போர்க்களமும் திருவாசகமும் - 4

Copyright: இப்பாடல் இயக்குநர் ராஜ்மோகனின் 'போர்க்களம்' படத்துக்காக 2005ல் எழுதப்பட்டது. வரிகள் முழுக்க முழுக்க என்னுடையவை. வேறு இடங்களில் பயன்படுத்தும் உரிமையும் என்னையே சாரும். வேறு படங்களில் பயன்படுத்த விரும்புபவர்கள் என் முறையான அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும்.

**************

Situation: கதாநாயகியிடம் தன் காதலை கவிதையாய்ச் சொல்ல நினைக்கும் கதாநாயகன் ஒரு பிரபலக் கவிஞரிடம் போகிறான். அவரோ "உன் காதலை நீயெழுது" என்று சொல்லி அனுப்பி விடுகிறார். அப்போது கதாநாயகன் அவனே தன் காதலிக்கு எழுதுவதாய் வரும் பாடல்.

பல்லவி:
மனசுக்குள் மழை விழுதே மகரந்தம் நனைகிறதே
இதயத்தில் பனி பெய்யுதே உதிரமே உறைகிறதே
உதடுகள் அவள் பெயரை உயிருக்குச் சொல்கிறதே
சில்லென்று சில துண்டு சொர்க்கங்கள் தின்கிறதே.

சரணம் 1:
விழியின் விசையினிலே புவியீர்ப்பு அறுந்தேன்
மொழியின் அழகோடு மெளனங்கள் துறந்தேன்
ஒற்றைச்சிரிப்போடு உயிரொழுகிக் கரைந்தேன்
ஓரப்பார்வையிலே கருவாகிப் பிறந்தேன்
குரலின் இசையோடு காற்றாகிக் கலந்தேன்
விரலின் அசைவுக்கு வில்லாகி வளைந்தேன்
வ‌ளையலோசையிலே நாலங்கள் அதிர்ந்தேன்
கொலுசின் பாஷையிலே தமிழ்மொழி மறந்தேன்
சுவாசக்காற்றோடு இலையாகி உதிர்ந்தேன்
பாதச்சுவடோடு பனியாகிப் புதைந்தேன்
அழகின் சாரலிலே ருதுவாகி மலர்ந்தேன்
அன்பின் தூற‌லிலே அடியோடு கனிந்தேன்.

சரணம் 2:
புருவ நெறிப்பினிலே உள்நெஞ்சம் தெறித்தேன்
நெற்றிப்பரப்போடு நேரத்தைத் தொலைத்தேன்
கன்னக்கதுப்போடு தீப்பற்றித் த்ணிந்தேன்
சின்ன மூக்கோடு சிதையாகிச் சிதைந்தேன்
நாக்கின் நுனியினிலே உயிரோடு எரிந்தேன்
உதட்டுச்சுழிப்பினிலே ஜென்மபலன் அடைந்தேன்
நூந்தல் காடுகளில் கண்மூடிக் கிடந்தேன்
கழுத்தின் கதகதப்பில் மார்கழியை மறந்தேன்
நடையின் நளினத்தில் வழி மறந்து நின்றேன்
இடையின் பாவனையை விழி திறந்து தின்றேன்
உயிரின் வாசனையை ஜீன்களிலே பதிந்தேன்
அவளின் நினைவோடு தனியாகித் தொலைந்தேன்.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்