தற்செயல்களின் திரைக்கதை

Parapsychologyயில் "Apparition" என்றொரு சொல் பிராதானமாய், கொஞ்சம் தாரளமாய் புழங்கும். சுருக்கமாய் "புலன்களுக்கு அப்பாற்பட்ட அல்லது புலன்களை ஏமாற்றும், அசாதரண, அமானுஷ்ய அனுபவம்" என்று தமிழில் கிட்டதட்ட மொழிபெயர்க்கலாம் (வெகுஜன உதாரணம் : ஹாரி பாட்டர்). இன்னும் இறங்கி வந்தால் பேய், பிசாசு, ஆவி என்று கொஞ்சம் பயப்படலாம்.

மாபெரும் மானுட இழப்பு, அபத்த இரங்கல் கவிதைகள் என்பதையெல்லாம் தாண்டி சுஜாதாவின் மறைவையொட்டி ந‌ட‌ந்த நன்மைகளில் ஒன்று ‍- அவரின் எழுத்துக்களை நேசித்து வாசித்தவர்கள் அனைவரும் பரஸ்பரம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள‌த் தளம் அமைத்துத் தந்தது அச்சோக நிகழ்வு. அப்படி எனக்கு அறிமுகமானவர் தான் பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுந்தரி செல்வராஜ்.

கட‌ந்த வியாழன் இரவு விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் "நடந்தது என்ன?" நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு சுந்தரியைத்
நினைவிருக்கலாம். பாண்டிச்சேரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓர் இரவு கார் பிரயாணத்தில் சுந்தரியின் கணவர் சந்திக்க நேர்ந்த apparition பற்றியது அந்நிகழ்ச்சி (அதன் வழக்கமான "சித்தரிக்கப்பட்டவை" மசாலா காட்சிகளுடன்).

பேய்கள் பற்றிய கதைகளும் நிகழ்வுகளும் ஆதிகாலத்திலிருந்து மனிதனின் வாழ்வோடு இயைந்ததாய் பின்னிக்கிடக்கின்றன. நம் புராணங்கள் பேய்களின் கிடங்கு. கிறித்தவர்களுக்கு சாத்தான் அல்லது 666. சமண இலக்கியங்களில் சதுக்க பூதங்கள். இப்படியாய் எம்மதம் எவ்வினம் என்றாலும் பேய்கள் பொது. காரணம் சுவாரசியம். சமீப‌ உதாரணம் - ஜெயமோனின் நிழல்வெளிக்கதைகள்.

மனிதனின் மூளை கடவுளைப் படைத்த‌ மறுகணமே பேய்களையும் படைத்து விட்டது. ஒவ்வொரு கதையிலும் வில்லனைக் கொண்டு தான் நாயகனின் வலிமை தீர்மானிக்கப்படுகிறது. அடிப்படையில் நம்பியார் தான் எம்.ஜி.ஆருக்கான கவர்ச்சியை அதிகரித்தவர். கருணாநிதிக்கு ஜெயலலிதா அமைந்தார். கடவுளுக்கும் சாத்தான், பேய்கள் போன்றவை அப்படித்தான்.

நானும் கடவுளை நம்புவதை விட்ட மறுகணமே பேய்களுக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டேன். அப்படியென்றால் நடுநிசியில் இடுகாட்டில் தனித்து
நடப்பாயா என்று கேட்டால் - நிச்சயம் பயப்படுவேன். காரணம் பயம், கோபம் போன்ற உணர்வுகள் பகுத்தறிவின் தலையீடின்றி சூழ்நிலையால் முளைப்பவை. அது தனி. எனக்கு முக்கியம் இதில் பகுத்தறிவு சார்ந்த என் நிலைப்பாடு மட்டுமே.

உற்று கவனித்தால், ஒரே பேய்க்கதை தான் திரும்பத் திரும்ப பல வடிவங்களில் சொல்லப்படுகின்றன. இடம், பொருள், ஏவல் மட்டும் மாறும்; "உடல், பொருள், ஆனந்தி" ஆகும் (இந்திரா செள‌ந்தர்ராஜனிடமோ, பி.டி.சாமியிடமோ, கோட்டயம் புஷ்பநாத்திடமோ கேட்டால் சொல்லுவார்கள்). சரித்திரத்தை கொஞ்சம் கிளறிப்பார்த்தால் இது போன்ற பேய் கண்ட வாக்குமூலங்கள் நிறையக் காணக்கிடைக்கும்.

