இருண்ட கண்டம் - மொழிபெயர்ப்பு

தெகல்கா வலைதளத்தில் ஜோஷுவா முயிவா என்ற இந்திய கறுப்பினத்தவர் My Own Dark Continent என்ற தலைப்பில் எழுதிய‌ கட்டுரையின் மொழிபெயர்ப்பு:

########################

என் சொந்த இருண்ட கண்டம்

சில நேரங்களில் இனவெறியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், சொல்கிறார் ஜோஷுவா முயிவா

ஒரு மலையாளிக்கும், நேபாள‌ பெண்ணுக்கும் பிறந்தவள் என் தாய். அவள் என் நைஜீரியத் தந்தையை மணக்க‌, நான் பிறந்தேன். என் வாழ்க்கையின் 23 வருடங்களில் 20ஐ பெங்களூரில் கழித்திருக்கிறேன் - சகித்துக்கொள்ளக்கூடிய‌ இந்தி, கன்னடம், நேபாளி மற்றும் தமிழ் பேச முடியும்; வெந்நீரும், படுக்கையும் கேட்குமளவுக்கு மளையாளமும் தெரியும். ஆனால் ஓர் இந்தியனாக நான் தேறுவத‌ற்கு உதவிய சமூகக் குறியீடுகள் எதுவும், வெளிப்படையாக‌ நிறவேற்றுமைக் கண்ணாடி வழி நான் பார்க்கப்படுவதைத் தடுக்கவில்லை.

நான் பொது ஊடக தொடர்பியல் படித்துக் கொண்டிருந்த‌, 'ஒழுக்கத்துக்கும்', நெறிகாப்புக்கும் பெயர் போன ஒரு மதிப்பு மிக்க கல்லூரியில், ஒவ்வொரு மாணவனுக்கும் வருகைக்கணக்கு, அனுமதிக்கப்பட்ட சிகை அலங்காரம் போன்றவை குறித்த விதிகள் அடங்கிய ஒரு கையேடு வழங்கப்படும். ஒருமுறை துணை முதல்வரின் அறைக்கு அழைக்கப்பட்டு "ஆப்பிரிக்க கலாசாரத்தை பரப்புவதாக" குற்றம் சுமத்தப்பட்டேன் - காரணம், மதிய உணவு இடைவேளையின் போது நான் ஒரு பெண்ணைத் தழுவிய‌து தான்.

என் முதல் வேலைக்கான நேர்முகத்தேர்வு ஒரு விளம்பர நிறுவனத்துக்கான படியெழுத்தர் பணிக்கானது. நேர்காணல் செய்தவர், "தவறாக எடுத்துக் கொள்ள‌ வேண்டாம். என் அனுபவத்தில் ஆப்பிரிக்கர்கள் சோம்பேறிகள், ஒழுங்கற்றவர்கள், நாங்கள் உன்னை பணிக்கு அமர்த்தினால் நீ காலந்தவறாது கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார். நான் அந்த வேலையில் சேரவில்லை.

சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது, சரியான நடைமேடைக்குச் செல்லும் வழியை ஒரு காவலரிடம் கேட்டேன். அவர் எனக்கு வழி சொல்லாமல் தன் மேலதிகாரியை அழைக்க, அவர் என்னிடம் பாஸ்போர்ட்டைக் கேட்டார். இது போன்ற சூழ்நிலைகளுக்குப் பழக்கப்பட்டிருந்ததால் கையிலேயே வைத்திருந்தேன். ஆனால் கையில் ஓர் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்தும் என் பைகளில் போதைப்பொருள் சோதனை போடப்பட்டது; "ஆப்பிரிக்கர்கள் போதைப்பொருள் கடத்துவதில் (அப)கீர்த்தி பெற்ற‌வர்கள்" என்று எனக்கு சொல்லப்பட்டது. என் பைகளில் எந்த போதைப் பொருளும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நடைமேடைக்குச் செல்லும் வழி காண்பிக்கப்பட்டது; ஆனால் ஒரு மன்னிப்புக் கூட கேட்கப்படவில்லை.

