ஒண்டிக்கட்டை இதிகாசம்

A bachelor is a guy who never made the same mistake once
-
Phyllis Diller (American Comedienne)

ஆதவன் சிறுகதைகள்
தொகுப்பு வாயிலாகத்தான் New Horizon Media எனக்கு அறிமுகமானது. பின்பு துப்பறியும் சாம்பு, யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் என எங்களுக்குள் நிறைய வியாபாரம் நடந்தாயிற்று. பத்ரி சேஷாத்ரியின் வலைப்பூவில் NHM புத்தகங்கள் இலவசமாக! (பதிலாக புத்தகம் பெறுபவர் தன் வலைப்பூவில் ஒரு மாதத்துக்குள் அதற்கு நேர்மையான‌ ஒரு விமர்சனம் எழுத வேண்டும்) என்கிற திட்டத்தைக் கண்ட போது மிகுந்த தயக்கதுடனேயே புத்தக‌ப்பட்டியலுடன் அவர்களுக்கு மின்‍-அஞ்சல் அனுப்பினேன்.

என் சோம்பேறித்தனமே தயக்கத்தின் மூலக்காரணம் ‍(வலைத்தளத்தில் இன்னும் எழுதப்படாமல் தாமதப்பட்டிருக்கும் விஷயங்கள் பல ‍- வாரணம் ஆயிரம், பொம்மலாட்டம், Fashion, Rab Ne Bana Di Jodi படங்களுக்கு விமர்சனம் இப்படி) மின்‍-அஞ்சல் அனுப்பி, சரியாய் அடுத்த ஐந்தாவது தினம் என் வீடு வந்து சேர்ந்த புத்தகம் தான் சிபி கே. சால‌மனின் ஒண்டிக்கட்டை உலகம். "லட்சோப லட்ச ஒண்டிக்கட்டைகளுக்கு இந்தப்புத்தகம் தண்ணீர் தெளித்து விடப்படுகிறது" என்று சமர்ப்பணத்திலிருந்தே களைகட்டத் தொடங்கி விடுகிறது புத்தகம் ("A COMPLETE GUIDE FOR BACHELORS" என்று தமிழ் சினிமா ஸ்டைலில் என்று சப்டைட்டில் வேறு).


ஒரு நல்ல சிறுகதையின் முதல் காட்சி போல் ஒரு மாதிரி பேச்சிலர் அறையின் நிழற்படத்துடன் (புதூர் சரவணன்) அட்டைப்படத்திலேயே தொடங்கும் இந்த‌புத்தகம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ஆவுடையப்பன் என்கிற பாத்திரம் நகரத்தில் சந்திக்கும் பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கல்களின் தொகுப்பாய் ஒரு சுவாரசியாமான நாவல் போல் விரிந்து பின் ஒரு அழகான கவிதையின் கடைசி வரி போல் கதாநாயகர்களான பேச்சிலர்களுக்கு வரப்போகும் மனைவிக்கு சமைப்பதற்கு "ஆல் த‌ பெஸ்ட்" சொல்வதுடன் முடிகிறது. ஒரு சிற‌ந்த திரைக்கதைக்கு இணையான சுவாரசியத்துடன் சொல்லப்பட்டிருப்பது இப்புத்தகத்தை தனித்தன்மையுடன் நிற்கச்செய்கிறது.

அடிப்படையில் இப்புத்தகம் பேச்சிலர் வாழ்க்கையின் சில்லறைத் தொந்தரவுகளுக்கு தீர்வு சொல்லும் வழிகாட்டியாகவே எழுதப்பட்டுருந்தாலும் (கிழக்கு பதிப்பகமே இதை Non Fiction / Self Improvement என்று வகைப்படுத்தி ஒரு சுயமுன்னேற்ற நூலாகவே முன்வைக்கிறது), இதில் எடுத்தாளப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் சந்தர்ப்பங்க‌ளின் நிஜம் இதை, பொருளாதார ரீதியாக முன்னேறும் நாடு என்று தன்னைத்தானே வர்ணித்துக்கொள்ளும் ஒரு தேசத்தின் சமூகக்குறியீடான பேச்சிலர் என்கிற தனி இனக்குழுவைப் பற்றிய சமகால ஆவணமாகவே கருத வைக்கிறது.

