வீ [சிறுகதை]

மெலினா மல்லாக்கப் படுத்து வெண்பஞ்சுத் துணுக்குகள் மிதந்த வானத்து நீலத்தைப் பார்த்திருந்தாள். பழுப்புக் கழுத்துடைய சாம்பல் நிறப் பட்சிகள் சீர்மையுடன் பறந்து அக்காட்சியை ஊடறுத்தன. ஷைர் நதி பொசிந்து அரும்பியிருந்த புத்தம் புதுப் புற்கள், செழிக்கத் துவங்கியிருந்த அவள் பிருஷ்டத்தின் அதிமென்மையை விரும்பியிருந்தன.


கருப்பின் மினுமினுப்பு படர்ந்த அவளது முகத்தில் திகட்டாத அழகு திட்டுத்திட்டாய் அப்பியிருந்தது. அதை ஊர்ஜிதம் செய்ய அவ்வப்போது நிலைக்கண்ணாடி பார்ப்பாள்.

தான் அழகென நன்கறிந்த பெண்ணின் அலட்டலை, அலட்சியத்தை விட தான் அழகு தானா என அவ்வப்போது எழும் சந்தேகத்தைச் சமாதானம் செய்து மெனக்கெடுபவள் அதிரூபசுந்தரி ஆகிறாள். மெலினா அதன் உச்சம் நோக்கி நகரும் பருவத்திலிருந்தாள்.

“மெலினா…”

டொமினிக்கின் அழைப்பு அவளது தலையையும் உற்சாகத்தையும் உயர்த்தச் செய்தது.

அவன் குரல் உடைந்து கொண்டிருப்பதை அவள் கடந்த சில நாட்களாகவே கவனித்து வந்திருந்தாள். அவளுக்கு அவனது முந்தைய கீச்சுக் குரல் தான் பிடிக்கும் என்றாலும் இந்த மாற்றத்தில் நுழைந்து வரும் முரட்டுத்தனமும் வசீகரிக்கத் துவங்கி இருந்தது.

“ஆண்கள் வயதுக்கு வருவதை உணர்த்துவது தான் அந்தக் குரல் மாற்றம் மெலினா.”

அம்மாவிடம் சில தினங்கள் முன் இதைப் பற்றி கேட்ட போது அப்படிச் சொன்னாள்.

“நான் எப்போது வயதுக்கு வருவேன், அம்மா?”

அம்மா மெலினாவைக் கட்டிக் கொண்டாள். அக்கதகதப்பில் அவள் மீதான மொத்தப் பிரியத்தையும் உணர்த்தினாள். அதைத் தாண்டிய ஒரு கவலையும் ஒட்டியிருந்தது.

“அதற்கென்ன இப்போது அவசரம், மெலினா?”

“உன்னைக் கிராமம் முழுக்கத் தேடினால், இங்கே வந்து தூங்குகிறாயா?”

மெலினா புன்னகைத்தாள். இந்த டொமினிக் ஏன் தன் மீது இப்படி அதீதமாய்ப் பிரியம் கொண்டிருக்கிறான்? அவளைவிட இரண்டு வயது பெரியவன். அவனும் அவள் பள்ளி தான். படிப்பிலும் விளையாட்டிலும் முந்தி ஆசியர்களின் பிரியத்துக்கு உரியவனாய் இருந்தான். மெலினாவின் தெருவிலேயே நான்கு வீடுகள் தள்ளி அவன் வீடிருந்தது.

அவனுக்கு அம்மா கிடையாது. அவன் பிறந்த போதே ரத்தப்போக்கில் செத்துப் போய் விட்டாள் என்பார்கள். ஆனால் அவள் அது பற்றி அவனிடம் மறந்தும் கேட்டதில்லை. அவன் தந்தை ஊரறிந்த ஒரு குடிகாரர். அவளுக்குப் பால்பற்கள் முளைக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே அவள் டொமினிக்குடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

அவள் வேண்டுமென்றே எழவில்லை. பதிலும் தரவில்லை. அவன் பக்கம் வந்தால் கை தந்து எழுப்பி விடுவான். அவள் அதை விரும்பினாள். மௌனமாய்க் கிடந்தாள்.

டொமினிக் அருகே வந்து நின்றான். அவனது பெரிய கண்களில் உயிர்ப்பு ததும்பியது. மல்லாக்கப் படுத்துப் பார்க்கையில் உயரமான அவன் கூடுதல் உயரமாகத்தெரிந்தான்.

பதினேழு நிறங்கள் நிறைந்த சட்டையும் கருநீல வண்ணத்தில் அரைக் கால் சராயும் அணிந்திருந்தான். வலக்கையில் எதையோ முதுகுக்குப்பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு சிரித்தான். மெலினா அதை எட்டிப் பார்க்க முயன்று தோன்று வினவினாள்.

“என்ன அது?”

“நீயே கண்டுபிடி.”

“தெரியலயே.”

“சும்மா, ஏதாவது ஊகித்துச் சொல்லேன்.”

“ம்ம்ம். எம்பட்டாட்டா.”

“நீ எப்போதும் தின்பதிலேயே இரு. வர வர குண்டாகி வருகிறாய்.”

நாணமும் அவமானமும் ஒருசேர எழவும், அவற்றை எரிச்சலாய் மிகைபெயர்த்தாள் –

“சரி, காட்டித் தொலை.”

டொமினிக் அசட்டுச் சிரிப்புடன் அவளருகே முட்டியிட்டு அமர்ந்து, கையை முன்னே கொண்டு வந்து காட்டினான். அது மரத்தாலான முகமூடி. அதன் வளைவு ஒன்றில் வெயில் பட்டு வைரம்கணக்காய் ஜ்வலித்தது. மெலினா அதை வியப்பாய்ப் பார்த்தாள்.

“உனக்குத் தான். நானே செஞ்சேன்.”

மெலினா சட்டென எழுந்து கொண்டு அதை வாங்கித் திருப்பித் திருப்பிப் பார்த்தாள். மிக அழகானதொரு பெண்ணின் முகம் அது. அவளது சாயல் இருப்பதாகப் பட்டது.

“நீ பெரியவளானால் இப்படித்தான் இருப்பாய்.”

“நான் இப்போதே பெரியவள் தான்.”

“இல்லை. கண்ணாடியில் பார். உனக்குக் குழந்தை முகம்.”

அவள் முகத்தில் ரத்தம் பாய்த்தது. அதை மறைக்க அம்முகமூடியைத் தன் முகத்தில் வைத்தாள். மிகக் கச்சிதமாய் அவளது அளவெடுத்துச் செய்தாற் போல் பொருந்தியது.

“நீ பேரழகி!”

டொமினிக் அப்படிச் சொன்னதும் பிரபஞ்சத்தின் சகல நக்ஷத்திரங்களும், கிரகங்களும், நிலவுகளும், இன்ன பிற துகள்களும் உறைந்து போனதாய்த் தோன்றிய அந்தத் தேவ கணத்தில் அடிவயிற்றில் ஒரு வலி தோன்றியூறி மெலினாவின் பாவாடை சிவந்தது.

*

வரைபடத்தில் கண்டால் கால்களுக்கிடையே வைத்த சானிடரி நாப்கினைப் போலத் தோன்றும் தேசம் மலாவி. அதன் தென்னகத்தே வெகுகீழே இறுதிச்சொட்டு சிறுநீர் போன்று தோன்றும் மாவட்டம் என்சாஞ்சே. அங்கே இருக்கும் ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத கிராமத்தில் தான் இந்தக் காட்டுமிராண்டி வழக்கம் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. மதமும், மக்களும், அரசும் சேர்ந்து நிகழ்த்தும் மனிதமற்ற அநியாயம்.

எல்லியட் கணினியில் திறந்திருந்த வேர்ட் கோப்பில் அதை உள்ளிட்டுச் சேமித்தார்.

அவர் ஐரோப்பிய தேசமொன்றைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேசிய ஊடகம் ஒன்றில் பணிபுரிகிறார். பதினெட்டு ஆண்டுகள் பழைமையேறிய சிவாஸ் ரீகல் ஃபுல் போத்தலை தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதியறையில் கால்வாசி திரவம் மிச்சம் வைத்துக் கிளம்புமளவு கொழுத்த சம்பளம். அவர் பிறந்த மொசாம்பிக் நாடு இருண்ட கண்டம் என்று பிற கண்டங்களால் அழைக்கப்படுகிற ஆஃப்ரிக்காவில் உள்ளது. அவர் பத்திரிக்கையாளராக ஆக நினைத்ததே அந்த பிம்பத்தை மாற்றும் முனைப்பில் தான்.

அதன் பகுதி தான் இப்போது அவர் எடுத்திருக்கும் பணி. தனிப்பட்டும் அது அவருக்கு முக்கியமானது. குறிப்பிட்ட கிராமத்தில் பாரம்பரியமாய் நிலவுகிற ரகசியச் சடங்கை உலகின் பார்வைக்குக்கொண்டு வருவதே நோக்கம். அதன் மூலம் அதை நிறுத்துவது.

அதை விரிவாய் ஆராய்ந்து எழுத நேரடியாகவே அங்கே வந்திருந்தார். அவரும் அந்த கிராமத்தினரின் மங்கஞ்சா இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர்களின் நியஞ்சா பாஷையறிந்தவர் என்பதாலும் நிறுவனம் அவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தது.

மக்கள் வாயைத் திறக்க முதலில் அவர்கள் நம்மவர் என எதிரில் இருப்பவரை நம்ப வேண்டும் - ஆஃப்ரிக்கக் கண்டத்தில் இன்றுள்ள ஐம்பத்து நான்கு திவ்ய தேசங்களுள் முப்பதுக்கும் மேற்பட்டவற்றிற்குப் பயணித்த கால் நூற்றாண்டு நிருபர் அனுபவத்தில் எல்லியட் கண்டுணர்ந்தது இது தான். சொற்கள், முக பாவங்கள், உடல் மொழி வழி எப்படி மாயமாய் அந்நம்பிக்கையை உருவாக்குவது என்பதில் அவர் ஒரு விற்பன்னர்.

அதன் மூலமாகவே அவர் படிப்படியாய் மேலேறினார். அவர் கிராமத்தில் மற்ற எவர் அடைந்த உயரத்தைவிடவும் பணம், புகழ், பெண் என அவர் தொட்டது அதிகம். அவர் இன்று வந்திருக்கும் இடத்துக்கு நிதமும் கல்விக்கும் கடவுளுக்கும் நன்றி சொல்பவர்.

எல்லியட் சொந்த வாகனத்திலேயே மொஸாம்பிக்கிலிருந்து மலாவிக்குள் நுழைய முடிந்தது. மொஸாம்பிக் பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு மலாவிக்குச் சுற்றுலா வர விஸா அவசியமில்லை. அவர் ஊடகக்காரர் என்பதால் எல்லையில் கேள்விகள் ஏதுமில்லை. தவிர, ஐம்பது வயதுக்கு மேற்பட்டோரை எவரும் சந்தேகிப்பதில்லை.

ஜெர்கின், ஷூ, கூலர்ஸ், வாயிலிட்ட இளஞ்சிவப்பு பபிள் கம், இருபுறமும் மாட்டிய தோள் பை சகிதம் ஹாலிவுட் திரைப்படத்தில் துணைநடிகராய் வருகின்ற கருப்பின ஆசாமி போல் தென்பட்டார் எல்லியட். அதனாலேயே வினோதமாய்ப் பார்க்கப்பட்டார்.

மலாவி அந்த மே மாத அதிகாலையில் மார்ச்சுவரிப் பிணம்போல் குளிர்ந்து கிடந்தது. அடுத்த எழுபத்தி இரண்டு மணி நேரத்துக்குள் வேலையை முடிப்பது அவரது இலக்கு.

அக்கிராமத்தில் நுழைந்ததும் முதலில் அவர் விசாரித்தது விபச்சாரத்துக்குப் பெண்கள் ஏற்பாடு செய்யும் ஆளைப் பற்றி. இளைஞன் ஒருவன் மிகுதியாக இளித்தபடி கூட்டிப் போனான். ஓர் ஊரின் அத்தனை தொடர்புகளையும் கொண்டிருப்பவன் விபச்சாரத்தை ஒருங்கிணைப்பவன் தான். அதனால் எதையும் அவனிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பது அவருக்குப் பாலபாடம். அவர் வந்திருப்பது பெண்களைத் தேடி அல்ல என்று உறைத்ததும் முகம் தொங்கிப் போனவனின் சட்டையில் உடனே சில க்வாச்சாக்கள் திணித்து அந்த கிராமத்தின் இன்கோசியை அறிமுகம் செய்து வைக்கச் சொன்னார்.

