சாருவுக்கு ஒரு கடிதம்

சாரு நிவேதிதாவுக்கு நான் எழுதிய கடிதம் அவரது வலைதளத்தில்...

http://charuonline.com/March09/KonjamPesaVendum.html

அந்த‌க்கடிதத்தின் hyperlinkகளுடன் கூடிய முழுமையான‌ version இது:

டியர் சாரு,

அது என்னவென்றே தெரியவில்லை - நமக்குள் ஒத்துப்போகவே மாட்டேன் என்கிறது. இதற்கு முன்பு உங்களுக்கு எழுதிய போதும் உங்களை விமர்சித்தே எழுதினேன் - இபோதும் அப்படியே. அடிப்படையில் உங்களின் தீவிர வாசகன் நான் - உங்கள் புத்தகங்களை ஒன்று விடாமல் வாசிக்கும், உங்கள் வலைப்பக்கத்தை தினமும் எதிர்பார்க்கும், ஒரு fanatic.

சில மாதங்கள் முன்பு என் வாசிப்பு ரசனை சார்ந்து தமிழின் மிகச்சிறந்த நூறு புத்த‌கங்களை நான் பட்டியலிட்ட போது அதில் உங்களின் இரண்டு புத்தகங்களும் இருந்தன‌ - அது நவீனத் தமிழ் இலக்கியப்பரப்பில் தவிர்க்கவே முடியாத உங்கள் எழுத்துக்கு நான் செலுத்தும் ராஜமரியாதை. ஆனால் அடுத்து நீங்கள் தேறாத ஒரு படைப்பைக் கொடுத்தால் நிச்சயம் அதை விமர்சிப்பேன்.

அது போன்ற‌ கறாரான அளவுகோள்கள் தான் ஒரு நல்ல விமர்சகனை உருவாக்க முடியும். படைப்பளியின் திறன், ஆளுமை, புகழ், பதவி, செல்வம், செல்வாக்கு, மரியாதை, சரித்திரம், கொள்கை, மொழி, இனம், ஜாதி, மதம், பால், அறிவு, அழகு, நட்பு, உறவு போன்ற எதுவும் அவரது படைப்பு பற்றிய விமர்சனத்தை bias செய்ய அனுமதிக்கக் கூடாது. அவ்வாறே நானும் இருக்க விரும்புகிறேன்.

முதலில் ஸீரோ டிகிரியை நிராகரித்த நான், பின் சமீபத்திய மீள் வாசிப்பில் அதை மிக விரும்பினேன். ராஸலீலா, கோணல் பக்கங்கள் போன்றவற்றில் அப்பிரச்சனையில்லை - முதல் வாசிப்பிலேயே அவை என்னைக்கட்டிப்போட்டு விட்டன. ஆனால் காமரூபக்கதைகளை அதன் செய்நேர்த்தி அலட்சியத்தால் தோல்வியுற்ற படைப்பாகவே கருதுகிறேன்.

Unfortunately, உங்களின் நல்ல எழுத்துக்களை சந்திக்க நேரிட்ட போதெல்லாம் உங்களை தொடர்பு கொள்ளத் தோன்றியதே இல்லை. ஆனால் (என் பார்வையில்) நீங்கள் ஏதாவது தவறு செய்வதாகத் தோன்றினால் உடனே உங்களுக்கு எழுத வேண்டும் என மனது பரபர‌க்கின்றது (அது எனது மனநிலை சார்ந்த குறைபாடா என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்).

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

உமா ஷக்தி என்ற எழுத்தாளரின் இரண்டு சிறுகதைகளுக்கு நீங்கள் அளித்த அவற்றின் தகுதிக்கு மீறிய அங்கீகாரமே இக்கடிதத்தின் ஆரம்பப்புள்ளி ("சாரு நிவேதிதா பாராட்ட வேண்டுமென்றால் ஒன்று பெண்ணை எழுதியிருக்க‌ வேண்டும் அல்லது எழுதியது பெண்ணாயிருக்க வேண்டும்" என்று என் நண்பன் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது).

நீங்கள் எழுதிய புகழுரைகளை நீங்களே ஒரு முறை படித்துப்பாருங்கள்:

"என்ன எழுதுவது, எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு பிரமித்துப் போயிருக்கிறேன்."

"நானேதான் அந்தக் கதையை எழுதினேனோ என்று கூடத் தோன்றியது. It’s a riot. Yes. ஒரு ரகளையே செய்து விட்டாய்."