வேலை நிமித்தம் திருமணத்துக்கு முன்பும் பின்புமாக சென்னையில் ஒன்றரை வருடம் (அண்ணா பல்கலை. விடுதியில் தங்கிய நான்கு ஆண்டு கல்லூரி நாட்கள் கணக்கில் வராது), பெங்களூரில் ஒரு வருடம் என் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அறிமுகமான + அறிமுகமற்ற நபர்களுடன் அறைவாசிகளாக இருந்த அனுபவத்தில் சொல்கிறேன் - இந்தப்புத்தகத்தில் வாழ்க்கைக்கூறுகளாக சொல்லப்பட்டிருக்கும் அத்தனையும் வரிக்கு வரி உண்மைகள் (இதோ இதை எழுதும் இந்தக்கணம் கூட மனைவி ஊருக்குச் சென்றிருக்கும் காரணத்தால் ஒரு தற்காலிக பேச்சிலர் வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்).

சில சமயங்களில் புத்தகத்தில் சொல்லப்பட்ட தவறுகள் செய்பவனாவகவும், பல சமயம் பிறர் தவறுகளால் பாதிக்கப்படுபவனாகவும் வாழ்ந்த அந்த ஆண்டுகள் ஒரு மகா அனுபவம். மனித மனதின் பல்வேறு சத்தியக்கூறுகளை சூழ்நிலைகளில் மாறும் அதன் குணங்களை புரிந்து கொள்ள உத‌வும் ஒரு சோதனைச்சாலையாகவே இது போன்ற அறைகள் அமைகின்றன. தன்னைத்தானே சுயமதிப்பீடு செய்து கொள்ள இன்னாள் பேச்சிலர்களும் தம் இளமைக்கால நினைவுகளை பின்னோக்கிப் பார்க்க முன்னாள் பேச்சிலர்களும் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களின் சுவாரசியம் கருதி மற்றவர்களும் இந்தப்புத்தகத்தை தாரளமாய்ப்படிக்கலாம்.

பேச்சிலர் வாழ்க்கையின் முக்கியக்கூறுகளான அறை வாடகை, பணம் கைமாற்று, சுய சமையல், பொருள் பகிர்தல், பொழுதுபோக்கு வழிகள், தனிமை தொந்தரவு, உடைமை பாதுகாப்பு, நட்பின் எல்லைக்கோடு, காதல் விஷயங்கள், விடுமுறை கழித்தல் போன்றவை பற்றி சுருக்கமான கட்டுரைகள், இந்த வாழ்க்கை பற்றிய‌ ஒரு மேலோட்டமான வரைபடத்தை அளிக்கின்றன (பின்னிணைப்பாக சில bachelor specific சமையல் குறிப்புகளும் தரப்பட்டிருக்கிறது). புத்தகத்தில் குறையென்று சொல்லப்போனால் பேச்சிலர் வாழ்க்கையின் ஆதார சுருதியான விரக தாபத்தையும் அது சார்ந்த அம்சங்களையும் (ஹோமோசெக்ஸ் அளவுக்கு போக வேண்டாம், மலரினும் மெல்லிய விஷயங்களையாவது சொல்லியிருக்கலாம்). திட்டமிட்டே அதை தவிர்த்திருப்பதாகவே தெரிகிறது.