இன்கோசியின் ஆசி இருந்தால் மட்டுமே சடங்கின் ஆணி வேரை அடைய முடியும்.

சடங்கு எளிமையானது. பெண்கள் வயதுக்கு வந்ததும் அக்கிராமத்தின் தெய்வ ஆண் அவளைப் புணர்ந்து சிறுமி என்பதிலிருந்து பெண் என்பதற்குள் அழைத்து வருகிறான்.

*

மெலினா வீட்டுக்கு வந்து தடுமாறி விஷயத்தைச் சொன்னபோது அவள் அம்மாவுக்கு மகிழ்வதா, வருந்துவதா எனத் தெரியவில்லை. வழமை போல் வயலுக்குக் கிளம்பிப் போயிருந்த தன் கணவனைச் செல்பேசியில் அழைத்துச் சொல்ல முயன்று தொடர்பு கிட்டாததால் நேரில் போய் விஷயத்தைச் சொல்லி வர டொமினிக்கை அனுப்பினாள்.

விஷயம் கேள்வியுற்று அக்கம்பக்கத்தில் எல்லோரும் வந்து அவளை வேடிக்கைப் பொருள் போல் பார்த்தும் விசாரித்தும் போனார்கள். அவளுக்கு மிகவும் சங்கடமாய் இருந்தது. அது போக, இந்த டொமினிக் போய் அப்பாவிடம் என்னவென்று சொல்லி அழைத்து வருவான் என்றும் குழப்பமாய் இருந்தது. அவனுக்கு இது என்னவென்று தெரியுமா? எனக்கே இன்னும் சரியாய்ப் புரியவில்லை. அம்மா அவளைக் குளிக்கச் செய்து, இருந்ததில் நல்ல ஆடை ஒன்றைத் தேர்ந்தெடுத்து உடுத்தி விட்டிருந்தாள்.

அப்பா வீட்டுக்கு வந்த போது மெலினா வீட்டின் ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தாள்.

“என்ன ஆச்சு?”

“டொமினிக் சொல்லலையா?”

“ஒண்ணும் சொல்லாமல் கையைப் பிடிச்சு தரதரன்னு இழுத்துட்டு வந்துட்டான்.”

மெலினாவுக்குச் சிரிப்பு வந்தது. ஓரக்கண்ணால் பார்த்தாள். டொமினிக் வீட்டுவாசலில் நின்று கொண்டு அவளை எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. தான் அழகாய் இருக்கிறோமா என யோசனை வந்து கண்ணாடி பார்க்க எத்தனித்தாள். கண்ணாடிக்கு அருகே டொமினிக் தந்த முகமூடி இருந்தது. வீட்டுக்கு வந்ததும் அவளது கையில் இருந்ததை வாங்கி அம்மா அங்கே வைத்திருக்கிறாள். கண்ணாடியில் பார்க்க என்ன இருக்கிறது! நான் எப்படி இருந்தாலும் டொமினிக்கிற்கு அந்த முகமூடியில் இருக்கும் பெண்ணாய்த் தானே தெரிவேன். மிக அழகான, பெரியவளாகி விட்டதொரு பெண்!

அதற்குள் அம்மா அப்பாவிற்கு எல்லாமும் சொல்லி இருந்தாள். இப்போது அவர்கள் திருட்டுத்தனம் செய்கிற கிசுகிசுப்பான குரலில் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

“டோரதிக்குச் சொல்லி விடனும்ல?”

“ம். எப்படிச் சொல்லாம இருக்கறது?”

“ஆமா. ஏற்கனவே சுத்தி இருக்கறவங்களுக்குத் தெரிஞ்சிடிச்சு.”

“யாரும் சொல்லலைனாலும் அந்தச் சாமியாரினிக்குத் தெரியாமல் போய் விடுமா?”

“ம். தவிர, ஊரைப் பகைச்சிக்க முடியுமா?”

அப்பா மெலினாவின் அருகே வந்து வாஞ்சையாய் அவள் தலைமுடியைத் தடவிக் கொடுத்தார். அவள் அவரைக் கட்டிக் கொள்ள முயன்றாள். மிக நாசூக்காய் அதை மறுதலித்து ஓர் இடைவெளியைப் பேணினார். மெலினாவுக்குப் புரிந்தது. எல்லாம் மாறி விட்டது. இனி அவளால் அப்பாவைத் தொட முடியாது. தன் இஷ்டம் போல் விளையாட முடியாது. டொமினிக்கிடம் முன்பு போல் இயல்பாய்ப் பேச முடியாது.

“டோரதியிடம் யாரை அனுப்புவது?”

“டொமினிக் இருக்கான்ல…”

“விவரமாச் சொல்லிட்டு வருவானா?”

அப்பா அதற்குப் பதில் சொல்லாமல் வாசலுக்குப் போய் டொமினிக்கை அழைத்து, அவன் காதில் சொல்ல ஆரம்பித்தார். மெலினாவுக்கு ஏனோ அது பிடிக்கவில்லை.

*

இன்கோசி என்றழைக்கப்பட்ட கிராமத் தலைவருக்குத் தான் வந்திருக்கும் நோக்கைப் புரிய வைப்பதற்குள் எலியட்டுக்குப் போதும்போதுமென்றாகி விட்டது. முதலில் அவர் அந்த விபச்சார மேலாண்மை ஆசாமியையும் கடிந்து கொண்டார். அவருக்கு எழுபது வயது சொன்னால் நம்பலாம் என்றாலும் நிச்சயம் அதை விட அதிக வயதுடையவர் எனத் தோன்றியது. தலையின் சுருண்ட சடை முடிகள் வெண்மை எய்தியிருந்தன.

“இது எம் பாரம்பரியம். இதில் வேற்றாள் அறிந்து கொள்ள என்ன தான் இருக்கிறது?”

அக்கிழவரிடம் எதிர்மறையாய் ஒரு சொல்லும் உச்சரிக்கலாகாது என்று தீர்மானம் செய்து கொண்டிருந்தார் எல்லியட். மிகக் கவனமாக வார்த்தைகளைக் கோர்த்தார்.

“ஆப்ஃரிக்காவின் புராதனப் பண்பாடு எஞ்சியிருக்கும் கிராமங்களில் உங்களுடையதும் ஒன்று. இதன் கலாசார வளத்தை உலகம் அறியும்படி செய்வது தான் எனது விருப்பு.”

“அதைத் தெரிந்து கொண்டு உலகம் என்ன செய்யப் போகிறது?”

“அது உங்களுக்குப் பெருமையல்லவா?”

“ஆனால் நீங்கள் இதைக் கீழ்மையாக அல்லவா பார்க்கிறீர்கள்?”

“அது சரியாகப் போய்ச் சேராததால் தான். தாயின் முலையில் அமுதருந்தும் ஆண் குழந்தையைக் கூட மிக ஆபாசமாகச் சித்தரிக்க வல்லவை இன்றைய ஊடகங்கள்.”

“சரி, இதனால் எனக்கு என்ன கிடைக்கும்?”

“இரண்டு விஷயங்கள். ஒன்று பிரபலம் அடைவீர்கள். இணைய தளங்களில், செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் உங்கள் முகம் வரும். இரண்டு பணம். ஒருவேளை புகழ் பெறுவதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் பணம் மட்டும் வாங்கலாம்.”   

தொலைக்காட்சி என்ற சொல் அவரை எங்கோ இளக்கமான இடத்தில் தட்டியிருக்க வேண்டும். யோசிக்கவும் ஆலோசிக்கவும் அவகாசம் கேட்டார். எல்லியட் வெளியே வந்து ஈ-சிகரெட் எடுத்து உயிர்ப்பித்து வாயில் வைத்துப் புகைத்தார். அதிலிருந்து பொங்கி எழுந்த நீராவியை கண் மூடி நுரையீரலுக்கு இழுத்து வெளியேற்றினார்.

இன்கோசி வீட்டுக்குள் ஓர் இளம் பெண்ணிடம் கீழ்க்குரலில் பேசுவது வார்த்தைகளாக அன்றி ஒலியாக மட்டும் வெளியே மிதந்துவந்தது. அது அவரது மகளோ, மருமகளோ என்ற எல்லியட்டின் கணிப்புப்பொய்த்து அவரது சமீபத்திய மனைவி என்பது புரிந்தது.

இன்கோசி வெளியே வந்து முகமெல்லாம் சிரிப்பாய் எல்லியட்டை எதிர்கொண்டார்.

“சரி, உங்களுக்கு என்ன மாதிரி உதவி வேண்டும்?”

“இந்தச் சடங்கை நடத்திக் கொடுப்போரிடம் என்னை அழைத்துப் போக வேண்டும்.”

நீண்ட தயக்கத்துக்கும் யோசனைக்கும் பின்பாக அவர் எல்லியட்டை சாமியாரினியின் வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சம்மதித்தார். ஆனால் முன்கூட்டியே பணம் கொடுத்து விட வேண்டும் எனக் கறாராய்ச் சொல்லி எண்ணி வாங்கி இளம் மனைவி கையில் நடுங்கிக்கொண்டே திணித்தார். அவள் எல்லியட்டைப் பார்த்து ஆபத்தாய்ச் சிரித்தாள்.

அந்தக் கிராமம் அதிகபட்சம் நான்கே முக்கால் சதுர மைல்களுக்குள் அடங்கி விடும். எல்லியட் வந்த கார் வேண்டாம் என்று சொல்லி நடத்தித் தான் அழைத்துச் சென்றார் இன்கோசி. பனிப்பெய்யும் பருவம் எனினும் வியர்த்தது. எல்லியட் முணுமுணுத்தார்.

*

அம்மா முதலில் தரித்த கரு கலைந்ததும் சில ஆண்டுகள் காத்திருந்த ஏக்கத்தினூடே வந்து நிறைந்தவள் மெலினா. அதன் பின் ஓர் ஆண் மகவுக்கு அவர்கள் முனைந்தும் கடவுள் அருளவில்லை. ஒரே செல்ல மகளாக அவ்வீட்டில் ராஜாங்கம் நடத்தினாள். அந்தக் கிராமத்தில் வீட்டு வேலைகள் தெரியாமல் எந்தப் பெண்ணும் வளர்வதில்லை. ஆனால் அம்மா அவளை அவளுண்ட எச்சில் தட்டைக் கூட எடுக்க விட மாட்டாள்.

மெலினாவின் அம்மா அவளுக்கு உடற்தூய்மை பேணுவது பற்றிச் சொல்லித்தந்தாள்.

பல அழகுசாதனப் பொருட்களோடு சானிடரி நேப்கினும் சமீப வருடங்களாக அவர்கள் கிராமத்தில் பரவலாகிக் கொண்டிருந்தது. அதைப் பயன்படுத்துவதைப் பெருமையாக, மேல்தட்டுச் சொகுசாகப் பார்த்தார்கள். தனக்குக் திருமணமான புதிதில் பிரேஸியர் அப்படித் தான் அந்தக் கிராமத்தினரால் பார்க்கப்பட்டது என்றாள் அம்மா. அவள் ப்ரா அணிவதை ஏதோ பாவச் செயலாகத் தன் மாமியார் பார்த்தாள் என்றும் சொன்னாள்.

அது ஒழுக்கக் கட்டுப்பாடு என்பதை விட சுதந்திரம் குறித்த ஒரு பொறாமை தான். ஒவ்வொரு தலைமுறையிலும் அப்படி ஏதாவதொன்று பெண்களுக்கு வந்துவிடுகிறது.

அம்மா இன்னும் துணி பயன்படுத்துகிறாள் என்றாலும் பக்கத்து வீட்டு வயலட்டிடம் விசாரித்து மெலினாவுக்கு சில ஜதை சானிடரி நேப்கின்கள் வாங்கி வந்திருந்தாள்.

மாதச் சுழற்சியின் போதான உடல், மன உபாதைகள், பள்ளியில் விலக்கு ஆனால் பதறாமல் கையாள வேண்டிய முறை, அந்நாட்களில் செய்யக்கூடாத விஷயங்கள், சுத்தமின்மையால் ஏற்படக்கூடிய நோய்த் தொற்றுக்கள், அவற்றின் அறிகுறிகள் என ஒவ்வொன்றாகத் தலையணையில் பஞ்சை அடைப்பது போலச் சொல்லித் தந்தாள்.

கலவி, கர்ப்பம் பற்றி மிக மேலோட்டமாக வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னாள்.

“நாளை டோரதியைப் பார்க்கப் போவோம், மெலினா.”

மெலினா ஒரே ஒரு முறை சாமியாரினியின் குடிலுக்குச் சென்றிருக்கிறாள். ஏழெட்டு ஆண்டுகள் முன் கொடுங்கனவுகள் கண்டு பயந்து அடிக்கடி படுக்கையிலேயே சிறுநீர் கழித்து விடுகிறாள் என அம்மா அழைத்து வந்திருந்தாள். சில மந்திரங்கள் சொல்லி இடுப்பில் கயிறு கட்டி விட்டாள். கட்டுண்டது போல் அவளது ராப்பழக்கம் நின்றது.

