சூட்சமச் சுவை

ஒரு முறை மனைவி ஊருக்குப் போயிருந்த போது, என் சினேகிதனை வீட்டுக்கு அழைத்திருந்தேன். இரவு வீட்டில் நாங்களே சமைத்து சாப்பிடலாம் என முடிவு செய்து நூடுல்ஸ், தோசை மாவு, முட்டை போன்ற‌ பேச்சிலர் ஸ்பெஷல் அயிட்டங்களை வாங்கி வந்தோம். அவனுக்கு சமைக்கத் தெரியும்; எனக்கு சாப்பிடத் தெரியும் என்கிற பரஸ்பர புரிதல் எங்க‌ளிடையே இருந்தது.

சாப்பிட்டு முடித்த பின் சமையலின் உப்பு-காரம் குறித்த நிறை-குறை (தீய்ந்து போன நூடுல்ஸ் பற்றி, "ச்சே! கொஞ்சம் முன்னாலயே எடுத்திருக்கனும்" என்று திட்டமிடாமல் கர்ப்பமான டீன்-ஏஜ் பெண் மாதிரி புலம்பிக் கொண்டிருந்தான்) மற்றும் வேறு பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு நள்ளரவு தாண்டி உறங்கச் செல்லும் போது "காஃபி குடிக்கலாம்" என்றான்.

நான் காஃபி, டீ போன்ற எந்த லாகிரி வஸ்துவையும் அண்டுவதில்லை. வீட்டில் பால் வாங்குவதே என் மனைவிக்காகவும் எப்போதாவது வரும் விருந்தாளிகளுக்காகவும் தான். அவன் எனக்கு அப்படியே நேர் எதிர். அரை மணிக்கு ஒரு முறை காஃபி குடிக்கவேண்டும் - இல்லையெனில் தலை வலிக்கும்; ஒரு மணி நேரமானால் கை நடுங்கும்.

பிரிட்ஜில் நந்தினி பால் இருந்தது (தவறாக நினைக்க வேண்டாம். இங்கு அரசாங்க பால் தயாரிப்புகளின் பெயர் 'நந்தினி' - தமிழ்நாட்டில் 'ஆவின்' போல்). அவனையே போட்டுக் கொள்ளச் சொன்னேன். அவன் எனக்கும் சேர்த்துப் போட்டு விட்டு, என்னையும் குடிக்க‌ அழைத்தான். நான் சலிப்புடன் வேண்டா வெறுப்பாய் அதை வாங்கி உதட்டோடு வைத்து ஒரே ஒரு sip.

அமிர்தம். வேறு என்ன சொல்ல. நான் எனது வாழ் நாளின் அந்தக் கணம் வரை அவ்வளவாய் விரும்பி காஃபி குடித்ததில்லை என்கிற குறையை அந்த ஒற்றைத் துளி போக்கி ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு. I don't want to waste all positive GRE-par adjectives to describe it further. எழுத்தாளர் சுஜாதா அதை சுவைத்திருந்தால் நிச்சயம் "divine" என்று சொல்லியிருப்பார்.

அப்போது என் செல்பேசி கதற, நான் டம்ளரை அப்படியே வைத்து விட்டு வந்து பார்த்தால், ஊரிலிருந்து என் மனைவி. அவளுக்கு ஊருக்குப் போய் விட்டால் தூங்கச் செல்லும் முன் அரை மணி நேரமாவது என்னிடம் பேச வேண்டும். Habitual proxy. அப்படிப் பேசாவிட்டால் காய்ச்சல் மாதிரி ஏதாவது அவளுக்கு வந்து விடுமோ எனப் பயந்து நானும் எதுவும் சொல்ல மாட்டேன்.

அன்றும் அதே போல் பேசிவிட்டு என் காஃபியை தேடினேன். அங்கு நான் பார்த்த காட்சிக்கு பின்னணியாய் நீங்கள் எந்த பீத்தோவன் சிம்பொனியை வாசித்தாலும், அதை விட ஒரு படி மேலானது என் சோகம். ஆம். காஃபி டம்ளர் காலியாய் சிங்க்கில் கிடந்தது. நான் மெல்ல தேற்றிக் கொண்டு உறங்குவது போல் பாவனை செய்து கொண்டிருந்த‌ என் சினேகிதனிடம் அதைப்பற்றி விசாரித்தேன்.