இது போன்ற பிரச்சனைகள் யாவையும் மிதப்படுத்துவதற்காய் ஆசிரியர் முன்வைக்கும் வழிமுறைகளின் ஆதாரக்கருத்துக்கள் இரண்டே இரண்டு தான் - 1.அவசியமென்றால் விட்டுக்கொடு, 2.அனாவசியமாக விட்டுத்தராதே. பேச்சிலர் வாழ்க்கையின் சிக்கலான அத்தனை கேள்விகளுக்கும் இப்புத்தகத்தில் விடை உண்டு என்று பினட்டைக்குறிப்பு சொல்கிறது. அது பற்றி என்னால் உறுதி படுத்த முடியாது. ஆனால் இதில் சொல்லப்பட்டுள்ள அனைத்தும் ஏதவாது ஒரு கணத்தில் ஒவ்வொரு ஒண்டிக்கட்டையும் உணர்ந்தாகவே இருக்கும். அதுவே இபுத்தகத்தின் வெற்றி என‌க்கருதுகிறேன்.

ஆசிரியர் சிபி கே. சாலமன் இதுவரை கிட்டத்தட்ட நாற்பது புத்தகங்கள் எழுதியிருப்பதாகத் தெரிகிறது - அத்தனையும் சுயமுன்னேற்ற நூல்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சிறு சிறு வாக்கிய‌ங்களில், தெளிவாய் சொல்லிச்செல்லும் நல்ல நடை. இன்றைய தேதியில் தமிழில் மிக அதிகமாய் அதே சமயம் மிகத் தரமாய் பல்வேறு பரந்த தளங்களில் வெகுஜன வாசிப்பைக்குறி வைத்து புத்தகங்கள் வெளியிடும் ஒரு நிறுவனமாக New Horizon Mediaவைப் பார்க்கிறேன் (விகடன் பிரசுர‌த்திற்கு இணையாய் என்று சொல்லலாம்). இன்னும் சொல்லப்போனால், எதிர்காலத்தில் என் கவிதைகளோ, வலைப்பதிவுகளோ, அல்லது இன்ன பிறவோ தொகுப்பாய் வெளிவர நேருமென்றால் NMH வெளியீடாகவே வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

வேலை தேடி அல்லது வேலை நிமித்தம் சென்னை, பெங்களூர் அல்லது இன்ன பிற சிறு, பெரு, நடுத்தர நகரங்களுக்கு வரும் அனைத்து பேச்சிலர்களுக்கும் இப்புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன் (இவர்கள் அனைவரும் வாங்கினாலே சாலமனும், பத்ரியும் கோடீஸ்வரர்களாகி விடலாம். பிரச்சனை என்னவென்றால் பேச்சிலர்கள் யாரும் காசு கொடுத்து வாங்க மாட்டார்கள். அறையில் வேறு யாராவது வாங்கினால் படித்துக்கொள்ளலாம் என காத்திருப்பார்கள். வாங்கித்தர யாராவது ஆவுடையப்பன் வர வேண்டும், தூத்துக்குடியிலிருந்து).

புத்தகம் பற்றிய சிறுகுறிப்பு:
புத்தகம் : ஒண்டிக்கட்டை உலகம்
ஆசிரியர் : சிபி கே. சால‌மன்
ISBN : 978-81-8368-549-8
வகை : சுயமுன்னேற்ற நூல்
முதல் பதிப்பு :‍ நவம்பர் 2007
விலை : ரூ.70/-
பக்கங்கள் :‍ 144
வெளியீடு : கிழக்கு பதிப்பகம் (New Horizon Media)
முகவரி : 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
செல்பேசி : +91-9941003635/9884279211
தொலைபேசி : +91-44-4200-9601/03/04
தொலைநகல் : +91-44-43009701
மின் அஞ்சல் : support@nmh.in
வலைதளம் : www.nmh.in
ஆன்லைனில் வாங்க : http://nhm.in/printedbook/596/Ondikkattai%20Ulagam

Comments

Anonymous said…
Balakumaranin "seval pannai" polava?kandippaga padithuvittu solkiren.
@sunsarii
Not exactly - But something like that.
This is a non-fiction talking more about the problems and propose solutions for them.
Anyway, It's good to read.
Anonymous said…
Not exactly - But something like that.
what is this?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்