“ம். எதற்கம்மா?”

“தெரியாதா உனக்கு?”

“ம். கொஞ்சம் தெரியும்.”

“அது போதும்.”

மெலினாவின் சினேகிதிகள் அவளைப் பார்க்க வந்து சூழ்ந்ததும் அம்மா விலகினாள்.

*

கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டதொரு சிறிய பள்ளத்தாக்குச் சரிவில் அமைந்திருந்தது வீடும் அல்லாத குடிசையும் அல்லாத அந்தக் குடில். காரில் அங்கே வந்திருக்க முடியாது என்பது புரிந்தது மூச்சு வாங்கியபடி இறங்கிய எல்லியட்டுக்கு.

சாமியாரினி என்று அழைக்கப்பட்ட அந்தப்பெண் வினோதமான உடுப்பில் இருந்தாள். கழுத்தில் ஏராள உலோக வளையங்கள். மேலாடைகள் ஏதும் அணிந்திருக்கவில்லை. உடம்பில் தொங்கிய நகைகளே அவளது மானத்தைக் காத்திருந்தன. அப்படி இல்லை என்றாலும் அவள் அதைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறவளாய்த் தோன்றவில்லை.

அவளது பெயர் டோரதி என்று முன்பே கிழவர் சொல்லி வைத்திருந்தார். ஆனால் அவளை ஒருபோதும் பெயர் சொல்லி அழைக்கலாகாது என்றும் எச்சரித்திருந்தார்.

முனையில் கங்கெரியும் சுருட்டொன்றை அவள் வாயில் வைத்து இழுக்க, புகை புவி ஈர்ப்பை ஏமாற்றி மேலெழுந்து பரவியது. டோரதியின் கண்களோடு சேர்ந்து மூன்று கங்குகள் புலப்பட்டன. அந்தக் குடில் முழுக்கப் புகையிலை மணம் நிரம்பியிருந்தது.

அவளுக்குத் தன்னை விட நான்கைந்து வயது தான் கூட இருக்கும் எனப் புரிந்தது எல்லியட்டுக்கு. இன்கோசி பொருட்படுத்தாமல் அவள் பாதம் பணிந்து வணங்கினார்.  அதனால் எல்லியட்டும் வேறுவழியின்றி டோரதி காலில் விழுந்தார். பத்திரிக்கைத் தொழிலில் மான அவமானம் பார்க்கக்கூடாது என்பது அவர் கற்ற மற்றொரு பாடம். கடைசியில் நிற்கப் போவது சாதனைகளே ஒழிய அச்சில்லறைச் சிராய்ப்புகள் அல்ல.

இன்கோசி கை கட்டி வாய் பொத்தி நின்று டோரதி காதில் ஏதோ சொல்லி விட்டுக் கிளம்பினார். நிச்சயம் அது தன்னிடம் பேசுவது பற்றிய எச்சரிக்கையாகவே இருக்கும் என்பது எல்லியட்டுக்கு நன்றாகத் தெரியும். அதை மீறி அவளைத் திறக்க வேண்டும்.

இன்கோசி இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பியதும் டோரதி பேசத்தொடங்கினாள்.

“எல்லியட். அது தானே உன் பெயர்?”

“ஆம்.”

“ஒருவர் மீது நம்பிக்கை வராததற்கு இரண்டு காரணங்கள் இருக்கும். ஒன்று அவரைப் பற்றி ஏதும் தெரியாது என்பதால். இரண்டு அவரைப் பற்றி நன்கு தெரியும் என்பதால். அவ்வகையில் நான் பத்திரிக்கைக்காரர்களை ஒருபோதும் நம்புவதில்லை, எல்லியட்.”

“மிகப் பழைய, கேட்டலுத்த பீற்றலாகத் தோன்றலாம் என்றாலும் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது - நான் மற்றவர்களைப் போல் இல்லை. என்னை நம்பலாம்.”

“நம்பிக்கைகளின் ஆகப்பெருஞ்சிக்கலே அடிக்கடி அவை பொய்த்துப் போவது தான்.”

“நீங்கள் செய்வதெல்லாம் மலாவி அரசுக்குத் தெரிந்தே, அவர்களின் ஆதரவுடன் தான் நடக்கிறது. இது தேசத்தின் பண்பாட்டோடு கலந்தவிஷயம். அதை எதிர்க்க அரசு ஒரு போதும் துணியாது. அப்படி இருக்கையில் நீங்கள் என்னைக் கண்டு அஞ்சுவது ஏன்?”

“அச்சமா! இது கவனம். பொறுப்பு. நிதானம்.”

“எனில், தயக்கமின்றிப் பேசலாம் தானே?”

டோரதி புன்னகைத்தாள். அது தவிர்க்கவியலாத சதுரங்க நகர்வு என விளங்கியது.

“சொல். உனக்கு என்ன வேண்டும்.”

“வயதுக்கு வந்த பெண்களுக்குக் கன்னி கழிக்கும் சடங்கு பற்றித் தெரிய வேண்டும்.”

“அப்படி ஆபாசத் தொனியில் சொல்லாதே. அந்தச் சடங்கின் பெயர் குசாஸா ஃபும்பி.”

“மிக நிச்சயமாய் நல்ல பெயர். ஆனால் பெயர் மட்டும் தானே நன்று!”

“ஏன் இதில் என்ன பிரச்சனை?”

“அபத்தமும் ஆபத்தும் பின்னிப் பிணைந்த ஒரு பழக்கமில்லையா இது?”

“உலகில் எச்செயலில் தான் இவ்விரண்டும் இல்லை? நீ உன் தாயின் புழையிலிருந்து விழுந்தது முதல் என்னிடம் பேசிக் கொண்டிருப்பது வரை எல்லாவற்றிலுமே உண்டு.”

“இது ஒரு மேலோட்ட ஒப்பீடு. அணு உலை, சோலார் பேனல் இரண்டும் விஞ்ஞானம் தான். இரண்டும் மின்உற்பத்தி செய்வது தான். அதற்காக அணு உலையை நம் வீட்டு மொட்டை மாடியில் நிறுவ அனுமதிப்போமா? எதிலும் அளவு என்பது மிக முக்கியம்.”

“சோலார் பேனலில் ஷாக் அடித்து இறந்தவர் ஒருவர் கூட இல்லையா, எல்லியட்?”

“இருக்கிறார்கள். ஆனால் இரண்டுக்கும் பாரதூர எண்ணிக்கை வித்தியாசம் உண்டு.”

“அது ஒரு மாயை. விமானப் பயணம் ஆபத்தானதா அல்லது பேருந்து, ரயில் பயணம் ஆபத்தானதா எனக் கேட்டால் எல்லோருக்கும் விமானப் பயணம் என்றே சொல்வர். ஆனால் அசல் புள்ளியியல் விபரம் எடுத்துப் பார். பேருந்திலும் ரயிலிலும் பயணித்து இறந்தவர்கள்தாம் சதவிகிதக் கணக்கில் அதிகம். அதற்கு என்ன காரணம் தெரியுமா?”

“…”

“விமானப் பயணத்தில் ஆபத்து அதிகம் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகம்.”

“ம்.”

“சரி, விமானத்திலிருந்து இறங்கு. விஷயத்துக்கு வா.”

“ம்ம்ம். சரி, இந்தச் சடங்கு பற்றிச் சொல்லுங்கள்.”

“இவ்வூரில் பருவத்தில் ருதுவாகும் ஒவ்வொரு பெண்ணும் ஆயிரக்கணக்கான துஷ்ட ஆன்மாக்களினால் சூறையாடப்படும் ஆபத்தில் இருக்கிறாள். அவள் மூலம் அவளது குடும்பமும் இதே தாக்குதலுக்கு உள்ளாகும். அவற்றை எல்லாம் தடுத்தாட்கொள்ளும் பொருட்டு இறைதூதர்கள் அருளிய முறை தான் இது. ஊரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் ஆண், கடவுளாக மாறி அந்தப் பெண்ணைப் புணர்ந்தால் அவளது தீட்டு அத்தனையும் விலகும். ஆபத்து அகன்று அவள் பூரணமாய்க் குடும்ப வாழ்க்கைக்குத் தயாராவாள்.”

“என் பார்வையில் இது ஒரு கொடூரமாகப் படுகிறது. வயதுக்கு வரும் போது ஒரு பெண்ணுக்கு அதிகபட்சம் பதின்மூன்று, பதினான்கு வயதிருக்கலாம். அது கலவிக்கு உரிய வயதா? மலாவியில் பெண்களின் அதிகாரப்பூர்வத் திருமண வயது பதினெட்டு.”

“அது மனிதர்கள் தம் வசதிக்காக எழுதி வைத்திருக்கும் செயற்கையான சட்டங்கள். கடவுள் அப்படி நினைத்திருந்தால் ஏன் ஒருத்தியை அவ்வயதில் மலரச் செய்கிறார்?”

“உடல் தயாராகி இருக்கலாம். ஆனாம் மனம்? அவள் இன்னும் குழந்தையல்லவா?”

“ஆன்மீகத்தில் ஆழப் புகுந்தால் உடல், மனம் இரண்டுமே ஒன்று தான், எல்லியட்.”

“இது இரக்கமற்ற நியாயப்படுத்தல்.”

“இதற்கு என்னிடம் பதிலில்லை.”

“ஒரு பெண் நாட்டின் அதிபராக உள்ள போதே மலாவியில் இது எப்படி நடக்கிறது?”

“அவர் நாட்டின் கலாசாரத்தை அறிந்தவர், அதன் மோசமான பக்கவிளைவுகளையும். அதனால் இரண்டையும் விட்டுக் கொடுக்காது ஒருங்கே சமன் செய்ய முயல்கிறார்.”

“அப்படியா?”

“அவர் பதவியேற்ற போது ஆற்றிய உரையை அறிவாயா?”

“இல்லை. அல்லது நினைவில்லை.”

“I want all of us to move into the future with hope and with the spirit of oneness and unity... I hope we shall stand united and I hope that as a God-fearing nation we allow God to come before us, because if we don't do that then we have failed.”

சாமியாரினி அத்தனை துல்லிய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுவாள் என எல்லியட் எதிர்பார்க்கவில்லை. அக்கணத்தில் அவ்வளவு கம்பீரமாய், அத்தனை நளினமாய்த் தோன்றினாள். தன்னையே தேச அதிபராகக் கருதிக் கொள்கிறாளோ எனப்பட்டது.

“இம்மாதிரி மயிர்க்கூச்செரியும் சொற்கள் எல்லாத்தலைவர்களும் உதிர்ப்பது வழக்கம் தான். ஆனால் இதைச் செயல்படுத்திக் காட்டியதற்கு உதாரணம் சொல்ல முடியுமா?”

“இச்சடங்கினால் எய்ட்ஸ் பரவ வாய்ப்புண்டு என்பது உண்மையே. அப்படித் தொற்றுப் பெற்று இறந்த ஆண் கடவுள்கள் இருக்கிறார்கள். சிலர் வியாதி குறித்த அச்சத்தில் இந்த வேலையைக் கைவிட்டனர். அதனால் தான் இருபதாண்டுகளுக்கு முன் ஏழாக இருந்த ஆண் கடவுளர் எண்ணிக்கை இன்று அருகி ஒன்றாகி விட்டது. எம் அதிபர் இதை உணர்ந்து கிராமத்தின் ஆண் கடவுளுக்கு மாதமொரு முறை ரத்தமெடுத்து ஹெச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். என்சாஞ்சே மாவட்ட அரசு மருத்துவமனையிலிருந்து ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியும் ஆண் கடவுளின் வீட்டுக்கு ரத்த மாதிரி சேகரிக்க ஆள் வந்து விடும். மூன்று நாளில் பரிசோதனை முடிவை எனக்குத் தொலைபேசியில் அழைத்துச்சொல்லி விடுவார்கள்.”

“…”

“அவர்களுக்கு என்ன ஏதென்று தெரியாது. ரத்தம் எடுத்துப்போவது மட்டுமே அவர்கள் வேலை. பரிசோதகர்களுக்கு ரத்தம் யாருடையது என்பது தெரியாது. எனக்குப் பேசிச் சொல்பவருக்கு நான் யாரென்று தெரியாது. இப்படி மொத்தமும் ரகசியமாக நடக்கும்.”

“நைஸ் வொர்க்.”

