உடன்போக்கு உதவிகள்

ஓடிப் போவோர்
முதலில் செய்கிற காரியம்
உள்ளம் திகட்ட‌
உயிர் அதிரப் புணர்வதுதான்.

-மகுடேஸ்வரன் (காமக்கடும்புனல் கவிதைத் தொகுப்பு)

********************

நாடோடிகள். முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். தமிழ் சினிமாவின் வழக்கமான - ஆனால் யதார்த்தத்தின் தீற்றுகள் ஆங்காங்கே த‌டவிய - வணிகப் படம் என்கிற அளவிலேயே இப்படத்தை என்னால் அணுக முடிகிறது. மற்றப‌டி தமிழ் சினிமா மைல்கற்களான சுப்ரமணியபுரம், பருத்தி வீரன், காதல் போன்றவற்றோடு ஒப்பிடவெல்லாம் படத்தில் ஏதுமில்லை.


நண்பனையும் (அல்லது நண்பனின் நண்பனையும் அல்லது நண்பனின் நண்பனின் நண்பனையும் அல்லது an exponential replica of above-said), அவன் காதலியையும் சேர்த்து வைக்க, எல்லா எதிர்ப்புகளையும் மீறி, சொந்த‌க் கவலைக‌ளை ஒதுக்கி, எந்த‌ பரதேசத்திற்கும் பயணிக்கத் தயாராயிருக்கும் நாடோடிகள் வாழ்க்கையின் ஒரு எபிஸோட் என்பதாக கதை சொல்லப்படுகிறது.

ஓடிப்போகும் காதலர்களின் பிரச்சனையை காதல் பேசுகிறதென்றால், ஓடிப்போக உதவும் நண்பர்களின் பிரச்சனையை நடோடிகள் பேசுகிறது. ஆனால் கொஞ்சம் தெளிவில்லாமல் பேசுகிறது. படத்தின் ஆதார சுருதியாக முன்வைக்கப்படும் காதலுக்கு உதவும் நட்பு என்கிற‌ சங்கதியை விலக்கி விட்டுப் பார்த்தால் இதில் சில சுவாரசியமான விஷயங்கள் காணக்கிடைக்கின்றன.

Interval எனப்படும் இடைவேளை என்பது படத்தின் logical break அல்ல என்பது புரியாத‌ பாமர விமர்சகர்கள் (மன்னிக்கவும். பாரம்பரிய விமர்சகர்கள் என்றிருக்க வேண்டும். இருந்தாலும் பரவாயில்லை - எழுத்துப்பிழை மட்டுமே; பொருட்பிழை ஏதுமில்லை) முன்பாதி, பின்பாதி என்பதாய் பிரித்துச் சொல்லும் பாணியைப் படித்தால், கேட்டால் எனக்கு குமட்டிக் கொண்டு வரும்.

ஆனால் இப்படத்தை பொறுத்தவரை எனக்கே வேறு வழியில்லை.

நட்புக்காக முன்பாதியில் காதலர்களை சேர்த்து வைக்கும் வரை வேகமெடுக்கும் திரைக்கதை, அதன் காரணமாக பின்பாதியில் அவர்கள் வாழ்க்கை தடம் புரள்வதில் தேக்கமடைந்து தடுமாறுகிறது. அதுவும் க்ளைமேக்ஸ் சொத்தை என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம். இயக்குநர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கேனும் புரிந்திருந்தால் மகிழ்ச்சியே.

சசிகுமார், பரணி இருவரின் நடிப்பும் அபாரம். அப்புறம் அநன்யா. அவரின் உடல் மொழியும் முகபாவனைகளும் அடடா! (அது போன்ற பெண்களிடம் நீங்கள் பழகியதில்லை என்றால் உங்களுக்கு அது செயற்கையாகத் தோன்றலாம் அல்லது பிடிக்காமல் போகலாம். மற்ற‌படி அவர்களைப் பற்றி சில நூறாயிரம் பக்கங்களில் நேரிசை வெண்பாவில் ஒரு சிறு காவியம் எழுதாலாம்).

விஜய்யை அபிநயா முத்தமிட்டு விலகும் காட்சி திரை இயக்கத்தின் ஓர் உச்சம். சமீபகாலங்களில் எந்த சினிமா காட்சியிலும் நான் இப்படி ரசித்து சிரித்ததில்லை. கிணற்றில் தற்கொலைக்கு முயல்பவனை காப்பாற்றும் காட்சி ஒரு அற்புதமான பதிவு. அப்புறம் படத்தில் வரும் அப்பாக்களின் பாத்திரப்படைப்பு குறிப்பிடத்தக்கது (அதிஷா இதைப்பற்றி ஒரு பதிவெழுதியிருக்கிறார்).

"சம்போ சிவ சம்போ" தவிர பிற பாடல்கள் நேர‌விரயம் - சுந்தர் C. பாபுவுக்கும் நமக்கும். ஒளிப்பதிவில் வழக்கமான S.R.கதிர் தெரியவில்லை. சென்னை-600028 முதல் பசங்க வரை சமீப காலங்களில் பல படங்களில் காட்சிகளுக்கு பழைய பாடல்களை பயன்படுத்தும் டெக்னிக் நிறைய பார்த்தாகி விட்டது. அதை விட்டொழியுங்கள். படம் கூடுதலாக ஓட வாய்ப்பிருக்கிறது.

இயக்குனர் சொல்ல வந்தது அதுவ‌ல்ல‌ என்ற போதிலும் நண்பனின் காதலை சேர்த்து வைக்கப் போராடும் முட்டாள் ஆசாமிகளுக்கான பாடமாகவே நான் இப்படத்தை எடுத்துக்கொள்கிறேன். சமுத்திரக்கனி, ரிட்டயர்ட் தில்லி ராணுவ மேஜரின் டூவீலர் பதிவெண் DL என்றிருப்பது வரை கவனமெடுத்திருக்கும் நீங்கள் இன்னமும் தெளிவாக அல்லது சுவாரசியாமாக படமெடுத்திருக்கலாம்.

Comments

Unknown said…
ABT the film,
Previous month(july) abt 23 film were released.
on that some films were only good and enjoyable to watch.
Naadodigal is one among them.
I saw tat with little fear (Mr.Samutrkani's second film vijayakant will ride the bullet bike by covering his eyes.. Hope u get it).
because of above said film.
but it is not such kind.. tat itself a big relif for us.
A ordinary and average film fans can enjoy this..
A story based film which prove good story, screenplay can attract audience. In second half some scenes makes us to yawn.. yet this is overcomed..
earlier tamil cinemas taught a frnd shld support his frnd when he fall in love.. but this cinema deal with after love..
this itself a next step..
So, onwhole v can enjoy this play without any thing...

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்