கோலம், c/o ஞாநி

'கோலம்' இயக்கம் பற்றிய குறிப்புகள் எழுத்தாளர் ஞாநியின் தளத்திலிருந்து...

###################################

கோலம்
வீடு தேடி வரும் சினிமா இயக்கம்
கோலம் - ஏன் ? எதற்கு ? எப்படி ?


நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறாரகள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைபபு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள் முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.

ஊர் கூடி தேர் இழுப்போம்.

---------------------------------------------------

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம், மே/பா ஞாநி, 39, அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக Kolam, a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல் முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

---------------------------------------------------

கோலம் தொடக விழா ஆகஸ்ட் 13 வியாழன் மாலை சென்னையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நடந்தது. இயக்குநர் கே.பாலசந்தர் தொடங்கி வைத்தார். இயக்குநர்கள் மகேந்திரன், பாலு மகேந்திரா வாழ்த்திப் பேசினர்.

விழா புகைப்படங்களை இங்கே காணலாம்:
http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/19228.html
http://picasaweb.google.co.in/kolamcinema/Kolam#

###################################

பின்குறிப்பு:

உண்மையில், ஞாநி அவர்கள் 'கோலம்' இயக்கம் பற்றிய மேற்கண்ட விப‌ரத்தை என்னுடைய பதிவு ஒன்றில் பின்னூட்டமாக இட்டு கிட்டதட்ட பத்து நாட்களுக்கு மேலாகிறது. இருந்தும் நான் என் பங்குத் தொகையை செலுத்திய பின்பு தான் இதைப் பதிவாக இட வேண்டும் என (தேவையில்லாமல்) முடிவெடுத்த‌தால், எழுத இத்தனை தாமதமாகி விட்டது - மன்னிக்கவும்!

கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு முன்பு, மளையாள இயக்குநர் ஜான் ஆபிரகாமும் ('அக்ரஹாரத்தில் கழுதை' படத்தின் இயக்குநர்) அவரது Odessa இயக்கமும் இதே போல் தான் பொது மக்களிடம் பணம் வசூலித்து 'அம்ம அறியான்' என்ற திரைப்படத்தை எடுத்தார்கள். ஆனால் கேரள மாநில‌ச்சூழல் என்பது தமிழத்திலிருந்து முற்றிலும் வேறானது.

என்னைப் பொறுத்த‌வரை, இன்றைய தமிழ் சினிமாவின் போக்கை வைத்துப் பார்க்குங்கால் இது அவசியம் தேவையானதொரு முய‌ற்சி நமக்குப் தேவையான‌ படங்களை நாமே தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை வெற்றி பெறும் பட்சத்தில் சினிமா குறித்த பெரும் தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த பார்வையும் மெல்ல மெல்ல மாறக்கூடும்.

அத்த‌கையதொரு மாற்றம் வர இத்தொகை உதவியாக இருக்கும் பட்சத்தில், நிச்சயம் நாம் இதைச் செய்ய வேண்டும். அவர்கள் எடுக்கப்போகும் முதல் படத்தை வைத்து தான் 'கோலம்' இயக்கத்தின் த‌ரம் பற்றி முடிவெடுக்க இருக்கிறேன். உங்களையும் இந்த முயற்சிக்குத் தோள் கொடுக்க அழைக்கிறேன். முக்கியமாய், இது சிபாரிசு அல்ல; ஒரு பகிர்வு மட்டுமே.

'கோலம்' இயக்கத்தின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் ப‌ற்றி எனக்கு சில கேள்விகளும் விமர்சனங்களும் இருக்கின்றன. அவ்வியக்கத்திற்கான நிதி திரட்டும் பணி நடந்து கொண்டிருக்கும் இந்தத் தறுவாயில் அவற்றைப் பொது வெளியில் வைப்பது உசிதமல்ல என நான் எண்ணுவதால், செப்டம்பர் 15, 2009க்குப் பின் அதைத் தனிப்பதிவாக இட இருக்கிறேன்.

இருபதாண்டு காலக் கனவு - 'கோலம் 'இயக்கம் பற்றிய‌ ஞாநியின் கட்டுரை

Comments

MSK said…
எப்படியும் படம் வந்தவுடன், நம்ம இணைய ஜாம்பவான்கள் அடுத்த நாளே அதை நெட்டில் போட்டு விடுவார்கள். பிறகு எதற்கு தனியே காசு கொடுக்க வேண்டும் !!! எல்லா படத்தயும் பார்பது போல இதையும் டவுன்லோட் செய்தே பார்த்து கொள்ளலாமே!!

அப்படி முதல் படம் நாம் விரும்பும் தரத்தில் இருந்தால் வேண்டுமானால் அடுத்த படத்திற்கு காசு அனுப்பலாம்..

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்