“சமீப முப்பது நாட்களுக்குள் வந்த பரிசோதனை முடிவு கைவசம் இல்லை என்றால் சடங்கு நடக்காது. மாதிரி அனுப்பிக் காத்திருக்க வேண்டியதுதான். நான் அதற்கேற்பச் சடங்குக்கு நாள் குறிப்பேன். நானும் கிராமத்து இன்கோசியும் ஆண் கடவுளும் இதை ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டிருக்கிறோம். மீறினால் சிறை செல்ல நேரிடும். மேலும் கடுமையான தண்டனைகள் பெறும் வாய்ப்புண்டு. அதிபரே என்னை நேரில் அழைத்துச் சொல்லி இருக்கிறார். கடந்த ஈராண்டுகளாக இப்படித்தான் நடக்கிறது.”

“எய்ட்ஸ் தவிர வேறு பாலியல் நோய்களும் வர வாய்ப்புண்டு தானே?”

“பரிசோதனை எல்லா ரோகங்களையும் உள்ளடக்கியதே.”

“இதற்கு பதில், சுலப மார்க்கமாக அந்த ஆண் கடவுள் ஆணுறை அணியலாமே!”

“சடங்கு விதிமுறைப்படி அதற்கு அனுமதியில்லை. ஆண் கடவுள் பூரணமாக அந்தப் பெண்ணைக் கலக்க வேண்டும். உயிர்த்துளி அவளுள் இறங்க வேண்டும். அப்போது தான் உத்தேசித்த பலன் கிட்டும். அதனால் நிச்சயமாய் ஆணுறை அணியலாகாது.”

“நோய்த் தொற்று வராது, சரி. ஆனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்து விட்டால்?”

“ஆச்சரியகரமாய் இதுவரை அப்படி நடந்ததே இல்லை. முப்பதாண்டுகளாக இதைப் பார்க்கிறேன். ஆனால் ஒருமுறையும் அப்படி நடந்ததில்லை. எனக்கு முன்பு இருந்த சாமியாரினியும் இதைச் சொல்லியிருக்கிறாள். இது நிச்சயம் கடவுளின் அருள்தான்.”

“அதிசயம் தான்.”

“நமக்குப் புரியாதவற்றை, நம் அறிவுக்கு எட்டாதவற்றையே அதிசயம் என்கிறோம்.”

“நம்மால் முடிந்தவற்றை மட்டும் அறம் என்று சொல்லி சமாதானப்படுவது போல்.”

“ஆன்மீகத்தில் அறம் என்பது தெய்வசங்கல்பமன்றி வேறில்லை.”

“இதெல்லாம் உடல் தொடர்புடைய விஷயங்கள். அந்தப் பெண்களுக்கு மனம் என்று ஒன்று இருக்கிறதல்லவா? அது பொருட்டே இல்லையா? அவர்கள் பொம்மைகளா?”

“இல்லை. அவர்கள் விரும்பித் தானே இதில் ஈடுபடுகிறார்கள்!”

“அப்படி நீங்கள் சொல்கிறீர்கள். கிராமத்தில் முணுமுணுப்புக்கள் இருக்கின்றன.”

“சமீப ஆண்டுகளாகப் பெண்ணியம், பெண்ணுரிமை என்றெல்லாம் பேசி சிலர் இளம் பெண்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் குழப்பி வைத்திருக்கிறார்கள். கடவுள் அவர்களுக்கும் தண்டனை அளிப்பார். இது முற்றிலும் பெண்களின் நன்மைக்காகவே. ஆனால் அந்த நன்மையை அவர்களின் வசைக்கு இடையே செய்ய வேண்டியுள்ளது.”

“இதில் இறங்க அந்தப் பெண்களின் பெற்றோர்கள் சம்மதிக்கிறார்களா?”

“ஆம்.”

“அந்தப் பெண்கள்?”

“ஆம்.”

“அந்தப் பெண்களை மணக்கப் போகும் ஆண்கள்?”

“ஆம்.”

“எப்படி ஓர் ஆண் தன் மனைவி இன்னொருவனால் புணரப்பட்டதை ஏற்க முடியும்?”

“ஏனெனில் அந்தக் கலவியை நிகழ்த்துவது இன்னொரு மனிதன் அல்ல. சாட்சாத் அந்தக் கடவுள். உண்டாக்கிய கடவுளுக்கு எடுத்துக் கொள்ள உரிமை இல்லையா?”

“சரி, நீங்கள் ஒரு பெண். நீங்கள் இதை ஏற்கிறீர்களா?”

“எனக்கு விருப்பு, வெறுப்பு கிடையாது. நான் பெண் என்பதை விட இந்தக் கிராமத்தின் காவல் பூசாரி. இவ்வழக்கம் இந்தக் கிராமத்துக்கு அவசியம் என்று புரிந்திருக்கிறேன்.”

“ஒரு சங்கடமான கேள்வி. என்னைக் கோபிக்க வேண்டாம்.”

“கேள். நான் துறவி. என்னை அசைப்பது அத்தனை சுலபமல்ல.”

“உங்களுக்கும் இந்தச் சடங்கு நடந்ததா?”

“…”

“மன்னிக்கவும். கட்டாயமில்லை. நீங்கள் இந்தக்கேள்வியை நிராகரித்துக் கடக்கலாம்.”

டோரதி பெருமூச்சு ஒன்றை எறிந்து பதில் சொல்லத் தீர்மானித்த அந்தக் கணத்தின் சிறுபகுதியில் அவள் சாமியாரினி என்பதெல்லாம் களைந்து ஒரு சாதாரணப் பெண் போல் தோன்றினாள். எல்லியட் உதடு ஜனித்த நகையைச் சிரமத்துடன் அடக்கினார்.

“ஆம். எனக்கும் நடந்தது. அப்போது நான் துறவியல்ல. வழமையான பதின்மச்சிறுமி.”

“அப்போது நீங்கள் அதைப் பூரணமாக ஏற்றீர்களா?”

“நினைவில்லை.”

“நல்ல பதில்.”

“நிஜமும் அதுவே.”

“இந்தப்பழக்கம் வேறெந்த கிராமத்திலும் இருப்பது போல் தெரியவில்லையே! அங்கும் பெண்கள் இருக்கத் தான் செய்கிறார்கள், வயதுக்கும் வந்தபடி தானே இருக்கிறார்கள்.”

“ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு இயல்பு. தேநீர் விளையும் நிலத்திலே நெல் விதைக்க முடியுமா? அப்படித்தான். மனிதர்களைப் போல் மண்ணுக்கும் விதி உண்டு.”

“ஓ!”

“ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு சாபம் இருக்கிறது. இந்த கிராமத்தின் சாபம் வயதுக்கு வந்த பெண்கள் தொடர்புடையது. இதே போல் மலாவியில் வேறு சாபங்கள் உண்டு."

“உதாரணம் சொல்ல முடியுமா?”

“கிராமத்தின் பெயர்கள் வேண்டாம். சாபத்தை மட்டும் சொல்கிறேன். கணவனை இழந்தவளைத் துர்ஆவிகள் அண்டாதிருக்க கிராமத்தின் ஆண் கடவுள் அவளை ஓரிரவு கலவி செய்வார். அதன் பிறகு தான் புருஷன் புதைக்கப்படுவான். இதற்கு ஃபிஸி என்று பெயர். இன்னொன்று கணவன் மரிக்கையில் கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணை, குழந்தை பிறந்த ஆறு மாதத்துக்குப் பின் கிராமத்தின் ஆண் கடவுள் கலவி செய்வார். அது குழந்தையை நோய்களில் இருந்து காக்க. இந்தச் சடங்கின் பெயர் ட்ஸ்வான்டே. இதே போல் இன்னும் இரண்டு, மூன்று சடங்குகள் உண்டு.”

“ஆண்களுக்கு மட்டும் எந்தச் சாபமுமே கிடையாது போலிருக்கிறது.”

“ஒரு பெண்ணுடன் வாழ்வதை விடவும் என்ன பெரிய சாபம் இருந்து விடக் கூடும்?”

“சடங்கென்பது ஒரு குறியீடு மட்டும் தானே? விஷயம் அதற்குப் பின்னே இருக்கிறது!”

“சடங்குகளை நான் வெறுக்கவில்லை. ஆனால் அவற்றின் பொருளற்றதன்மையையே விமர்சிக்கிறேன். சடங்கு யாராவது ஒருவருக்காவது நன்மை அளிக்க வேண்டாமா? உதாரணமாய்ச் சில சடங்குகள் மருத்துவப் பயன் கொண்டவை. தெற்காசியாவில் இந்துக்கள் மூலிகைகள் இட்டு யாகங்கள் நடத்துவது போல். சில வறியவர்களுக்கு உதவக் கூடியவை. அமிர்ட்ஸர் என்ற கோயிலில் இருபத்து நான்கு மணி நேரமும் அடுப்பெரியும் என்பார்கள். சில சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தற்காலிகமாகவேனும் களைய வல்லவை. கடமைக்குச் செய்யப்படும் சடங்குகளில் எனக்கு ஆர்வமில்லை.”

“…”

“மாறாக இங்கே இங்கே சடங்கு அந்தரத்தில் நிற்கிறது. அர்த்தமற்று, உயிர்ப்பற்று.”

“நம் அறிதலுக்கு அப்பால் எதுவுமே இல்லை என்பது ஆணவம், எல்லியட்.”

“கற்கத் தயாராகவே இருக்கிறேன். மனதை அகலத் திறந்து வைத்து. ஆனால் ஓர் எல்லைக்கு மேல் இங்குள்ள அறிதல் முறைகள் யாவும் கைவிரித்து விடுகின்றன.”

“புரியவில்லை என்பது தான் அறிதலின் உச்சம். ஆனால் அங்கே நிறைவடைய நீ அகங்காரத்தை விட்டொழிக்க வேண்டும். அல்லது அப்பாவியாய் இருக்க வேண்டும்.”

“கண்ணாடியறைப் புதிர் போல் சுற்றிச் சுற்றி அதே இடத்துக்கு வந்து நிற்கிறது.”

“சரி, விஷயத்தைச் சொல்.”

“நான் இந்த கிராமத்தின் ஆண் கடவுளைப் பார்க்க வேண்டும்.”

“அந்த இரவுகளில் மட்டும் தான் அவர் கடவுள். மற்ற சமயங்களில் வெறும் மனிதன்.”

“சரி, அந்த வெறும் மனிதனைப் பார்க்க வேண்டும்.”

டோரதி அவரை உற்றுப் பார்த்தாள். எல்லியட் உணர்ச்சியற்ற முகத்துடன் அவளைப் பார்த்தார். அவரது பிடிவாதம் கண்டு புன்னகைத்தாள். பின் தன் முன் இருந்த சிறிய பெட்டியிலிருந்து ஒரு துண்டுக் காகிதத்தை எடுத்து அதில் ஏதோ கிறுக்கித் தந்தாள்.

எல்லியட் அதை வாங்கிப்பார்த்தார். மிக மோசமான கையெழுத்து. அது ஒரு முகவரி.

“ஒரு முக்கியமான விஷயம். இந்த கிராமத்தின் ஆண் கடவுள் யார் என்பது இங்கே ரகசியமான விஷயம். காரணம் இந்த வழக்கத்தையே ஒழிக்க விரும்புபவர்களாலும், சடங்கில் அவர் காமம் அனுபவிப்பதாய் நம்பிப் பொறாமை கொள்வோராலும் அவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. சொல்லப் போனால் இன்னும் இன்கோசிக்கே ஆண் கடவுள் யாரெனத் தெரியாது. அதனால் நீயும் இதில் ரகசியம் காத்தாக வேண்டும்.”

“சரி, செய்கிறேன்.”

“கடைசியாய் ஒன்று…”

“சொல்லுங்கள்.”

“சடங்குகளை நம்பு எல்லியட். அது உனக்குப் பல புதிய திறப்புக்களை அளிக்கும்.”

“நிச்சயம் எனக்கும் நம்பிக்கைகள் உண்டு. ஆனால் அவை வேறு மாதிரியானவை. வாழ்க்கையில் அப்படி எதையாவது பற்றிக் கொள்ளத் தானே வேண்டியிருக்கிறது!”

“நம்பிக்கைகள் ஒரு போதும் தோற்பதில்லை. கடவுள் உன்னைக் காப்பார்.”

“எங்கள் ஒலிவியாவும் இதைத் தான் சொல்வார்.”

“யார் அது?”

“எம் கிராமத்தின் சாமியாரினி. உங்களைப் போலவே தான். வயது மட்டும் அதிகம்.”

“ஓ! மகிழ்ச்சி. அடுத்த முறை சந்திக்கும் போது நான் நலம் விசாரித்ததாய்ச் சொல்.”

“நிச்சயம். வருகிறேன்.”

கிளம்பும் போது தன் செல்பேசியில் அவளைப் புகைப்படம் எடுக்க அவர் முனைந்த போது கண்டிப்புடன் – “உடம்பில் என்ன இருக்கிறது எல்லியட்?” - தவிர்த்து விட்டார்.