"என்னையே கதி கலங்க வைக்கும் கதைகளை எழுதியிருக்கும் நீ இவ்வளவு பதற்றமடைந்திருக்க வேண்டாம்."

"இரண்டு கதைகளையும் படித்த போது ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைப் படுத்த முடியாமல் ஏதேதோ உளறிக் கொண்டிருப்பதாகவே படுகிறது."

"கொன்றே போட்டு விட்டாய் போ. பெண்ணின் தனிமையை இந்த அளவு உக்கிரமாக சமீப காலத்தில் நான் படித்ததில்லை."

இப்போது நீங்களே சொல்லுங்கள் - இது சற்றே அதிகமாகப்படவில்லையா? புதியவர்களை ஊக்குவிப்பது தான் உங்கள் நோக்கமென்றால் அதற்கு வேறு மார்க்கங்கள் இருக்கின்றன. நேற்று இரவு உங்கள் சிபாரிசை நம்பி இக்கதைகளைப் படித்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. பின்னும் சமாதானமாகாமல் மீண்டுமொருமுறை இன்று காலை படித்தேன். ம்கூம்.

பிறகு தான் இந்தக்கடிதத்தை எழுதத் தீர்மானித்தேன்.

"இந்த நிசியில் வெகு ரகசியமாய் உங்களுக்கு..." என்கிற கதையாவது பரவாயில்லை. உங்களுடைய‌ பெருமாள் கதைகளின் நடையை அப்படியே பிரதியெடுக்க முயன்று, ஆணின் உலகத்திற்குள் ஒரு ஆணாகவே நுழைய முயன்று, பாலியல் விழைதலின் நிகழ்வுகளை சொல்ல முயன்று, கடைசியாய்
எல்லாவற்றிலுமே தோற்று நிற்கிறது.

"யாருமற்ற இரவு" பற்றிச்சொல்ல இவ்வளவு தூரம் போக வேண்டியதே இல்லை - சிறுவர் மலரில் வரும் கதைகளைப் போலிருந்தது அது. ப‌டித்து முடித்த பின் உமாவுக்கான உங்கள் கடிதம் ஒரு வஞ்சப்புகழ்ச்சி அணியோ என சந்தேகம் வந்தது. பின் அக்கடிதத்தை மீண்டும் படித்துப்பார்த்த போது தான் சீரியஸாகவே எழுதியுள்ளீர்கள் என மண்டையில் உறைத்தது.

என‌க்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன:
  • பா.சிங்காரம், அசோகமித்திரன் போன்றவர்களை விரும்பும் உங்களால் இது போன்ற குப்பைகளை எப்படிப் புகழ முடிகிறது?
  • சுந்தர ராமசாமி, ஜெயமோகன் போன்றவர்களையே நிராகரித்த உங்களால் இது போன்ற சப்பைகளை எப்படி ஏற்க முடிகிறது?
கூடவே சில ஆதங்கங்கள் ஏற்பட்டன:
  • இது என்னைப்போன்ற உங்களின் தீவிர வாசகர்கள் மத்தியில் உங்களின் வாசிப்பு ரசனை சார்ந்த தவறான் புரிதலை ஏற்படுத்தக்கூடும்.
  • நீங்கள் கைகாட்டிய ஆட்களைப் படிக்கத் தயாராயிருக்கும் ஆரம்ப நிலை வாசகர்களுக்கு இது தவறான வழிகாட்டுதலாக‌ அமையக்கூடும்.
ஞானச்செருக்கு, அறக்கோபம், விமர்சன நேர்மை போன்றவை ஒரு எழுத்தாளனி்ன் குணங்களாக‌ நான் நினைப்பது. நாளை என் புத்தகத்துக்கான‌ முன்னுரைக்காக உங்களிடம் நான் வரக்கூடும். அப்போது என் படைப்பு குப்பையாக இருக்குமென்றால் தாராளமாய் நீங்கள் அதை நிராகரிக்கலாம். அதற்கு‌ நீங்கள் தயங்கவே கூடாது - நான் வருந்தவும் கூடாது.

