சகா : சில குறிப்புகள் - 9

சகா இன்று காலையில் வீட்டுக்கு வந்தான். அவன் கையில் வட்டமாய் சீல் குத்தப்பட்டிருந்தது. யாராவது பெண்ணிடம் வம்பு பண்ணப்போய் போலீஸ் ஸ்டேஷன் போய் அடையாளம் வாங்கி வந்திருக்கிறானோ என சந்தேகம் வந்து விசாரிதேன். இல்லையாம். நேற்று இரவு அலுவலகத் தோழிகளின் கட்டாயத்துக்கு இணங்கி பெங்களூர் தாஜ் ரெசிடென்ஸியில் உள்ள மேல்தட்டு டிஸ்கொத்தேவிற்குப் போயிருக்கிறான்.

"நிறையப் பொண்ணுங்க, இந்திரலோகம் மாதிரி"என்றான். இந்திரலோக என்ட்ரியில் அடையாளத்திற்காக‌ ஹோட்டலின் லோகோவை அப்படி கையில் குத்தி விட்டுத் தான் உள்ளே அனுப்புகிறார்கள். "பொண்ணுங்களுக்கு எங்கே குத்தறாங்க தெரியுமா?" என்றான். நான் பல ஸ்தலங்களை யோசித்து விட்டு, எதுவுமே ஒத்து வராததால் உதட்டைப் பிதுக்கினேன். "ரொம்ப யோசிக்காதடா! அவங்களுக்கும் கையில தான்" என்றான்.

**********************

சகாவுக்கு தீவிரமாய்ப் பெண் பார்க்கிறார்கள். அவன் திருவிளையாடல்கள் எதுவும் அவன் வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரியாது. அவர்களைப் பொறுத்த வரை அவன் பால் மணம் மாறாத குழந்தை; வாயில் விரல் வைத்தால் கூடக் கடிக்கத் தெரியாது. அவன் ஜாதியிலேயே சென்னையில் சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை அவன் வீட்டில் அனைவருக்கும் - சகாவைத் தவிர - பிடித்துப் போய் கிட்டதட்ட நிச்சயம் வரை போய் விட்டது.

அப்போது தான் அந்த உத்தமபுத்திரி கல்யாணத்திற்கு ஒரு கண்டிஷன் போட்டாள். திருமணத்துக்கு முன் சகா ஹெச்.ஐ.வி. டெஸ்ட் மற்றும் செமன் அனாலிசிஸ் செய்ய வேண்டும் என்பதே அது. அதாவது சகா தான் தந்தையாகத் தகுதியுள்ள ஒரு முழுமையான ஆண் என்றும், தன‌க்கு எயிட்ஸ் நோய் இல்லை என்றும் நிரூபிக்க வேண்டும்; அப்படிச் செய்து விட்டால் அடுத்து வரும் முகூர்த்தத்தில் சகாவுக்கும் அவளுக்கும் டும்டும்டும்.

வேண்டுமானால் பெண்ணுக்கும் சம்மந்தப்பட்ட டெஸ்டுகளை எடுத்து விடலாம் என்றனர் பெண் வீட்டார். சகாவின் வீட்டினர்க்கே இது பிடிக்கவில்லை, ஆனால் பெண் நல்ல இடம் என்பதால் வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருந்தனர். ஆச்சரியமாய் சகா எல்லாவற்றுக்கும் ஒத்துக் கொண்டான். ஹெச்.ஐ.வி. டெஸ்ட் நெகட்டிவ் என்று வந்து விட்டது (அது ஆச்சரியமில்லை; சகா எப்போதும் இவ்விஷயத்தில் ஜாக்கிரதை).

அடுத்த‌து விந்துப் பரிசோதனை முடிவுகள் - சகாவின் ஸ்பெர்ம் கெளண்ட் ஒரு ச‌துர மில்லி மீட்டருக்கு 72 மில்லியன் விந்தணுக்கள் (ஒரு சராசரி ஆணிற்கான குறைந்தபட்ச எண்ணிக்கை என்று உலக சுகாதார நிறுவனம் சொல்வது ச‌துர மில்லி மீட்டருக்கு வெறும் 20 மில்லியன் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). ஆக எல்லா முடிவுகளும் சுபம். பெண் வீட்டாருக்கு மிகுந்த சந்தோஷம். மேற்படி விஷயங்களைப் பேச ஆயத்தமானார்கள்.

ஆனால் கதையின் ஆன்ட்டி-க்ளைமேக்ஸ் சகாவின் ரூபத்தில் வந்தது. அவன் பெண்ணும் ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றான். "வர்ஜினிட்டி டெஸ்ட்". அதைக்கேட்டு பெண்ணின் தந்தை சகாவை அடிக்க வந்து விட்டார். அத்தோடு எல்லாம் நின்றது. சகாவிடம் பின்னொரு நாள் இது பற்றி கேட்டேன், "நீ அதைப் பத்தியெல்லாம் கவலைப்படறவன் இல்லையேடா?". சகா சிரித்துக் கொண்டே சொன்னான், "இது அது இல்ல, Just a tit for tat. அவ்வளவு தான்".

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி