போகாத ஊருக்கு...

கடந்த புத்தகக் கண்காட்சியில் நான் உயிர்மை அரங்கில் நின்று கொண்டு, சாரு நிவேதிதாவின் புதிய நூல்களை முழுவதும் வாங்கலாமா அல்லது பகுதி மட்டும் வாங்கலாமா என்று தீவிரமாய் யோசித்துக்கொண்டிருக்கையில், ஓர் எழுபது (அல்லது எண்பது) வயதுப்பெரியவர், என்னை கடைக்காரர் என நினைத்து "இந்திரா காந்தியின் சுயசரிதை இருக்கிறதா?" என்று விசாரித்தார்.

சற்றே கலவர‌மடைந்த நான், புத்தகங்களின் தொள்ளாயிரம் ரூபாய் சலுகை விலை பற்றிய கவலையை சில கணம் ஒத்திப்போட்டுவிட்டு, மிக பவ்யமாக‌ நிஜக்கடைக்காரரை கை காட்டிவிட்டேன் (அப்போது அரங்கில் மனுஷ்யபுத்திரன் இல்லை). அவர் அந்தப்பெரியவரிடம் வானதி, கிழக்கு, மணிமேகலை என சில பதிப்பகங்கள் பெயரைச்சொல்லி அனுப்பி வைத்தார்.

நான் கடையில் நின்று கொண்டிருக்கையில், உள்ளே வரும் ஒரு வாடிக்கையாளர் என்னைக் கடைக்காரர் என நினைத்து பேச ஆரம்பிப்பது எனக்கு புதிதல்ல. பலசரக்குக்கடை, ஜவுளிக்கடை, நகைக்கடை, செருப்புக்கடை என‌ பல இடங்களில் - ‍பெண்க‌ள் உள்ளாடைக்கடையில் கூட ஒருமுறை - இது போல் நடந்துள்ளது. நான் கலவர‌மடையக் காரணமே வேறு.

இந்திரா காந்தி அம்மையார் சுயசரிதை எழுதியிருக்கிறாரா என்ன? கடைக்காரர் வழி சொன்னது தான் அதை விட பெரிய அதிர்ச்சி.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்