்ஸா ரேங்குகள் உயர்ந்து காணப்படும்.

இந்த நிலையை நீக்க அலெக்ஸா அண்மையில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அதனால் பெரிய மாற்றம் ஏறப்டவில்லை.

அதுசரி கேபிள் சங்கர் அதிகமாக நுட்ப பதிவு இடுவாரோ??
நன்றி நண்பரே. காலை முதல் இப்போது வரைக்கும் மூன்று தடவை படிக்க வைத்து விட்டீங்க. சுருக்கமாக அழுத்தமாக புரிய வைத்து உள்ளீர்கள். ஒரு வகையில் உங்களை கூகுள் பஸ்ஸில் இதை இணைய வைத்தமைக்கும் நாராயணனுக்கும் நனறி.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்