பெங்களூர் - சில குறிப்புகள்

பெங்களூர் முன்னிரவுப்பொழுதுகளில் அதன் தகுதிக்கு மீறி மின்னுகிறது - எந்தவொரு இந்தியப்பெருநகரத்தையும் போல. எண்ணிக்கையில் பாதி விழுக்காடு இருக்கும் ஒருவழிச்சாலைகளை கடக்க இருபுறமும் கவனிக்க வேண்டியிருக்கிறது. பி.எஸ்.என்.எல் புண்ணியத்தில் ஐம்பதடிக்கு ஒரு முறை தீபிகா படுகோனின் வினைல் புன்னகை தடுமாற வைக்கிறது. ஆங்காங்கே மில்லிமீட்டர் உடையுடுத்தி ஓர் உபதேவதையின் சாயலில் சன்னமாய்ச் சிணுங்கியபடி நகரும் நிஜ தீபிகாக்கள் தனி.

குளிரை சாக்கு வைத்து தினம் ஒரு முறை குளிக்கும் அவஸ்தையிலிருந்து அழகான வெள்ளைத்தோல் பெண்கள் விடுதலை அடைகின்றனர். காலியாயிருக்கும் இருக்கையில் எதிர் பாலினரோடு எவ்வித போலி சங்கோஜமுமில்லாமல் அமர்ந்து கொள்கின்றனர். ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்த பெண்கள் அடிக்கடி தங்கள் கைகளைத் தூக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஜீன்ஸ் அணிந்த இளம் பெண்கள் தம் உள்ளாடை நிறம் மற்றும் ப்ராண்டை உலகிற்கு உரக்க‌ அறிவிக்கிறார்கள்.

பெங்களூரின் தட்ப வெப்ப நிலையைப்பற்றி அதன் அற்புதங்களைப் பற்றி அல்லது வினோதங்களைப் பற்றி சிலாகிக்கிறார்கள். டி.வி. கடைகள் முன் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு பார்த்து இந்தியாவின் தோல்விகளுக்கு துக்கம் அனுஷ்டிக்கிறார்கள். மெட்ரோ ரயில் திட்டம் வந்தால் ஏற்படப்போகும் அனுகூலங்களைப்பற்றி சலிப்புடன் சலிப்பின்றி கதைக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்ததைப்பற்றி விமர்சித்தால் ஏதோ தேசத்துரோகியைப் போல் பார்க்கிறார்கள்.

பெருத்த கூட்டத்தினையே வீதிக்கு வீதி இந்திக்காரர்கள் ஐந்தடிக்கு ஐந்தடி கடை போட்டு ச்சாட் ஐட்டம் விற்கிறார்கள். மலையாளத்தான் டீக்கடைகளில் நின்று ச்சாயா உறிஞ்சிக் கொண்டே செர்வீஸ் ஓரிய‌ன்டெட் ஆர்க்கிடெக்ச்சர் பேசுகிறார்கள். மேற்கத்திய இசையை நாசூக்காய் வழியவிட்டபடி கும்பலாய் உட்கார்ந்து பீஸ்ஸா அல்லது பர்கர் கடிக்கிறார்கள். கன்னடப்பட போஸ்டர்களைக்கண்டால் யார் ஹீரோ காமெடியன் வில்லன் எனக் கண்டுபிடிக்க கஷ்டப்படுகிறார்கள்.

மென்பொருள் நிறுவனங்களில் கணிப்பொறிகளின் எல்.சி.டி திரையை முறைத்துப் பார்த்தபடி பாசாங்கு செய்கின்றார்கள். கால்செண்டர் பணியாளர்கள் பயம் அல்லது நப்பாசையுடன் நள்ளிரவு மணிகளை வாகனங்களில் கழிக்கிறார்கள். அலுவல‌க மடிக்கணிணியைத் தோளில் சுமந்து கொண்டு் பேருந்துகளில் படியில் நின்று பயணிக்கிறார்கள். பிறந்த நாள், திருமண நாள், வயதுக்கு வந்த நாள் என்று ஏதாவது காரணத்துக்காய் பத்தாயிரம் செலவழித்து ட்ரீட் தருகிறார்கள்.

வார இறுதியில் மனைவி, காதலி அல்லது எக்ஸட்ராவுடன் ஏதாவது புதிய திரைப்படம் பார்க்க மல்ட்டிப்ளெக்ஸ் நுழைகிறார்கள். இடைவேளையில் சீருடை அணிந்த திரையரங்கச் சிப்பந்தியிடம் இருநூறு ரூபாய்க்கு பாப்கார்ன் வாங்கித் தின்கிறார்கள். உடன் வரும் ஜோடி புதிதென்றால் ஓடாத படங்களின் திரையரங்க இருட்டில் பிசுபிசுப்பாய்க் கரைகிறார்கள். படம் முடிந்தவுடன் டாய்லெட் தேடிப்போய் ஆடை சீர்படுத்தி வெளிவந்து தத்தமது பத்தினித்தனங்களுக்குத் திரும்புகிறார்கள்.