அந்தக்கறார்த்தனத்தை நீங்கள் இவ்விஷ‌யத்தி்ல் கடைபிடிக்கவில்லை என்பதே உங்கள் ஆளுமை சார்ந்த ஒரு ரசிகனாக எனது வருத்தம். இது எல்லாவற்றையும் மீறி அவரவர்க்கு அவர்தம் ரசனை சார்ந்த பிரியங்கள் பற்றிய ஒரு justification இருக்கவே செய்கிறது என்பதையும், அது எவ்வித நியாய தர்க்க எல்லைகளுக்கும் உட்படாதது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

அவ்வளவு தான் நான் சொல்ல நினைத்தது. மற்றொரு விஷயம் - நான் இங்கு எந்தத்தீர்ப்பும் சொல்ல வர‌‌வில்லை; அதற்கான வயதோ, அனுபவமோ, வாசிப்போ கூட எனக்குக்கிடையாது. இதில் நான் முயன்றிருப்பது சினேகிதனாக ஒரு புனிதம் கெடாத பகிர்தல் மட்டுமே. வைரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறுகறையை வெண்ணிற ஆடை கொண்டு துடைக்கும் முயற்சி.

மனுஷ்யபுத்திரனைத் திட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தும் நீங்கள் அதைத் தவறவிட்டு விட்டீர்கள் என நினைக்கிறேன் ;)

- சி.சரவணகார்த்திகேயன்

Comments

Vimal Kumar said…
did u get any reply from him for this letter?
இந்தப்பதிவுக்கு தமிழ்நாடன் என்பவர் நேற்று தன்னுடைய பின்னூட்டத்தில் கீழ் கண்டவாறு தொடங்கி, சாருவை குறியீடாகப் பயன்படுத்தி "குட்டிச் சிறுகதை -60(அல்லது) கிழவன் புxxx" என்று ஒரு கதையை எழுதியுள்ளார்.

"சா.நி. யை முழுதாகத் தெரிய வேண்டுமானால், ஒரு பெண்ணின் பெயரில் அவர் எழுத்தைப் புகழ்ந்து எழுதுங்கள் -எனக்கு தனிப்பட்ட முறையில் பதில் எழுதி அதில் அவர் செல் போனையும் கொடுத்துள்ளார்!"

அதன் உள்ளடக்கம் மற்றும் சாரம் ஆபாச தனி மனித தாக்குதலாகவும், இந்தப்பதிவுக்கு எந்தவகையிலும் தொடர்பில்லாததாகவும் இருப்பதால், அதை பிரசுரிக்க இயல‌வில்லை என்பதை வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கும் சாருவின் மீது அவரது படைப்புகள் சார்ந்தும், வாழ்க்கை சார்ந்தும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதிர்ஷ்டவசமாக‌ நான் படைப்பையும், படைப்பாளியையும் குழப்பிக் கொள்வதில்லை.

தமிழ்நாடன் என்னை மன்னிக்கவும்.
Anonymous said…
என் கடிதம் பற்றிய கருத்துக்கு நன்றி. சா.நி. யின் படைப்புகளுக்குள் போகுமுன் சா.நி. என்ற மனிதனின் அதிமேதாவித்தனத்தை, அதில் மறைந்து நிற்கும் ஒரு பச்சோந்தித் தனத்தை மற்றவர் அறிய வேண்டுமென்பதே என் ஆவல். ”சாரு சரியா?” என்ற கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல், “சக மனிதரை மதிக்காதவன் ஒரு படைப்பாளியாக இருக்க முடியாது” என்பதில் எனக்கு முழுக்கச் சம்மதமே. உங்கள் கருத்தின்படி, ஒருவன் படைப்பாளியாக இருப்பதற்கு முன் சக மனிதனை மதிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். சா.நி.அப்படிப்பட்டவரல்ல என்பதை விளக்கவே என் கடிதம். “எழுத்தாளனைக் கொண்டாடாத சமுதாயம் எப்படி உருப்படும்?” என்று கேட்பவன் நல்ல படைப்பளியா? தன் வாசகியிடம் (அமெரிக்க NRI என்று தெரிந்து) I-pod யாசித்து, “என்னிடம் I-pod இருந்தால் நன்மை எனக்கா, சமூகத்திற்கா?” என்று எழுதுபவரை என்ன சொல்வது? அதனாலேயே சா.நி.யின் கீழ்த்தரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன்.(சா.நி. பற்றிய உங்கள் விமர்சனம் அனேகமாக எல்லாமே -வார்த்தைகள் soft ஆக இருந்தாலும்- அவரின் தனிப்பட்ட குணம் பற்றியதே என்பதைக் கவனிக்கவும்). நன்றி

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்