"உனக்கு தான் காஃபியே பிடிக்காதே. தவிர நான் முதல் காஃபி குடிச்சு வேற அரை மணி நேரம் மேல‌ ஆச்சு. அது தான் இதையும் சூடு பண்ணி குடிச்சிட்டேன்" என்றான். எனக்கு கடுங்கோபம் வந்தது. அவனுக்கு முதலிரவன்று கரண்ட் கட்டாகி கொசு பிடுங்க‌ வேண்டும் என மனதிற்குள் சபித்துக் கொண்டே, நெடுநேரம் போராடித் தூங்கிய பின் காஃபியின் சுவை கனவில் வந்தது.

என் மனைவி ஊரிலிருந்து திரும்பிய பின் முதல் வேலையாக‌ அவளிடம் காஃபி போட்டுத் தரச் சொன்னேன். அவள் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் போட்டுத் த‌ந்தாள். குடித்துப் பார்த்தேன். இல்லை. ஏதோ குறைகிறது. அவளிடம் முன் கதைச் சுருக்கம் சொல்லி இனி தினம் காஃபி குடிக்கப் போவதாக அறிவித்தேன். எப்படியும் அந்த ருசியை அடைவது.

அதை அவள் ஒரு கௌரவப்பிரச்சனையாக நினைத்துக் கொண்டாளோ என்னவோ, தினமும் தவறாது எனக்கு காஃபி போட்டுத் தரத் தொடங்கினாள். நான் குடித்து முடிக்கும் வரை என் அருகிலேயே பொறுமையாக நின்று நான் ஏதாவது சொல்வேன் என‌ எதிர்பார்க்கத் தொடங்கினாள். எனக்கும் சொல்ல ஆசை தான். ம்ஹூம். இது வரை அந்த ருசி வரவேயில்லை.

இன்று மாலை அதே சினேகிதன் வீட்டுக்கு வந்தான். என் மனைவி காஃபி போடுவதாகச் சொல்லி சமையலறைக்குச் சென்றாள். எனக்கு ஏதோ தோன்றி, அவனையே சமையலறைக்கு அழைத்துச் சென்று பிரச்சனையை விளக்கி, காஃபி போட வைத்துக் குடித்தேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் - அந்த ருசியை மீண்டும் சுவைத்ததாக நான் எழுதுவேன் என்றா?

இல்லை. அவனே இன்று தன் கையால் போட்ட காஃபியில் கூட அந்த சுவை இல்லை. அதன் ரகசியம் எங்கே ஒளிந்திருக்கிறது எனத் தெரியவில்லை - காஃபித்தூளின் அளவிலா, பாலின் திரட்சியிலா, சர்க்கரையின் கலப்படத்திலா, அடுப்புச்சூட்டின் நீளத்திலா, இரவின் குளிர்ச்சியிலா அல்லது இவை யாவும் சந்தித்த ஏதோவொரு சூட்சமப்புள்ளியிலா?

அந்த ஒற்றைத்துளியின் ருசி இனி கிடைக்காது எனத் தோன்றுகிறது.

Comments

நல்ல பதிவு.பல சமயங்களில் வாழ்க்கைக்கும் சுலபமாக dummies guide எழுத முடிந்தாலும்,கடைசியில் இப்படித்தான் சொதப்பும்.

அந்த காபிக்கு மட்டுமல்லாமல்,கவிதை கணங்களிலிருந்து சாப்பாட்டுச் சுவைவரை இது பொருந்தும்.

இதனால்தான் அந்த நொடிக்காக வாழுங்கள் என்று சொல்கிறார்களோ?
good narration...i read almost all your articles..
ஒரு முறை மாமனார் வீட்டிலிருந்து வந்த கறிக் குழம்பைப் போல இதுவரை கிடைக்க வில்லை. என்ன மாயமோ என்னவோ தெரியவில்லை. கறி சாப்பிடனும் என்கிற ஆசையே போய் விட்டது.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்