இவை வெறும் மூன்று நிகழ்ச்சிகளே. ஆனால் பெங்களூரில் ஒரு நாளில் இது போல் பல நிகழும். வாகனங்களில் கடந்து செல்பவர்கள் "கறுப்பன்" எனக் கூவுவார்கள், பள்ளிக் குழந்தைகளும், கல்லூரி மாணவர்களும், "யோவ், நீக்ரோ!" என அழைப்பார்கள், இரவு விடுதிகளில் முகம் தெரியாத அந்நியர்கள் அணுகி "கஞ்சா, கொக்கைன், E* ஆசாமிகளுடன் கோர்த்து விட‌ முடியுமா?" எனக் கேட்பார்கள். அவற்றையெல்லாம் புன்னகையுடன் கடக்கப் பழகி விட்டேன்.

முரண் என்னவெறால், நான் கறுப்பினத்திலிருந்து வந்தவன் எனத் தொடர்ந்து நினைவூட்டியது தான், அந்த கலாசாரத்தை, அதன் இலக்கியத்தை என்னை கவனிக்க வைத்தது; அதன் கவிதைகளில் ஈர்க்கப்பட்டு, இறுதியில் நான் பிரகாசமாய் ஒளிரும் நியான் நிறங்களை அணியலாம் என்கிற உண்மையை கண்டடைந்தேன். நிற வேற்றுமையின் பாரபட்சம் கொடுக்காய்க் கொட்டினாலும், என் அடையாளத்தைக் கொண்டு அதை எப்படி எதிர்கொள்வது எனக் க‌ற்றுக்கொண்டேன் - தயங்கிப் பேசும் கன்னடமோ இந்தியோ குறைந்த ஆட்டோ வாடகையில் முடிவதில், வித்தியாசமாக இருப்பதால் எப்போதும் நினைவில் வைத்திருந்து கிடைக்கும் உணவக உபச்சாரத்தில். ஒரு பத்திரிக்கையாளனாகவும் இது எனக்கு உதவியிருக்கிறது - எனக்கு புரியாது என நினைத்துக்கொண்டு மக்கள் அவர்கள் வாழ்க்கையின் எல்லா உண்மைகளையும் பேசுவது என் கதைகளை மேம்படச் செய்கிறது. நான் இங்கு பிறந்ததால் இந்த நாட்டைச் சேர்ந்தவன் அல்ல; "நான்" - என் அரசியல், என் அடையாளம் மற்றும் என் பார்வைகள் - இங்கு பிறந்தது என்பதால் தான்.

படம் : ஆனந்த் நோரெம்

முயிவா ஒரு பத்திரிக்கையாளர் - Timeout Bengaluruல் வேலை செய்கிறார்

அக்டோபர் 3, 09 தேதியிட்ட, தொகுப்பு 6, இதழ் 39, தெகல்கா சஞ்சிகையிலிருந்து

########################

* - E என்பது "Ecstasy Drug" என்றழைக்கப்படும், தடை செய்யப்பட்ட ஆனால் கள்ள மார்க்கெட்டில் கிடைக்கும்‌ Methylenedioxymethamphetamine (MDMA) மாத்திரைகள். மற்றப‌டி, கஞ்சா மற்றும் கொக்கைன் பற்றிய‌ தேவையான அளவு அறிவை ஏற்கனவே தமிழ் சினிமா புகட்டியிருக்கும் என நம்புகிறேன்.

########################

தெகல்காவில் CULTURE & SOCIETY - racism என்ற பகுப்பின் கீழ் இது வெளியாகியிருக்கிற‌து. சர்வதேசிய அரசியல் மற்றும் சமூக சிந்தனை போக்குகளின் பின்னணியில் கட்டுரையின் ச‌மகால அல்லது ச‌மீப முக்கியத்துவம் கருதி இதை மொழிபெயர்த்திருக்கிறேன்.

########################

இதே பிரச்சனை - அதாவது இந்திய பாணி இனவெறி - குறித்து ஜூன் 29, 2009 அவுட்லுக் இதழில் வெளிவந்த விரிவான‌ கவர் ஸ்டோரி: Our True Colours.

########################

ட்விட்டரில் தெகல்கா கட்டுரை சுட்டியைத் தந்திருந்த ரோசா வசந்திற்கு நன்றி.

Comments

Popular posts from this blog

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet

2002 குஜராத் - தெகல்கா புலனாய்வு