எல்லியட் குடிலிலிருந்து வெளியேறி வாசலில் ஒற்றைக்கால் தூக்கி நின்று கழற்றிய சப்பாத்தை அணிந்து கொண்டிருந்த போது டொமினிக் அங்கே தயக்கமாய் வந்தான்.

எல்லியட் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். அவனும் பதிலுக்குப் புன்னகைத்தான்.

*

டோரதி முன் அமர்ந்திருந்தாள் மெலினா. அவள் கைகள் கூப்பி இருந்தன. கண்கள் மருண்டிருந்தன. உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்தத் தோன்றாமல் தேங்கியிருந்தாள்.

அவளை அழைத்து வந்து விட்டு அம்மாவும் அப்பாவும் வெளியே நின்றிருந்தார்கள்.

டோரதியின் கண்கள் மேல் நோக்கி நிலைத்திருந்தன. அசைவற்று அமர்ந்திருந்தாள். அவள் உதடுகள் மட்டும் ஏதோ சொற்களை நிறுத்தாது உச்சரித்த வண்ணமிருந்தன.

வானவில் கலைவது போல் மெல்ல அவள் தன் கண்களை இயல்புக்கு இறக்கினாள்.

“மெலினா…!”

“தாயே…!”

“வாழ்த்துக்கள்! பெண் எனும் மாயலோகத்துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறாய்.”

“…”

“பிறவியெடுத்ததன் பலனை இப்போது தான் உன் உடல் உணரத் தொடங்கி உள்ளது. இதுவரையிலும் அது ஒரு மூத்திரப் பாத்திரமாகவும், மலச் சட்டியாகவுமே இருந்தது.”

“…”

“இனி தான் நீ கவனமாக இருக்க வேண்டும்.”

“ம்.”

“இத்தனை காலமும் ரகசியம் காத்த உன் துவாரம் இப்போது திறந்து கொண்டுள்ளது. அதன் வழியே உன் தேகத்துள் கெட்ட ஆவிகள் புகுந்து கொள்ளப் பிரயத்தனப்படும்.”

டோரதியின் சொற்களை விட அவள் சொன்ன பாவனை அச்சமூட்டுவதாய் இருந்தது.

“அதிலிருந்து நீ உன்னையும், உன் பெற்றோரையும் காத்துக் கொள்ள வேண்டும்.”

“ம்.”

“நீ இன்னும் கொஞ்சம் நாளில் நம் இனத்தில் ஒருவருக்கு மனைவியாகி விடுவாய்.”

டோரதி சொன்னதும் மெலினாவுக்குச் சட்டென டொமினிக்கின் முகம் தோன்றியது.

“கணவன் என்று ஒருவன் வரும் முன் வேறொருவனை உன் மனம் எண்ணக்கூடாது.”

மெலினா திடுக்கிட்டாள். டோரதிக்கு மனதைப் படிக்கத் தெரியுமோ என அஞ்சினாள். அதன் பிறகு டொமினிக் பற்றி நினைக்ககூடாது என முயன்றாள். ஆனால் அப்படிப் பிடிவாதமாய் நினைக்க நினைக்க, நினைவெல்லாம் டொமினிக் நிறைந்து நின்றான்.

“மனைவி என்பது ஓர் உரிமை. ஒரு கடமை. ஓர் ஒழுக்கம்.”

“ம்.”

“பெண் என்பவள் மூன்று விஷயங்களை ஆயுள் முழுக்கவும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும் நாக்கு, யோனி, மனம். இதில் மிகச்சிரமமானது மனம் தான்.”

“ம்.”

“ஓர் ஆணை உனக்குள் அனுமதிப்பதென்பது அவனை விழுங்குவது தான். காணும் எல்லாவற்றையும் உண்டு விட முடியுமா? கணவனே அதற்குத் தகுதி உடையவன்.”

“ம்.”

“பெண்ணின் பிறப்புறுப்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அதை இறுக்கி ஒருவனின் ஆண் குறியைக் கூட முறித்தெறிய முடியும். கணவனைத் தவிர பிறிதொருவன் உன்னை தொட எத்தனிக்கும் போது இப்பலம் தவறாமல் உனக்கு நினைவில் எழ வேண்டும்.”

“ம்.”

“உலகம் முற்றிலும் கை விரித்த பிறகு பெண் கால் விரிக்கத் தீர்மானிக்கிறாள் என நம் தேசத்தில் ஒரு பழைய சொலவடை உண்டு. முட்டாள்கள் சொல்லி வைத்தது. கலவி விரும்பி மட்டுமே நிகழ வேண்டும். லாப நஷ்டக் கணக்கை உத்தேசித்தோ பயத்திலோ நடக்கக்கூடாது. கணவனுடன் கூடும் போது மட்டுமே அது சாத்தியம்.”

“ம்.”

“ஆணுக்குப் பெண் அடிமை என்பது ஒரு பாசாங்கு. நீ அதை நடிக்கக் கற்க வேண்டும்.”

“ம்.”

“உண்மையில் பெண்ணின் காமத்துக்கு எந்த ஆணாலும் ஈடு தர முடியாது. எவ்வளவு தந்தாலும் புழை விழுங்கிச் செரித்து மீண்டும் வாய் பிளக்கும். ஓர் ஆழ்கிணற்றுக்குள் எச்சில் துப்புவது போல் தான் ஆணின் சுக்கில தர்மமெல்லாம். வேட்கையின் உச்சம் பெண்ணுடல். ஆனால் அதை அடக்கக்கற்க வேண்டும். அதுவே பெண்மை எனப்படும்.”

“ம்.”

“கணவனுடன் கூடுகையில் பெண்ணுக்கு மூன்று விதிகள் இருக்கின்றன. முதலாவது அவன் கேட்பதைத் தராமல் இருக்கக் கூடாது. அது எவ்வளவு கசப்பானது என்றாலும். இரண்டாவது அப்போது வேறொருவனை மனதில் வரிக்கக்கூடாது. கணவன் குரூபி என்றாலும் கூட. கடைசியாக அவன் திறனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கக்கூடாது.”

“ம்.”

“நீ ஒருபோதும் இத்திசையில் உனது ஆணை அவமானமாக உணரச் செய்யக்கூடாது.”

“ம்.”

“ஆணிடம் கலவியில் எனக்கு இது வேண்டும் என ஒருபோதும் பெண் கேட்கலாகாது. மாறாக அவனே விரும்பிச் செய்வதாய் நம்பவைத்து அப்புள்ளிக்குச் சாமர்த்தியமாய்த் தள்ளவேண்டும். காமம் என்பது சுயம் தொடர்புடையதென ஆண் நம்புகிறான். அதைக் காயப்படுத்தாமல் காரியம் சாதித்துக் கொள்ளப் பெண் பழகவேண்டும். தன்னிஷ்டப்படி தான் எல்லாம் நடக்கிறது என அவன் நம்ப வேண்டும். உண்மையில் அவன் உச்சம் அது தான். மற்றபடி விந்து கொப்பளிப்பது என்பது ஓர் உபமகிழ்ச்சி மட்டுமே. அரசி அடிமையாய் நடிப்பது தான் இம்மண்ணில் சிறந்த தாம்பத்யம். அதைக் கை கொள்!”

“ம்.”

“நீ எத்தனை பெரிய சிறகு வேண்டுமானாலும் வளர்த்துக் கொள். ஆனால் பறக்காதே. ஆண்கள் தேவதைகளை நிற்க வைத்து ரசிக்கவே விரும்புகிறார்கள். பறப்பதையல்ல.”

“ம்.”

“இவை எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு விதிவிலக்கு தான் உண்டு.”

“அது என்ன?”

“நீ கடவுளோடு கலவி செய்கையில் மட்டும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.”

“கடவுளுடனா?”

“ஆம்.”

“அவர் என்ன செய்வார்?”

“ஒரு பூ பூரணமாக மலர இரு விஷயங்கள் நிகழ வேண்டும். அது முகிழ்த்து இதழ் விரிய வேண்டும். அது உனக்கு ஏற்கனவே நிகழ்ந்து விட்டது. அடுத்து வண்டு அதில் அமர்ந்து தேன் குடிக்க வேண்டும். அதுவும் நடந்தால் நீ பெண்மையின் முழுமையை எய்துவாய். கடவுளால் மட்டுமே அதைச் செய்ய முடியும். அது நிகழ்ந்த பின்பே உன் தீட்டு யாவும் விலகும். உன் குடும்பத்தைச் சுற்றி உலவுகின்ற தீவினைகள் அகலும்.”

“…”

“அது வெறும் சடங்கல்ல; ஒரு நடனம், ஒரு தியானம், ஒரு பெரும் கொண்டாட்டம்.”

“கடவுள் இங்கே வருவாரா?”

“ஆம். நான் சொன்னால் வருவார்.”

“எப்போது?”

“நாளை இரவு.”

“ஓ!”

“உன் வாழ்வின் ஆகச் சிறந்த கலவிக்கு மனதைத் தயார் செய்து கொண்டு வா.”

“எங்கே?”

“இங்கிருந்து தெற்கே சரிவிலிறங்கி நடந்தால் பத்து நிமிடங்களில் குடிசை வரும். அங்கே நீ பரிபூரண அலங்காரத்துடன் நாளை நள்ளிரவுக்கு முன் வர வேண்டும்.”

“ம்.”

“நீ மட்டும் தனியே வர வேண்டும். உன் பெற்றோரிடம் சொல்லி விடு. நீ போகலாம்.”

டோரதியின் கண்கள் மீண்டும் மேலே நிலைகுத்தின. மெலினா எழுந்து கொண்டாள்.

*

ஆந்த்ரசைட் நிலக்கரி போல் மினுங்கும் உச்சக்கருப்பில் இருந்தான் லும்பனி. கருப்பர் இனத்திலேயே அதிகக் கருமை வாய்ந்தவன் இவன்தானோ என்றுகூடத் தோன்றியது.

ஒருவேளை அவன் ஆண் கடவுளாகத் தேர்ந்தெடுக்கப்பட அந்நிறம் தான் காரணமோ!

லும்பனியை முதன் முதலாகப் பார்க்கும் போது எல்லியட்டுக்குப் பயமாக இருந்தது. அவரது ஒரு கண் கொய்யப்பட்டிருந்தது. ஓநாயொன்று மனித ரூபம் கொண்டதைப் போலிருந்தது. அந்த பிம்பத்தை ஒத்தி வைத்து அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.

டோரதி தந்த முகவரியை அச்சிற்றூரில் கண்டுபிடிக்க அதிகக் கஷ்டமிருக்கவில்லை.

ஒரு சிறுமி வீட்டு வாசலில் மரத்தாலான சிறிய பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவன் மனைவி குடிக்க ஒரு கோப்பையில் மவெஹூ கொணர்ந்து கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டாள். ஆனால் அவள் காதுகள் கூர்தீட்டி இங்கே தான் இருக்கின்றன என்பதாகத் தோன்றியது. அதுவும் நல்லது தான் என நினைத்தார்.

லும்பனியைப் பேச வைப்பதில் அதிகம் சிரமமேதும் இருக்கவில்லை. எல்லியட்டின் வருகைக்காக ஆண்டுக்கணக்காய்க் காத்திருந்ததைப் போல் அவனே அருவி மாதிரி கொட்டத் தொடங்கினான். இடையே அவனை நிறுத்துவது பெரும்பாடாகி விட்டது.

விதவிதமாய்ப் புகைப்படங்களுக்குப் போஸ் கொடுப்பதிலும் ஆர்வம் காட்டினான். தான் பேசுவதன் ஆபத்து உறைக்காத ஒரு வெள்ளந்தி என்பதாகவே தோன்றியது.

“எப்படியும் முன்னூறு பெண்களையேனும் புணர்ந்து இருப்பேன்.”

தம்ஸப் லோகோ போல் கையை வைத்து குத்துவது போல் பாவனை காட்டினான்.

“அவர்களுக்கெல்லாம் எத்தனை வயதிருக்கும்?”

“முன்பெல்லாம் பதினாறு வயது. இப்போது பன்னிரண்டு, பதின்மூன்று.”

“பன்னிரண்டு வயதுப் பெண்கள். இச்சடங்கைப் பற்றி இந்தச் சின்னப் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என எப்போதேனும் லேசாகவேனும் யோசித்திருக்கிறாயா லும்பனி?”

“இல்லாமல் என்ன? அவர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தை உணர்கிறார்கள். அவர்கள் அதுவரை கண்டிராத ஓர் உலகத்தை அவர்களுக்குத் திறந்து காட்டுகிறேன்.”

