முன்ஜாக்கிரதை மிகமுக்கியம்

கார்டூனிஸ்ட் மதனின் "முன்ஜாக்கிரதை முத்தண்ணா"வை ஆனந்த விகடன் வழி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அது போன்றவர்களை நிஜ வாழ்க்கையிலும் ஆங்காங்கே சந்திக்க நேர்ந்திருக்கலாம். அதைச்சார்ந்த எனது மிகச்சமீப அனுபவம் பற்றியதே இப்பதிவு.

பெங்களூர் ஐ.ஐ.எம். நடத்தும் PGSEM படிப்புக்கான (செலவு இந்திய ரூபாய் மதிப்பில் ஏழரை லகரம் மற்றும் சில்லறை) நுழைவுத்தேர்வுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தூக்கத்தின் சுகத்தைத் துறந்து, அதிகாலையில் அலாரம் வைத்து, அடித்து பிடித்து எழுந்து, பாதி குளித்து மீதி குளிக்காமல், கையில் கிடைத்த மூன்று அங்குல நீளத்துக்கு முக்கும் - பள்ளிக்கூட தினங்களின் எச்சமான ஒரு பென்சிலையும், நிலக்கரிக்கு சவால் விடும் நிறமுடைய பாதி உடைந்த அழுக்கு அழிரப்பர் ஒன்றையும் தேற்றி, சட்டைப்பையில் திணித்துக் கொண்டு ஓடி, இரண்டு BMTC பேருந்துகள் மாறி ஏறி இறங்கி, தேர்வு நடக்கும் கல்லூரியை அடைந்து, பதிவெண்ணுக்கு அறை எண் தேடிக் கண்டுபிடித்து, பதட்டத்துடன் இருக்கையில் வந்து தட்டுத்தடுமாறி அமர்ந்தால் (ஒரு நிமிடம் பொறுங்கள் - கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொள்கிறேன்), எனக்கு முன்னால் அவன் மிகச்சாவகாசமாய் அமர்ந்திருந்தான்.

ஒரு மென்பொருள் நிறுனத்தின் பசுமை சூழ்ந்த‌ SMOKING ZONEல், பின்மாலைத் தனிமையில் நின்று கொண்டு, ஆழ‌மாய் உள்ளிழுத்த புகையை வானத்தைப் பார்த்துக்கொண்டு வெளிவிடுபவன் போன்ற மோனத்தவ நிலையில் இருந்தான் (இது மென்பொருளாள‌ர்களுக்கு மட்டுமேயான படிப்பு என்பது கூடுதல் தகவல்). தேர்வுச்சீட்டு, அடையாள அட்டை எல்லாம் வெளியே எடுத்து வைத்து, கையில் பென்சிலெடுத்து தயாராய்க்காத்திருந்தான் (எனக்கு "On Your Mark, Get Set, Go!" ஞாபகம் வந்தது). கண்டிப்பாக தேர்வு நடக்குமிடத்துக்கு ஒரு மணி நேரம் முன்பே வந்து விட்டான் என்பதற்கான சகல லட்சணங்களும் அவனிடத்தில் தெரிந்தன‌ (இன்னும் வினாத்தாளே கொடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது). பொறுப்பு, அக்கரை, ஜாக்கிரதை போன்ற என்னை அண்ட பயப்படும் வஸ்துக்கள் யாவும் அவனிடம் வாத்சல்யத்துடன் பொருந்தி நின்று தாண்டவமாடிக்கொண்டுருந்தன. அப்போது தான் அதைக் கவனித்தேன். அதைப் பார்த்ததும் இதுவரை சொன்னதெல்லாம் நான் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று புரிந்தது.

கையில் எழுத வைத்திருந்ததைத்தவிர மேலும் எட்டுப்பென்சில்கள் (அதில்
நான்கு சீவப்படாதவை), மூன்று அழிரப்பர்கள் (அவற்றில் இரண்டு பாலீதீன் பிரிக்கப்படாதவை), இரண்டு ஷார்ப்ப‌னர்கள் (அவற்றில் ஒன்று அட்டையுடன் புத்தம் புதியது) அனைத்தையும் மேஜையில் பரப்பி வைத்திருந்தான். சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தின் அகராதியிலிருந்து "முன்ஜாக்கிரதை" என்கிற வார்த்தை உயிர் பெற்று நேரே இறங்கி வந்து என் முன் அமர்ந்திருப்பதைப் போன்ற ஓர் உணர்வு ஏற்ப்பட்டது. கொஞ்ச நேரம் வாய்பிளந்து பார்த்திருந்து விட்டு அதைப்பற்றி அவனிடம் கேட்கலாம் என வாயெடுத்தவன், அவனது சிக்ஸ் பேக் ஜிம் பாடியையும், புஜமழுத்திய டைட் டிஷர்ட்டையும் பார்த்து ஒரு கணம் நிதானித்து, எதுவும் பேச‌ வேண்டாம் எனத் தீர்மானமாய் முடிவு செய்தேன்.

அது என் முன்ஜாக்கிரதை.

Comments

Jeeva said…
Unna maathiri mokka pohda...intha ulagathla poranthu varanum....
Anonymous said…
Wonderful writing! I have seen such characters(not sure if I use that word. not out of malice.but since i consider them alien to me) and you have spelled the feeling..

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்