பின்தங்கிய‌ கிராமம் முதல் வல்லரசு அமெரிக்கா வரை; படிக்காத‌ பாமரர் முதல் படித்த விஞ்ஞானி வரை பேதமே இல்லாமல் சாட்சி சொல்கிறார்கள். இவற்றில் தொன்னூறு சதவிகிதம் - விளம்பரம்; பொய்; தேறாது. இவர்களை இரக்கமே இல்லாமல் புறந்தள்ளலாம். மீதம் தேறுபவற்றில் பெரும்பாலான பேய் அனுபவங்களுக்கு சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன.

பேய் நிகழ்ச்சிகளின் சுற்று வட்டாரத்தி்ல் யாராவது தற்கொலை செய்திருக்கிறார்கள். சம்மந்தப்பட்டவர்கள் யாராவது செத்துப்போகிறார்கள் அல்லது விபத்தில் சிக்குகிறார்கள். பேய்க்காட்சிகள் குழப்பமாகவே அமைகின்றன. பேயுடன் யாரும் எந்த பேச்சுவார்த்தையும் நடத்துவ‌தில்லை ("ஆவி" அமுதா தனியே விவாதிக்கப்பட‌ வேண்டிய வஸ்து). இது போல் சில.


பேய் அனுபவம் கொண்டவர்களை இரு வகையாய்ப் பிரிக்கலாம். பேய்களைப் பார்த்தவர்கள், பார்த்தவர்களிடம் கேட்டவர்கள். இரண்டாம் தரப்பினரை நாம் விட்டு விடலாம். அவர்கள் கேள்வி ஞானத்தின் நம்பகத்தன்மை குறைபாடுகளினாலும், அவர்கள் நோக்கம் விஷயத்தின் சுவாரசியம் கருதி மட்டுமே என்பதாலும். தவிர கேள்வி ஞானம் பல திரிபுகளை உள்வாங்கியது.

மீதமிருப்பது பேய்களைப் பார்த்த வகையறா. இவர்களின் அனுபவங்கள் இரு வழிகளில் ஏற்படுபவை. ஒன்று புலன் வழி உணர்தல் மற்றது மனம் வழி உணர்தல். கிட்டதட்ட நம் எல்லோருக்கும் வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் இவற்றில் எதாவது ஒரு வகை அனுபவம் ஏற்படுவது சாத்தியமே. சுந்தரியும் அவர் கணவரும் இதில் தான் சேர்த்தி.

சுந்தரியின் கணவர் பார்த்தது இரவில் இருளில் முகம் காண முடியாத மானிட ஜாடையற்ற‌ ஒரு பெண் காரின் குறுக்கே சாலையில் நின்றதை. சமாளிக்கத் தடுமாறிப் பார்க்கையில் அங்கு யாருமில்லை. இது புலன் வழி உணர்தல். அதே நேரம் வீட்டில் கணவருக்காக காத்திருக்கும் சுந்தரியின் மனம் காரணமின்றி சஞ்சலமடைந்து குழம்புகிறது. இது மனம் வழி உணர்தல்.

ஆனால் விஷயம் அத்தனை எளிமையானதல்ல. விஞ்ஞானம் கேள்வி கேட்காமல் எதையும் ஒப்புக்கொள்வதில்லை. அதற்கு சாட்சியங்கள் தேவை. கண்ணால் பார்த்தேன் போன்ற மொட்டைக்கடிதாசிகளை அது ஏற்பதில்லை. இது போன்ற விஷயங்களை Paranormal என்று வகை பிரித்து டெலிபதி, ESP, ஆவி, மரணத்துக்கு பிந்தைய நிலை போன்றவற்றைப் பற்றி மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

"Peripheral vision is very sensitive and can easily mislead, especially late at night, when the brain is tired and more likely to misinterpret sights and sounds" என்கிறார் முன்னாள் மேடை மாயாஜால விற்பன்னரும் தற்போது இது போன்ற பேய் அனுபவங்களை ஆராய்ச்சி செய்பவருமான ஜோ நிக்கல். "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பதே இதன் diluted சாரம்.

சுந்தரியின் கணவருக்கு ஏற்ப்பட்டது போன்ற அனுபவத்தை ந‌ம்மில் பல‌ர் அடைந்திருக்கக்கூடும் (என் நண்பன் ஒருவன் இரவில் தனியே சென்று சிறுநீர் கழிக்கையில் எதையோ-?! பார்த்து பயந்து ட்ரெளவுசரை பாழ்படுத்திய கதை எனக்குத்தெரியும்). அதாவது களைப்பு அல்லது கவனமின்மை காரணமாய் நிகழ்ந்த ஒரு மேலோட்டமான ஹாலுசினேஷனாக இருக்க வாய்ப்புண்டு.