“அப்படியா? நிஜமாகவா? அவர்களே அப்படிச் சொன்னார்களா?”

“பெண்கள் எப்படிச் சொல்வார்கள்? அவர்கள் முகம் தான் சொல்கிறதே!”

“ஓ! முகத்திலிருந்தே மனதை வாசிக்க லும்பனிக்குத் தெரியுமா என்ன!”

“கேலி செய்கிறீர்களா?”

“சேச்சே.”

“கோன்டோலோசி வேரையரைத்து நீரிலிட்டுக் குடித்துவிட்டே ஒவ்வொருத்தியிடமும் போகிறேன். கூர்தீட்டிய கோடரியில் பச்சை மரத்தைப் பிளப்பது போல் இருக்கும் என் ஆட்டம். முதல் தடவை விட்டு விடு எனக் கெஞ்சிக் கதறுகிறவள் மூன்றாம் முறை அவளே ஆசையாய் மேலேறிக் கொள்வாள். மொத்த வாழ்நாளுக்கான சுகத்தை அந்த ஒற்றை இரவில் காட்டி விடுவேன். ஆயுளுக்கும் எவன் தொட்டாலும் என் நினைவு வராமல் போகாது. உடம்பெங்கும் அங்குலமங்குலமாய் என் ரேகை பரவியிருக்கும்.”

“…”

“அவர்கள் அனைவருக்கும் என்னுடன் படுப்பது பெருமை. பள்ளி செல்லும் பெண்கள். அங்கே தமக்குள் என் திறன் பற்றிக் கிசுகிசுத்து வெட்கப்படுகிறார்கள் எனக் கேள்வி.”

“…”

“சொல்லப்போனால் கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணும் ருதுவாகக் காத்திருக்கிறாள், செவிவழிச் செய்திகள் வழியே அறிந்த என்னுடனான இரவை எண்ணி ஏங்கியபடி.”

சொன்னதும் லும்பனிக்கு மூச்சு வாங்கியது. எல்லாம் சொல்லி முடித்து விட்டோமா என யோசித்தான். அவனது பலகீனமான ஏதோ ஒரு புள்ளியை அறியாமல் தொட்டு விட்டோமென எல்லியட்டுக்குப் புரிந்தது. பேச்சை மாற்றுவது உசிதமென நினைத்தார்.

“எய்ட்ஸ் பயமே இல்லையா உனக்கு?”

“வர வாய்ப்பில்லை. நான் இப்பெண்களையும் என் மனைவியையும் தவிர எவரையும் தொட்டதில்லை. ஆண் கடவுளுக்கான கட்டுப்பாடு இது. இந்தப் பெண்கள் எல்லோரும் புதிதாய் வயதுக்கு வந்தவர்கள். எப்படி வரும்? அரசுதான் மாதாமாதம் என்னிடம் இரு குப்பிகளில் ரத்தம் பிடித்துப்போய்ப் பரிசோதனை செய்கிறது. எல்லாம் வீண் வேலை.”

“அரசின் அக்கறை உன் மீதல்ல, அந்தப்பெண்களின் மீது. அவர்கள் பாதுகாப்பின் மீது.”

“ஓஹோ.”

“தவிர, இதெல்லாம் தாண்டியும் தர்க்கப்படி எய்ட்ஸ் தொற்றும் வாய்ப்புண்டு.”

“இருக்கலாம். நிகழாதிருப்பது ஒரு தெய்வச் செயல்.”

“சரி, அடுத்த கேள்விக்கு மிக உண்மையான பதில் வேண்டும்.”

“கேளுங்கள்…”

“நீ இதை விரும்புகிறாயா, லும்பனி?”

“ம்ம்… ஆம்.”

“என்னை ஒரு நண்பனாக நினைத்துச் சொல். உனக்கு இங்கே நண்பர்களே இல்லை எனக் கேள்விப்பட்டேன். அல்லது உன்னுடைய மூத்த சகோதரனாக எண்ணிக் கொள்.”

“ம். ஒரு காலத்தில் பிடித்திருந்தது.”

லும்பனி தொலைவில் இலக்கற்று வெறித்தான். பிடித்திருந்த அந்தக் காலத்திலிருந்து தூசு விலக்கி ஒருநாளை உருவி எடுத்து அதை ஸ்பரிசிக்க முயல்வது போலிருந்தது.

*

இரவு முழுக்க டோரதி சொன்னதை யோசித்தாள் மெலினா. கடவுளே என்றாலும் அவரை டொமினிக்கின் இடத்தில் வைத்துப் பார்க்க அவளது மனம் ஒப்பவில்லை.

காலை எழுந்ததும் முகம் கழுவாமல், பல் துலக்காமல் அம்மாவிடம் போய் நின்றாள்.

“அம்மா… எனக்கு இது வேண்டாம்மா.”

“எது?”

“இன்னிக்கு ராத்திரி வரச் சொல்லியிருக்காங்களே.”

அம்மா அவளது முகத்தை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். அக்கணம் அம்மாவின் இருதயம் அதிவேகமாகத் துடிப்பதை மெலினாவால் உணர முடிந்தது.

“சரியா…? நான் போகல.”

“அது முடியாது, மெலினா.”

“ஏன்மா?”

“இரண்டு காரணங்கள். ஒன்று கடவுள் நம்மைச் சபித்து விடுவார். துஷ்ட ஆவிகள் நம்மைத் தொற்றிக் கொள்ளும். அடுத்தது ஒருவேளை அப்படி நடக்காவிடிலும் இந்த ஊர் மொத்தமும் நம்மை விலக்கி வைத்து விடும். நம் வயலில் எவரும் வேலைக்கு வர மாட்டார்கள். நமது மக்காச்சோளத்தை எவரும் வாங்க மாட்டார்கள். உப்பு கூட நாம் எங்கும் வாங்க முடியாத நிலைக்குப் போய் விடுவோம். பூரண ஊர்விலக்கம்.”

“நிஜமாகவா?”

“ஆமாம். ஈராண்டுகள் முன் க்ரேஸின் குடும்பத்துக்கு நடந்தது நினைவில்லையா? அவளது அண்ணனின் பிடிவாதத்தால் இந்தச் சடங்கை அவர்கள் நடத்தவில்லை. கிராமம் அவர்களை ஒதுக்கி வைத்தது. ஆறே மாதத்தில் கிரேஸின் தந்தைக்கு நெஞ்சு வலி வந்து உதவ யாரும் இல்லாததால் வீட்டிலேயே செத்துப் போனார். அடுத்த இரண்டு மாதங்களில் கிரேஸும் அவளது அம்மாவும் மனமுடைந்து விடம் அருந்தித் தற்கொலை செய்தார்கள். அந்த அதிர்ச்சியில் கிரேஸின் அண்ணனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. ஊரெல்லாம் உளறித் திரிந்தவன் அதன் பிறகு என்ன ஆனான் என்றே தெரியவில்லை. மொத்த குடும்பமும் அழிந்தது. டோரதி தெளிவாகச் சொன்னார் - அவர்கள் கடவுளின் கடுங்கோபத்துக்கு இலக்காகி விட்டார்கள் என.”

“ம்.”

“நமக்கு வேறு வழியில்லை மெலினா. இது கடவுளின் சாபம் என்பதை எல்லாம் நம்பாவிட்டாலும் மனிதர்கள் கோபத்தின் பொருட்டாவது அஞ்சத்தான் வேண்டும்.”

“என்னவோ எனக்கு பிடிக்கவே இல்லம்மா இது.”

“பயமா இருக்கா?”

“இல்ல. அருவருப்பா இருக்கு.”

“ம். ஒரே ராத்திரி தான். பல்லைக் கடிச்சுப் பொறுத்துக்கோ. அப்பறம் ஒண்ணுமில்ல.”

“ம்.”

“ஒரே ஓர் இரவு வெளியே தங்கப் போறே. இங்கே நமது வீட்டிலேயே தூங்கும் போது ஒரு கெட்ட கனவு வந்த மாதிரி நினைச்சுக்க. வேற வழியில்ல. என் கண்ணல்லவா?”

“கடவுள் வர்றது கெட்ட கனவா?”

“அதுக்கெல்லாம் என் கிட்ட பதில் இல்ல. ஆனா பிடிக்கலைனா இப்படி நினைச்சுக்க.”

“ம். உன்னை ஒண்ணு கேட்கவா?”

“கேளு.”

“உனக்கும் இது நடந்துச்சா.”

“இந்த ஊரில் எல்லாப் பொம்பளைக்கும் இது நடந்துச்சு. நடக்கும்.”

“அப்பா இன்கோசிக்கு நல்ல நண்பர் தானே? அவர் கிட்ட பேசினா நிறுத்திடலாமா?”

“அவர் மகளுக்கே பல வருஷம் முன் நடந்தது. அவரும் இதில் கறார் தான்.”

“அவரோட புதுப் பொண்டாட்டிக்கு இது நடக்கலன்னு பேசிக்கிட்டாங்கல்ல?”

“அது வதந்தி.”

“ம்.”

“உண்மையா இருந்தாலும் உனக்கு வரப்போறவன் கிராமத்தின் இன்கோசி இல்ல.”

“ம்.”

“நீதி எல்லோருக்கும் ஒண்ணு தான். ஆனா சட்டம் நெகிழக்கூடியது, மெலினா.”

“நாம இந்த ஊரை விட்டு வேறெங்காவது போயிடலாமா?”

“இங்கே தான் நமக்கு நிலம் இருக்கு. அதிலிருந்து கொஞ்சம் வருமானமாவது வருது. எல்லாத்தையும் விட்டுட்டு ஓடினா எங்கே போறது? சாப்பாட்டுக்கு என்ன செய்யறது?”

“ம்.”

“சரி, நீ வயலட் கிட்ட பேசறியா?”

வயலட் கிட்டத்தட்ட அவள் வயது தான். பள்ளிக்குப் போவதில்லை. சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயிரிடும் வயல்களுக்கு வேலைக்குப்போகிறாள். மூன்று மாதங்களுக்கு முன் தான் வயதுக்கு வந்தாள். அவளோடு பேசினால் மெலினா தைரியம் பெறுவாள் எனத் தோன்றியிருக்கலாம் அம்மாவுக்கு. வயலெட்டை மெலினாவின் தோழி என்றெல்லாம் சொல்ல முடியது. ஆனால் இப்போது அதை யோசிக்கும் நிலையில் அவள் இல்லை.

“ம். சரி.”

வயலட்டுடன் பேசியதில் அவள் சில தகவல்களும் யோசனைகளும் தந்தாள். அவள் அந்த இரவை ஒரு பெரிய விஷயமாகவே கருதவில்லை என்பதாகச் சொன்னாள்.

“குளிர்ந்த நீரில் கால் நனைக்கும் வரை தான் பயமெல்லாம். முதற்குளிர் உடலில் ஏறிய பிறகு தண்ணீரில் தலையளவு முழுகுவது கூட ஒரு பிரச்சனையே இல்லை.”

தக்க சமயத்தில் நம்மை பலப்படுத்துமளவு தைரியம் சொல்பவர்கள் தேவரூபத்தினர். வயலெட்டைக் கட்டிக் கொண்டு ஒரு முத்தமிடலாம் போல் தோன்றியதை அடக்கிக் கொண்டாள் மெலினா. அதே அணைப்பை புன்னகையின் வாஞ்சையாக எறிந்தாள்.

“ஒரு சந்தேகம். உன் மனம் இதனால் கொஞ்சமும் பாதிப்புறவில்லையா, வயலட்?”

“நிர்வாணத்தை மட்டும் ஒருபோதும் அவமானமாகக் கருதாதே, மெலினா. இது தான் முக்கியத் திறப்பு. எல்லோருக்கும் இருப்பது தான் உனக்கும் இருக்கிறது. அதே தசை. அதே கொழுப்பு. அதே தோல். உனக்கு மட்டும் என்ன தங்கத்திலா அடித்திருக்கிறது!”

*

லும்பனியிடம் அவன் மனைவியிடம் தனிமையில் பேச வேண்டும் என்று அனுமதி கேட்ட போது எல்லியட்டை சந்தேகமாய்ப் பார்த்து விட்டுப் பின் அவன் இருந்தால் அவளால் இயல்பாகப் பேச முடியாது என்று விளக்கியதும் சம்மதித்து நகர்ந்தான்.

“உங்கள் பெயர்?”

“லிண்டா.”

லிண்டா அணிந்திருந்த பெரிய காது வளையத்தினுள் அவளது மொத்த உடலையும் நுழைத்து வெளியே எடுத்து விடலாம் என்பது போல் மிக ஒல்லியாக இருந்தாள். அந்த வகையில் அவள் லும்பனியின் தலைகீழ் விகிதாச்சாரமாய்த் தோன்றினாள்.