ரிங் ரோடுகளின் வெண்ணெய் வழுக்கலில் பின்னே இறுக்கமாய் ஒரு குட்டி கட்டிப்பிடித்தபடி பைக்களில் சீறிப்பாய்கின்றார்கள். நள்ளிரவு வரை விழித்திருந்து ஆங்காங்கே தடவியபடி காலே கால் கோப்பை மதுவை ரசித்து அருந்துகிறார்கள். ஊடுருவும் குளிருக்கு இதமாய் ஆண்களும் போட்டியாய்ப் பெண்களும் சிகரெட் புகையை நுரையீரலுக்கு அனுப்புகின்றனர். பப் மற்றும் டிஸ்கோத்தே தவிர்த்த சாமானியர்கள் இரவு பத்து மணிக்கு‌ இழுத்துப்போர்த்தியபடி படுக்கைக்குச் செல்கிறார்கள்.

அதிகாலைக் குளிருக்குப் பழகிய மெனொப்பாஸ் வயதினர் சாக்ஸ் அற்ற ஷூக்களுடன் வாக்கிங் போகிறார்கள். ரிட்டையர்ட் ராணுவ ஆட்கள் வைகறையில் தும்பைப்பூ வெண்மையில் அரை ட்ராயர் அணிந்து ஜாக்கிங் போகிறார்கள். பத்து ரூபாய்க்கு சர்க்கரையிட்ட சாத்துக்குடிச்சாறு அல்லது சர்க்கரையற்ற‌ கரும்புச்சாறு ரோட்டோரமாய் விற்கிறார்கள். குறுகிய பரப்பளவு கொண்ட பூங்காக்களில் குழந்தைகள் மற்றும் அணிற்பிள்ளைகள் சுதந்திரமாகத் துள்ளி விளையாடுகின்றன.

ரிலையன்ஸ், சுபிக்க்ஷா போன்ற கார்ப்பரேட் சூப்பர் மார்க்கெட்களில் டிஷர்ட் அணிந்த தமிழ்ப்பெண்கள் புன்னகையுடன் சில்லறை கேட்கிறார்கள். முடி திருத்தும் கடைகளில் ஷார்ட் மீடியம் போன்ற உலகப்பொது மறைகள் வழி மொழி தாண்டிய சேவை புரிகிறார்கள். ட்ராஃபிக் போலீஸ்காரர்கள் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு நேர்மையுடன் சில்லறையைத் திருப்பித்தருகிறார்கள். ஆட்டோ ஓட்டுந‌ர்கள் தமிழில் திட்டுகிறார்கள் - பேருந்து நடத்துநர்கள் கன்னடத்தில் திட்டுகிறார்கள்.

நெரிசல் மிகுந்த ட்ராஃபிக் சிக்னல்களில் களிமண்ணால் செய்த பொம்மை தெய்வங்களுக்கு சாயம் பூசி விற்கிறார்கள். விற்பனை இல்லாத வேளைகளில் குழந்தைகளை வைத்து கார் கண்ணாடி தட்டி பிச்சையெடுக்கிறார்கள். கூட்டமான பேருந்துகளில் லோக்கட் பெண்கள் கைக்குழந்தைகளுடன் ஏறி பலவீன‌ ஆண்களிடம் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள். கொஞ்சம் தைரியமுள்ளவர்கள் வீடு புகுந்து த‌னித்த பெண்களையும் கரன்ஸிகளையும் சூறையாடுகின்றனர்.

மற்றபடி பெங்களூர் அழகானது.

Comments

Good thoughts CSK. Also these diseases could be out there in many Indian A, B and C grade Towns. But the sad part is these cities don't make up even 10% of India population. Life out is very different and doesn't represent true India. This reality I explain to many of my western friends and colleagues.
True reflection.


Karthik.
Bleachingpowder said…
//பெருத்த கூட்டத்தினையே வீதிக்கு வீதி இந்திக்காரர்கள் ஐந்தடிக்கு ஐந்தடி கடை போட்டு ச்சாட் ஐட்டம் விற்கிறார்கள். மலையாளத்தான் டீக்கடைகளில் நின்று ச்சாயா உறிஞ்சிக் கொண்டே செர்வீஸ் ஓரிய‌ன்டெட் ஆர்க்கிடெக்ச்சர் பேசுகிறார்கள்//

வட நாட்டவர்களை "இந்திகாரர்கள்" என மரியாதையாக அழைக்கும் நீங்கள், கேரளாவை சேர்ந்தவர்களை மலையாளத்தான் என்று ஒருமையில் விழிப்பது சரியல்ல.
@ Bleachingpowder

I didn't made it intentionally..
My apologies if that really hurts u..
Will take care to avoid such things..
Man said…
seems ur relatively new to bangalore and hence talking much about bangalore kulir in feb'09.. Bangalore's kulir's gone before years..
And ur comparison saying "yendha oru india perunagarathai polavum" shows that u had never been to a metro other than chennai.. ;-)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்