அடுத்தது சுந்தரியின் விஷயம். அவருக்கு அதே நேரத்தில் ஏற்ப்பட்ட சஞ்ச‌லம். அதற்கு பின் அதே சாலை பற்றிய தற்கொலைக்கதையை கேட்க நேர்ந்தது. அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பது பற்றி படிக்க நேர்ந்தது. மற்றொரு இரவில் மீண்டும் அதே இடத்தில் நல்ல நிலையில் இருந்த கார் பழுதடைந்து நின்றது. இவையனைத்தும் அவரை பாதித்த விஷயங்கள்.

இவையனைத்தும் விபத்தாய் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்ட வெவ்வேறு நிகழ்வுகள். இலக்கியம் படிக்கும், உள்ளுக்குள் யோசிக்கும், தூக்கலாய் உணர்ச்சிவசப்படும், கணவன் மேல் காதல்கொண்ட ஒரு பெண்ணுக்கு கணவன் வெளியூர் சென்ற தனிமையில் குழப்பமும் மனசஞ்ச‌லமும் ஏற்படுவது மிக இயல்பானது. இதையும் பேயையும் முடிச்சுப்போடுவது மனதின் பலவீனம் அல்லது பலம்.

அதே போல் விபத்து என்பது எந்த இந்திய நெடுஞ்சாலைக்கும் பிறப்புரிமை. தற்கொலைக்கதைகளும் அப்படியே. மீண்டும் அதே இடத்தில் கார் பழுதடைந்ததும் நிகழ்தகவின் படி மிக இயல்பான ஒரு சம்பவமே. ஆனால் ஆழ்மனம் அதை சுவாரசியப்படுத்துகிறது - தற்செயல்களின் சங்கிலித்தொடர் ஒரு சிறந்த திரைக்கதையை உருவாக்குவது போல.

யோசித்துப்பார்த்தால், நாம் சில அமானுஷ்யங்களை நம்ப விரும்புகிறோம். நம் அனைவருக்கும் வாய்க்கும் Schizophreniaவின் ஆபத்தற்ற நிலை அது.

பின்குறிப்பு:
இதை நான் எழுதுவது இக்கணம் வரை சுந்தரிக்குத் தெரியாது. ஆனால் எழுதிக் கொண்டிருக்கையில் நீண்ட நாள் கழித்து அவரிடம் இருந்து ஓர் ஆர்க்குட் ஸ்க்ராப் எனக்கு வந்த‌து. இதையும் அமானுஷ்யம் என்பதா?

Comments

Keerthi said…
"உடல், பொருள், ஆனந்தி" was ma fav.....wen i was a kid....
Vimal Kumar said…
Who was that sundari?
Do u know her?
How come u get a scrap from her?
ஹாய் சரண், ரொம்ப நாளா உங்க வெப் பக்கம் வரவில்லை. மன்னிக்கவும். நானும் விஜய் டிவியின் அந்தத் தொடரைப் பார்த்தேன். இரவுக்கோழியாய் சுற்றிக் கொண்டிருக்கும் எனக்கு, ( எந்த நேரமானாலும் கவலையே படமாட்டேன். டிரைவரிடம் நடு இரவு ஒரு மணிக்கு கிளம்பனும் என்று சொல்லி அதன் படி செய்தும் இருக்கிறேன். பின் சீட்டில் மகனும், மனைவியும், என் மடியில் மகளுமாய் கொட்டக் கொட்ட விழித்தபடி டிரைவரிடம் ஏதாவது பேசியபடியே பயணம் செய்வது எனக்கு நிரம்பவும் பிடிக்கும்) சுந்தரி அவர்களின் நிகழ்ச்சியைப் பார்த்ததும் திக்கென்றது.

ஆவி, பேய், ஈஎஸ்பி என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நான் உங்களிடம் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான்.

எனது பிளாக்கில் நான் எழுதி வரும் தர்மத்தின் தீர்ப்புக் கதைகளை படித்தால் என்ன கேள்வி கேட்க விரும்பினேன் என்று தங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன். முதலில் அதற்கு சற்று விளக்கமாக பதிலிடுங்கள். ஓகே...

மன்னிக்கவும். எனது எழுத்துக்களை படிக்கச் சொன்னதற்கு.
Ask me Sako said…
i need aavi ulagam amudha's contact number and ADDRES PLS
@B.

இப்ப அவங்க 'ஆவி' அமுதா இல்லை; 'ச‌ங்கமித்ரா' அமுதா. ச‌ன்மார்க்கா ஃபௌண்டேஷன்ஸ் என்கிற ஒரு யோகா மற்றும் தியானக்கலை பயிற்றுவிக்கும் அமைப்பை நடத்தி வருகிறார்.

மின்னஞ்சல் : sangamithra.sf@gmail.com
செல்பேசி : 9952970647 / 48
வலைதளம் : www.sanmargafoundations.org
முகவரி:
No:07, Marvel River View County,
Mariamman Koil Street,
Manappakkam, Chennai - 600 116

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்