எல்லியட் கேட்ட கேள்விகளுக்கு தலைகுனிந்தபடி அந்த வீட்டைத் தாங்கியிருந்த ஒரு மரக்கட்டையைப் பற்றிக் கொண்டு மெல்லிய குரலில் பதில்கள் சொன்னாள்.

“உங்கள் கணவர் இந்தச் சடங்கில் ஈடுபடுவது உங்களுக்குத் தெரியுமா?”

“ம். தெரியும்.”

“அதில் உங்களுக்குச் சம்மதமா?”

“இல்லை. ஆனால் பெண்ணின் கருத்துக்கு மதிப்பேது?

“வேண்டாம் என நேராய்ச் சொல்லியிருக்கிறீர்களா?”

“அவரைத் திருமணம் செய்து கொண்டு வந்த இந்த இருபதாண்டுகளும் இதைச் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அவர் தான் கேட்பதாயில்லை.”

“அதற்கு என்ன சொல்கிறார்?”

“உனக்கு நடக்கவில்லையா எனக் கேட்கிறார்.”

“ஓ! உங்களையும்…”

“ஆமாம், என் கணவரே தான் எனக்கும் சடங்கு செய்தார்.  பிறகு சில ஆண்டுகள் கழித்து என் வீட்டில் அவரைப் பார்த்து எனக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.”

“எனில் இந்த ஊரில் கணவனை மட்டுமே கலவி செய்த பெண் நீங்கள் ஒருவர் தான்.”

“அப்படி இல்லை. அந்த இரவில் என்னைக் கலந்தது கடவுள் அல்லவா!”

“எனில் இதை நீங்கள் முழுமையாக நம்புகிறீர்களா?”

“ஓரளவுக்கு.”

“எனில் ஏன் உங்கள் கணவர் செய்வது பிடிக்கவில்லை என்கிறீர்கள்?”

“ஒன்றைப் புரிந்து கொள்வது வேறு, ஏற்பது வேறல்லவா!”

“சரி, இவர் இப்படி எனத் தெரிந்தும் எப்படித் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டீர்கள்?”

“பெண்களின் விருப்பத்தை யார் கேட்கிறார்கள்? தவிர, எனக்கு இவரெனத் தெரியாது.”

“தெரியாதா?”

“ஆம். திருமணத்துக்கு முன் கணவரின் முகம் பார்ப்பது அப்போதெல்லாம் இங்கே வழக்கம் கிடையாது. இப்போது சற்றுப் பரவாயில்லை. நிலைமை மாறி வருகிறது.”

“நீங்கள் தான் பார்க்கவில்லை. ஆனால் மற்றவர்களுக்குத் தெரியும் தானே?”

“இவர் தான் கிராமத்தின் ஆண் கடவுள் என்பது மிக ரகசியமான விஷயம். இத்தனை ஆண்டுகளில் இதைச் சொல்லிக் கொண்டு வரும் முதல் ஆள் நீங்கள் தான். கிராம இன்கோசிக்குக் கூடத் தெரியாது. டோரதிக்குத் தெரியும். எனக்குத் தெரியும். இந்த ஊரின் பெண்களுக்குத் தெரியும். அவர்களில் சிலர் இவர் முகத்தை மறந்திருப்பார்கள். மேலும் சிலர் இவர் முகத்தைச் சரியாகக் கவனித்திருக்க மாட்டார்கள். பயத்திலும் வெறுப்பிலும் அப்போது கண்கள் மூடிக் கொண்டு கட்டை போல் கிடக்கும் பெண்கள் ஏராளம். இன்னும் சிலருக்கு இவர் கிராமத்தில் எங்கே இருக்கிறார் எனத் தெரியாது. இதெல்லாம் தாண்டி மிகச் சில பெண்களுக்கே இவரைத் தெரியும். ஆனால் அவர்கள் அதை வெளியே சொல்ல மாட்டார்கள். அது தெய்வ குற்றம் ஆகி விடும் என்பதால்.”

“நீங்கள் அவரை மிரட்டிப் பணிய வைக்கலாம் அல்லவா?”

“செய்தேன்.”

“ஓ!”

“இனி இந்த வேலையைச் செய்தால் கூடப் படுக்க மாட்டேன் எனச் சொன்னேன்.”

“என்ன சொன்னார்?”

“அன்றிருந்து நாங்கள் சேர்ந்து படுப்பதில்லை. அது தான் நடந்தது.”

“அப்படியா?”

“உன் ஒருத்திக்காக நூறு இளம் பெண்களை இழக்க முடியாது என்றார்.”

தலையைக் குனிந்து கொண்டாள். கண்கள் கலங்குவதைத் தவிர்க்கத் தவித்தாள்.

“உங்கள் கணவரின் கண் எப்படிப் பறி போனது?”

“இரண்டு வருடங்கள் முன்பு நடந்த விபத்தில்.”

“என்ன விபத்து?”

“ம். கிராமத்தில் ஒருவன் தாக்கியதால் நடந்தது.”

“ஓ! யார்?”

“க்ரேஸ் என்ற பெண்ணின் அண்ணன். தன் தங்கைக்கு இந்தச் சடங்கு செய்வதைத் தடுத்ததால் கடவுளின் சாபம் பெற்று குடும்பமே அழிந்தது. அவனுக்குப் பைத்தியம் பிடித்தது. இவர் தான் கிராமத்தின் ஆண் கடவுள் என அறிந்து கொண்டு வந்து ஒரு நாள் காய்ச்சிய இரும்புக் கழியைக் கண்ணில் சொருகி விட்டான். ஏராளம் ரத்தம் போய் உயிருக்கே ஆபத்தானது. டோரதி தான் வைத்தியம் செய்து காப்பாற்றினார்.”

“எத்தனை ஆபத்தான வேலை! இதெல்லாம் தேவையா?”

“எல்லாம் என் தலை விதி! நானொரு துரதிர்ஷ்டம் பிடித்தவள்.”

“லும்பனிக்கு இதனால் எய்ட்ஸ் வரும் சாத்தியம் இருக்கிறது என்பது தெரியுமா?”

“தெரியும்.”

“அவரால் இது எத்தனையோ அப்பாவி இளம் பெண்களுக்குப் பரவும், தெரியுமா?”

“தெரியும்.”

“அவர்கள் மூலம் அவர்களின் வருங்காலக் கணவர்களுக்கும் கூடப் பரவும்.”

“தெரியும்.”

“அப்படி நடந்தால் அது பாவம் இல்லையா?”

“அவர் கடவுள் என்பதால் வராது என நம்புகிறார்.”

“நீங்களும் நம்புகிறீர்களா?”

“எனக்குக் குழப்பமாய் இருக்கிறது.”

“கடைசியாய் ஒரு கேள்வி.”

“ம். சொல்லுங்கள்.”

“உங்கள் மகளுக்கு என்ன வயது?”

“எட்டு.”

“இன்னும் நான்கைந்து வருடங்களில் அவள் வயதுக்கு வருவாள். அவளுக்கு இந்தச் சடங்கு செய்வதில் உங்களுக்குச் சம்மதம் தானா? அதற்கு ஒப்புக் கொள்வீர்களா?”

திடுக்கிட்டுப் பார்த்தாள். அவள் உதடுகள் துடித்தன. ஏதோ சொல்ல எத்தனித்தாள்.

“அதற்கு பயந்து தான் குழந்தை பெறாமலேயே பத்தாண்டுகள் தள்ளிப் போட்டேன். ஆனால் மீறிப் பிறந்து தொலைத்தது. அதுவும் சபிக்கப்பட்ட பெண் பிண்டமாகவே.”

“சரி. அப்படியே அவளுக்குச் சடங்கு செய்தாலும் யார் செய்வார்? உங்கள் கணவரா?”

லிண்டா விசும்பத் தொடங்கினாள். அவள் மகள் வந்து கட்டிக் கொண்டு கேட்டாள்.

“அம்மா… ஏம்மா அழற?”

*

அம்மா அன்று முழுக்க மௌனமாகவே இருந்தாள். எதையோ மனதுள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாளோ எனப்பட்டது. உடன் வரவில்லை என்று சொல்லி விட்டாள்.

பதிலாக டொமினிக்கை வரச் சொல்லி இருந்தார் அப்பா. அவர் டார்ச் லைட்டைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடக்க, சற்றுப் பின்னே - சுதந்திரமாக உரையாடும் தொலைவில் - மெலினாவும் டொமினிக்கும் பேசாமல் வந்து கொண்டிருந்தார்கள்.

அடிக்கு அடி குளிர் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்ததைப் பார்த்தால் ஒரு பனிப் பிரதேசத்தை நோக்கி நடந்து கொண்டிருப்பதான பிரமை தட்டியது மெலினாவுக்கு.

எதையோ துப்பவோ விழுங்கவோ சிரமப்படுகிறவன் போல் தன் முகத்தை வைத்துக் கொண்டிருந்தான் டொமினிக். மெலினா தெள்ளிய ஆகாயத்தின் சிறுநிலவொளியில் அவனது அந்த அவஸ்தையை மிக ரசித்து நடந்தாள். பிறகு திடீரென எங்கிருந்தோ தைரியம் வரப் பெற்றவன் போல் தொண்டையைச் செருமிக் கொண்டு சொன்னான்.

“இன்று மூன்றாம் முறையா நான்காம் முறையா?”

“மிக அவசியமான, அவசரமான சந்தேகம் அல்லவா!”

“நான் உன்னைக் காதலிக்கிறேன், மெலினா.”

“…”

“ஆம். உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள, உன்னோடு வாழ விரும்புகிறேன்.”

“அடடா! இதைச் சொல்ல இவ்வளவு தயக்கமா! இவ்வளவு தாமதமா?”

“ம். நான் காத்திருந்தேன்.”

“எதற்கு?”

“நீ மலர்வதற்காக…”

டோரதி சொன்ன வண்டு உதாரணம் நினைவு வந்தது மெலினா முணுமுணுத்தாள்.

“வண்டுப் பயலே…”

“என்ன சொன்னாய்?”

“ஒன்றுமில்லை.”

சட்டென மௌனம் சூழந்தது. நல்ல உரையாடலில் இடையே விழும் மௌனம் அதன் சுவை கூட்டும். அசைபோடலாம். அதை அனுபவித்தபடி கொஞ்சம் தூரம் நடந்தார்கள்.

“நீ பதிலே சொல்லவில்லையே!”

“அப்படியா நினைக்கிறாய்?”

மெலினா டொமினிக்கைப் பார்த்துப் புன்னகைத்தாள். அதில் அவன் எதிர்பார்த்த வெளிப்படையான பதிலும் இருந்தது. அவனை உற்சாகம் தொற்றிக் கொண்டது.

“இக்கணம் உலகின் மிக மகிழ்ச்சிகரமான மனிதன் நான் தான்!”

“ஆனால் நான் தான் குண்டாயிற்றே! என்னை ஏன் காதலிக்கிறாய்?”

“மொத்தமாய்க் குண்டு இல்லை. ஆங்காங்கே…”

ஆங்காங்கே டொமினிக் பார்த்தான். ஆங்காங்கே வெட்கப் பூக்கள் அரும்பின.

“நாளை காலை நான் முழுமையான பெண்ணாகி இருப்பேன்.”

“ஆனால் இந்தச் சடங்கில் எனக்கு விருப்பமில்லை, மெலினா.”

“எனக்கு மட்டும் என்னா ஆசையா? வேறு வழியில்லையே!”

“ஆனாலும் மனம் சமாதானமடையவில்லை.”

“எனில் ஒரு குதிரையில் எங்கேனும் என்னைக் கடத்திச் சென்று விடு.”

“ம்.”

“முடியாதல்லவா? யதார்த்தம் என்பது வேறு. வளையாதவை முறியும்.”

“ம்.”

“நீ கவலைப்படாதே, எப்படிப் போகிறேனோ அப்படியே திரும்புவேன்.”

தொலைவில் டோரதியின் குடிசை தெரிந்தது. அப்பா நின்று திரும்பிப் பார்த்தார். மெலினாவும் டொமினிக்கும் உரையாடலைக் கத்தரித்து அவரை நெருங்கினர்.

“நாங்கள் இதற்கு மேல் வரக்கூடாது மெலினா.”

“ஆம்.”

“நீ போய் வா.”

“சரிப்பா.”

“காலையில் நான் இதே இடத்துக்கு வந்து விடுகிறேன்.”

“ம்.”

நள்ளிரவுக்கு இன்னும் அரைமணி நேரம் இருந்தது. மெலினா அவர்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்து விட்டு மிக மெதுவாக, ஜாக்கிரதையாக நடக்கத் தொடங்கினாள்.

“மெலினா…!”

அப்பாவின் குரல் அவளை நிறுத்தியது. சரிவில் சற்று நிதானப்படுத்தித் திரும்பினாள்.

“என்னை மன்னித்து விடு!”

அவரது கேவல் ஒலி காற்றில் பரவி அவளை அடைந்தது. கண்ணீரை அடக்கிய படி உதட்டைக் கடித்துக் கொண்டு அவள் சட்டெனத் திரும்பி வேகமாக அந்தச் சரிவில் இறங்கத்தொடங்கினாள். அப்பாவும் டொமினிக்கும் பார்வையிலிருந்து அவள் மறைந்த பின்பும் வெகுநேரத்திற்கு அவள் போன திசையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.

மெலினாவுக்குக் குடிசையைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமேதும் இருக்கவில்லை.
அங்கே அது ஒன்று தான் இருந்தது. அதன் கதவு திறந்தே இருந்தது. மெல்ல அதை நெருங்கி உள்ளே நுழைந்த போது அங்கே யாரும் இருக்கவில்லை. ஒரு புதிய பாய் விரிக்கப்பட்டிருந்தது. போயதில் உட்கார்ந்து கொண்டு காத்திருக்கத் தொடங்கினாள்.

*

ஆரஞ்சு வானில் இருட்டுப் புகத்தொடங்கி இருந்தது. சூழலில் தட்பமேற ஆரம்பித்தது.

எல்லியட் தான் வைத்திருந்த இரு சாக்லேட் பட்டைகளை லும்பனியின் மகளுக்குக் கொடுத்தான். அவள் தன் அம்மாவைப் பார்த்து அவள் கண்களால் அனுமதித்ததும் வாங்கிக் கொண்டாள். ஒன்றைப் பிரித்து உடனே வாயில் கவ்விக் கசப்பு ருசித்தாள்.

“நான் நிஜமாகவே இதிலிருந்து வெளியேற முயன்று கொண்டிருக்கிறேன். ஆனால் இதில் கிடைக்கும் பணம் தான் என்னைத் தொடர்ந்து இதில் இயங்க வைக்கிறது.”

“எவ்வளவு பணம்?”

“மூவாயிரம் முதல் ஐயாயிரம் க்வாச்சா கிடைக்கும். கிட்டத்தட்ட மாதம் ஒருமுறை.”

“உனக்கு நிலம் கிடைத்தால் இதைக் கைவிட்டு விவசாயம் செய்து பிழைப்பாயா?”

“நிலமா? அவ்வளவு காசுக்கு நான் எங்கே போவது?”

“நன்செய் நிலத்தை அரசுசாரா அமைப்புகள் மூலம் நான் ஏற்பாடு செய்ய முடியும்.”

“…”

“ஆனால் அதில் வரும் பணத்தைக் குடித்து அழிக்காமல் இருப்பது உன் சாமர்த்தியம்.”

“ம்.”

“யோசிக்காதே, ஒப்புக் கொள்.”

“ஆனால்…”

“மாதம் ஒரே இரவு வேலை செய்து, நோகமல் கை நிறையச் சம்பாதித்து வந்தவன் எதற்கு சாபம் போல் தினம் வயலில் வியர்வை சிந்த வேண்டுமென நினைக்கிறாயா?”

“ம்.”

“இரண்டு காரணங்கள், லும்பனி. ஒன்று இது கௌரவமான வேலை. உன் மகளிடம் மறைக்காமல் சொல்லக்கூடிய வேலை. எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாத வேலை.”

“இன்னொரு காரணம்?”

“இது நிரந்தரமான வேலை. ஆண் கடவுள் வேலையை எத்தனை காலம் செய்வாய்? உன் உடம்பில் தெம்பு இருக்கும் வரை. உன் நரம்புகள் தளராமல் இருக்கும் வரை.”

“…”

“ஒப்புக் கொள். உன் மறுவாழ்வுக்கு நான் பொறுப்பு.”

“ம். சரி.”

“குட். உன் மகள் என்றும் என்னை வாழ்த்துவாள்.”

“இன்று இரவு ஒரு பொறுப்பு தரப்பட்டிருக்கிறது. கடைசியாய் அதை மட்டும் போய்…”

“ஒரு முடிவெடுத்து விட்டால் உடனே அதை அமல்படுத்தி விட வேண்டும், லும்பனி. தாமதித்தால் மனம் மாறி விடும். அல்லது அதைச் செயல்படுத்துவதில் தடை வரும்.”

“ஆனால் வாக்குக் கொடுத்து விட்டேனே! எவளோ ஒருத்தி வந்து காத்திருப்பாள்.”

“அதனால் என்ன? அங்கே ஒருவர் போக வேண்டும் அவ்வளவு தானே? கலவி நடக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. நீயே போக வேண்டும் என்றும் அவசியமில்லை.”

“…”

“உனக்கு பதிலாக நான் போகிறேன். எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. இந்தப் பணியில் இன்னும் சம்மந்தப்பட்ட பெண் ஒருத்தியைக் கூட எவ்வளவு முயன்றும் பேட்டி எடுக்கவில்லை. எல்லோரும் அவர்களின் பெற்றோருடன் இருப்பதால் பேச மறுக்கிறார்கள். பேச முடிபவர்களுக்கு இது நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. அவர்களுடன் பேசுவது சரி வராது. எனக்கு அவர்களின் நடப்பு மனநிலையைப் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பெண் எப்படியும் தனிமையில் தான் இருப்பாள். அவளுடன் பேசி விட்டு பத்திரமாய் அவளது வீட்டில் கொண்டு போய் விட்டுக் கிளம்புகிறேன்.”

சடங்குக் குடிசைக்குப் போகும் வழியை அவனிடமிருந்து தெளிவாய்க் கேட்டறிந்தார்.

“நானும் வருகிறேனே?”

“நீ இருந்தால் எப்படி அவள் மனம் திறப்பாள்? வேண்டாம்.”

எல்லியட் தோள்பையிலிருந்து இருபத்தோர் ஆண்டு பழைய ஜானி வாக்கரை எடுத்து வைத்தார். உடைக்கப்படாத புது போத்தல். லும்பனி ஆயுளில் இதுவரை கண்டிராதது.

“உன் புதிய முடிவை, உன் புதிய வாழ்வை இதோடு சேர்ந்து கொண்டாடு. இன்று உன் மனைவியைப் புணர்ச்சி செய். அவளது இத்தனை ஆண்டுகளின் வெப்பத்தைத் தணி.”

லும்பனி அந்த போத்தலைக் கையிலெடுத்தான். அவன் கண்கள் வெறியில் மின்னின.

*

செல்பேசி எடுத்துப் பார்த்த போது சுத்தமாய் சமிக்ஞை அணைந்திருந்தது. காரண காரியமின்றி அந்த இடம் சடங்குக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனப் புரிந்தது.

எல்லியட் அந்தக் குடிசைக்குள் காலடி எடுத்து வைத்த போது மெலினா முழங்கால் கட்டிக் கொண்டு பாயில் அமர்ந்திருந்தாள். அந்தக் குடிசைக்குள் குறைவான ஒளியும், நிறைவான குளிரும் திரண்டிருந்தது. மெலினா அவரை மிரண்டு போய்ப் பார்த்தாள்.

“பயப்படாதே சிறுமியே!”

எல்லியட் அந்தக் குடிசையைச் சுற்றிப் பார்த்தார். அங்கே ஒரு மண் பாண்டம் தவிர எதுவுமே இல்லை. சுத்தமாய்த் துடைக்கப்பட்டிருந்தது. மெல்ல நடந்து அவள் அருகே வந்து பாயில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டார். அவள் அலங்காரம் சிக்கலானதாக இருந்தது. அவளிடமிருந்து மிக வசீகரமான ஒரு நறுமணம் எழுந்து நாசியிலேறியது.

அவள் தலையைத் தாழ்த்தி இருந்தாள். அவளுடல் மெல்லிய நடுக்கத்தில் இருந்தது.

“உன் பெயர் என்ன?”

“மெலினா…”

“மிக அழகான, மென்மையான பெயர். உன்னைப் போலவே!”

“ம்.”

“அந்தப் பெயரின் அர்த்தம் என்னவென்று தெரியுமா?”

“ம். தெரியும். தேன்.”

“ஆம். மிகச் சரி. அது போக இன்னொரு பொருளும் உண்டு.”

சட்டெனத் தலையை நிமிர்த்தி என்ன என்பதைப்போல் அவரைப் பார்த்தாள் மெலினா.

“கடவுளின் பரிசு.”

“…”

“சரி, சொல். என்னைப் பிடித்திருக்கிறதா?”

“ம்.”

“இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம் தெரியுமா?”

“ம்.”

“அது பிடிக்குமா?”

“ம்.”

“ம் என்பதைத் தவிர வேறு சொல் ஏதும் உன் அகராதியில் இல்லையா, மெலினா?”

“ம்.”

“அதற்கும் ம் தானா? சரி நான் சொல்லித் தருகிறேன். இதுவரை நீ எழுப்பாத ஒலி.”

சொல்லிக் கொண்டே எல்லியட் மெலினாவை அணுகி, முத்தமிட்டு அவள் மேலாடை அவிழ்க்கத் தொடங்கினார். அவரது களிப்புன்னகையில் ஒரு கழுதைப் புலி இருந்தது.

மெலினாவுக்கு மிகக் குழப்பமாய் இருந்தது. வயலட் அவளுக்குச் சொன்ன மூன்று விஷயங்களும் பொய்த்திருந்தன. ஒன்று கடவுளுக்கு ஒரு கண் புண்ணாக இருக்கும். இரண்டு அவர் ஊமையோ என்று எண்ணுமளவு ஒரு சொல் கூடப் பேச மாட்டார். மூன்று அவர் உன்னைப் புணரமாட்டார், நிர்வாணப்படுத்திக் கட்டிப் பிடித்துப் படுத்துக் கொள்வார், அந்நிலையிலும் அவரது ஆண்குறி எழாது என்பதால் தான் அவர் கடவுள்.

சுழன்றடிக்கும் காற்றைக் காட்டிலும் சப்தமான பெருமூச்சுக்களால் அந்தக் குடிசை நிறைந்திருந்தது. ஆண் கடவுளின் வேகம் அடிவயிற்றிலும் மார்பிலும் கனத்தது.

மெலினாவுக்கு மிக வலித்தது. தன்னிச்சையாய்க் கண்களில் நீர் கசிந்தொழுகியது.

*

எல்லியட் விடியல் புலரும் முன் எழுந்து உடைகளை அவசரமாய் அள்ளி நுழைத்துக் கொண்டு மெலினாவைப் பார்த்தார். கைகள் இரண்டையும் தொடைகளுக்கு இடையே இறுக்கமாய் நுழைத்துக் கொண்டு, நிர்வாண உடலைக் குறுக்கிக் கொண்டு கருவறை நினைவில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவள் வீழ்ந்த மலர் போல் தோன்றினாள்.

சுவரில் மாட்டப்பட்ட புலித் தலை போல் பாயில் குருதித் துளிகள் உறைந்திருந்தன.

ஓசையிடாமல் குடிசையை நீங்கினார். வெளியே வாசலிலிருந்து சற்று தொலைவில் டொமினிக் குளிரில் நடுங்கியபடி படுத்திருந்தான். அவனை எங்கோ பார்த்தது போல் தோன்றிய எண்ணத்தை அலட்சியம் செய்து நடக்க ஆரம்பித்தார். வெளிச்சம் மிகச் சன்னமாய் பரவத் தொடங்கி அதிகாலைப் பறவைகளில் ஒன்று கூவ ஆரம்பித்தது.

கொஞ்சம் தூரம் நடந்து வந்து செல்பேசி எடுத்துப் பார்த்த போது தொலைதொடர்புச் சமிக்ஞை மீண்டிருந்தது. பரபரப்பாக அதில் அந்தப் பெயரைத் தேர்ந்து அழைத்தார்.

அந்த வைகறை வேளையிலும் மூன்றாம் அழைப்பிலேயே செல்பேசி எடுக்கப்பட்டு பெண்மையின் அதிகார த்வனி மணக்கும் தெளிந்த தீர்க்கமான குரல் வெளிப்பட்டது.

“ஹலோ!”

“மதிப்பிற்குரிய ஒலிவியா, வந்த வேலை முடிந்தது. எனக்குச்சரியாகி விடும் தானே?”

“வாழ்த்துக்கள் எல்லியட். ஆம், எய்ட்ஸுக்கு ஒரே மருந்து புதிதாய் ருதுவானவளைக் கலப்பதே. நம்பிக்கைகள் ஒரு போதும் தோற்பதில்லை. கடவுள் உன்னைக் காப்பார்.”

***

Comments

Popular posts from this blog

இரு பாடல்கள்

கன்னித்தீவு - முன்னுரை

எழுத்தாளக் குற்றவாளிகள்